✠ புனித மரியான் கோப் ✠ (St. Marianne Cope) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
22 |
✠ புனித மரியான் கோப் ✠ (St. Marianne
Cope)
*கன்னியர்; துறவி; தொழுநோயாளருக்கு
மறைப்பணியாளர் :
(Virgin, Religious, Missionary to Lepers)
*பிறப்பு : ஜனவரி 23, 1838
ஹெப்பன்ஹைம், ஹெஸ்ஸே மாநிலம் (இன்று ஜெர்மனிப் பகுதி)
(Heppenheim, Grand Duchy of Hesse)
*இறப்பு : ஆகஸ்ட் 9, 1918 (வயது
80)
கலாவுபப்பா, ஹவாயி (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) (Kalaupapa,
Hawaiʻi)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
எப்பிஸ்கோப்பல் திருச்சபை (ஐ.அ.நா.) (Episcopal Church)
*அருளாளர் பட்டம் : மே 14, 2005
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI)
*புனிதர் பட்டம் : அக்டோபர் 21,
2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI)
*முக்கிய திருத்தலங்கள் :
பிரான்சிஸ்கு சபை சகோதரிகளின் தலைமை இல்லத்தில் அமைந்த ஆலயமும்
அருங்காட்சியகமும் (சீரக்யூஸ், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க
நாடுகள்)
(Saint Marianne Cope Shrine & Museum, 601 N. Townsend St.
Syracuse, New York, U.S.)
*பாதுகாவல் :
தொழுநோயாளர், எய்ட்ஸ் நோயாளர்; ஹவாயி (Hawaiʻi)
மேரியான் கோப் (Marianne Cope), ஜெர்மன் நாட்டில் பிறந்த அமெரிக்க
நாட்டின் ஃபிரான்சிஸ்கன் சபைத் துறவி ஆவார். அவர் ஐக்கிய அமெரிக்க
நாடுகளின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சீரக்யூஸ் நகரில் அமைந்த
ஃபிரான்சிஸ்கன் சபையில் (Sisters of St Francis of Syracuse,
New York) உறுப்பினரும், நியூயார்க் நகரின் "புனித ஜோசப்" மருத்துவமனையின்
(St. Joseph's Hospital) நிர்வாகியுமாவார்.
பிறரன்புப் பணிகளைப் புரிவதில் இவர் தலைசிறந்து விளங்கினார்.
குறிப்பாக, இவரும் பிற ஆறு அருட்சகோதரிகளும் இணைந்து ஹவாயியில்
உள்ள மோலக்காய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு
அன்புப் பணி செய்தனர். தொழுநோயாளரின் குடியேற்றத்தில் அவர்களோடு
மிக நெருங்கிப் பழகி அவர்களுக்குப் பணி செய்தபோதிலும்
மேரியானைத் தொழுநோய் தீண்டவில்லை. சிலர் அதை ஒரு அதிசயமாகவே
காண்கிறார்கள்.
பிறப்பும் துறவற அழைத்தலும் :
"மரியா அன்னா பார்பரா கூப்" (Maria Anna Barbara Koob) என்ற
திருமுழுக்குப் பெயர் கொண்ட மேரியான் கோப், பின்னர் அவரது
குடும்பப் பெயர் கோப் (Cope) என்று மாற்றம் பெற்றது. "பீட்டர்
கூப்" (Peter Koob) மற்றும் "பார்பரா விட்சென்பாச்சர்"
(Barbara Witzenbacher) ஆகியோரின் மகளாகத் தோன்றிய மேரியான் பிறந்த
இடம், இன்றைய ஜெர்மனியில் அமைந்த "ஹெஸ்" (Hesse) மாநிலத்தின்
"ஹெப்பன்ஹைம்" (Heppenheim) என்னும் நகர் ஆகும்.
மேரியானுக்கு ஒரு வயதிருக்கும்போது அவர்தம் பெற்றோர் குடும்பத்தோடு
ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்து சேர்ந்தார்கள்.
நியூயார்க் மாநிலத்தின் யூட்டிக்கா (Utica) என்னும் நகரில் அவர்கள்
குடியேறினர். அங்கு, புனித ஜோசப் ஆலய பங்கில் அவர்கள் உறுப்பினர்
ஆயினர். அப்பங்கைச் சார்ந்த புனித ஜோசப் கல்வியகத்தில்
மேரியான் கல்வி பயின்றார். மேரியான் எட்டாம் வகுப்பில் படித்தபோது
அவருடைய தந்தையின் உடல் ஊனமுறவே அவரால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.
குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு மூத்த குழந்தையாகிய
மேரியானின் தலைமேல் விழுந்தது. அவர் ஒரு தொழிற்கூடத்தில்
வேலைசெய்யப் போனார்.
மேரியானின் தந்தைக்கு இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்ததால்,
அவரோடு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அமெரிக்கக் குடியுரிமை
வழங்கப்பட்டது.
பீட்டர் கோப் 1862ல் இறந்தபோது மேரியானுக்கு வயது 24. அவருடைய
குடும்பம் தன்னிறைவு பெற்றது. மேரியான் குடும்பப் பொறுப்புகளைத்
துறந்துவிட்டு ஒரு துறவியாக முடிவு செய்தார். இவ்வாறு அவரது
இளமைப்பருவ ஆவல் நிறைவேறிற்று.
துறவற வாழ்க்கை :
நியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரில், மேரியான் புனித
பிரான்சிஸ்கு மூன்றாம் சபைத் துறவியர் பிரிவில் புகுமுக உறுப்பினராகச்
சேர்ந்தார். பயிற்சிக்காலம் முடிந்ததும் பிற சகோதரிகளைப் போல
அவருக்கும் துறவு உடை அளிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட துறவறப்
பெயர் "மேரியான்" (Marianne). ஜெர்மனியிலிருந்து வந்து அமெரிக்காவில்
குடியேறிய ஜெர்மன் மொழி மக்களுக்காக நிறுவப்பட்ட பள்ளியொன்றில்
மேரியான் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் அத்தகைய பள்ளிகளின்
தலைமை ஆசிரியர் ஆனார்.
மேரியான் தமது துறவற சபையின் ஆட்சிக் குழு உறுப்பினராக 1870ல்
நியமிக்கப்பட்டார்.
மருத்துவ நிர்வாகப் பணி :
தமது சபையின் ஆட்சிக் குழுப்பொறுப்பில் இருந்தபோது நடு
நியூயார்க் பகுதியில் இரு மருத்துவமனைகள் நிறுவப்பட மேரியான்
வழிவகுத்தார். மத, இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருத்துவ
வசதி அளிப்பதை அம்மருத்துவமனைகள் கொள்கையாகக் கொண்டிருந்தன.
1870-1877 காலக்கட்டத்தில் மேரியான், சீரக்யூசில் புனித ஜோசப்
மருத்துவ மனையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அப்போது,
நியூயார்க் மாநிலத்தின் ஜெனீவா நகரில் அமைந்திருந்த மருத்துவக்
கல்லூரியை சீரக்யூசுக்குக் கொண்டுவர மேரியான் துணைபுரிந்தார்.
சீரக்யூஸ் நகரில் அந்நிறுவனம் "ஜெனீவா மருத்துவக் கல்லூரி" என்னும்
பெயர் பெற்றது. மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு
அத்துறையில் போதிய பயிற்சி கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள்
மருத்துவமனையில் இருந்த நோயாளருக்கு மருத்துவப் பணி செய்யவேண்டும்
என்று மேரியான் அதற்கான ஏற்பாடுகள் செய்தார்.
அவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தத்தில், மருத்துவ மாணவர்களின் பணி
தங்களுக்குத் தேவையில்லை என்று நோயாளர்கள் அப்பணியை மறுப்பதற்கு
உரிமை கொண்டுள்ளார்கள் என்னும் பிரிவையும் சேர்க்கச் செய்தார்.
இவ்வாறு மருத்துவத் துறையில் மேரியான் சிறந்த அனுபவம்
பெற்றார். அந்த அனுபவம் அவர் பிற்காலத்தில் ஆற்றவிருந்த
மாபெரும் மருத்துவப் பணிக்கு ஒரு முன் தயாரிப்பாக அமைந்தது.
ஹவாயிக்குச் செல்ல அழைப்பு :
இதற்கிடையில் அன்னை மேரியான் தமது துறவற சபைக்கு உயர் தலைவியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பதவியை வகித்தபோது, 1883ல்
அவருடைய உதவியைக் கோரி ஒரு வேண்டுகோள் வந்தது.
ஹவாயி நாட்டின் அரசராக இருந்த கலாக்காவுவா (Kalākaua) என்பவர்,
தம் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ
உதவி அளிக்க மேரியான் தமது சபைத் துறவியரை அனுப்பித்தர
வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் ஏற்கெனவே
50க்கும் மேற்பட்ட பெண்துறவியர் சபைகளை அணுகியும் அவருக்கு எந்தவொரு
சபையும் உதவிட முன்வரவில்லை என்றும் அவர் வருத்தம்
தெரிவித்தார்.
மன்னரின் வேண்டுகோளைக் கேட்ட அன்னை மேரியான் உள்ளம் உருகினார்.
உடனடியாக, தம் சபை சகோதரிகள் ஹவாயி சென்று தொழுநோயாளருக்கு மருத்துவ
உதவி அளிக்கப்போவதாக வாக்களித்தார்.
மன்னருக்கு எழுதிய கடிதத்தில் அன்னை மேரியான் பின்வருமாறு
கூறினார்:
"உங்கள் தீவுநாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் உய்வுக்காக உழைப்பது
குறித்து நான் பேராவல் கொண்டுள்ளேன். அப்பணியை ஆற்றுவதற்குத்
தெரிந்துகொள்ளப்படுவோருள் நானும் ஒருத்தியாக இருக்கவேண்டும் என்று
என் உளமார எதிர்பார்க்கின்றேன். அப்பணியை ஆற்றுவது எனக்கு அளிக்கப்படுகின்ற
கவுரவம் எனக் கருதுகின்றேன். எந்த நோயைக் கண்டும் எனக்குப் பயம்
இல்லை. எனவே, கைவிடப்பட்ட தொழுநோயாளருக்குப் பணிசெய்வதைப்
பெருமையாகக் கருதுகின்றேன்."
ஹவாயிக்குப் பயணம் :
சபைத் தலைவியாக இருந்த அன்னை மேரியான், தம்மோடு ஆறு சகோதரிகளை
அழைத்துக்கொண்டு தொழுநோயாளருக்குப் பணிபுரிவதற்காக ஹவாயியின்
"ஹொனலூலு" (Honolulu) நகருக்கு சீரக்யூசிலிருந்து புறப்பட்டுச்
சென்றார். சகோதரிகள் குழு 1883, நவம்பர் 8ம் நாள் ஹொனலூலு
போய்ச் சேர்ந்தது.
"எஸ். எஸ். மரிபோசா" (S. S. Mariposa) என்னும் பெயர்கொண்ட கப்பலில்
பயணம் செய்த சகோதரிகள் ஹொனலூலு துறைமுகத்தில் தரையிறங்கியதும்
அமைதியின் அன்னை மரியா பெருங்கோவிலில் மணிகள் மகிழ்ச்சிக் கீதம்
ஒலித்தன.
ஹவாயி நாட்டின் பல தீவுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட தொழுநோயாளர்கள்
வந்து கூடிய கக்காக்கோ மருத்துவ மனையை நிர்வகிக்கும் பொறுப்பு
மேரியானிடமும் சகோதரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டது. தொழுநோய்
முற்றிய நிலையில் இருந்த நோயாளிகள் அம்மருத்துவ மனையிலிருந்து
மோலக்காய் தீவுக்கு கப்பல்வழி அனுப்பப்படுவர். அங்கு கலாவாவோ
தொழுநோயாளர் குடியேற்றத்திலும் அதற்குப் பின் கலாவுபப்பா
குடியேற்றத்திலும் ஒதுக்கி அடைக்கப்படுவர். பிற மனிதர்களோடு தொடர்புகொண்டால்
அவர்களுக்கும் தொழுநோய் தொற்றிவிடும் என்ற பயத்தில் தொழுநோயாளர்கள்
ஒதுக்கப்பட்ட இடத்தில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு "தொழுநோயாளர்
குடியேற்றம்" (Leper Colony) உருவானது.
தொழுநோயாளர் நடுவே தொடர்பணி :
ஓராண்டுக்குப் பின் ஹவாயி அரசு அன்னை மேரியானிடம் இன்னொரு உதவி
கோரியது. அக்கோரிக்கையை ஏற்று, அவர் ஹவாயியின் மாவுயி (Maui)
தீவில் மலுலானி மருத்துவமனையை (Malulani Hospital) நிறுவினார்.
அதுவே மாவுயி தீவில் நிறுவப்பட்ட முதல் பொது மருத்துவமனை.
ஆனால், விரைவிலேயே அன்னை மேரியானின் சேவை வேறு இடங்களில்
தேவைப்பட்டது. ஹவாயியின் ஒவாகு (Oahu) என்னும் மூன்றாவது பெரிய
தீவில் கக்காக்கோ (Kaka'ako) நகரில் அமைந்திருந்த மருத்துவமனையில்
அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி அம்மருத்துவமனையில்
பராமரிக்கப்பட்ட தொழுநோயாளரைக் கொடுமைப்படுத்தினார் என்பதால்
அங்கு நிலைமையைச் சரிப்படுத்த மேரியான் அழைக்கப்பட்டார்.
தொழுநோயாளருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மேரியான் வன்மையாகக் கண்டித்தார்.
ஒன்றில் அரசு நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது
தானும் சகோதரிகளோடு ஹவாயியை விட்டு மீண்டும் சீரக்யூசுக்குத்
திரும்பவேண்டும் என்று அவர் ஹவாயி அரசுக்கு நிபந்தனை
விதித்தார். அரசு உடனடி நடிவடிக்கை எடுத்து, அரசு நிர்வாகியைப்
பணிநீக்கம் செய்ததோடு, ஏற்கெனவே பணிச்சுமை தாளாமல் இருந்த
மேரியானும் சகோதரிகளும் கூடுதல் பொறுப்பாக கக்காக்கோ மருத்துவமனையையும்
நிர்வகிக்கும்படி கேட்டது.
இவ்வாறு மேரியான், தொழுநோயாளரின் எண்ணிக்கை நிறைந்து வழிந்த கக்காக்கோ
மருத்துவமனையையும் நிர்வகிக்கலானார். ஹவாயி நாடு முழுவதிலும்
தொழுநோயாளரைக் கவனித்துப் பராமரிக்க அன்னை மேரியானின் சேவை இன்றியமையாதது
என்று அரசும் திருச்சபையும் வலியுறுத்தியதால், மேரியான் சீரக்யூசுக்குத்
திரும்பி தம் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பது இன்னும் தள்ளிப்போடப்பட்டது.
அரசு விருது வழங்கப்படல் :
மேரியானும் சகோதரிகளும் ஹவாயியில் தொழு நோயாளரிடையே பணிபுரியச்
சென்று இரண்டு ஆண்டுகள் கடந்தன. மேரியானின் தலைமையில் சகோதரிகள்
தன்னலம் கருதாது ஏழை நோயாளிகளுக்கு ஆற்றிய பிறரன்புச்
சேவையையும் அரும்பணியையும் பெரிதும் புகழ்ந்த அந்நாட்டு மன்னர்,
மேரியானுக்கு "கப்பியோலானி அரச அணியின் உறுப்பினர் சிலுவை"
(Cross of a Companion of the Royal Order of Kapiolani) என்ற
சிறப்புப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார்.
பெண்குழந்தைகளுக்கு "கப்பியோலானி இல்லம்"
:
நாள் போகப்போக அன்னை மேரியானின் பணிப்பளு கூடியதே தவிர, குறையவில்லை.
ஓராண்டுக்குப் பின், இன்னொரு முக்கிய தேவை நிறைவேறப்பட
வேண்டும் என்று அவர் உணர்ந்தார். தொழுநோய் வாய்ப்பட்டு குடும்பத்திலிருந்து
பிரிக்கப்பட்ட நோயாளரின் பெண் குழந்தைகளுக்குக் கல்வியும்
வாழ்க்கை முன்னேற்றமும் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்த
மேரியான் ஹவாயி அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது
தொழுநோயாளரின் பெண் குழந்தைகளின் நலனைப் பேணுவதற்கு ஒரு தனி இல்லம்
உருவாக்க வேண்டும் என்று கேட்டார். அவ்வாறே "கப்பியோலானி பெண்
குழந்தைகள் இல்லம்" உருவாக்கப்பட்டது.
தொழுநோயால் பாதிக்கப்படாதிருந்தும் அப்பெண் குழந்தைகள்
தொழுநோயாளர் மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்த "கப்பியோலானி இல்லத்தில்"
பராமரிக்கப்பட்டனர். தொழுநோயாளரோடு நெருங்கிய தொடர்புகள்
கொண்டிருந்து தீட்டுப்பட்ட அக்குழந்தைகளைப் பராமரிக்க வேறு
யாரும் முன்வராததால் மேற்கூறிய ஏற்பாடு செய்யப்பட்டது.
மேரியான் அக்குழந்தைகளின் பராமரிப்பையும் மேற்பார்வையிட்டார்.
இறப்பும் அடக்கமும் :
ஹவாயி நாட்டில் ஒதுக்கப்பட்டு தனிக்குடியேற்றத்தில் அடைக்கப்பட்டு
அவதியுற்ற தொழுநோயாளருக்குப் பணிபுரிய தம்மையே அர்ப்பணித்த அன்னை
மேரியான் 1918, ஆகஸ்ட் 9ம் நாள் இயற்கைக் காரணங்களால் இறந்தார்.
கடவுளுக்குப் பணிபுரிவோர் கடவுளால் உருவாக்கப்பட்ட மக்களுக்கும்,
குறிப்பாக, கைவிடப்பட்டோருக்கும் பணிபுரிய வேண்டும் என்பதே
மேரியானின் கொள்கையாய் இருந்தது.
ஹவாயியின் கலாவுபப்பாவில் பெண் தொழுநோயாளருக்கான இல்லத்தில்,
அவர் பணிபுரிந்த இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். |
|
|