✠ புனிதர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of
Rome) |
|
|
|
நினைவுத் திருநாள் :
ஜனவரி
21 |
✠ புனிதர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Rome)
* கன்னி, மறைசாட்சி : (Virgin
and Martyr)
*பிறப்பு : கி.பி. சுமார் 291
*இறப்பு : கி.பி. சுமார் 304
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் (Eastern Catholic Churches)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Churches)
*முக்கிய திருத்தலங்கள் :
"புனித ஆக்னெஸ் ஃபோரி லி முரா தேவாலயம்" மற்றும் "அகோன் என்னும்
இடத்திலுள்ள புனித ஆக்னெஸ் தேவாலயம்" (இரண்டும் ரோம் நகரிலுள்ளன).
(Church of Sant'Agnese fuori le mura and the Church of
Sant'Agnese in Agone, both in Rome)
*சித்தரிக்கப்படும் வகை :
செம்மறி குட்டி, மறைசாட்சியின் உள்ளங்கை (A Lamb, Martyr's
Palm)
*பாதுகாவல் :
கற்பு/ தூய்மை (Chastity); திருமண ஒப்பந்தமானோர் (Betrothed
couples); தானியங்கள் (Crops); தோட்டக்காரர்கள் (Gardeners);
சிறுமிகள் (Girls); பெண் வழிகாட்டிகள் (Girl Guides); மரியன்னையின்
குழந்தைகள் (Children of Mary); கன்னியர் (Virgins); நியூ
யார்க் (New York); ஃப்ரெஸ்னோ நகரம் (The City of Fresno);
ரோம் நகரிலுள்ள 'கொலேஜியோ கேப்ரனிகா' (Colegio Capranica of
Rome); பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் (Rape Victims);
"ரோக்வில் சென்டர்" மறை மாவட்டம் (The Diocese of Rockville
Centre)
புனிதர் ஆக்னெஸ், கிறிஸ்தவ விசுவாசத்துக்காக கொல்லப்பட்ட ஒரு
மறைசாட்சியும், கன்னியும் ஆவார். இவர் அனைத்து கிறிஸ்தவப்
பிரிவுகளிலும் புனிதராகப் போற்றப்படுகிறார். திருப்பலியில், அர்ச்சிஷ்ட
மரியன்னையுடன் இணைந்து பெயர் குறிப்பிடப்பட்டு போற்றப்படும் ஏழு
பெண் புனிதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
தொடக்க காலம் :
பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, ரோம் நகரில் உயர்குல குடும்பத்தில்
ஏறக்குறைய கி. பி. 291ம் ஆண்டு ஆக்னெஸ் பிறந்தார். ஆக்னெஸ் என்ற
இலத்தீன் வார்த்தைக்கு செம்மறி குட்டி என்று பொருள். சிறு வயது
முதலே இயேசுவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனவே, 12
வயதிலேயே தனது கன்னிமையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்.
இவர் அழகான தோற்றம் கொண்டவராக இருந்ததால் உயர்குல இளைஞர்கள்
பலர் இவரை மணம் முடிக்க போட்டி போட்டுக்கொண்டு சென்றனர். ஆனால்
இவரோ அவர்களிடம், "விண்ணக மணவாளர் இயேசு கிறிஸ்துவுக்கு எனது
கன்னிமையைக் கையளித்து விட்டேன்" என்று கூறினார். இதனால் அந்த
இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கற்புடைமை :
"டயோக்ளேசியன்" (Diocletian) ரோம பேரரசனாக (Roman Emperor) இருந்த
அக்காலத்தில், கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றிய மக்கள் ரோமானியர்களால்
வதைத்துக் கொலை செய்யப்பட்டனர். ஆக்னெசைத் மொழி
செய்ய
முடியாமல் ஏமாந்த ஒருவன், கோபத்தில் இவர் கிறிஸ்தவர் என்பதை
ரோம அதிகாரி (Prefect) "செம்ப்ரோனியஸ்" (Sempronius) என்பவனிடம்
போய்க் கூறினான்.
தொடக்கத்தில் அதிகாரி இவரது மனதை மாற்ற முயற்சி செய்தான். ரோம
தெய்வங்களுக்கு தூபம் காட்டினால் இவரை விட்டு விடுவதாகக்
கூறினான். அது பலன் அளிக்காததால், கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தும்
ஆயுதங்களை இவர்முன் கொண்டுவந்து காட்டி, மிரட்டினார்கள். இவரோ
எதைக் கண்டும் அஞ்சவில்லை. இதனால் ஆக்னெசை நிர்வாணமாக தெருக்களில்
இழுத்துச் சென்று விலைமாதர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும்,
யாரும் இவரை கறைபடுத்தலாம் என்றும் அதிகாரி அறிவித்தான்.
காமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு சென்று இவரை நெருங்க முடியாமல்
போனது. காமுகர்கள் இவரைத் தொட நெருங்கியபோதெல்லாம், "உன்
வாளில் என் இரத்தக் கறை படிந்தாலும், இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான
என் உடலை உன்னால் கறைபடுத்த இயலாது" என்று ஆக்னஸ் கூறினார்.
வெவ்வேறு சரித்திர ஆசிரியர்களின்படி, ஆக்னெஸ் இப்படியான இக்கட்டான
சூழ்நிலைகளிலிருந்து வெவ்வேறு விதமாக தப்பினார் என்கிறார்கள்.
இவரை பாலியல் வன்கொடுமை செய்ய சென்ற அனைவரும் மின்னல் போன்ற ஒரு
ஒளி ஒன்றினால் கண்கள் குருடாகினர். இவர் அவர்கள்மேல் இரக்கம்
காட்டி அவர்களுக்காக செபம் செய்தார். அப்பொழுது அவர்கள் பார்வை
பெற்று மனம் மாறினார்கள் என்பர். ஒருமுறை, இவரது கூந்தலே வளர்ந்து
இவரது உடலை மறைத்தது என்பர். ரோம அதிகாரி செம்ப்ரோனியஸின் மகன்கூட
சென்று முயற்சித்தான். ஆனால் அவன் இறந்தே போனான். ஆக்னெஸ் அவனுக்காக
செபித்தார். அதனால் அவன் உயிருடன் எழுந்து மனம் மாறினான்.
மறைசாட்சி :
இயேசுவின் மேல் கொண்ட அன்பாலும், இறுதி வரை ரோமத் தெய்வங்களை
வணங்காத காரணத்தாலும் ரோம அதிகாரி இவருக்கு மரண தண்டனை
விதித்தான். இவர் விறகுக் கட்டைகளின்மேல் கட்டப்பட்டு தீ வைக்கப்பட்டார்.
ஆனால், விறகுக் கட்டைகள் எரிய மறுத்தன. உடனே ஆத்திரமுற்ற அங்கிருந்த
படைத் தலைவன், தமது வாளை உருவி அவரது தலையை வெட்டினான். இன்னுமொரு
சரித்திரவியலாளரின் கூற்றின்படி, படைத்தலைவன் அவரது தொண்டையில்
வாளை குத்திச் செருகியதாகவும் அதனால் பதின்மூன்றே வயதான ஆக்னெஸ்
மறைசாட்சியாக மரித்ததாகவும் கூறப்படுகிறது.
புனிதர் ஆக்னேஸின் மன உறுதி, கன்னித்தன்மை, இளம் வயதில் தூய்மை
வலியுறுத்தல், பழம்பெரும் அம்சங்களற்ற பாரம்பரியம் மற்றும்
மரணம் பற்றி புனிதர் அம்புரோஸ் (Saint Ambrose) பின்னாளில் தமது
எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் மரித்த சில நாட்களின் பின்னர், இவரது கல்லறையில் செபித்தவாறிருந்த
இவரது வளர்ப்பு சகோதரியான (இவரது "பாலூட்டும் தாதிப் பெண்ணின்"
(Wet nurse) மகள்) புனிதர் "எமெரென்ஷியானா" (Saint Emerentiana),
அங்கிருந்து அகல மறுத்த காரணத்தால், கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
பின்னாளில் இவர் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.
கிறிஸ்தவ சமயத்திற்கு சுதந்திரம் அளித்த ரோமப் பேரரசன்
"முதலாம் கான்ஸ்டன்டைன்" (Constantine I) என்பவரது மகளான "புனிதர்
கான்ஸ்டன்ஸ்" (Saint Constance) என்பவர் புனித ஆக்னெசின் கல்லறையில்
செபித்ததால் தொழுநோயில் இருந்து குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இவரது கல்லறையில் செபித்த பலருக்கும் இறைவன் அற்புதங்கள் பல
செய்ததால், அக்காலம் முதலே இவர் புனிதராக வணங்கப்படுகிறார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய ஆக்னஸ்
(ஜனவரி 21)
நிகழ்வு
ஆக்னஸ் பிறப்பிலே பேரழகியாக இருந்தாள். அவளுக்குப் பதிமூன்று
வயது நடந்துகொண்டிருந்தபோதே நிறைய மாப்பிளைகள் (Suitors) அவளைப்
பெண்பார்க்க வந்தார்கள். ஆனால் ஆக்னசோ, "நான் ஆண்டவருக்கு என்னை
அர்ப்பணித்துவிட்டேன். அதனால் யாரையும் மணமுடிப்பதாய் இல்லை"
என்று சொல்லி எல்லாரையும் அனுப்பிவிட்டாள்.
இதில் சினமடைந்த மாப்பிள்ளை ஒருவன் ஆக்னசைக் கட்டி இழுத்துச்
சென்று விபச்சார விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டான். அப்போது
அவள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அங்கு நிறைய ஆண்கள் அவளைத்
தொட முயன்றார்கள். ஆனால், அவளுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட
பிரகாசமான ஒளியைக் கண்டு அவர்கள் மிரண்டுபோய் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
அப்படியும் ஓர் இளைஞன் ஆக்னசை அணுகிச் சென்று, அவளிடம் தன்னுடைய
ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தான். ஆனால், திடிரென்று ஏதோ ஒரு
ஒளி தாக்க, அவன் அந்த இடத்திலேயே குருடாகிப்போனான். கடைசியில்
ஆக்னஸ்தான் அவன்மீது இரக்கப்பட்டு, அவனுக்காக இறைவனிடம்
ஜெபித்து, அவனுக்குப் பார்வை மீண்டும் கிடைக்க உதவி செய்தாள்.
வாழ்க்கை வரலாறு
தொடக்கத் திருச்சபையில் இருந்த எல்லாருக்கும், ஏன் தூய அகுஸ்தினார்,
தூய அம்புரோசியார் உட்பட யாவருக்கும் முன்மாதிரிகையான
புனிதையாக ஒருவர் இருந்தார் என்றால், அது தூய ஆக்னசைத் தவிர
வேறு யாரும் இருக்கமுடியாது. தூய ஆக்னஸ் கி.பி. 292 ஆம் ஆண்டிலிருந்து
கி.பி.305 ஆம் ஆண்டுவரை வெறும் பதிமூன்று ஆண்டுகளே
வாழ்ந்திருக்கின்றார் என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பு
சொல்கின்றது. ஆக்னஸ் சிறுவயதிலே தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்து,
அவர் ஒருவருக்காக வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் நிறைய ஆண்கள்
ஆக்னஸின் அழகில் மயங்கி அவளை மணம்முடித்துக்கொள்ள போட்டி
போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர், "நான் ஆண்டவருக்கு என்னை
அர்ப்பணித்துவிட்டேன். அதனால் யாரையும் மனமுடிப்பதாய் இல்லை"
என்று சொல்லி வந்த எல்லாரையும் மறுத்துவிட்டார். இதில் சினமடைந்த
ஓர் இளைஞன்தான் ஆக்னசை கட்டி இழுத்துச் சென்று, அவளை விபச்சார
விடுதியில் தள்ளினான். அங்கே ஆக்னஸ் அடைந்த கொடுமைகளுக்கு அளவே
இல்லை.
தான் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டாலும் ஆக்னஸ் தன்னுடைய கற்பைக்
காத்துக்கொள்ள மிகக் கடுமையாகப் போராடினாள். யாராவது அவளை அணுகிச்
சென்றால், அவளுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசமான ஒளி
அவர்களைத் தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. இதனால் அவரை அணுகிச்
செல்ல யாவருமே பயந்தார்கள். இதற்கிடையில் ஆக்னஸின் மீது பயங்கரக்
கோபத்துடன் இருந்த கூட்டம் அவரை கொன்று போட்டது. இவ்வாறு ஆக்னஸ்
இறுதிவரைக்கும் தன்னுடைய புனிதத்தில் உறுதியாய் இருந்து, தன்னை
கடவுளுக்கு உகந்த நறுமணம் கமழும் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
ஆக்னஸின் உடல் உரோமை நகருக்கு ஒன்றரைக் கிலோமீட்டருக்கு வெளியே
இருந்த அவருடைய பெற்றோரின் கல்லறைக்கு அருகிலே அடக்கம் செய்யப்பட்டது.
630 ஆம் ஆண்டில் திருத்தந்தை ஹோனோரியுஸ் என்பவர் ஆக்னஸின் உடல்
இருந்த கல்லறைக்கு மேலே ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பி அவருடைய
புகழ் உலகமெங்கும் பரவச் செய்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
கற்பிற்கும், தூய்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய
தூய ஆக்னஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
புனிதத்தில்
- தூய்மையில் மேலோங்கி வளர்வோம்
லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், "தூயோராய் இருங்கள்,
ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்" என்று. தூய
ஆக்னஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்
எந்தளவுக்கு தூயவராய் கற்பு நெறியில் வாழ்ந்து வந்தார் என்பதைப்
புரிந்துகொள்ள முடிகின்றது. தூய ஆக்னசைப் போன்று நாம் புனிதத்தில்
- தூய்மையில் - கற்பில் சிறந்து விளங்குகின்றோமா என்று
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பல நேரங்களில் நாம் சுய கட்டுப்பாடு இல்லமால், நம்முடைய உடல்
இச்சைகளுக்கு அடிமையாகி பாவத்தில் விழுந்துவிடுவது மிகவும் துரதிஸ்டவசமானது.
பணக்காரர் ஒருவர் உயர்ரக நாய் ஒன்றை வாங்கி தன்னுடைய வீட்டில்
வளர்த்து வந்தார். அவர் அந்த நாயின்மீது தனிப்பட்ட கவனம்
செலுத்தினார் நாயும் அவர்மீது ஏறி அமர்வதும், அவருடைய முகத்தில்
நாக்கால் வருடிக்கொடுப்பதுமாக தன்னுடைய அன்பை அவருக்கு வெளிப்படுத்தியது.
ஒருநாள் அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் அவருடைய
வீட்டிற்கு வந்தார்.. நண்பரும் அவரும் வராந்தாவில் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தபோது வழக்கம்போல பணக்காரரின் நாய் அவர்மீது
ஏறி அமர்வதும் அவருடைய முகத்தை நாக்கால் வருடிக்கொடுப்பதுமாக
இருந்தது. இது அவருடைய நண்பருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
நண்பர் அவரிடமிருந்து விடைபெறும்போது சொன்னார், "நண்பா! உன்னுடைய
வீட்டில் இருக்கின்ற நாய் உனது செல்ல நாயாக இருந்தாலும், அது
அடுத்தவர் உன்னுடைய வீட்டிற்கு வருகின்றபோது, அது வந்து உன்மீது
ஏறி அமர்வதையும் இன்ன பிற காரியங்களையும் செய்வதைப் பார்க்கின்றபோது
அருவருப்பாக இருக்கின்றது. அதனால் அதனை ஒரு கட்டுக்குள்
வைத்திரு. இல்லையென்றால் உன்னுடைய வீட்டிற்கு வரக்கூடியவர்கள்
முகம் சுழித்துக்கொண்டு போகும் நிலை ஏற்படும்".
அதன்பிறகு அந்தப் பணக்காரர் தன்னுடைய நாய் எப்போதெல்லாம் தன்மீது
ஏறி அமர வருமோ, அப்போதெல்லாம் ஒரு அதட்டு அதட்டி, அதனைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்தார். இந்த நிகழ்வினை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம்.
கதையில் வரும் பணக்காரர்தான் நாம். நாய் நம்முடைய உணர்வுகள்,
பணக்கரார் தன்னுடைய நாயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத அது
அவருக்கு அவப்பெயரைத் தந்தது. அது போன்றுதான் நாமும் நம்முடைய
உணர்வுகள் கட்டுக்குள் வைத்திருக்காதபோது, நாம் ஒழுக்க
நெறியின்படி வாழாதபோது நாம் அவமானத்திற்குத்தான் உள்ளாகவேண்டும்.
மாறாக, நாம் தூயவர்களாய் வாழ்கின்றபோது, புனிதத்தில் மேலும்
மேலும் வளர்கின்றபோது இறைவனுக்கு மிக நெருக்கமாகுவோம் என்பது
உறுதி.
ஆக்னஸ் தூய்மையில் - புனிதத்தில் - மேலோங்கி வளர்ந்தார், அதனால்தான்
அவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவர் ஆனார். ஆகவே, தூய ஆக்னஸின்
விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று தூய
வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai. |
|
|