Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் எலிசபெத் ஆன் செடன் ✠ (St. Elizabeth Ann Seton)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 04
 * ✠ புனிதர் எலிசபெத் ஆன் செடன் ✠ (St.Elizabeth Ann Seton)
 நிறுவனர், கல்வியாளர் (Foundress, and Educator)

 பிறப்பு : ஆகஸ்ட் 28, 1774
    நியூ யார்க் நகர், நியூ யார்க் பிராந்தியம், பிரிட்டிஷ் அமெரிக்கா
    (New York City, Province of New York, British America)

 இறப்பு : ஜனவரி 4, 1821 (வயது 46)
    எம்மிட்ஸ்பர்க், மேரிலேன்ட், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
    (Emmitsburg, Maryland, United States)

 ஏற்கும் சமயம் :
    ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
   ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை
    (Episcopal Church (The Anglican Church in the US and Scotland)

 முக்திபேறு பட்டம் : மார்ச் 17, 1963
     திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் (Pope John XXIII)

 
*   புனிதர் பட்டம் : செப்டம்பர் 14, 1975
      திருத்தந்தை ஆறாம் பால் (Pope Paul VI)

 முக்கிய திருத்தலங்கள் :
புனிதர் எலிசபெத் ஆன் செடனின் தேசிய திருத்தலம், எம்மிட்ஸ்பர்க், மேரிலேன்ட் (அவரது மிச்சங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள இடம்);
எண் 9, ஸ்டேட் தெரு, நியூ யார்க் நகரிலுள்ள புனிதர் எலிசபெத் ஆன் பெய்லி செடனின் திருத்தலம் (அவரது முன்னாள் இல்லம்)
(National Shrine of St. Elizabeth Ann Seton, Emmitsburg, Maryland (Where her remains are entombed)
Shrine of St. Elizabeth Ann Bayley Seton at 9 State Street in New York City (Site of her former residence)

 பாதுகாவல் :
கத்தோலிக்க பள்ளிகள், ஷ்ரேவெபோர்ட், லூயிஸியானா, மேரிலேன்ட் மாநிலம்
(Catholic Schools, Shreveport, Louisiana; and the State of Maryland)

எலிசபெத் ஆன் செடன், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பிறந்து புனிதர் பட்டம் பெற்ற முதல் கத்தோலிக்கர் ஆவார். நாட்டிலேயே முதன்முதலாக "மேரிலேன்ட்" மாநிலத்தில் "எம்மிட்ஸ்பர்க்" (Emmitsburg, Maryland) என்ற இடத்தில் பெண்களுக்கான கத்தோலிக்க பள்ளிக்கூடத்தை நிறுவினார். அங்கேயே (First American Congregation of Religious Sisters, the Sisters of Charity) "முதல் அமெரிக்க அருட்சகோதரிகளின் சபை என்ற அருட்சகோதரிகளின் கருணை இல்லம்" நிறுவினார்.

வாழ்க்கை :
இவர், நியூ யார்க் சமூகத்தில் பிரபலமான "டாக்டர் ரிச்சர்ட் பேலி" (Dr. Richard Bayley) மற்றும் "கேதரின் சார்ல்டன்" (Catherine Charlton) தம்பதியினருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை ஆவார். "ரிச்சர்ட் மற்றும் கேதரின்" ஆகியோரின் முன்னோர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து நியூ யார்க் நகரில் குடியேறியவர்கள் ஆவர். ரிச்சர்டின் பெற்றோர் ஃபிரென்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கேத்தரினின் முன்னோர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேத்தரினின் தந்தை இங்கிலாந்தின் திருச்சபை ஒன்றின் மத குரு ஆவார்.

நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வந்த இக்குடும்பத்தினரின் ஒவ்வொருவராக மரணித்தது இவர்கள் நொடித்துப்போக காரணமானது. 1777ம் ஆண்டும், எலிசபெத்துக்கு மூன்று வயதாகையில் அவரது தாயார் மரித்துப் போனார். அவரது மூன்றாவது பிரசவத்தில் நேர்ந்த சிக்கல்களினால் ஒரே வருடத்தில் அவரும், பிறந்து ஒரு வயதேயான குழந்தையும் மரித்துப் போயினர். எலிசபெத்தின் தந்தை, தமது இரண்டு பெண்குழந்தைகளுக்கு ஒரு தாய் வேண்டுமே என்ற அவசிய காரணத்தால் "சார்லோட் அமெலியா பார்க்லே" (Charlotte Amelia Barclay) என்ற பெண்ணை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.

புதிய திருமதி ரிச்சர்ட், தமது ஆலயத்தின் சமூக சேவை நடவடிக்கைகளில் பங்கெடுப்பவர் ஆவார். அவர் தாம் சமூக சேவை செய்யும் நோக்கில் ஏழைகளுக்கு சேவை செய்ய போகும் வேளைகளில் இளம் எலிசபெத்தையும் உடன் அழைத்துச் செல்வார்.

எலிசபெத்தின் தந்தை ரிச்சர்டுக்கும் புதிய வளர்ப்புத் தாயார் சார்லோட்டுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களது மொழி பிரிவில் முடிவடைந்தது. அவர்கள் பிரியும் வேளையில் வளர்ப்புத் தாயாரான சார்லோட் எலிசபெத்தையும் அவரது தமக்கையாரையும் நிராகரித்தார். இதற்கிடையே அவர்களது தந்தை ரிச்சர்ட் மருத்துவ மேல் படிப்பிற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். வேறு வழியில்லாத காரணத்தால் எலிசபெத்தும் அவரது மூத்த சகோதரியும் அவர்களது தந்தை வழி மாமன் "வில்லியம் பேய்லே" (William Bayley) என்பவரது வீட்டில் தங்கினர். எலிசபெத் அந்த காலத்தை தமது இருண்ட காலமாக உணர்ந்தார். இரண்டாவது தாயாரின் பிரிவினால் வாடினார். இயற்கை, கவிதை, இசை, பியானோ ஆகியவற்றின்பாலுள்ள தமது அன்பை பிற்காலத்தில் தமது எழுத்துக்களில் பிரதிபலித்தார். தமது பதிவுகளிள் அடிக்கடி தமது மத அபிலாஷைகளை வெளிப்படுத்தினார். அவரது எழுத்துக்கள் சுய பரிசோதனையாக இருந்தன. எலிசபெத் ஃபிரெஞ்ச் மொழி அறிந்தவராக இருந்தார். அத்துடன், அவர் ஒரு சிறந்த குதிரையேற்றம் அறிந்தவராகவும் விளங்கினார்.

மொழி மற்றும் தாய்மை :

1794ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் தேதி, இவரது பத்தொன்பது வயதில் இவருக்கு, இறக்குமதி வர்த்தகத்தில் வெற்றிகரமாக தொழில் செய்யும் இருபத்தைந்து வயதான "வில்லியம் மேகி செடன்" (William Magee Seton) எனும் வாலிபனுடன் மொழி நடந்தது. சமூகத்தில் மிகப்பெரும் பணம் படைத்த பெரிய மனிதர்கள் பலருடன் தொடர்பிலிருந்த பிரபுக்கள் குடும்பம் என்பதால் வசதிகள் பல கொண்ட பெரும் மாளிகை வாசம்தான். இத்தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.

எலிசபெத் தமது முன்னாள் வளர்ப்புத் தாயாரைப் போலவே சேவை மனப்பான்மை கொண்டவராயிருந்தார். எலிசபெத்தின் மைத்துனி (கணவரின் சகோதரி) "ரெபெக்கா மேரி செடன்" (Rebecca Mary Seton) இவருக்கு சமூக சேவையில் பக்கபலமாய் இருந்தார். மைத்துனி ரெபெக்கா, இவரது உயிர்த் தோழியாகவும் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் விளங்கினார். தமது தந்தையின் செல்வாக்கினால் அங்குள்ள ஏழைகள், சிறுவர்கள் மற்றும் விதவைப் பெண்களின் நிவாரண அமைப்பான "சமூக நிவாரண" (The Society for the Relief) அமைப்பின் அடிப்படை அங்கத்தினரானார். தமது மாளிகையின் அருகேயிருந்த ஆலயத்தின் மூலமாக ஏழைகளுக்கும் அவசியப்பட்டவர்களுக்கும் சேவைகள் பல செய்தார். நோயுற்றோரை அன்புடன் கவனித்தார். பசியால் வாடியோர்க்கு உணவிட்டார். இவ்வாறு தொடர் சமூக சேவைகள் பல செய்தார்.

இதற்கிடையே எலிசபெத்தின் மாமனார் இறந்து போனார். 1812ம் ஆண்டின் யுத்த காலத்தில் செடன் குடும்பம் பொருளாதார சரிவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. எலிசபெத்தும் அவரது கணவர் வில்லியம்சும் இணைந்து, ஏழு முதல் பதினேழு வயதுவரையான வில்லியம்சின் ஆறு சகோதர சகோதரியரையும் தங்களது ஐந்து குழந்தைகளையும் மைத்துனி ரேபெக்காவையும் அழைத்துக்கொண்டு செடன் குடும்பத்தின் பெரிய மாளிகை வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். அது அச்சமயம் இன்றியமையாததாக இருந்தது.

விதவை வாழ்க்கை மற்றும் மனமாற்றம்:

1798ம் ஆண்டு முதல் 1800ம் ஆண்டு வரையான காலங்களில், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் (USA), ஃபிரெஞ்ச் குடியரசுக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடுகளும், சர்ச்சைகளும் அமெரிக்க கப்பல்களின் மீது தொடர் தாக்குக்தல்களை ஏற்படுத்தின. பிரிட்டனின் (United Kingdom) ஃபிரான்ஸ் மீதான முற்றுகை, வில்லியம் செடனின் பல கப்பல்கள் கடலில் காணாமல் போக வழிவகுத்தன. இதனால் பலத்த நஷ்டத்துக்குள்ளான வில்லியம் செடன், தமது குடும்பத்துடன் எலிசபெத்தின் தந்தையாரின் இல்லத்துக்கு குடி போனார். 1801ம் ஆண்டு முதல் 1803ம் ஆண்டு வரையான காலத்தில் அவர்கள் எண். 8, ஸ்டேட் தெரு (8 State Street) என்ற விலாசத்திலுள்ள வீட்டின் வசித்தனர். (தற்போது அந்த விலாசத்தில், 1964ம் ஆண்டு கட்டப்பட்ட அதிதூய ஜெபமாலை அன்னை ஆலயம் (Church of Our Lady of the Most Holy Rosary) உள்ளது.)

அவர்களின் திருமண வாழ்க்கையின் பெரும்பாலான காலம் வில்லியம் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போதைய பிரச்சினைகளாலான மன அழுத்தம் அவரது நோய் மோசமடைய காரணமானது. மருத்துவர்கள் அவரை சிறிது காலம் உஷ்ண பிரதேச நாடான இத்தாலியில் தங்கியிருக்க அறிவுறுத்தி அனுப்பினார்கள். அவருடன் எலிசபெத்தும் அவர்களது மூத்த மகளான "அன்னா மரியாவும்" (Anna Maria) உடன் சென்றனர். "லேகார்ன்" துறைமுகத்தை (Port of Leghorn) அடைந்ததும் அவர்கள் "மஞ்சள் காய்ச்சல்" (Yellow Fever) எனப்படும் தொற்று நோயுள்ளவர்களோ என்ற சந்தேகம் காரணத்தால் அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைத்தனர். நோய் முற்றியதால் 1803ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 27ம் நாள், மரித்துப்போன வில்லியம், அங்குள்ள பழைய ஆங்கிலக் கல்லறையில் (Old English Cemetery) அடக்கம் செய்யப்பட்டார். அவர்களை இத்தாலியிலுள்ள வில்லியம்சின் வணிக பங்காளிகளின் குடும்பத்தினர் வரவேற்று அடைக்கலம் கொடுத்தனர். அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்கத்தையும் அறிமுகப்படுத்தினர்.

1805ம் ஆண்டு, மார்ச் மாதம், 14ம் நாள், நியூ யார்க் திரும்பிய விதவைப் பெண்ணான எலிசபெத், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் வரவேற்கப்பட்டார். அப்போது, நியூ யார்க்கிலிருந்த ஒரே ரோமன் கத்தோலிக்க ஆலயமான "புனித பேதுரு ஆலயத்தின்" (St. Peter's Roman Catholic Church) குருவான "மாத்தியூ ஒ'பிரியன்" (Matthew O'Brien) அவர்களை வரவேற்றார். கத்தோலிக்கத்துக்கு எதிரான அங்கிருந்த சட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர்தான் அகற்றப்பட்டிருந்தன. சரியாக ஒரு வருடத்தின் பிறகு, அவர்கள் உறுதிப்பூசுதலும் திவ்ய நற்கருணையும் பெற்றனர். எலிசபெத் இளம்பெண்களுக்கும் விதவைகளுக்குமாய் ஒரு கல்விச்சாலையை தொடங்கினார்.

நிறுவனர் :
1809ம் ஆண்டு, ரோமன் கத்தோலிக்க குருக்கள் சபையின் அங்கத்தினர் ஒருவர் வருந்தி அழைத்ததன்பேரில் எலிசபெத் மேரிலேன்ட் செல்ல ஒப்புக்கொண்டார். ஒரு வருட காலத்தின் பின்னே, அவர் கத்தோலிக்க சிறுமிகளின் கல்விக்காக "புனித சூசையப்பரின் கல்விச்சாலை மற்றும் பள்ளியை (Saint Joseph's Academy and Free School) நிர்மாணித்து நிர்வகித்தார். ஜூலை 31ல் எலிசபெத் செடன் "எம்மிட்ஸ்பர்க்" (Emmitsburg) நகரில் ஏழைகளின் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்கென்று ஒரு சமய சமூக சபையினை நிறுவினார். இதுவே ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்க பள்ளிகளும் கல்விச் சாலைகளும் உருவாக ஆரவார தொடக்கமாக இருந்தன. ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள "கருணையின் மகளிர்" (Daughters of Charity) சபைக்காக "புனித வின்சென்ட் தெ பால்" (St. Vincent de Paul) அவர்களால் எழுதப்பட்ட சட்ட திட்டங்களையே 1810ம் ஆண்டு, இவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

கடைசி காலமும் மரணமும் :
இவர் தமது எஞ்சிய காலத்தை முன்னணி மற்றும் புதிய சபைகளை நிறுவி வளர்ப்பதில் செலவிட்டார். தவறான புரிந்துணர்வுகளும், ஒருவருக்கொருவரிடையே உண்டான மோதல்களும், தமது இரண்டு மகள்களதும், மற்றும் தமக்குப் பிரியமான இளம் அருட்சகோதரிகளது மரணமும் அவரை மிகவும் துனபத்திலாழ்த்தின. 46 வயதான எலிசபெத் ஆன் செடன், காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டு, 1821ம் ஆண்டு, ஜனவரி மாதம், 4ம் தேதி மரணமடைந்தார். இன்று, அவருடைய உடலின் மிச்சங்கள் "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் 'மேரிலேன்ட்' மாநிலத்திலுள்ள 'எம்மிட்ஸ்பர்க்' எனுமிடத்திலுள்ள புனிதர் எலிசபெத் ஆன் செடன் தேசிய திருத்தலத்திலுள்ள கல்லறையில்" (National Shrine of Saint Elizabeth Ann Seton in Emmitsburg, Maryland, United States of America) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய எலிசபெத் ஆன் பேலி சேற்றேன் (ஜனவரி 04)

நிகழ்வு

எலிசபெத் தன்னுடைய கணவர் வில்லியம் மாகி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் அமெரிக்காவில் உள்ள நீயூயார்க் நகரில் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தார். எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், கணவர் வில்லியம் மாகி செய்துவந்த தொழிலில் பயங்கர வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை. ஆகவே, அவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலிக்குச் சென்று, அங்கு தொழில் தொடங்கலாம் என்று முடிவுசெய்தார். அதன்படி அவருடைய குடும்பம் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தது. இத்தாலிக்குச் சென்ற புதிதில் எலிசபெத்தின் குடும்பம் பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவருடைய இல்லத்தில் தங்கி இருந்தது. எலிசபெத்தின் குடும்பம் அடிப்படையில் ப்ராடஸ்டேன்ட் சபையை சார்ந்தது. அதுவும் அச்சபையில் பிடிப்பில்லாமல் இருந்தது. பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையையும் நற்கருணை ஆண்டவர்மீதும் மரியன்னையின் மீதும் புனிதர்கள்மீதும் அவர் கொண்டிருந்த பக்தியையும் கண்டு வியந்துபோய், சில நாட்களிலேயே அவரும் அவருடைய குடும்பமும் கத்தோலிக்க சபைக்கு வந்தது.

ஒருவரை (கத்தோலிக்க) கிறிஸ்தவ மறைக்குள் கொண்டுவர, நாம் கிறிஸ்துவைக் குறித்து மணிக்கணக்காக போதிக்கவேண்டும் என்பதில்லை, கிறிஸ்துவின் போதனைகளின் வாழ்ந்தாலே போதுமானது என்பதை மேலே உள்ள நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

எலிசபெத் ஆன் பேலி சேற்றேன் 1774 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் நீயூயார்க் நகரில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர். எலிசபெத், சிறுவயது முதலே பக்தியில் சிறந்து விளங்கினார், விவிலியம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். மட்டுமல்லாமல் ஏழை எளியவர்மீது மிகுந்த அக்கறை காட்டி வந்தார். சிறு வயதில் ஏழை எளியவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் பின்னாளில் அவரை அவர்களுக்காக ஏராளமான நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டியது.

எலிசபெத்துக்கு இருபது வயது நடக்கும்போது அதாவது, 1794 ஆம் ஆண்டு, வில்லியம் மாகி என்பவருக்கு அவர் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். வில்லியம் மாகியுடனான இல்லற வாழ்க்கை எலிசபெத்துக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாகப் போனது. இறைவன் அவருக்கு ஐந்து பிள்ளைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் எலிசபெத்தின் கணவர் செய்துவந்த தொழில் வீழ்ச்சியுறத் தொடங்கியது. அந்த வீழ்ச்சியிலிருந்து எழ அவர் எவ்வளவோ முயன்றபோதும் அவரால் எழ முடியவில்லை, இதனால், எலிசபெத்தின் குடும்பம் இத்தாலியில் குடிபுகுந்தது. இத்தாலில் குடியேறிய சில நாட்களிலேயே எலிசபெத்தின் கணவர் வில்லியம் மாகி இறந்து போனார். அப்போது அவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை. இருந்தாலும் தனி ஒரு மனுசியாய் குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றினார்.

எலிசபெத், இத்தாலியில் குடிபுகுந்த தொடக்கத்தில் பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவர் தன்னுடைய இல்லத்தில் தங்குவதற்கு இடமளித்தார். அவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கை எலிசபெத்தை கத்தோலிக்க திருமறையைத் தழுவுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது. எலிசபெத் கத்தோலிக்கத் திருமறையைத் திருமறையைத் தழுவியதால், அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. எத்துணை எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர் தான் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்கவே இல்லை.

சிறிதுகாலம் இத்தாலியில் இருந்து பணியாற்றிய எலிசபெத், அதன்பின்னர் கனடாவில் உள்ள பால்டிமோர் பகுதிக்குச் சென்று, அங்கு பெண்களுக்கென பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். ஐரோப்பா கண்டத்திலே பெண்களுக்கென முதன்முதலாக கல்வி நிறுவனம் தொடங்கிய பெருமை எலிசபெத்தையே சாரும். கல்வி நிறுவனம் மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கென தர்ம விடுதிகளையும் அவர் அமைத்தார். அதன்மூலம் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்றார்கள். எலிசபெத், இறைவன் தனக்குக் கொடுத்த எழுத்துத் திறமையைக் கொண்டு நிறைய ஆன்மீகப் புத்தகங்களை எழுதினார். அது பின்னாளில் அவர் நிறுவிய 'Sisters of Charity' என்னும் சபையின் வேதப் புத்தகமாக அமைந்தது. எத்தகைய பணிகளுக்கு மத்தியிலும் இவர் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள தவறியதில்லை. நோயாளிகளுக்குச் செய்கின்ற சேவையை ஆண்டவர் இயேசுவுக்குச் செய்வதாகவே அவர் உணர்ந்தார். இப்படி அயராது பாடுபட்ட எலிசபெத் நோய்வாய்ப்பட்டு 1821 ஆம் ஆண்டு, ஜனவரி 4 ஆம் நாள், இறைவனடி சேர்ந்தார். இவருக்கு 1975 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

எலிசபெத் அதிசயங்களோ அற்புதங்களோ நிகழ்த்தி விடவில்லை, இயேசுவின் அன்பை எல்லா மக்களுக்கு தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துரைத்தார். அதுவே அவரை புனிதையாக உயர்த்தியது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழை எளியவர்மீது அக்கறை

எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றபோது அவர் ஏழை எளியவர் மீது எந்தளவுக்கு தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர் மீது அக்கறை கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏழைகள் மீது அக்கறைகொண்டு வாழவேண்டும் என்று சொல்லும்போது பணக்காரர்கள்தான் அப்படி இருக்கவேண்டும் என்பதில்லை, ஏழைகளும் தங்களோடு வாழக்கூடிய மற்ற ஏழைகளிடம் அக்கறை கொண்டு வாழ்வது சாலச் சிறந்த ஒன்றாகவும்.

இந்த இடத்தில் ஒருவரைப் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் வேறு யாருமல்ல அமெரிக்காவைச் சார்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா என்ற சிறுமிதான்.

1999 ஆம் ஆண்டு, நான்கு வயதான அலெக்ஸ்சாண்ட்ரா என்ற அந்த சிறுமிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட சிகிச்சைகளில், அவள் அதிக நாள்கள் உயிர் வாழமாட்டாள் என்பது தெரிந்துவிட்டது. சிறுமியோ மனம் தளராமல் ஆரம்ப சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், தன் வீட்டு வாசலில் எலுமிச்சை ஜூஸ் விற்கும் கடை திறந்தாள். அதன் முக்கிய நோக்கம், அதில் கிடைக்கும் பணத்தில், தன்னைப் போல் புற்று நோய் பாதித்த ஏழைச் சிறுவர்களுக்கு உதவி செய்வது. அந்த அக்கறையும் ஈடுபாடும் 2000 டாலரை ஒரே வருடத்தில் வசூல் செய்துதந்தது. அதனை தன்னையொத்த சிறுவர்களின் நலனுக்காக செலவிட்ட அலெக்ஸ்சாண்ட்ரா நோய் முற்றி 2004 ஆம் ஆண்டு இறந்துபோனாள். ஆனால், அவள் துவக்கிவைத்த எலுமிச்சை ஜூஸ் கடைகள் உலகமெங்கும் பரவி, இன்று ஏழைச் சிறுவர்களைப் புற்றுநோயில் இருந்து காக்க உதவும் அறிய திட்டமாக வளர்ந்திருக்கின்றன.

ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு, அவர்கள்மீது அக்கறை கொண்டு அன்புப் பணிகள் செய்வதற்கு நாம் யாராகவும் இருக்கலாம் என்பதை அலெக்ஸ்சாண்ட்ரா என்ற சிறுமியின் வாழ்வே நமக்குச் சான்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய எலிசபெத் ஆன் பேலி சேற்றேனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவர் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

பிராடடஸ்டாண்டு குடும்பத்தில் பிறந்த ஒருவர் மிகப் பெரிய கத்தோலிக்கப் புனிதராக மாறியவர் யார்?
புனித எலிசபத் அன் பேலி சேற்றன்.
புனித எலிசபத் பேலி சேற்றன் 1774 ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் நியுயார்க் நகரில். சிறு வயதில் தாயை இழந்தார். தந்தை மகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தார். சிறு வயதிலேயே ஏழைகள் மேல் அதிக பரிவு கொண்டிருந்தார். திருச்சிலுவைபக்தி, தினும் செய்யக்கூடிய ஆன்ம சோதனை, தாமஸ் எக்கம்பிஸ் எழுதிய (imitation of Christ) கிறிஸ்துவைப் பின் பற்று என்ற புத்தகத்தையும் அதகம் நேசித்தார்.

1794 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 25 ஆம் நாள மொழி நடந்தது. கணவர் வில்லியம் மாகி சேற்றன் செல்வாக்குள்ள நல்ல வியாபாரி. ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். இந்த நிலையில் கணவர் தொழில் நலிந்ததுடன் நோய்வாயப்பட்டார். செல்வாக்கு சரிந்தவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினால் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று நினைத் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அந்த நேரத்தில் இத்தாலி நாட்டிலிருந்த பிலிச்சி என்ற குடும்பம் இவர்களை வரவேற்றது. 1803 ஆம் ஆண்டு தும் மூத்த மகனுடன் லெக்கான் நகரை இடைந்தனர். ஆறே மததத்தில் கணவர் வில்லியம் இறந்தார்.

அந்த நேரத்தில்ஆறுதலாக இருந்தது நல்ல கத்தோலிக்கரான பெலிச்சி குடும்பம் தான். அப்போதூதான் கத்தோலிக்க விசுவாசத்தை அவர் புரிந்து கொண்டார். அதனால் ஈர்க்கப்பட்ட புனித எலிசபத் பேலி சேற்றன் 1805 ஆம் ஆண்டு கத்தோலிக்கராக மாறினார்;. அப்போது உறவினர்கள் அனைவரு:ம் அவரைக் கைவிட்டனர்.தனியாக ஆண்டவரைப் போல் கைவிடப்பட்டார். ஆனால் ஆண்டவரை முழுமையாக நம்பி கனடர் சென்றார். தந்தை மார்க் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை நிறுவ விரும்பிய மார்க்குக்கு புனித எலிசபத் பேலி சேற்றன் உதவிக் கரம் நீட்டினார். அந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் அதற்கு உதவிக்கரம் நீட்டினர். அந்த நேரத்தில் ஏராளமான மக்கள் புனித எலிசபத் பேலி சேற்றன் திறமையைக் கண்டு அங்கு கல்வி கற்க போட்டி போட்டனர். அவர்களில் ஆவர்களுக் கென துறவு மடம் ஒன்றை நிறுவ விரும்பினர். பால்டி மோர் ஆயரும் தறவிகளுக்கான் ஒழுங்கு முறைகளை வடிவமைத்தார். துறவு மடத்தை புனித எலிசபத் பேலி சேற்றன் பொறுப்பில் விட வே அனைவரும் விரும்பினர். எனவே எலிசபத் துறவு வார்;த்தைப் பாட்டை ஆயர் ஏற்றுக் கொண்டார். ஆயர் புனித எலிசபத் பேலி சேற்றனை மடத்தின்தலைவியாக்கி விட்டார்.
1809 ஆம் ஆண்டு எமிட்ஸ் பர்க் சென்ற புனித எலிசபத் பேலி சேற்றன் அங்கே வின்சென்ட் பால் சபையை நிறுவினார்.

மேலு; பள்ளிக் கூடம் ஒன்றையும் ஆசிரியர்களையும் அமெரிக்கக் கலாச்சார அடிப்படையில் உருவாக்கினார். இவரது பணிகள் பல்வேறு மக்களைக் கவர்ந்தன. ஏராளமான மக்கள் மெய் மறைக்கு வந்தனர். பில டெல்பியா,நியூயார்க் நகரங்களலும் ஏழைகளுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டன. புனித எலிசபத் பேலி சேற்றனின் கடினமான பணிகள் அவரது உடலைப் பாதித்தது. 1821 ஆண்டு இறந்த இவருக்கு 1975ஆம்ஆண்டு இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. புனித எலிசபத் பேலி சேற்றன எல்லாவித நிலைகளையும் கடந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறை வார்த்தை: நீங்கள் என்னிடம் கற்றுக் கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை. என்னிடம் கேட்டறிந்தவை என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். (பிலி. 4:9)

தொகுப்பு: லூயிஸ் செல்வ ஆரோக்கியம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா