Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சார்லஸ் ✠ (St. Charles of Sezze)
      
நினைவுத் திருநாள் : ஜனவரி 18
 
 
✠ புனிதர் சார்லஸ் ✠ (St. Charles of Sezze)

*மறைப்பணியாளர் :(Religious)

*பிறப்பு : அக்டோபர் 19, 1613
செஸ், திருத்தந்தை மாநிலங்கள் (Sezze, Papal States)

*இறப்பு : ஜனவரி 6, 1670 (வயது 56)
ரோம், திருத்தந்தை மாநிலங்கள் (Rome, Papal States)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஜனவரி 22, 1882
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

*புனிதர் பட்டம் : ஏப்ரல் 12, 1959
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் (Pope John XXIII)

*முக்கிய திருத்தலம் :
சேன் ஃபிரான்சிஸ்கோ அ ரிபா, ரோம், இத்தாலி (San Francesco a Ripa, Rome, Italy)

*காரணிகள் :
பிரான்சிஸ்கன் பழக்கவழக்கங்கள்
(Franciscan habit)

*பாதுகாவல் :
செஸ், லடினா-டேர்ரஸினா-செஸ்-ப்ரிவெர்னோ மறைமாவட்டம்
(Sezze, Diocese of Latina-Terracina-Sezze-Priverno)

"கியன்கர்லோ மர்ச்சியோனி" (Giancarlo Marchioni) என்ற இயற்பெயர் கொண்ட செஸ் நகர புனிதர் சார்லஸ், "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையைச் சேர்ந்த ஒரு இத்தாலிய மறைப் பணியாளாரும், சிறந்த எழுத்தாளரும் ஆவார். "கொலோன்னா" (Colonna) மற்றும் "ஓர்சினி" (Orsini) போன்ற புகழ்பெற்ற பிரபுக்கள் குடும்பங்களிடம் "லஸியோ பிராந்தியம்" (Lazio Region) முழுவதிலும் அவர் உயர்ந்த மதிப்புமிக்கவராக இருந்தார். "கொலோன்னா" (Colonna) மற்றும் "ஓர்சினி" (Orsini) குடும்பத்தினரும், "பத்தாவது இன்னொசன்ட்" மற்றும் ஒன்பதாம் கிளமென்ட்" (Popes Innocent X and Clement IX) உள்ளிட்ட திருத்தந்தையரும் இவரிடம் அவ்வப்போது ஆலோசனை பெற்று வந்தனர்.

1613ம் ஆண்டு, "செஸ்" (Sezze) நகரின் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையார் "ருக்கெரோ மர்ச்சியோனி" (Ruggero Marchioni) ஆவார். தாயார் பெயர், "அன்டோனியா மக்கியோன்" (Antonia Maccione) ஆகும். பிறந்த மூன்றாம் நாள் இவர் திருமுழுக்கு பெற்றார்.

குறுநடை போடும் குழந்தையாக இவர் இருந்த காலத்திலேயே இவரது தாயார் இவரை புனிதர்கள் "பதுவை அந்தோனியார்" (Saint Anthony of Padua) போன்றும் "அசிசியின் ஃபிரான்சிஸ்" (Saint Francis of Assisi) போன்றும் ஆடை உடுத்தியும், அவர்களைப் போன்றே இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டியும் அழகு பார்த்தார். இதே வழக்கம், சிறுவன் பெரியவனாக வளர்ந்த பின்னரும் நீடித்தது.

இவருடைய பெற்றோர் இவரை ஒரு கத்தோலிக்க குருவாகும்படி ஊக்குவித்தனர். ஆனால் இவரோ பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, மிகவும் தாழ்ச்சியான பணிகளாகக் கருதப்படும் தோட்டக்காரர், சுமை தூக்குபவர் போன்ற தியாக வாழ்க்கை வாழும் மறைப்பணியாளராகவே விரும்பி ஏற்றார்.

இவரது தாய்வழி பாட்டியான "வலென்ஸா பிலோர்ஸி" (Valenza Pilorci) இவரது சிறுவயது முதலே பக்தி நடைமுறைகளையும், மதத்தின் இதர சிறப்பு, மதிப்புகளையும் இவருள்ளே சொட்டு சொட்டாக ஏற்றினார்.

கியன்கர்லோ மர்ச்சியோனி, தமது பெற்றோரின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாக, விவசாய பண்ணை ஒன்றில் கால்நடைகளை மேய்க்கும் பணியைச் செய்தார். எருதுகளை மிகவும் விரும்புவராக இருந்ததால், எருதுகளுக்குப் பதிலாக அவரே வயல் வெளிகளில் ஏர் உழும் பணியையும் செய்தார்.

இவர், தூய கற்புள்ள வாழ்க்கை வாழ்வதாக 1630ம் ஆண்டு சுய பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார். 1633ம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட இவர், கிட்டத்தட்ட சாவின் விளிம்புவரை சென்றார். இந்நோயிலிருந்து மீண்டால் "ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையில்" (Order of Friars Minor) இணைவதாக உறுதி பூண்டார். இவரது பெற்றோர், இவர் ஒரு கத்தோலிக்க குருவாக வேண்டுமென விரும்பினாலும், இவர் ஒரு சிறந்த மாணவராக இல்லாத காரணத்தால் இவரால் உயர் கல்விக்காக வெளியே எங்கும் செல்ல இயலவில்லை.

இந்திய நாட்டுக்கு சென்று சேவை செய்ய விரும்பிய இவர், மறைப்பணியாளர்களாகிய புனிதர்கள் "பாஸ்கால் பேலான்" (St. Pascal Baylon), மற்றும் "சல்வேடர்" (St. Salvador of Horta) ஆகியோரின் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார். 1635ம் ஆண்டு,, "நஸ்ஸானோ" (Nazzano) நகரிலுள்ள "சான் பிரான்சிஸ்கோ கான்வென்ட்" (San Francisco Convent) மடத்தில் இணைந்தார்.

இவர், தாம் செய்யும் பணிகளை புனிதமாக மதித்தார். பல்வேறு துறவியர் மடங்களில் சமையல்காரராகவும், தோட்டக்காரராகவும், சுமை தூக்குபவராகவும், தேவாலயங்களின் புனித பொருட்களை பாதுகாப்பவராகவும் (Sacristan) சேவை புரிந்தார். தெருக்களில் ஒரு பிச்சைக்காரராகவும் சென்றார்.

ஒருதடவை, 1648ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஒருநாள், இவர் "சான் ஜியுசெப் அ கபோ ளி கேஸ்" (Church of San Giuseppe a Capo le Case) ஆலயத்தில் நடந்த திருப்பலி பூஜையில் கலந்துகொண்டார். திருப்பலியின்போது, உயர்ந்த இடமொன்றிலிருந்து வந்த ஒளிக்கற்றை ஒன்று, அவரது விலாவில் பட்டு, ஒரு திறந்த - எல்லோருக்கும் புலப்படும்படியான ஒரு காயத்தினை அவரது விலாவில் விட்டுச் சென்றது.

பெரிதாக படிப்பறிவு என்பது இவரிடம் இல்லாதிருப்பினும், அருட்பணியாளர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இவரிடம் ஆன்மீக ஆலோசனை வேண்டி வந்தனர்.

1656ம் ஆண்டு, காலரா நோயாலும், 1664ம் ஆண்டு, மலேரியா ஜுரத்தாலும் பாதிக்கப்பட்டார். 1665ம் ஆண்டு, ஜூலை மாதம், 28ம் நாள், இவருக்கு "திருத்தந்தை புனிதர் முதலாம் விக்டர்" (Pope Saint Victor I) மற்றும் "புனிதர் அவிலாவின் தெரசா" (Saint Teresa of vila) ஆகியோரின் திருக்காட்சி (தரிசனம்) கிட்டியது.

1669ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள், மீளமுடியாத நுரையீரல் அழற்சி மோசமடைந்ததால் (Pleurisy), இத்துறவி மீண்டும் படுக்கையில் வீழ்ந்தார். 1670ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆறாம் நாள் மரணமடைந்த இவர், ரோம் நகரில் தாம் வசித்துவந்த "சான் ஃபிரான்சிஸ்கோ அரிபா" (San Francesco a Ripa) என்ற துறவு மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தையர்கள் "பத்தாம் இன்னொசென்ட்" (Pope Innocent X), "ஏழாம் அலெக்சாண்டர்" (Pope Alexander VII) மற்றும் "ஒன்பதாம் கிளமென்ட்" (Pope Clement IX) ஆகியோர் திருத்தந்தை தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இவர் முன்னரே கணித்துச் சொல்லியிருந்தார். அதுபோலவே, "கர்தினால் எமிலியோ அல்டியெரி" (Cardinal Emilio Altieri) திருத்தந்தையாக தேர்வாவார் என்றும் கணித்துச் சொல்லியிருந்தார். ஆனால் இத்துறவியின் மரணத்தின் மூன்று மாதத்தின் பின்னரே அதுவும் நிறைவேறியது. அவரே திருத்தந்தை "பத்தாம் கிளமென்ட்" (Pope Clement X) ஆவார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா