Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

தூய பத்தில்திஸ்  ✠ (St.Bathild )
      
நினைவுத் திருநாள் : ஜனவரி 30
 
 தூய பத்தில்திஸ்
(St.Bathild )

மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் இயேசு.

வாழ்க்கை வரலாறு

பத்தில்திஸ், 635 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த பகுதியில் கொள்ளையர் கூட்டத்தினுடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஒரு சமயம் டென்மார்க்கிலிருந்து வந்த கொள்ளையர்கள் பத்தில்திசையும் அவரோடு சேர்த்து ஒருசிலரையும் கடத்திச் சென்று, பிரான்சு நாட்டில் இருந்த அடிமைச் சந்தையில் விற்பனை செய்தது. பத்தில்திஸ் அடிமைச் சந்தையில் ஏலத்திற்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், பிரான்சு நாட்டு அரசர் கிளோவியசின் அரசபையில் முக்கியப் பொறுப்பில் இருந்த எர்சினோல்டு அங்கு வந்தார். அவர் பத்தில்திசின் அழகில் மயங்கி, அவரை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து, அரண்மனையில் பணிக்கு அமர்த்தினார்.

அரண்மனையில் வேலைபார்த்த நாட்களில் பத்தில்திஸ் எல்லாரோடும் இரக்கத்தோடும் கருணையோடும் பழகினார்; சக அடிமைகளின் பணியாளர்களின் துணிகளைத் துவைத்துத் தந்தார். அது மட்டுமல்லாமல், அவர்களுடைய காலணிகளையும் துடைத்து அழகாக்கினார். இதனால் பத்தில்திஸ் குறித்து சக பணியாளர்களிடம் நல்ல மதித்து உண்டானது. நாளாக நாளாக பத்தில்திசைக் குறித்த பேச்சு அரண்மனை முழுவதும் பரவியது. பிரிதொரு நாளில் அரசர் பத்தில்திசைக் குறித்து கேள்விப்பட்டு, அவரை மணந்து கொண்டார். அப்போது அவர், ஒரு சாதாரண அடிமையாக இருந்த தன்னை இறைவன் அரசியாக உயர்த்தியதை நினைத்து இறைவனுக்கு சொன்னார்.

மன்னர் கிளோவியசின் மனைவியாக, பிரான்சு நாட்டின் அரசியாக உயிர்ந்தபின்பு பத்தில்திஸ் செய்த முதல் காரியம் அடிமை வாணிபத்தை ஒழித்ததுதான். இதற்கு அடிமைகளிடமிருந்து மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. அதற்கு அடுத்து அவர் அரசரோடு இணைந்து மக்கள்மீது இருந்த அளவுக்கதிகமான வரிசுமையைக் குறைந்தார். இதனால் சாதாரண ஏழை எளிய மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றார். இதற்கிடையில் கிளோவியஸ் பத்தில்திஸ் தம்பதியினருக்கு இறைவன் மூன்று குழந்தைகளைத் தந்து ஆசிர்வதித்தார். இதனால் பத்தில்திஸ் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராய் உணர்ந்தார். இப்படி எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் மன்னர் கிளோவியஸ் திடிரென்று இறந்துபோனார். அப்போது பிள்ளைகள் எல்லாம் மிகவும் குறைந்த வயதினை உடையவர்களாக இருந்தார்கள. எனவே, அவர்களில் யாரையும் அரசராக மணிமுடி சூட்ட முடியாது என்பதினால், பத்தில்திசே நாட்டின் அரசியாக இருந்தது எல்லாப் பணிகளையும் சிறப்பாகச் செய்து வந்தார்.

அவர் அரசியாக இருந்த காலகட்டத்தில் நிறைய ஆலயங்களையும் துறவற மடங்களையும் கட்டி எழுப்பினார். அதோடு ஏழை மக்களுடைய பயன்பாட்டிற்கு என்று மருத்துவமனைகளையும் கட்டித்தந்தார். இதனால் மக்கள் அனைவரும் அவரை "வணக்கத்திற்குரிய அரசி" என்று வாயாரப் புகழ்ந்தார்கள். தன்னுடைய மகன் குலோடையருக்கு நாட்டை ஆள்வதற்கான தகுதி வந்ததும், பத்தில்திஸ் நாட்டை அவனுடைய கையில் கொடுத்துவிட்டு, தன்னுடைய கடைசி காலத்தை செல்ஸ் துறவற மடத்தில் கழித்தார். அங்கு அவர் மிகவும் சாதாரண பணிகளையும் செய்து எல்லாருக்கும் முன்மாதிரியாய் வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்டவர் 680 ஆம் ஆண்டு நோயில் விழுந்து படுத்த படுக்கையாகி அப்படியே இறந்துபோனார். இவருக்கு 880 ஆம் ஆண்டு திருத்தந்தை முதலாம் நிக்கோலாசால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பத்தில்திசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

அதிகாரம் அன்பு செலுத்தவே

ஒரு சாதாரண அடிமை நிலையிலிருந்து அரசியாக உயர்ந்த பத்தில்திஸ், தன்னுடைய கையில் திடிரென்று அதிகாரம் கிடைத்தவுடன், எல்லாவற்றையும் மறந்துவிட்டு மக்களை அடக்கி ஆளவில்லை. மாறாக தனக்குக் கிடைத்த அதிகாரத்தை மக்களுக்குத் தொண்டு செய்யவே பயன்படுத்தினார். இவ்வாறு அவர் இயேசுவைப் போன்று பணிபுரிவதில் நிறைவு கண்டார். பத்தில்திசின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளின் வழியாக அடுத்தவருக்குச் சேவை செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பிரபலப் பள்ளியில், மாணவத் தலைவராய் தேர்ந்தேடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டதோடு , தனக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான். ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய தந்தை அவனிடம், "அதிகாரங்களை சரியாகக் கையாளும் ஒரே வழி, அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல், அன்பால் வழி நடத்துவதுதான். மிகப்பெரிய மக்கள் தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்கள் பின்பற்றக் காரணம், அவர்களிடம் அன்பு இருந்ததால்தான். அதிகாரம் இருந்ததால் அல்ல" என்றார். இதைக் கேட்ட மகன், தெளிவு பெற்றவனாய், தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அன்போடு பயன்படுத்தத் தொடங்கினான்.

அதிகாரம் அடக்கி ஆள அல்ல, அன்பு செய்யவே என்னும் உண்மையைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தூய பத்தில்திசும் தனக்குக் கிடைத்த அதிகாரத்தை அப்படித்தான் அன்போடு பயன்படுத்தினார்.

ஆகவே, தூய பத்தில்திசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அன்போடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா