✠ ✠ புனிதர் ஹைஜினஸ் ✠ (St. Hyginus) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
11 |
*✠ புனிதர் ஹைஜினஸ் ✠ (St. Hyginus)
*
9ம் திருத்தந்தை : (9th Pope)
*பிறப்பு : கி. பி. 74
ஏதென்ஸ், கிரேக்க நாடு, ரோமப் பேரரசு (Athens, Greece, Roman
Empire)
*இறப்பு : கி. பி. 140
ரோம், ரோமப் பேரரசு (Rome, Roman Empire)
பிறப்பால் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹைஜினஸ், ரோம் ஆயரும் கத்தோலிக்க
திருச்சபையின் ஒன்பதாம் திருத்தந்தையும் ஆவார். இவர் ஒரு புனிதராகவும்
போற்றப் பெறுகிறார். இவர் கி.பி. 136ம் ஆண்டு முதல் 140ம் ஆண்டுவரை
ஆட்சி செய்தார் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகின்ற
"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும்
அதிகாரப்பூர்வ நூலின் 2008ம் ஆண்டுப் பதிப்பு கூறுகிறது. ரோம்
நகரில் மன்னர் ஹேட்ரியன் என்பவருக்கு நினைவுக் கூடம் (Castel
Sant'Angelo) எழுப்பப்பட்ட காலத்தில் இவர் திருத்தந்தையாக இருந்தார்.
"ஹைஜினஸ்" என்னும் பெயர் கிரேக்கத்தில் "நலமானவர்" என்னும்
பொருள்தரும். இவர், ரோமப் பேரரசன் "மார்க்கஸ் ஒரேலியஸ்" (Roman
Emperor Marcus Aurelius) என்பவரின் காலத்தில் கிறிஸ்தவ
துன்புறுத்தல்களால் மறை சாட்சியாக கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுவதுண்டு.
ஆனால், அதற்கான ஆதாரங்கள் எங்கும் காணப்படவில்லை.
வாழ்க்கைக் குறிப்புகள் :
திருத்தந்தை ஹைஜினஸ் கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் பிறந்தார்
எனத் தெரிகிறது. இவர் ஒரு மெய்யியல் வல்லுநராக அல்லது மெய்யியல்
வல்லுநர் ஒருவரின் மகனாக இருந்தார். "திருத்தந்தையர் நூல்"
(Liber Pontificalis) என்னும் பண்டைய ஏட்டின்படி, ஹைஜினஸ்
குருப்பட்டத்தின் படிகளான "கீழ்நிலைப் படிகள்" (Minor Orders)
என்னும் சடங்குகளை ஏற்படுத்தினார். அதுபோலவே திருத்தொண்டர்,
துணைத் திருத்தொண்டர் என்னும் பட்டங்களை ஏற்படுத்தி அவற்றைக்
குருத்துவப் பட்டத்திலிருந்து வேறுபடுத்தினார்.
இவர் ஆட்சிக்காலத்தில் "ஞானக் கொள்கை" (Gnosticism) என்னும்
கோட்பாடு, "வாலண்டினஸ்" (Valentinus) மற்றும் "செர்டோ" (Cerdo)
என்பவர்களால் ரோமில் பரவியது என்றும் பண்டைக்கால கிறிஸ்தவ அறிஞர்
புனிதர் "இரனேயஸ்" (Irenaeus) குறிப்பிடுகிறார். "செர்டோ" தன்
தவற்றை ஏற்று மனம் திரும்பினார் என்றும், பின்னர் மீண்டும் தவறான
கொள்கைகளைப் பரப்பியதால் சபை விலக்கம் செய்யப்பட்டார் என்றும்
புனிதர் "இரனேயஸ்" கூறுகிறார். பண்டைய மரபுப்படி, திருத்தந்தை
ஹைஜினஸ், அந்தொனீனோ பீயோ என்னும் மன்னரின் காலத்தில் கிறிஸ்தவ
விசுவாசத்தின் பொருட்டு கொல்லப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்
நீத்தார். வத்திக்கானில் புனிதர் பேதுருவின் கல்லறை அருகில்
இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
பணிகள் :
திருமுழுக்குப் பெறுவோரின் ஆன்ம நலனைக் காக்கும் பொறுப்பை ஆற்றிட
ஞானப் பெற்றோர் அச்சடங்கில் கலந்துகொள்வர் என்னும் பழக்கத்தை
இவர் தொடங்கி வைத்தார்.
இவருடைய நினைவுத் திருநாள் ஜனவரி 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.
இவர் எழுதியதாகக் கருதப்படும் மூன்று கடிதங்கள் இன்றளவும்
பேணிக் காக்கப்படுகின்றன. |
|
|