Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா ✠ (St. Kuriakose Elias Chavara)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 03
 * ✠ புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா ✠ (St. Kuriakose Elias Chavara)
 *  CMI மற்றும் CMC ஆகிய சபைகளின் நிறுவனர்;
    சிரிய கத்தோலிக்கரின் தலைமை ஆட்சியர் :
    (Founder of CMI and CMC Congregations; Vicar General of Syrian Catholics)

 * பிறப்பு : ஃபெப்ரவரி 10, 1805
    கைநக்கரி, குட்டநாடு, திருவிதாங்கூர் இராச்சியம் (தற்போதைய ஆலப்புழா  
    மாவட்டம், கேரளா, இந்தியா)
   (Kainakary, Kuttanad, Travancore (Now in Alappuzha District, Kerala, India)

 * இறப்பு : ஜனவரி 3, 1871 (வயது 65)
    கூனம்மாவு, கொச்சி இராச்சியம் (தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம், கேரளா,
    இந்தியா)
    (Koonammavu, Kingdom of Cochin (Now in Ernakulam, Kerala, India)

 * ஏற்கும் சமயம் :
    கத்தோலிக்கம் (சிரோ மலபார் திருச்சபை) (Catholic (Syro Malabar Church)

 * அருளாளர் பட்டம் : ஃபெப்ருவரி 8, 1986
    திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்  (Pope John Paul II)

 * புனிதர் பட்டம் : நவம்பர் 23, 2014
    திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis)

 * முக்கிய திருத்தலங்கள் :
   புனித சூசையப்பர் ஆலயம் - மன்னானம், கோட்டயம், கேரளா, இந்தியா.
    புனித ஃபிலோமினா ஃபோரேன் ஆலயம் - கூனம்மாவு, கொச்சி, கேரளா, இந்தியா.
   (St. Joseph's Church, Mannanam, Kottayam, Kerala, India and
   St.Philomena's Forane Church, Koonammavu, Kochi, Kerala, India)

 * பாதுகாவல் : அச்சுத் தொழில், ஊடகம், இலக்கியம், சபைகள்

நினைவுத் திருவிழா : ஜனவரி 3 (சிரோ மலபார்)

புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவரும், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தவரும் ஆவார்.

இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண் துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை "மாசற்ற மரியாளின் கார்மேல் சபை" (Carmelites of Mary Immaculate (C.M.I.) என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண் துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது "கார்மேல் அன்னை சபை" (Congregation of the Mother of Carmel (C.M.C.) என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு :
குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, இந்தியாவின் கேரள மாநிலத்தில் "கைநக்கரி" (Kainakary) என்னும் கிராமத்தில் "நசரானி கிறிஸ்தவர்கள்" (Nasrani Christian) என்று அழைக்கப்படுகின்ற "புனித தோமா கிறிஸ்தவ" குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை "இகோ குரியாக்கோஸ் சாவரா" (Iko Kuriakose Chavara) ஆவார். தாயார் "மரியம் தோப்பில்" (Mariam Thoppil) ஆவார். குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா பிறந்த நாள் 1805ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 10ம் நாளாகும். "சென்னம்காரி" (Chennamkary) ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 17ம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது.

சொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்ற இவர், 1818ம் ஆண்டு, "பள்ளிப்புறத்தில்" (Pallipuram) அமைந்திருந்த குருமடத்தில் இணைந்தார். அந்த குருமடத்தின் அதிபராக, (Rector) அருட்தந்தை "பாலக்கல் தோமா மல்பான்" (Palackal Thoma Malpan) இருந்தார். குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, 1829ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் நாள், குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள், "பாலக்கல் தோமா மல்பான்" (Palackal Thoma Malpan) மற்றும் "போருக்கர தோமா கத்தனார்" (Porukara Thoma Kathanar) ஆவர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் "மாசற்ற மரியாளின் ஊழியர்" என்பதாகும். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் நட்டார். அவர் 1846ம் ஆண்டிலும், அதற்கு முன் தோமா மல்பான் 1841ம் ஆண்டிலும் இறந்தார்கள். 1855ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாள் குரியாக்கோஸும், அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ், மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். "காலணியற்ற கார்மேல் சபை" (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.

சமூக சீர்திருத்தர் :
குரியாக்கோஸ் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார். உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று பாடுபட்டார்.

1846ம் ஆண்டு, அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக இருந்தபோது, 1864ம் ஆண்டில், ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

குரியாக்கோஸ் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன.

இந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை "தீபிகா".

திருச்சபை அளவில் பணி :
கேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்தி முயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்தி முயற்சிகள் பரவ வழிவகுத்தார்.

ஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866ம் ஆண்டு நிறுவினார்.

இறப்பு :
குரியாக்கோஸ், கூனம்மாவு என்ற ஊரில் 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். அவருடைய உடலின் மீபொருட்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித சூசையப்பர் ஆலய மடத்தில் 1889ம் ஆண்டும், மே மாதம், 24ம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.

அவருடைய நினைவுத் திருவிழா அவர் இறந்த நாளாகிய ஜனவரி 3ம் நாள் கொண்டாடப்படுகிறது.

புனிதர் பட்டம் :
குரியாக்கோசை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936ம் ஆண்டு வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோஸுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955ம் ஆண்டு, சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 7ம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு "வணக்கத்துக்குரியவர்" என்னும் பட்டம் கொடுத்தார்.

1986ம் ஆண்டும், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் ஃபெப்ரவரி மாதம், 8ம் நாள் குரியாக்கோசுக்கு "அருளாளர்" பட்டம் வழங்கினார்.

2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 3ம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.

திருத்தந்தை ஃபிரான்சிஸ், 2014ம் ஆண்டு, நவம்பர் மாதம், 23ம் நாள் கிறிஸ்து அரசர் பெருவிழாவின் தருணத்தில், வத்திக்கான் நகர புனித பேதுரு பேராலய வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது குரியாக்கோஸ் எலியாஸ் சாவராவுக்குப் புனிதர் பட்ட அருட்பொழிவு வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண் துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த "யூப்ரேசியா எலுவத்திங்கல்" (Euphrasia Eluvathingal) என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா (ஜனவரி 03)

நிகழ்வு

தந்தை குரியாகோஸ் அவர்கள் மன்னானம் என்ற இடத்தில் குருவாகப் பணிசெய்து கொண்டிருந்தபோது, ஒருநாள் விவசாயக் கூலிகள் சிலர் அவரை அணுகிவந்து, "ஐயா நாங்கள் வேலை பார்க்கும் பண்ணைகளில் இருக்கும் பண்ணையார்கள் எங்களுக்குப் போதிய ஊதியம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள், இதனால் எங்களுடைய குடும்பம், குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நீங்கள்தான் எங்களுக்கு கூலி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்" என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதார்கள். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த தந்தை குரியாகோஸ் பண்ணையார்களிடம் சென்று, "நீங்கள் உங்களிடத்தில் வேலை பார்க்கும் கூலியாட்களுக்கு ஊதியம் கொடாமல் இருப்பது பாவம். கடவுள் ஏழைகள் பக்கம் இருக்கிறார். கடவுள் இவர்கள் அழுவதைப் பார்த்தால், அதற்காக அவர் உங்களைப் பழிவாங்காமல் இருக்கமாட்டார்" என்றார்.

இதைக் கேட்ட பண்ணையார்கள் பயந்துபோய், அவர்கள் "தங்களிடம் வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு சரியான ஊதியம் தருவோம்" என்று வாக்குறுதி தந்தார்கள்.

வாழக்கை வரலாறு

தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா அவர்கள் 1805 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் உள்ள கைனகிரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஆறாவது குழந்தை. இவருடைய முன்னோர்கள் திருத்தூதர் தோமா வழிக் கிறிஸ்தவர்கள்.

குரியாகோஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை கைனகிரியிலேயே பெற்றார். அதன் பிறகு 1818 ஆம் ஆண்டு ஆண்டு குருமடத்தில் சேர்ந்து, 1829 ஆண்டு குருவாகத் அருட்பொழிவு செய்யப்பட்டார். 1831 ஆம் ஆண்டு அருத்தந்தை தாமஸ் பாலக்கல், அருட்தந்தை பொருக்கரா ஆகியோரின் உதவியுடன் அமல மரி கார்மேல் துறவற சபையை நிறுவினார். இது ஆண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சபையாகும். அதன்பிறகு CMC என்ற பெயரில் பெண்களுக்கான துறவற சபையையும் நிறுவி கேளரத் திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் கல்வி ஏழை எளியவருக்கு குறிப்பாக பெண்களுக்கு மறுக்கப்பட்டது. சமற்கிருத மொழியை பார்ப்பனர்கள்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்றதொரு நிலை இருந்தது. தந்தை குரியாகோஸ் அவர்கள்தான் கல்வி என்பது பொதுவுடைமை. அது எல்லாருக்கும் சொந்தமானது; அறிவே ஆயுதம் என உணர்ந்து ஒவ்வொரு ஆலயத்திற்குப் பக்கத்திலும் பள்ளிக்கூடங்கள் கட்டவேண்டும் என்று முன்மொழிந்தார். அதன்பயனாக எல்லா ஆலயங்களுக்குப் பக்கத்திலும் எல்லா மக்களும் கல்வி பெற பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன.

தந்தை குரியாகோஸ் அச்சுத்துறையிலும் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாது. இயல்பிலே பாடல்கள் இயற்றுவதிலும், கவிதை எழுதுவதிலும் வல்லவராகிய குரியாகோஸ் நிறைய பாடல்புத்தகங்களை பதிப்பித்தார், அன்றாடம் குருக்கள் சொல்லக்கூடிய ஜெபப் புத்தகத்தை பதிப்பித்துத் தந்தார். இன்னும் சொல்லப்போனால் விவிலியத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டு திருச்சபைக்கு பெரும்பங்காற்றினார். தந்தையின் அன்றாடப் பணிகளுள் ஒன்று நோயாளிகளை சந்திக்கச் செல்வது. அவர் ஒவ்வொருநாளும் நோயாளிகள், முதியவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு நீண்ட நேரம் செலவழித்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார்.

தந்தை குரியாகோஸ் அவர்கள் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைச் செய்தாலும் அவர் ஜெபிப்பதற்கு மறப்பதே இல்லை. குறிப்பாக அவர் ஆலயத்தில் நீண்டநேரம் செலவுசெய்து இறைவனோடு உறவாடினார். அதிலும் சிறப்பாக அன்னை மரியிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார். இப்படி மக்கள் பணியும் இறைப்பணியும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று பாவித்து வாழ்ந்த தந்தை குரியாகோஸ் அவர்கள் 1871 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அதன்பிறகு இவருடைய உடல் மன்னானத்தில் உள்ள தூய வளனார் ஆலயத்தில் அடக்கம்செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய குரியாகோஸ் அவருடைய விழாவைக் கொண்டாடக் கூடிய இந்த நாளில் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அன்னை மரியிடம் ஆழமான பக்தி

1986 ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்த அன்பிற்கினிய திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், குரியாகோஸ் அவர்களைக் குறித்து சொல்கிறபோது இவ்வாறு சொன்னார்: தந்தை குரியாகோஸ் அன்னை மரியாவின் மிகச் சிறந்த பக்தர். அவர் அன்னை மரியாவிடம் கொண்டிருந்த அளவு கடந்த பக்திதான் அவருக்கு எல்லா காரியங்களையும், பணிகளையும் செய்ய உந்து சக்தியாக இருந்தது".

"அன்னையின் பிள்ளை அவலமாய் சாவதில்லை" என்பார்கள். ஆம், இது தந்தை குரியாகோசின் வாழ்வில் முழுமையாக நடைபெற்றது. அவர் அன்னையிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, அவர் எல்லா பணிகளையும் செய்ய உறுதுணையாக இருந்தது. நாம், அன்னை மரியாவிடம் ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருச்சபையின் இடைக்காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. ஒரு பணக்கார இளைஞன் குருமடத்தில் சேர்ந்து நல்ல குருவாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால் அவன் குருமடத்தில் சேர்ந்து படித்துவந்தான். அந்தக் காலத்தில் குருமடத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்கள் அனைத்தும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில்தான் இருக்கும். இது அந்த இளைஞனுக்கு மூளையில் ஏறவே இல்லை. அவனுக்காக பிரத்யோகமாக ஓர் ஆசிரியரை நியமித்து பாடங்களைச் சொல்லிக்கொடுத்தபோதும் அவனுக்கு ஒன்றுமே மூளையில் ஏறவே இல்லை. அவன் கற்றுக்கொண்ட இரண்டே இரண்டு வார்த்தைகள் Ave Maria என்பதுதான். அதுவும் மரியாவின் மீதுகொண்ட ஆழமான பக்தியினால்தான் அந்த இரண்டு வார்த்தைகளையும் கற்றுக்கொண்டான்.

அப்படிப்பட்ட அந்த இளைஞன் நோய்வாய்பட்டு திடிரென ஒருநாள் இறந்து போனான். அதனால் குருமடத்தில் இருந்தவர்கள் அவனை நல்லடக்கம் செய்தார்கள். ஓராண்டிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் சிலர் அவனுடைய கல்லறைக்கு சென்று வணக்கம் செலுத்த விரைந்தார்கள்.. அப்போது அந்த இளைஞனது கல்லறையில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்புக்கு உள்ளாக்கியது. ஏனென்றால் அவனது கல்லறையின் மேலே ஒரு லில்லிச் செடி பூத்திருந்தது. அந்த லில்லிச் செடியில் ஒரு பூ பூத்திருந்தது. அதில் இரண்டு இதழ்கள் இருந்தன. ஒரு இதழில் Ave என்றும் இன்னொரு இதழில் Maria என்றும் இருந்தது.

இதைப் பார்த்த அவருடைய நண்பர்கள் இந்த அற்புதமான லில்லிச் செடி எதிலிருந்து பூத்திருக்கிறது என்று கல்லறையைத் தோண்டிப்பார்த்தார். கல்லறையைப் தோண்டிப் பார்த்த நண்பர்கள் குலாம் இன்னும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். ஏனென்றால் அந்த அற்புத லில்லிச் செடி நண்பனின் வாயிலிருந்து பூத்திருந்தது. அப்போதுதான் அவர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொண்டார்கள். அந்த உண்மை இதுதான்: "அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் அவருடைய அடியார்கள் அன்னையால் மகிமைப்படுத்தப்படுவார்கள்".

படிப்பு வராத அந்த பணக்கார இளைஞன் அன்னை மரியாளிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தான். அதனால் அன்னை அவனை மகிமைப்படுத்தினாள். இன்று நாம் விழாக்கொண்டாடும் தூய குரியாகோசும் அன்னையிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார். அதனால் அவர் ஆசியைப் பெற்றார். நாமும் அன்னையிடம் ஆழமான பக்திகொண்டு வாழும்போது அன்னையின் ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.

2. நோயாளிகள் முதியவர்கள் வறியவர்கள்மீது அக்கறை


தூய குரியாகோஸ் அன்னையிடம் எந்தளவுக்கு பக்தியும் அன்பும் கொண்டிருந்தாரோ, அதைப் போன்று அவர் நோயாளிகள், முதியவர்கள் சமுதாயத்தில் உள்ள வறியவர்கள்மீது அதிகமான அன்புகொண்டிருந்தார். எந்தளவுக்கு என்றால் கேரளத் திருச்சபையின் வரலாற்றில் நோயாளிகள், முதியவர்களுக்கு என்று முறையே மருத்துவ மனைகளையும், முதியோர் இல்லங்களையும் அமைத்தார். அவர்களை மாலை நேரங்களில் சந்தித்து நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தெம்பூட்டினார். அவர் அடிக்கடி சொல்லகூடிய வசனம், "பிச்சைக்காரர்களை வெறும் கையோடு அனுப்பாதீர்கள். உங்களால் முடிந்ததை பிறருக்குத் தரத் தவறாதீர்கள்" என்பதாகும்.

தூய குரியாகோசின் விழாவைக் கொண்டாடும் நாம் நோயாளிகள், அனாதைகள் ஆகியோர்மீது உண்மையான அன்போடு இருக்கிறோமா? அவர்களை தனிப்பட்ட அன்போடு கவனித்துக்கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு நேர்மையாளர்களைப் பார்த்து, "நான் பசியை இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று கூறுவார். அத்தகைய பேறுபெற்றவர்கள் பட்டியலில் நாம் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை அந்தப் பட்டியலில் நாம் இல்லையென்றால் ஆண்டவர் சொன்ன இரக்கச் செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடித்து பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெறுவோம்.

ஆகவே, தூய குரியாகோஸ் எலியாஸ் சாவரா அவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று ஏழை எளியவரிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், அதே வேளையில் அன்னை மரியிடம் ஆழ்ந்த பக்திகொண்டு வாழ்வோம். இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா