Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கிரகோரி ✠ (St. Gregory of Nazianzus)
   
நினைவுத் திருநாள் :January 02
✠ புனிதர் கிரகோரி ✠(St. Gregory of Nazianzus)

*
ஸசீமா நகர் ஆயர்  (Bishop of Sasima)

* இறையியல் வல்லுநர் (Theologian)

* திருச்சபையின் மறை வல்லுநர் (Doctor of the Church)

* முப்பெரும் அருட்பணியாளர்களில் ஒருவர் (Great Hierarch)

  கப்படோசியன் தந்தை (Cappadocian Father)

* பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் பிரதிநிதித்துவ ஆசிரியர்
(Ecumenical Teacher/ Representing a number of different Christian Churches)

* பிறப்பு : கி.பி 329
அரியான்ஸும், கப்படோசீயா (Arianzum, Cappadocia)

* இறப்பு : 25 ஜனவரி 389 / 390
அரியான்சும், கப்படோசீயா (Arianzum, Cappadocia)

* ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism)

* நினைவுத் திருவிழா :
கத்தோலிக்க திருச்சபை : ஜனவரி 2
ஆங்கிலிக்க ஒன்றியம் : ஜனவரி 2
லூதரனியம் : ஜூன் 14
மரபுவழி திருச்சபை : ஜனவரி 25

* முக்கிய திருத்தலம் :
புனித ஜார்ஜ் பேராலயம், ஃபனார் (Patriarchal Cathedral of St. George in the Fanar)

* புனிதர் கிரகோரி நஸியான்ஸஸ் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த "கான்ஸ்டான்டினோபிள்" பேராயர் (Archbishop of Constantinople) ஆவார்.

தென்மேற்கு கப்படோசியாவின் தனவந்தர்களாகிய "கிரகோரி மற்றும் நொன்னா" (Gregory and Nonna) ஆகிய கிரேக்க பெற்றோருக்கு இவர் பிறந்தார். "ஹிப்ஸிஸ்டரியன்" (Hypsistarian) மதத்தைச் சேர்ந்த இவருடைய தந்தை கிரகோரியை இவரது தாயார் நொன்னா கி.பி. 325ல் மனம் மாற்றி கிறிஸ்தவ மதத்தில் இணைய வைத்தார். பிற்காலத்தில் (328ல்) கிரகோரி நஸியான்ஸஸ் (Nazianzus) நகர ஆயராக அருட்பொழிவு பெற்றார். இளம் கிரகொரியும் இவரது சகோதரர் "சேசரியசும்" (Caesarius) தமது ஆரம்பக் கல்வியை தமது சொந்த ஊரிலேயே கற்றனர். கிரகோரி சொல்லாட்சியியல் மற்றும் தத்துவயியலில் தமது மேல் படிப்பைத் தொடர நஸியான்ஸுஸ், செசரியா, அலெக்சாண்ட்ரியா மற்றும் ஏதென்ஸ் (Nazianzus, Caesarea, Alexandria and Athens) ஆகிய இடங்களுக்குச் சென்றார். ஏதென்ஸ் செல்லும் வழியில் இவர் பயணித்த கப்பல் கடுமையான சூறாவளியில் சிக்கியது. அச்சத்தினால் நடுங்கிப்போன கிரகோரி, சூறாவளியிலிருந்து தம்மையும் கப்பலையும் இரட்சிக்கும்படி கிறிஸ்து இயேசுவை வேண்டி செபித்தார். தாம் இரட்சிக்கப்பட்டால் தமது வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவின் சேவையில் அர்ப்பணிப்பதாக மன்றாடினார்.

சூறாவளியிலிருந்து இரட்சிக்கப்பட்ட கிரகோரி, ஏதென்சில் தமது உயர் கல்வியை தொடர்ந்தார். அங்கே தமது சக மாணவரான "செசரியாவின் பாசிலுடன் (Basil of Caesarea) நெருக்கமான நண்பரானார். "ஃப்லாவியஸ் கிளாடியஸ் ஜூலியானஸ்" (Flavius Claudius Julianus) என்பவருடனான அறிமுகமும் நட்பும் கிடைத்தது. இந்த "ஃப்லாவியஸ் கிளாடியஸ் ஜூலியானஸ்" தான் பிற்காலத்தில் "அபோஸ்டேட் ஜூலியன்" (Julian the Apostate) என்ற பேரரசன் ஆவார். தமது உயர்கல்வியை முடித்த கிரகோரி, சிறிது காலம் அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

நாடு திரும்பிய கிரகோரி, சிறிது காலம் தமது மாணவ நண்பரான பாசிலுடன் இணைந்து துறவு வாழ்வைத் தொடங்கினார். உயர் கல்வியின்போது ஏதென்சில் அறிமுகமான இவரது பால்ய சிநேகிதன் பேரரசன் ஜூலியன் (Emperor Julian) கிறிஸ்தவத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தான். அதனால் அவனுக்கெதிரான போராட்டங்களும் துன்புறுத்தல்களுமாக காலம் ஓடியது. பொறுமை அன்பு எனும் ஆயுதங்கள் கொண்டு ஜூலியன் போன்றவர்களையும் கிறிஸ்தவம் ஜெயிக்கும் என்று சூளுரைத்தார். ஆனால், ஜூலியனின் மரணம் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டியது. ஜூலியனுக்கு பின்வந்த பேரரசன் "ஜோவியன்" (Jovian) கிறிஸ்தவ மறையை தழுவியதால் கிறிஸ்தவர்களுக்கெதிரான பிரச்சினைகள் தீர்ந்தன.

அதன்பின் வந்த சில வருடங்களை "ஆரியணிசத்துக்கு" (Arianism) எதிராக போரிடுவதில் கிரகோரி கழித்தார். 372ல் கிரகோரி "சசிமா" நகர ஆயராக (Bishop of Sasima) பாசிலால் அருட்பொழிவு செய்யப்பட்டார். 372ன் இறுதியில் மரணப்படுக்கையில் இருந்த தமது தந்தையின் மறை மாவட்ட நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக கிரகோரி நஸியான்ஸுஸ் திரும்பினார். 374ல் தமது தாய் தந்தை இருவரையும் மரணத்தில் இழந்த கிரகோரி, தொடர்ந்து நஸியான்ஸுஸ் மறை மாவட்ட நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்தினார். ஆனால், தம்மை ஆயர் என்று சொல்லிக்கொள்ள மறுத்தார். தமது பெற்றோரின் வழி வந்த செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்கும் வேண்டியவர்களுக்கும் அள்ளி கொடுத்தா. கிரகோரி மிகவும் கடினமானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்.

375ன் இறுதியில் "செலுகியாவிலுள்ள" (Seleukia) துறவு மடத்தில் போய் சேர்ந்தார். அங்கேயே மூன்று வருடங்கள் ஓடின. இதற்கிடையே அவரது ஆருயிர் தோழர் பாசில் மரணமடைந்தார்.

கிரகோரி திருச்சபைத் தந்தையர்களுள் மிகவும் குறிக்கத்தக்க இடத்தைப் பெறுகின்றார். நன்கு கற்றறிந்த மெய்யியலாளரான இவர், ஹெலனிசக் கொள்கைகளை துவக்கத் திருச்சபையில் கொண்டு வரக் காரணியானவர். பைசாந்தியப் பேரரசில் இறையியலாளர்களின் முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார்.

கிரேக்க மற்றும் இலத்தீன் இறையியலாளர்களிடையே இவரது திரித்துவம் குறித்த இறையியல் கொள்கைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் இவர் திரித்துவ இறையியலாளர் எனவும் அறியப்படுகின்றார்.

இவர், கப்போடோசிய தந்தையர்களுள் ஒருவராவார்.
கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவத்தில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார்.

கத்தோலிக்க திருச்சபையில் இவர் மறைவல்லுநர்களுள் ஒருவராவார். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் இவரை புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பசீலோடு சேர்த்து முப்பெரும் புனித தலைவர்கள் (Three Holy Hierarchs) எனப் போற்றுகின்றது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா