✠ புனிதர் ஜான் போஸ்கோ ✠ (St. John Bosco) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
31 |
✠ புனிதர் ஜான்
போஸ்கோ ✠ (St. John Bosco)
*குரு/ ஒப்புரவாளர்/ நிறுவனர்/
இளையோரின் தந்தை மற்றும் ஆசிரியர்:
(Priest, Confessor, Founder, "Father and Teacher of Youth")
*பிறப்பு : ஆகஸ்ட் 16, 1815
காசல்நுவோ டி அஸ்டி, பியத்மான்ட், சர்டீனியா அரசு
(Castelnuovo d'Asti, Piedmont, Kingdom of Sardinia)
*இறப்பு : ஜனவரி 31, 1888 (வயது
72)
துரின், இத்தாலி அரசு (Turin, Kingdom of Italy)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
*முக்திபேறு பட்டம் : ஜூன் 2,
1929
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI)
*புனிதர் பட்டம் : ஏப்ரல் 1,
1934
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI)
*முக்கிய திருத்தலங்கள் :
கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், டூரின், இத்தாலி
(Basilica of Our Lady of Help of Christians, Turin, Italy)
*பாதுகாவல் :
கிறிஸ்தவ வேலை பழகுபவர் (Christian Apprentices),
பதிப்பாசிரியர்கள் (Editors),
பதிப்பாளர்கள் (Publishers),
பள்ளி சிறார்கள் (School Children),
கண்கட்டி வித்தை புரிவோர் (Magicians),
இளம் குற்றவாளிகள் (Juvenile Delinquents),
இளையோர் (Young People)
புனிதர் ஜான் போஸ்கோ, "டான் போஸ்கோ" (Don Bosco) என்ற பெயரில்
பிரபலமானவர். இவர், ஓர் இத்தாலிய ரோமன் கத்தோலிக்கக் குருவும்,
கல்வியாளரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளரும் ஆவார்.
டூரின் (Turin) நகரில் இவர் பணிபுரிந்த காலத்தில், தொழில்மயமாக்கல்
(Industrialization) மற்றும் நகரமயமாக்கல் (Urbanization) ஆகியவற்றினால்
மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு ஆட்பட்டிருந்தனர். தெருக்களில்
வாழும் சிறுவர்கள், இளம் குற்றவாளிகள் மற்றும் பிற குறைபாடுடைய
இளைஞர்களின் கல்விக்காக தமது வாழ்க்கையினை அர்ப்பணித்துக்கொண்டார்.
தண்டனை சார்ந்த கல்வி முறையை விடுத்து அன்பு சார்ந்த கல்வி
முறையைப் பின்பற்றினார்.
இவர், புனிதர் "ஃபிரான்சிஸ் டி சலேஸின்" (Saint Francis de
Sales) ஆன்மீகம் மற்றும் தத்துவத்தை பின்பற்றுபவர் ஆவார். இவர்,
"கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" (Mary Help of Christians) என்ற
தலைப்பில் அன்னை அர்ச்சிஷ்ட மரியாளின் தீவிர பக்தர் ஆவார்.
பின்னாளில், டூரின் நகரில் "டான் போஸ்கோவின் சலேசியர்கள்" (Salesians
of Don Bosco) என்ற அமைப்பினைத் தொடங்கியபோது தமது பணிகளை "டி
சலேஸுக்கு" (De Sales) அர்ப்பணித்தார்.
"மரிய டோமெனிகா மஸ்ஸரெல்லோ" (Maria Domenica Mazzarello) என்பவருடன்
இணைந்து, "கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மகள்கள்" (Daughters
of Mary Help of Christians) என்றதொரு அருட்கன்னியரின் சமய அமைப்பினைத்
நிறுவினார். இது ஏழைச் சிறுமிகளின் கல்வி மற்றும் அவர்களை அக்கறையுடன்
கவனிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
1876ம் ஆண்டும், போஸ்கோ "சலேசிய கூட்டுறவு இயக்கம்"
(Association of Salesian Cooperators) என்ற பெயரில் ஒரு பாமர
மக்கள் இயக்கத்தினை (Movement of Laity) நிறுவினார். இதன் நோக்கமும்
ஏழைகளின் கல்வியேயாகும்.
வாழ்க்கைச் சுருக்கம் :
ஜான் போஸ்கோ, இத்தாலியின் "பெச்சி" (Becchi) என்னும் மலைப்பகுதியின்
குக்கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஃபிரான்செஸ்கோ
போஸ்கோ" (Francesco Bosco) ஆகும். தாயார், "மார்கரெட்டா ஓச்சியெனா"
(Margherita Occhiena) ஆவார். இவருக்கு "அன்டோனியோ" (Antonio)
மற்றும் "ஜியுசெப்" (Giuseppe) ஆகிய இரண்டு மூத்த சகோதரர்கள்
இருந்தனர். இவர்கள் "மோக்லியன்" (Moglian Family) குடும்பத்தைச்
சேர்ந்த பண்ணைப் பணியாளர்கள் ஆவர். ஜான் போஸ்கோ பிறந்த சமயத்தில்
அங்கே வறட்சியும் பஞ்சமும் நிலவியது. அதனைத் தொடர்ந்து, 1817ம்
ஆண்டு, நெப்போலியனின் தொடர் போர்களின் பிறகு, (Napoleonic wars)
வறட்சியும் பஞ்சமும் பேரழிவும் நிலவியது.
இவருக்கு இரண்டு வயதாகையில் இவருடைய தந்தை மரித்துப்போனார்.
அவரது தாயார் பிள்ளைகள் மூவரதும் கொள்கைகள் மற்றும் பணிகளில்
அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்.
1825ம் ஆண்டு, தனது ஒன்பதாவது வயதில் அவர் தினமும் தொடர் கனவுகள்
காண ஆரம்பித்தார். இது, அவரது சொந்த ஞாபங்களின்படி அவரிலும்
அவரது முழு வாழ்க்கையிலும் ஆழ்ந்த உணர்வுகளை ஏற்படுத்தியது.
அவர் திரளான சிறுவர்கள் விளையாடுவதையும் தேவதூஷணம் செய்வதையும்
கண்டார். அத்துடன் ஒய்யாரமாக சிங்காரித்துகொண்டிருந்த ஒரு மனிதனையும்
கண்டார். அம்மனிதன், நீர் இந்த உன் நண்பர்களை மென்மையாகவும்
இரக்கமாகவும் ஜெயிக்க வேண்டும். ஆகவே, இப்போதே பாவம் அருவருப்பானது
என்றும் நல்லொழுக்கம் அழகானதென்றும் அவர்களுக்கு விவரிக்கும்
பணியைத் தொடங்கு என்றார்.
1830ம் ஆண்டு, இவர் "ஜோசப் கஃபஸ்ஸோ" (Joseph Cafasso) என்ற
குருவை சந்தித்தார். குருவானவர் இவரில் இயற்கையாக உள்ள திறமைகளைக்
கண்டு இவருக்கு கல்வி கற்க உதவினார்.
1835ம் ஆண்டு, "ச்சியேறி" (Chieri) என்ற இடத்தில் "இம்மாகுலேட்
அன்னையின் பேராலயத்தின்" (Church of the Immacolata Concezione)
அருகேயுள்ள குருத்துவக் கல்லூரியில் இணைந்தார். ஆறு வருட
குருத்துவ கல்வியின் பின்னர், 1841ல் "மூவொரு ஆண்டவரின்
திருவிழா ஞாயிறு" (Eve of Trinity Sunday) அன்று "துரின் உயர்மறை
மாவட்ட பேராயர்
"ஃப்ரான்ஸோனி" (Archbishop Franzoni of Turin)
அவர்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
அக்காலத்தில், துரின் நகர மக்கள் தொகை 117,000 ஆக இருந்தது. அது
தொழில்மயமாக்கலையும் நகரமயமாக்கலையும் பிரதிபலித்தது. சிறந்ததொரு
வாழ்க்கையைத் தேடி கிராமப்புறங்களிலிருந்து வந்திருந்த மக்கள்
நகரின் சேரிப்பகுதிகளில் தங்கியிருந்தனர். அத்துடன், மறை போதனைக்காக
சிறைக் கைதிகளைக் காண போஸ்கோ அடிக்கடி சென்றார். அங்கே 12 முதல்
18 வரையான சிறார்கள் குற்றவாளிகளாக கண்டு மனம் வெதும்பினார்.
அவர்கள் குற்றங்கள் புரிந்து சிறைச்சாலைகளுக்கு வருவதை தடுக்க
ஒரு வழி காணவேண்டுமென்று தீர்மானித்தார். பங்குகளிலுள்ள பாரம்பரிய
முறைகள் போதாது என்றும் வேறொரு முறையிலான திருத்தூது அல்லது மறைப்
பணிகள் அவசியம் என்றும் நினைத்தார்.
சிறுவர்களையும் இளைஞர்களையும் சீர்திருத்துவது ஜான் போஸ்கோவின்
முழுநேரப் பணியானது. ஆகவே, அவர் சிறுவர்கள் பணி செய்யும் இடங்களிலும்,
அவர்கள் கூடும் இடங்களான கடைகள் மற்றும் சந்தைப் பகுதிகளிலும்
சென்று அவர்களை சந்திக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் அவர்களனைவருமே
வெவ்வேறு கட்டிடத் தொழில்களைச் செய்பவர்களாக இருந்தனர். இரவு
நேரங்களில் பலர் சரியாக உறங்குவதேயில்லை என்பதை அறிந்தார். வீடற்ற
அவர்கள் பாலங்களின் அடியிலும் நகரின் இருண்ட பகுதிகளிலும் உறங்கினர்.
இரண்டு தடவை அவர் அவர்களுக்கு உறங்க தமது இல்லத்திலேயே இடம்
கொடுத்தார். ஆனால், அவர்கள் முதல் முறை இல்லத்தின் போர்வைகளை
திருடிக்கொண்டு ஓடிப்போயினர். இரண்டாவது தடவை, பரன்மீதிருந்த
அனைத்தையும் காலி செய்து விட்டு ஓடிப்போயினர். ஜான் போஸ்கோ
பின்னரும் மனம் தளரவில்லை.
1847ம் ஆண்டு, மே மாதம், ஜான் போஸ்கோ முதன்முறையாக தமது இல்லத்திலிருந்த
மூன்று அறைகளில் ஒன்றில் வலென்சியா நகரிலிருந்து வந்திருந்த ஒரு
அனாதைச் சிறுவனை தங்க வைத்தார். மூன்று அறைகளுள்ள ஒரு வீட்டை
"வல்டொக்கோ" (Valdocco) நகரின் சேரிப்பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த
ஜான் போஸ்கோ, ஒரு அறையில் தாமும் தமது தாயார்
"மார்கரீட்டாவும்" (Margherita) தங்கியிருந்தனர். மீதமுள்ள அறைகளில்
வீடற்ற சிறுவர்களையும் அனாதைகளையும் தங்கவைத்தனர். இங்ஙனம் ஆரம்பித்த
இவரது சேவை, படிப்படியாக அதிகரித்து, 1861ல் சுமார் அறுநூறு இளைஞர்களுக்கு
மேற்பட்டவர்களுக்கு தங்க இடமளித்தார்.
ஜான் போஸ்கோ அடுத்தடுத்து நகரெங்கும் சுற்றியலைந்து வீடற்ற அநாதை
சிறார்களையும் இளைஞர்களையும் அழைத்துவந்தார். இரண்டே மாதங்களில்,
இவர்களிருந்த புனித மார்ட்டின் தேவாலயத்தின் அருகாமையிலிருந்த
சுற்றத்தார் சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் கூச்சல்களால்
எரிச்சல் அடைந்தனர். அவர்கள் ஜான் போஸ்கோ மீதும் அவரது சிறார்கள்
மீதும் நகராட்சியில் புகார் கூறினர். அவர்கள் தேவையற்ற, ஆதாரமற்ற
வதந்திகளையும் கிளப்பிவிட்டனர். குருவானவரும் அவரது சிறுவர்
குழாமும் அடிக்கடி கூட்டங்களைக் கூட்டுவதாகவும், அது அரசாங்கத்துக்கெதிரான
புரட்சியாகக்கூட மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினர்.
இவற்றை ஏற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம், ஜான் போஸ்கோவையும்
அவரது குழுவினரையும் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டனர்.
1851ம் ஆண்டு, நவம்பர் மாதம், சலேசியன் சபையின் காப்பகங்களில்
முதன்முறையாக தொழிற்பயிற்சி ஒப்பந்தங்கள் (Contract of
Apprenticeship) உருவாக்கப்பட்டன. நகரின் தொழில்முனைவோரிடம்
சிறார்களை பணியில் அமர்த்தினார். பல முதலாளிகள் சிறுவர்களா அடித்து
கொடுமைப்படுத்தினர். தவறு செய்யும் இளைஞர்களா வாய்வழியாகவே
சொல்லி திருத்தவேண்டுமென்று ஜான் போஸ்கோ வற்புறுத்தினார். சிறுவர்களின்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினார். முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும்
தலையிட்டு அவற்றை நிவர்த்தி செய்தார். விழா நாட்களில் அவர்களுக்கு
விடுமுறை அளிக்க வேண்டினார். வருடாந்த விடுமுறைகளை அறிவிக்க
கோரினார். இவ்வளவு முயற்சிகளின் பின்னரும் இளைஞர்களின் நிலைமை
மோசமாகவே இருந்தது.
ஜான் போஸ்கோ தமது சபையில் இருந்த அனைவருக்கும் சலேசிய சுற்றுமடலை
முதன் முதலில் 1875ம் ஆண்டு எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை
வெளிவரும் இச்சுற்று மடல், தற்போது ஐம்பதுக்கும் மேலான பதிப்புகளில்,
முப்பது மொழிகளில் வெளிவருகின்றது.
ஜான் போஸ்கோ நிறுவிய சபைகள் உலகம் முழுதும் பரவி, உலகின் பல
நாடுகளிலும் சுமார் 2000க்கும் மேலான விடுதிகள், அனாதை இல்லங்கள்,
பள்ளிகள், விளையாட்டுக் குழுக்கள், சிறுவர்களுக்கான
பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி
மையங்கள் என இச்சபையினரால் ஏழை இளைஞர்களுக்கென நடத்தப்பட்டு வருகின்றன.
1929ம் ஆண்டு, ஜான் போஸ்கோவுக்கு முக்திபேறு பட்டமளிக்கப்பட்டது.
1934ம் ஆண்டு புனிதர் பட்டமளிக்கப்பட்ட ஜான் போஸ்கோ, இளைஞர்களின்
ஆசிரியர் மற்றும் தந்தை என்று திருத்தந்தை "பதினோராம் பயசால்"
(Pope Pius XI) பிரகடனம் செய்யப்பட்டார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய தொன் போஸ்கோ (ஜனவரி 31)
நிகழ்வு
ஜான் போஸ்கோ சிறுவனாக இருந்தபோது ஒரு காட்சி கண்டார். அந்தக்
காட்சியில் இளைஞர்கள் சிலர் ஓரிடத்தில் சிரித்து கும்மாளமிட்டுக்
கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் ஒருசில
இளைஞர்கள் தீய வார்த்தைகளைப் பேசிக்கொண்டும் தீய பழக்கவழக்கங்களில்
ஈடுபட்டுக்கொண்டும் இருந்தார்கள். இதைப் பார்த்த ஜான் போஸ்கோ
அவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். அப்போது
வெண்ணிற ஆடை அணிந்த மனிதர் ஒருவர் தோன்றி, "போஸ்கோ! இந்த இளைஞர்களை
நீதான் நல்வழிப்படுத்தவேண்டும். அடக்குமுறையால் அல்ல, அன்பினால்,
பொறுமையினால், தாழ்சியினால் திருத்தவேண்டும்" என்று சொல்லி மறைந்துபோனார்.
இந்தக் காட்சியை ஜான் போஸ்கோ தன்னுடைய அன்னையிடம் எடுத்துச்
சொன்னபோது, அவள், எதிர்காலத்தில் அவர் செய்யப்போகும் பணியின்
முன்னடையாளம்தான் இது என அவருக்கு எடுத்துச் சொன்னார்.
வாழ்க்கை வரலாறு
ஜான் போஸ்கோ வட இத்தாலியில் உள்ள பெக்கி என்ற சிறிய கிராமத்தில்
1814 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், பிரான்சிஸ் லூயி போஸ்கோ,
மார்கரித் ஒக்கியேனா என்ற தம்பதியினருடைய மகனாக பிறந்தார். இவருக்கு
இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது இவர் தன்னுடைய தந்தையை
இழந்தார். எனவே இவர் தாயின் பராமரிப்பிலே வளர்ந்தார். ஜான்
போஸ்கோவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அதனால் கல்வி
கற்க கடினமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட
சூழ்நிலையிலும்கூட ஜான் போஸ்கோ ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு கல்வி
கற்றார்.
1841 ஆம் ஆண்டு ஜான் போஸ்கோ குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவர் குருவாக மாறியபிறகு செய்த முதல் காரியம், சிறைச்சாலைகளிலிருந்த
கைதிகளை அதுவும் குறைந்த வயதில் இருந்த கைதிகளைச் சந்தித்து
அவர்களை ஆற்றுப்படுத்தியதுதான். அவர் ஆற்றிய பணியினால் நிறைய
மாற்றங்கள் நிகழ்ந்தன. இளைஞர்கள் தங்களுடைய தீயவழிகளை விட்டு
மனமாறினார்கள். அதன்பிறகு ஜான் போஸ்கோ தூரின் என்ற இடத்தில் பங்குகுருவாக
நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்று காலகட்டத்தில் இத்தாலி
நாடு முழுவதும் தொழில்புரட்சி ஏற்பட்டிருந்தது. எனவே,
பெரும்பாலான இளைஞர்கள் தவறான பழக்கவழக்கங்களுக்கும் போதைப்
பொருட்களுக்கும் அடிமைப்பட்டுக்கிடந்தார்கள். இதைக் கண்ணுற்ற
தொன் போஸ்கோ மனம் வருந்தினார். அவர்களை எப்படியாவது நல்வழிக்குக்
கொண்டுவரவேண்டும் என்று மிகத் தீவிரமாக உழைத்தார்.
ஆரட்டரி இளைஞர் மன்றம் என்ற ஓர் அமைப்பை எடுத்தி இளைஞர்களை நல்வழிக்குக்
கொண்டுவரத் திட்டம்தீட்டினார். பல்வேறு கதைகள், அறிவுரைகள்
சொல்லி, அந்தக் கதைகள், அறிவுரைகள் இடையிடையே விவிலியத்திலிருந்தும்
நல்ல நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தினார்.
தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தான் கல்வி கற்பதற்கு எவ்வளவு
கஷ்டப்பட்டேன் என்பதை நன்கு உணர்ந்த தொன் போஸ்கோ முறைசாரா கல்வி
நிறுவனங்கள், இரவு நேரப் படிப்பங்கள் வழியாக இளைஞர்களுக்கு கல்வியறிவு
புகட்டினார். தொன் போஸ்கோ அடிக்கடி சொல்லக்கூடிய வசனம்,
"இளைஞர்களை நாம் அன்புசெய்கிறோம் என்பது முக்கியமல்ல, மாறாக
நாம் இளைஞர்களை அன்புசெய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும்.
அதுதான் முக்கியமாகும்" என்பதாகும்.
இப்படி இளைஞர்களைக் குறித்து எப்போதும் அக்கறைகொண்ட தொன்போஸ்கோ
அவர்களுக்கு சரியாகப் பயிற்சி கொடுத்தார். அவர்களை குருவாக உயர்த்தினார்.
அப்படி உருவான குருக்களை வைத்து 1874 ஆண்டு சலேசிய சபையை
தோற்றுவித்தார். அது இன்றைக்கு பல நாடுகளிலும் பறந்து விரிந்து
பற்பல பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தொன்போஸ்கோ புனித மரிய மசரெல்லா என்பரோடு இணைந்து பெண்களுக்காக
கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர்கள் என்ற சபையையும்
தோற்றுவித்தார். அதைப் போன்று 1876 ஆண்டு பொதுநிலையினருக்கும்
ஒரு சபையைத் தோற்றுவித்து அதன்வழியாக சிறப்பான ஒரு பணியைச்
செய்தார்.
புனித அன்னைத் தெரசா, தூய தொன் போஸ்கோவைக் குறித்து கூறுவார்,
"அவர் ஏழைகளில் இயேசுவைக் கண்டார். அந்த ஏழைகளுக்கு செய்கின்ற
சேவைகள் அனைத்தையும் இறைவனுக்கே செய்வதாக உணர்ந்தார். இப்படியாக
அவர் ஏழைகளுக்காக, இளைஞர்களுக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும்
அர்ப்பணித்தார். அப்படிப்பட்டவர் 1888 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம்
நாள் தன்னுடைய எழுபத்தி இரண்டாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
1934 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் அவர்களால்
புனிதராக உயர்த்தப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய (ஜான்) தொன் போஸ்கோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தாயின் துணை
தொன் போஸ்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகப் படிக்கும்போது அவருடைய
வாழ்க்கையில் அவருடைய அன்புத் தாய் எந்தளவுக்கு முக்கியப் பங்காற்றி
இருக்கிறாள் என நாம் புரிந்துகொள்ளலாம். சிறு வயதிலே தந்தையை
இழந்த தொன் போஸ்கோ தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்தார்.
குருவாக உயர்ந்த பிறகும்கூட, தொன் போஸ்கோவின் தாய் அவருக்கு பக்க
பலமாக இருந்தார். எப்படி ஆண்டவர் இயேசுவுக்கு அன்னை மரியாள் பக்க
பலமாக இருந்து, எல்லா நிலைகளிலும் உதவி, அவருடைய வாழ்வின் இறுதி
வரை உடன் பயணித்தாரோ, அதைப் போன்று தொன் போஸ்கோவின் தாயும்,
அவருக்கு வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் உடனிருந்து அவரைத்
தேற்றினார். ஆகவே, ஒவ்வொரு தாய்மாரும், தன்னுடைய பிள்ளைகளுக்கு
உறுதுணையாக இருந்து, அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
கவிஞன் ஒருவன் சொல்வான், "ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள்
இருந்து என்ன பயன்?. அம்மா! வேரனென நீ இருந்தாய், அதில்
வீழ்ந்திடாது நான் இருந்தான்" என்று. ஆம், ஆலமரத்திற்கு ஆயிரம்
விழுதுகள் இருந்தும், அவற்றால் அந்த மரத்திற்கு ஒரு பயனும் இல்லை.
அந்த மரத்தைத் தாங்கிப் பிடிக்கக்கூடியது அதனுடைய ஆணிவேர்தான்.
அதை போன்றுதான் இந்த உலகத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும்,
தாய் என்ற உறவுக்கு ஈடாகாது. ஆகவே, ஒவ்வொரு தாயும் தன்னுடைய
பிள்ளையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றவேண்டும் என்ற உண்மையை
உணர்ந்து அதற்கேற்ப வாழவேண்டும்.
அன்னை மரியிடம் ஆழமான பக்தி
தொன் போஸ்கோ எவ்வளவு பணிகளைச் செய்தாலும், அவர் செபிப்பதற்கு
நேரம் ஒதுக்க தவறவில்லை என்பது அவருடைய வாழ்க்கையிலிருந்து
நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும். தொன் போஸ்கோ அன்னை மரியாவிடம்
ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்தார். அந்த பக்திதான் அவரை எல்லாவிதச்
சவால்களைகளையும் துணிவுடன் எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தது.
கிறிஸ்தவர்களாக நாம் மரியன்னையின் மீது ஆழமான பக்திகொண்டு
வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். "எங்கள் மகிழ்ச்சியின்
காரணமே என்று மரியன்னைக் குறித்து சொல்கிறோம். ஆம், நமது மகிழ்சிக்குக்
காரணமாக இருக்கும் அன்னையின்மீது ஆழ்ந்த பக்திகொண்டு வாழ்வோம்.
அதன்வழியாக அவரது பரிந்துரையையும் பாதுக்காப்பையும் பெறுவோம்.
இளைஞர்கள்மீது அக்கறை
தொன் போஸ்கோ இளைஞர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார்
என்று சொன்னால் அது மிகையாகாது. அவருடைய காலத்தில் வழிதவறி அலைந்த
ஆடுகளான இளைஞர்கள்மீது அவர் அன்பும் கரிசனையும்
கொண்டுவாழ்ந்தார், அவர்களுடைய வாழ்வு ஏற்றம் பெற தன்னுடைய உடல்
பொருள் ஆவி அத்தனையை கொடுத்தார். அதனால்தான் அவர் இளைஞர்களின்
பாதுகாவலாராக விளங்குகின்றார்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமுதாயச் சூழலில் இளைஞர்களை
எப்படிப் பார்க்கிறோம், அவர்களுக்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம்
தருகிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். "இன்றைய சமுதாயத்தின்
அவலங்களையும் அக்கிரமங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்
காட்டும் ஒலி பெருக்கிகள் இளைஞர்கள்" என்பார் தந்தைப்
பெரியார். அதை போன்று கவிஞர் வைரமுத்து, "நியாத்தை நிலைநாட்டத்
துடிக்கும் நேரிய உள்ளமும் அநீதிக்குச் சிறுதும் அடிபணியாத இரும்பு
நெஞ்சமும் நாளைய உலகை நலமாக்கும் நம்பிக்கைச் சுடர்களே இளைஞர்"
என்று. ஆகவே, இளைஞர்களிடம் இருக்கும் ஆற்றலையும் வல்லமையையும்
உணர்ந்துகொண்டு, அவர்களை சரியான முறையில் பயன்படுத்தி, தொன்
போஸ்கோவைப் போன்று இந்த சமூகத்தை புதுப்பொழிவு பெறச் செய்வோம்.
எனவே, தூய தொன் போஸ்கோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். தன்வழியாக
இறையருள் பெறுவோம். Palay, Fr. Maria Antonyraj, 2017 |
|
|