Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் பாசில் ✠ (St. Basil of Caesarea)
   
நினைவுத் திருநாள் :  ஜனவரி 02
 ✠ புனிதர் பாசில் ✠ (St. Basil of Caesarea)

*ஆயர், ஒப்புரவாளர் மற்றும் மறைவல்லுநர் : (Bishop, Confessor and Doctor of the Church)

*பிறப்பு : கி.பி. 329 அல்லது 330
செசாரியா, கப்படோசீயா (Caesarea, Cappadocia)

*இறப்பு : ஜனவரி 2, 379
செசாரியா, கப்படோசீயா (Caesarea, Cappadocia)

*ஏற்கும் சபை /சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
கீழை வைதீக திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism)

*சித்தரிக்கப்படும் வகை : ஆயர் உடைகளில்

*பாதுகாவல் :
ரஷியா, கப்படோசீயா, துருக்கி, துறவிகள், மருத்துவமனை நிர்வாகிகள், கல்வி, பேயோட்டுதல், திருவழிபாட்டாளர்கள்

"செசாரியா நகர பாசில்" (Basil of Caesarea) அல்லது "புனித பெரிய பாசில்" (Saint Basil the Great), தற்கால துருக்கியில் (modern-day Turkey) "ஆசியா மைனரிலுள்ள" (Asia Minor) "கப்படோசீயா" (Cappadocia) "செசாரியா" (Caesarea) நகரின் கிரேக்க கிறிஸ்தவ ஆயராவார். இவர் தம் சமகால கிறிஸ்தவ இறையிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். "நைசின்" (Nicene Creed) விசுவாச அறிக்கையினை ஆதரித்து "ஆரியன்" (Arianism) இன கொள்கைகளை எதிர்த்தார். "அப்பொலொனாரிசு" (Apollinaris of Laodicea) திரிபுக்கொள்கையினை இவர் பின்பற்றினார். இவர் தனது அரசியல் மற்றும் இறையியல் நம்பிக்கைகளை சமநிலையில் வைக்கும் திறன்மிக்கவராய் இருந்ததால் இவர் நைசின் விசுவாச அறிக்கையின் குறிக்கத்தக்க ஆதரவாளரானார்.

இறையியல் மட்டும் அல்லாது, ஏழை எளியோருக்கு உதவுவதிலும் இவர் புகழ்பெற்றார். இவர் துறவு மடங்களுக்கு அளித்த வழிகாட்டுதல்கள் துறவியரின் கூட்டு வாழ்க்கை, வழிபாட்டு, மன்றாட்டு மற்றும் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆதலால் இவர் கிழக்கத்திய கிறிஸ்தவ துறவறத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவரைப் புனிதர் என ஏற்கின்றன. பாசில், "நசியான்சஸ் கிரகோரி" (Gregory of Nazianzus) மற்றும் "நிஸ்ஸா கிரகோரி" (Gregory of Nyssa) ஆகியோர் கூட்டாக "கப்போடோசிய தந்தையர்கள்" (Cappadocian Fathers) என அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் நசியான்சஸ் கிரகோரி, "ஜான் கிறிசோஸ்தோம்" (John Chrysostom) ஆகியோருடன் சேர்த்து இவரையும் "மூன்று புனித தலைவர்கள்" (Great Hierarch) என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றது.

சில வேளைகளில், "பரலோக இரகசியங்களை வெளிப்படுத்துபவர்" (Revealer of Heavenly Mysteries) எனப் பொருள்படும் அடைமொழியிட்டு இவரை அழைக்கப்படுகின்றார்.

கி.பி. சுமார் 330ம் ஆண்டு, துருக்கியின் (Turkey) பிராந்தியமான "கப்படோசியா" (Cappadocia) நகரில் செல்வந்தர்களின் குடும்பமொன்றில் பிறந்த பாசிலின் தந்தை, "மூத்த பாசில்" (Basil the Elder) என்று அறியப்படுகிறார். "எம்மெலியா" (Emmelia of Caesarea) இவரது தாயார் ஆவார். இவரது பெற்றோர் மிகவும் பக்தியானவர்கள் ஆவர். இவரது தாய்வழி தாத்தா, ரோமப்பேரரசர் முதலாம் "கான்ஸ்டன்டைன்" (Constantine I) காலத்துக்கு முன்னே கிறிஸ்தவ மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். பாசில் மற்றும் அவரது சகோதர சகோதரியர் நால்வரையும் இவர்களது தாய்வழி பாட்டி "மேக்ரினா" (Macrina) வளர்த்தார்.

பாசில் கப்படோசியாவின் "செசேரா மஸாகா" (Caesarea Mazaca) நகரில் கல்வி கற்றார். இவர் கல்வி கற்கும் காலத்திலேயே, "நசியான்சாஸ் நகர புனிதர் கிரகொரியை" (Gregory of Nazianzus) சந்தித்தார். இவர்களிருவரும் வாழ்நாள் நண்பர்களாயினர். மேல்படிப்புக்காக "கான்ஸ்டண்டினோபில்" (Constantinople) சென்ற நண்பர்களிருவரும், "ஏதேன்ஸ்" (Athens) நகரில் ஆறு வருடங்கள் தங்கியிருந்து கல்வி கற்றனர்.

கி.பி. 356ம் ஆண்டு ஏதேன்ஸ் நகரை விட்டு கிளம்பிய பாசில், சிரியா (Syria) மற்றும் எகிப்து (Egypt) நாடுகளில் பயணித்தார். பின்னர் செசேரா திரும்பிய இவர், வழக்குரைஞராக பணியாற்றியபடி சொல்லாட்சி மற்றும் அணியிலக்கணம் கற்பித்தார். ஆயரும் துறவியுமான "யூஸ்டாதியஸ் செபாஸ்ட்" (Eustathius of Sebaste) என்பவரை சந்தித்தபின் பாசில் வாழ்க்கை தீவிரமாக மாறியது. சட்டம் மற்றும் கற்பிக்கும் பணியை விட்ட பாசில், ஆன்மீக வாழ்க்கையில் நுழைந்தார். பாலஸ்தீனம் (Palestine), எகிப்து (Egypt), சிரியா (Syria) மற்றும் "மெசபடோமியா" (Mesopotamia) ஆகிய நாடுகளில் பயணித்து துறவறம் கற்றார்.

கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் எனக் கருதப்படும் இவர், தமது இறுதி காலத்தில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 379ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அல்லது இரண்டாம் நாள் இவர் மரித்தார்.


===============================================================================
தூய பசிலியார் (ஜனவரி 02)

(ஆயர், மறைவல்லுநர் 329 - 379)

நிகழ்வு

பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பசிலியார், ஏதென்ஸ் நகரில் தத்துவம் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய எண்ணமெல்லாம் எல்லாவற்றையும் கற்றுத் தெரிந்து, மிகச்சிறந்த அறிவாளியாகவும், பேச்சாளராக வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அத்தகைய தருணத்தில் அவருடைய சகோதரி மக்ரினா அவரிடம், உலக ஞானத்தை அறிந்துகொள்வதைவிடவும் கடவுளுக்குப் பணிசெய்து மேலானது என்று எடுத்துக்கூறினார். இதனால் மனமாற்றம் அடைந்த பசிலியார் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இறைப்பணி செய்யத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

தூய பசிலியார் கி.பி. 329 ஆம் ஆண்டு செசாரியாவில் பிறந்தவர், இவருடைய குடும்பமே தூயவர்களின் குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் இவருடைய தாத்தா, இவருடைய தந்தை பெரிய பசிலியார், இவருடைய தாய் எமிலியா, இவருடைய சகோதரி மக்ரீனா, இவருடைய சகோதர் நசியான்ஸ் என அனைவருமே புனிதர்கள்தான். இவர் தன்னுடைய கல்வியை செசாரியா ஏதென்ஸ் போன்ற இடங்களில் பெற்றுக்கொண்டார். அப்போதெல்லாம் இவருக்கு மிகப்பெரிய பேச்சாளராக மாறவேண்டும் என்பதுதான் எண்ணமாக இருந்தது. ஆனால் இவருடைய சகோதரி மக்ரினாதான் இவரைத் தடுத்தாட்கொண்டு இறைப்பணி செய்வதற்குத் தூண்டினார். அதன்பின்னர்தான் இவர் தன்னுடைய உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இறைபணி செய்யத் தொடங்கினார்.

இறைப்பணி செய்ய முடிவெடுத்த பின்னர், இவர் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று, அங்கே இருந்த துறவிகளிடம் ஐந்தாண்டு காலம் பயற்சியைப் பெற்றார். அதன்பின் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்து, ஆசியா மைனரில் முதல்முறையாக ஒரு துறவுமடத்தை நிறுவினார். அதில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து பயிற்சியையும் பெற்று, துறவுவாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இத்தகைய தருணத்தில்தான் செசாரியாவில் ஆயராக இருந்த யூசிபுஸ் என்பவர் இவரைக் குருவாகத் திருநிலைப்படுத்தினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயரின் இறப்புக்குப் பிறகு இவர் செசாயாவின் ஆயராக உயர்ந்தார். இவர் ஆயராக உயர்ந்த பிறகு ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள்மீது அதிகமான அன்புகொண்டிருந்தார். அதனால் இவர் அவர்களுடைய மறுவாழ்விற்காக பல்வேறு உதவிகளைச் செய்தார். கட்டங்களை கட்டி, அவர்களை அங்கே தங்கவைத்து, அவர்களுக்கு பெரும்சேவை செய்தார். இவருடைய காலத்தில் கிறிஸ்துவின் கடவுள்தன்மை மறுக்கும் ஆரியபதம் (Arianism) திருச்சபையை மிகவும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. எனவே இவர் இக்கொள்கையை பரப்பிய, வாலன்ஸ் என்ற மன்னனை கடுமையாகச் சாடினார். அதற்காக இவர் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். 379 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபில் என்ற இடத்தில் நடந்த பொதுச் சங்கத்தில் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாறு பசிலியார் ஒரு சிறந்த மறைப்போதகராக இறைபணியை சிறப்பாக செய்தார். அப்படிப்பட்டவர் 379 ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


பசிலியாரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. ஏழைகள்மீது இரக்கம்


தூய பசிலியார் ஏழைகள்மீது அதிக இரக்கமும் அன்பும் கொண்டுவாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் ஏழைகளுக்காக தன்னுடைய உடமைகள் அனைத்தையும் கொடுத்தார். ஆயராக உயர்ந்தபிறகு ஏழைகள் வாழ்வு சிறக்க பல நலத்திட்டங்களை இயற்றினார்; அவர்களுடைய வாழ்வு மேம்பட உழைத்தார். இவ்வாறு அவர் ஏழைகளின் தோழனானர்.

தூய பசிலியார் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம் : உன் வீட்டில் உனது தேவைக்கு மேல் எஞ்சியிருக்கும் உணவுப்பொருட்கள் ஏழைகளுக்கு உரியவை. உனது இல்லத்தில் அடுக்கடுக்காக வைத்திருக்கும் ஆடைகள் உனது தேவைக்கு மிஞ்சினால் மூடிக்கொள்ள எதுவுமின்றித் தவிக்கும் ஏழைகளுக்கே உரியவை. உனது தேவைக்கு மேலான காலணிகள் வெறுங்காலோடு செல்லும் ஏழைகளுக்கே உரியவை. உன் இரும்புப் பெட்டியில் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் ஏழைகளுக்கு உரியது. இரக்கச் செயல்களை நீ செய்யாது விட்டுவிடும்போது அத்தனை முறையும் அறம் தவறுகிறாய்.

பசிலியாரிடத்தில் ஏழைகள், அனாதைகள்மீது கொண்டிருந்த அன்பும், இரக்கமும் போன்று நம்மிடத்திலும் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் ஏழைகள், அனாதைகளை வெறுத்து ஒதுக்குகின்றோம். அவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கின்றோம். ஆனால் ஆண்டவர் இயேசுவின் அன்பு ஏழைகள்மீதுதான் அதிகமாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும், ஏழை எளியவருக்குச் செய்கின்ற உதவி, சேவை இறைவனுக்கே செய்கின்ற உதவியாகும் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது (மத் 25: 40). ஆகவே, நாம் ஏழை எளியவருக்கு உதவி செய்யும் நல்ல மனப்பான்மையைக் கற்றுக்கொள்வோம்.

1928 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் பிறந்தவர் பிரான்சிஸ் லாபோர்த் (Francis Laborde) என்பவர். இவருக்கு சிறு வயது முதலே ஏழை எளியவர்மீது தனிப்பட்ட அன்பும் கரிசனையும் இருந்தது. வளர வளர அது மேலும் அதிகரித்தது. ஒருகட்டத்தில் இவர் குருவாக மாறி ஏழை மக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் சென்று பணிசெய்யலாம் எனத் தீர்மானித்தார். அதன்படியே இவர் கல்கத்தாவிற்கு அருகே இருக்கும் பில்கானா (Pilkhaana) என்ற சேரிப்பகுதிக்குச் சென்று அங்கே இருந்த ஏழை எளிய மக்கள் மத்தியில் பணிசெய்தார். குறிப்பாக இவர் அம்மக்களுடைய சமூகப் பொருளாதார வாழ்வு மேம்பட உழைத்தார். கல்வி நிறுவனங்களைத் தொடங்கி அவர்களுக்கு கல்வியறிவு புகட்டினார். எல்லா மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடக்கக்கூடிய சூழலை உருவாக்கித் தந்தார். இவ்வாறு பிரான்சிஸ் லாபோர்த் என்ற அந்த பிரான்சு நாட்டுக் குருவானவர் பில்கானா மக்களின் ஒளிவிளக்காக விளங்கினார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை டோமினிக் லாபிரே என்பவர் City of Joy என்று புத்தகமாகப் படைத்தார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் ஏழை எளியவருக்கு உதவிகள் செய்யவேண்டும், அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதைத்தான் பிரான்சிஸ் லாபோர்த் என்பவருடைய வாழ்வும், இன்று நாம் விழாக் கொண்டாடும் பசிலியாரின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

2. தப்பறைக்கொள்கைகளுக்கு சம்மட்டி

தூய பசிலியாரை தப்பறைக் கொள்கைகளுக்கு சம்மட்டியானவர் என்று சொன்னால் அது மிகையாது. இவர் வாழ்ந்த காலத்தில் இயேசு மனிதர்தானே ஒழிய, கடவுள் அல்ல என்ற தப்பறைக் கொள்கையானது அதிகமாகப் பரவிக்கொண்டிருந்தது. இவர் அதை மிகவும் துணிச்சலாக எதிர்த்தார். இக்கொள்கையை பரப்பிக்கொண்டிருந்த வாலன்ஸ் என்ற மன்னனை கடுமையாகச் சாடினார். இறுதியாக கி.பி. 379 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபில் என்ற இடத்தில் நடந்த பொதுச்சங்கத்தில் இக்கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆகவே, தூய பசிலியார் ஆயராக இருந்த ஏழை எளியவருக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், திருச்சபையின் காவலராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

தூய பசிலியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் திருச்சபையை, கிறிஸ்துவின் போதனை கட்டிக்காப்பது நமது கடமையாகும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் திருச்சபைக்கு எதிராக ஏராளமான வன்முறைகள், பொய் குற்றச்சாட்டுகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக நம்முடைய திருச்சபையை காப்பது நமது கடமையாகும். திருச்சபை கிறிஸ்துவின் உடல் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, தூய பசிலியாரின் விழாவில் அவரைப் போன்று ஏழை எளியவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டுவாழவும், இயேசு கட்டியெழுப்பிய திருச்சபையை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கட்டிகாத்திட சபதம் எடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Palay Fr. Maria Antonyraj.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா