Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அட்ரியான் ✠ (St. Adrian of Canterbury)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 09
 * ✠ புனிதர் அட்ரியான் ✠ (St. Adrian of Canterbury)

 * பிரபல அறிஞர்/ மடாதிபதி :
  (Famous scholar and Abbot)

 * ஏற்கும் சமயம் :
    கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

 * பிறப்பு : தெரியவில்லை

 *இறப்பு : 710

கிறிஸ்தவ புனிதரான அட்ரியான், ஒரு புகழ்பெற்ற அறிஞரும், தென்கிழக்கு இங்கிலாந்தின் "கென்ட்" (Kent) பிராந்தியத்தின் "காண்டர்பரி" (Canterbury) என்ற இடத்திலுள்ள "புனித அகுஸ்தினார் துறவு மடத்தின்" (St Augustine's Abbey) மடாதிபதியுமாவார்.

வாழ்க்கை :
துறவியும், திருச்சபையின் மறைவல்லுனருமான, புனிதர் "பீட்" (Bede) என்பவரின் எழுத்துக்களின்படி, இவர் வட ஆப்பிரிக்காவின் (North Africa) "பெர்பெர்" (Berber) எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேப்பிள்ஸ் (Naples) அருகேயுள்ள "மொனாஸ்டெரியம் நிரிடனும்" (Monasterium Niridanum) எனும் துறவு மடத்தின் மடாதிபதியாகவும் இருந்தவர் ஆவார். திருத்தந்தை "விட்டாலியன்" (Pope Vitalian) இவருக்கு இரண்டு முறை "காண்டர்பரி" (Canterbury) மறை மாவட்டத்தின் பேராயர் பொறுப்பு அளித்தார். ஆனால் அதனை அவர் தாழ்ச்சியுடன் மறுத்து விட்டார். முதலில், அவர் அருகாமையிலுள்ள துறவு மடத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ (Andrew) என்னும் துறவிக்கு பரிந்துரைத்தார். அவரும் அதனை தமது தள்ளாத வயதைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். இரண்டாவது முறையாக பேராயர் பொறுப்பு அவருக்கு திருத்தந்தை விட்டாலியனால் கொடுக்கப்பட்ட போது, அவர் அதனை தமது நண்பரான "தியோடர்" (Theodore of Tarsus) என்பவருக்காக பரிந்துரைத்தார். எதேச்சையாக அவரும் ரோமில் இருந்ததாலும், அவர் பேராயர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள சம்மதித்ததாலும் அவருக்கே அப்பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், அட்ரியான் ஏற்கனவே இரண்டு முறை "கௌல்" (Gaul) எனும் இடத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அனுபவம் இருந்ததாலும், அவரே புதிய பேராயருடன் பிரிட்டன் செல்ல வேண்டுமென திருத்தந்தை விட்டாலியன் அவர்கள் நிர்ணயித்தார்கள்.

கி.பி. 668ம் ஆண்டு, மே மாதம், 27ம் நாள், ஆரம்பித்த அவர்களது இங்கிலாந்து நோக்கிய பயணம் சரியாக ஒரு வருடம் கழித்து 669ம் ஆண்டு, மே மாதம் நிறைவுற்றது. கடல்வழி பயணம் மேற்கொண்ட அவர்கள் "மார்செய்ல்" (Marseille) நாட்டைக் கடந்து "ஆர்ல்ஸ்" (Arles) நாடு போய் சேர்ந்தனர். கௌல் மாநிலத்தை ஆண்ட அப்போதைய இளம் அரசன் "மூன்றாம் க்லோடேயர்" (Clotaire III) என்பவரின் கீழுள்ள அரசு ஆளுநரிடமிருந்து கடவுச்சீட்டு (Passports) பெறுவதற்காக அங்கே அவர்கள் பேராயர் ஜான் என்பவருடன் தங்கினார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் வட ஃபிரான்ஸ் நோக்கி பயணித்தனர். குளிர் காலத்தில் தங்குவதற்காக அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து பயணித்தனர். தியோடோர் பாரிஸ் ஆயர் அகேல்பெர்க்டஸ்" (Agelberctus) என்பவருடனும் அட்ரியான் "சென்ஸ் ஆயர் எம்மோன்" (Emmon, Bishop of Sens) என்பவருடனும் பயணித்தனர். இங்கிலாந்து சென்றடைந்ததும் அட்ரியான் உடனடியாக "புனித பீட்டர் துறவு மடத்தின்" (St. Peter Abbey) மடாதிபதியாக பொறுப்பேற்றார். இம்மடம்தான் பின்னாளில் "புனித அகுஸ்தினார் துறவு மடம்" (St. Augustine's Abbey) என்று அழைக்கப்பட்டது.

புனிதர் "பீட்" (Bede) அட்ரியானைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
அட்ரியான் கிரேக்கம் மற்றும் இலத்தின் போன்ற பன்மொழிகளில் விவிலியத்தைக் கற்று புலமை பெற்றிருந்தார். இவர் ஒரு வெற்றிகரமான நிர்வாகியும் ஆவார். அவரது வழிகாட்டுதலின் கீழே அவரது துறவு மடம் கணிசமாக செல்வாக்கு பெற்றது. அட்ரியான் ஒரு புகழ்பெற்ற இறையியலாளர் மட்டுமல்லாது மதச் சார்பற்ற கற்றலை கூடியவரை நிறைவேற்றினார். தீவின் அனைத்து பகுதிகளிலும் பயணித்து பலதரப்பட்ட அறிஞர்களை ஒன்று கூட்டினார்கள். தம்மைத் தாமே பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். விடாமுயற்சியுடன் அவர்கள் செய்த சேவைகள், கிறிஸ்தவ மதம் சம்பந்தமானதாக மட்டுமல்லாது சீருக்குரிய கலை, வானியல், எண்கணிதம், சொல்லாட்சி, உயிரியல், கணிதம் மற்றும் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் கற்பித்தனர். அட்ரியான் மற்றும் தியோடர் ஆகியோரின் மாணவர்களாக தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் பேசிய கிரேக்கம் மற்றும் இலத்தீன் ஆகிய மொழிகள் அவர்களது தாய் மொழியைப் போலவே இருந்தன.

இங்கிலாந்து, கல்வியால் மலர்ச்சியடையும் நாடாக இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், திருத்தந்தை முதலாம் கிரகோரியின் (Pope Gregory I) மொழிமாற்ற ("Liber Pastoralis Curae") நூலின் முன்னுரையில் அரசர் "அல்ஃபிரெட்" (King Alfred) இதனைக் குறிப்பிடுகின்றார்.

ஜனவரி ஒன்பதாம் தேதி மரணமடைந்த அட்ரியான், அவரது துறவு மடத்தின் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 
கன்றர்பரி நகர தூய அட்ரியன்.


நிகழ்வு :

கன்டற்பரியில் ஆயராக இருந்த தேயுஸ்தேடிசின் மறைவிற்குப் பிறகு, அப்போது திருத்தந்தையாக இருந்த விற்றாலியன், நெரிடாவில் இருந்த ஆசிர்வாதப்ப சபையின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த நம் புனிதர் அட்ரியனை ஆயராக நியமித்தார். ஆனால் அட்ரியனோ, "ஆயர் பதவிக்குத் நான் தகுதியில்லாதவன். வேண்டுமானால் அதற்குத் தகுதியான தியோடரை நியமியுங்கள்" என்று சொல்லி தனக்கு வந்த மிக உயர்ந்த பதவியையும் மறுத்துவிட்டார். இதனால் திருத்தந்தைக்கு சற்று வருத்தமாக இருந்தது. ஏனென்றால் கன்டற்பரியின் ஆயராக இருப்பதற்கு ஆட்ரியனை விட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும், ஆட்ரியன் சொன்னதற்கிணங்க திருத்தந்தை விற்றாலியன் தியோடரை கன்டற்பரியின் ஆயராக நியமித்தார்.

தூய்மையும் ஞானமும் நிறைந்த அட்ரியன் ஆயர் பதவிக்கு தான் தகுதியில்லாதவன் என்று சொன்னது அவருடைய தாழ்ச்சியை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு.

அட்ரியன் (அ) ஏட்ரியன் கி.பி. 635 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவில் பிறந்தார். இவருடைய குடும்பம் எளிய குடும்பமாக இருந்தாலும், ஒருவர் மற்றவர் மீதான அன்பிலும் பாசத்திலும் மிக உயர்ந்த குடும்பமாக விளங்கியது. இப்படி எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் ஊடுருவல் அங்கு அதிகமாக இருந்தது. இதனால் ஆபத்தான சூழல் அங்கு நிலவத் தொடங்கியது. எனவே அட்ரியனின் குடும்பம் இத்தாலிக்கு இடம்பெயரத் தொடங்கியது.
 
இத்தாலிக்குச் சென்றபிறகு அட்ரியன் நல்லமுறையில் கல்விகற்று அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவராய் விளங்கினார். அதன்பின்பு அவர் அங்கு இருந்த ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக மாறினார். துறவுமடத்தில் ஆட்ரியன் மிக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அவர் அம்மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் பெற்றார்.

ஆட்ரியன் எல்லாரோடும் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதில் தலை சிறந்தவராய் விளங்கினார். அப்போது திருத்தந்தையாக இருந்த  விற்றாலியனோடும், மன்னர் இரண்டாம் கான்ஸ்டான்டைடனோடும் அவர் நல்லுறவில் இருந்தார். இதற்கிடையில் கன்டற்பரியில் இருந்த ஆயர் இறந்துபோகவே, திருத்தந்தை அட்ரியனை அந்நகரின் ஆயராக நியமித்தார். ஆனால், அவரோ தான் அந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவன் என்று சொல்லி மறுத்துவிட்டார். இதனால் கன்டற்பரியின் ஆயராக தியோடர் நியமிக்கப்பட்டார். ஆட்ரியன் அவருக்கு ஆலோசகராக இருந்த சேவைகள் செய்து வந்துவந்தார்.

இன்னொரு சமயம் ஆயர் தியோடரும் அட்ரியனும் இங்கிலாந்து நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருசில நபர்கள் ஆட்ரியன், மன்னர் கான்ஸ்டாண்டினின் உளவாளி என்று சந்தேகப்பட்டு, அவரை இரண்டாண்டுகள் சிறையில் வைத்து சித்ரவதை செய்தார்கள். இரண்டாண்டுகளுக்கு பிறகு மன்னருக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்ற உண்மை தெரியவரவே அவரை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். அதன்பிறகு அவர் இங்கிலாந்துக்குச் சென்றார். இங்கிலாந்தில் அவருக்கு தூய பேதுரு துறவற மடத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்பொறுப்பினை அவர் சிறந்த முறையில் செய்து வந்தார். ஏற்கனவே நிறைந்த ஞானமும் அறிவும் கொண்டு விளங்கிய ஆட்ரியன் நிறைய இடங்களில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி, அதன்மூலம் மக்களுக்கு சிறந்த கல்வியறிவைப் புகட்டினார். அவரிடமிருந்து பயிற்சி பெற்ற மாணவர்கள் ஜெர்மனி, பிரான்சு போன்ற பகுதிகளுக்குச் சென்று, நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். இவ்வாறு திருச்சபையின் வளர்ச்சிக்குப் பல்வேறு விதங்களில் உதவிய அட்ரியன் 709 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

தூய அட்ரியனின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தாழ்ச்சி.

தூய அட்ரியனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். ஆயர் பதவியே தன்னைத் தேடி வந்தபோதும், அதற்குத் தான் தகுதியில்லாதவன் என்று சொன்ன அட்ரியனின் தாழ்ச்சியை வார்த்தைகளில் விவரித்துச் சொல்ல முடியாது. தாழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை நம்முடைய ஒன்றுமில்லாமையை, இயலாமையை  அறிவதுதான் என்பர். ஆங்கிலத்தில் இதைத் தான் Humility is recognizing our limits என்று கூறுகின்றனர். அட்ரியன் தன்னை முழுமையாய் அறிந்திருந்தார், அதனால் தாழ்ச்சியோடு விளங்கினார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் தாழ்ச்சியோடு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டுவதற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ஒரு நண்பருடன் தனது கோச் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு நீக்ரோ வந்தார். அவர் அதிபரைக் கண்டதும் சிரம் தாழ்ச்சி வணக்கம் சொன்னார். உடனே லிங்கனும் தலை வணங்கி தன் தொப்பியைச் சாய்த்து பதில் வணக்கம் சொன்னார். இதைப் பார்த்த அவருடைய நண்பர், "நீங்கள் இந்த நாட்டின் அதிபர். இந்தக் கருப்பனுக்கெல்லாம் இப்படித் தலைவணங்கி மரியாதை காட்டலாம்?" என்றார். அதற்கு லிங்கன் அவரிடம், "ஆமாம்! என்னை விட யாரும் தாழ்ச்சியாக இருக்க நான் விரும்ப வில்லை. அதனால்தான் அப்படிச் செய்தேன்" என்றார். நண்பரால் ஒன்றும் பேச முடியவில்லை. மிக உயர் பதவியில் இருந்த லிங்கன் தாழ்ச்சியோடு இருந்தது வியப்புக்குரியதாக இருக்கின்றது.

நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி. ஆகவே, தூய அட்ரியனின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தாழ்சியுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா