Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அப்போஸ்தலர் புனிதர் பவுலின் மனமாற்றம் ✠
(Conversion of St. Paul the Apostle)
   
நினைவுத் திருநாள் : ஜனவரி 25
  ✠ அப்போஸ்தலர் புனிதர் பவுலின் மனமாற்றம் ✠(Conversion of St. Paul the Apostle)

*வேற்று இனத்தவரின் திருத்தூதர் : (Apostle of the Gentiles)

*பிறப்பு : கி.பி. 5
டார்சஸ், சிசிலியா, ரோமப் பேரரசு (Tarsus, Cilicia, Roman Empire)

*இறப்பு : கி.பி. 67
ரோம், ரோமப் பேரரசு (Rome, Roman Empire)

*ஏற்கும் சபை/ சமயம் :
அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளும்

*முக்கிய திருத்தலங்கள் :
மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா, ரோம்

புனித பவுல் (சின்னப்பர்) ஒரு கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 முதல் கி.பி. 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த ரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். டமாஸ்கஸ் (Syrian Damascus) நகரில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு டமாஸ்கஸ் செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.

பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்து எல்லோருக்கும் பொதுவானவர் - யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.

மன மாற்றத்துக்கு முன் :
புனித பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார்.

அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார். கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது டமாஸ்கஸில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி டமாஸ்கஸுக்கு புறப்பட்டார்.

மனமாற்றம் :
டமாஸ்கஸ் நகர் சமீபித்தபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. சவுல் தரையிலே விழுந்தார்.
அப்பொழுது, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்" என்று தன்னுடனே பேசுகிற ஒலியைக் கேட்டார்.

அதற்கு சவுல், "ஆண்டவரே, நீர் யார்?", என்றார்.

அதற்குக் கர்த்தர், "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்." என்றார்.

சவுல் நடுங்கித் திகைத்து, "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்" என்றார்.

அதற்குக் கர்த்தர், "நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்." என்றார்.

அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார். கூட இருந்தவர்கள் சவுலை கைலாகு கொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார்.

பின்பு கர்த்தர் அன்னியா என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அன்னியா போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து, "சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்" என்றான்.

உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் உணவுண்டு பலப்பட்டான். சவுல் டமாஸ்கஸிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு, எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டு போகும்படி வந்தவன் இவனல்லவா? என்றார்கள்.


பவுலின் மனமாற்றப் பெருவிழா
================
இன்று திருஅவையானது தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகின்றது. திருஅவை உலகெங்கும் இன்று பரவியிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்டவர் தூய பவுலடியார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. "புறவினத்தாரின் திருத்தூதர்" என்று அழைக்கப்படும் தூய பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விவிலியத்தில் ஒரு நிகழ்வு மூன்றுமுறை சொல்லப்படுகின்றது என்று சொன்னால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி. அந்த விதத்தில் பவுலடியாரின் மனமாற்ற நிகழ்வும் மூன்றுமுறை சொல்லப்படுகிறது (திப. 9, 1-22, 22, 3-16, 26, 9-23) என்பதை அறிகின்றபோது அந்நிகழ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பவுலடியாரின் மனமாற்றம் கிறித்தவத்தின் - திருஅவையின் - எல்லைகளை உலகமெங்கும் விரிவுபடுத்தியது என்று சொன்னால் அது மிகையாகது.

இவ்விழாவை பவுலின் மனமாற்றப் பெருவிழா என்று அழைப்பதைவிடவும், பவுலின் அழைப்பு என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த நிகழ்வின் வழியாக சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகின்றார்.

"மனமாற்றம் ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது. அதனால் பழக்கவழக்கத்திலும் பண்பாட்டிலும், நடத்தையிலும் முழுமையான மாற்றம் உண்டாகிறது. இதனால் உடன் இருப்பவர்களின் வெறுப்பைக் கூட பெறவேண்டிய நிலை உண்டாகிறது" என்பார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட். ஆம், விவிலியத்தில் காணப்படும் சக்கேயுவின் மனமாற்றம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.

சக்கேயு வாழ்வைத் தொலைத்து வசதி வாங்கியவர். ஆனால் அவருடைய உள்ளத்தில் நிம்மதியில்லை. அவரின் இதயம் கரைதேடும் அலையாய் கடவுளைத் தேடுகிறது. அப்படிப்பட்டவரை இயேசு அழைக்கிறார்; "இன்று உன்னுடைய வீட்டில் நான் விருந்துண்ணப் போகிறேன்" என்கிறார். உடனே அவர் புத்தொளி பெற்றவராய் இயேசுவிடம் "எவரிடமாவது திருடி இருந்தால், யாரையாவது ஏமாற்றிக் கவர்ந்திருந்தால், ஏய்த்துப் பிழைத்திருந்தால், சொத்தை அவகரித்திருந்தால், நான்கு மடங்காய் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்கிறார். இதைகேட்ட இயேசு, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கிறார். இயேசு அழைத்ததால் சக்கேயு மனமாற்றம் பெற்று புதியதொரு வாழ்வை வாழத் தொடங்குகிறார்.

இதைப் போன்றுதான் பவுலடியாரும். கடவுள் தன்னை அழைப்பதற்கு முன்பாக திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி, ஒழிக்க முயன்றவர். அப்படிப்பட்டவரை இறைவன் தாயினும் சாலப்பரிந்து, தடுத்தாட்கொள்கிறார். இனி வாழ்பவன் நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடையச் செய்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தன் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு அறிவிக்குமாறு உயரிய பணியையும் அவருக்குக் கொடுக்கிறார். அதனால்தான் தூய பவுல் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டவன் என்ற முறையில், தான் பெற்ற பேற்றை வையகத்துக்கு அளிக்க விரைகிறார்.

யார் கிறிஸ்தவ மதத்தை அடியோடு அழிக்க நினைத்தாரோ, யார் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை சிறையில் அடைக்க நினைத்தாரோ அவரே கிறித்துவுக்காக உயிர் துறக்க துணிந்தார் என்பதுதான் மிகப்பெரிய விந்தையான ஒரு காரியமாக இருக்கிறது. 2கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில் பவுலடியார் கிறிஸ்துவாக தான்பட்ட வேதனைகளை சுட்டிக்காட்டுவார், "நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். 25 மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.

பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்" என்று வரிசைப்படுத்திக் கொண்டே போவார்.

இவையெல்லாம் பவுலடியார் தான் துன்புறுத்திய இயேசுவின் திருச்சபைக்காக பட்ட கஷ்டங்கள் ஆகும். ஆக, பவுலடியார் எத்தனையோ துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாலும் அவர் கிறிஸ்துவாக எல்லாவற்றையும் செய்தார். எனவே பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நாமும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, உண்மைக் கடவுளாகிய இயேசுவாக வாழ முயற்சி எடுக்கவேண்டும்.

இலண்டன் நகரிலே மிகப்பெரிய திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று, கையில் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு வந்துவிடுவான். ஒருமுறை அவன் ஒரு பணக்காரப் கணவானின் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு வந்தான். கூடவே அவர் ஆசையாக வைத்திருந்த மூன்று ஆஸ்ட்ரேக்களையும் (சிகரெட் சாம்பலைத் தட்டிவைக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பாத்திரம்) திருடிக்கொண்டு வந்துவிட்டான். தன்னுடைய பணம், நகை போனதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்தக் கணவான் காணாமல்போன மூன்று ஆஸ்ட்ரேகைகளைப் பற்றி மிகவும் வருந்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கணவானின் வீட்டிற்கு ஒரு கூரியர் வந்தது. அதில் அவரது திருடுபோன மூன்று ஆஸ்ட்ரேக்கள் இருந்தன. கூடவே ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதி இருந்தது. "ஐயா என்னை மன்னித்துவிடுங்கள், ஏனென்றால் நான் உங்கள் வீட்டிலிருந்து திருடிய பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டேன். இப்போது இந்த மூன்று ஆஸ்ட்ரேக்கள் மட்டுமே உள்ளன. இவை மூன்றும் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் நான் ஒரு செயின் ஸ்மோக்கர். ஒருநாளைக்கு மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை காலிசெய்துவிடுவேன். ஆனால் இப்போது நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நீங்களும் சிகரெட் அதிகம் பயன்படுத்துவது போன்று தெரிகிறது. தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள். இல்லையென்றால் நீங்களும் புற்றுநோய்க்கு ஆளாக வேண்டிவரும்" என்று எழுதியிருந்தான்.

இதைப் படித்த அந்தக் கணவான் தனது புகைப்பிடிக்கும் பழகத்தை அறவேவிட்டுவிட்டு புதிய ஒரு மனிதனாக வாழ்ந்தான்.

நான் ஒவ்வொருவருமே தவறான வாழ்க்கை வாழ்வதைவிடுத்து புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்க்சு எடுத்துக்கிறது.

ஆகவே பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் தவறான, உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழுவோம். உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தி அறிவித்து, இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம். - Fr. Maria Antony, Palayamkottai. 2016



பவுலின் மனமாற்ற விழா (ஜனவரி 25)


நிகழ்வு


அக்காலத்தில் சவுல் சீறியெழுந்து எழுந்து ஆண்டவருடைய சீடர்களை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். ஆண் பெண்களை கொன்றுவிட அனுமதிபெற்று தமஸ்கு நோக்கி வரும்வழியில், தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ "சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?" என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக "நீ துன்புறுத்தும் இயேசு, நானே!, உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும்" என்று கூறினார். அக்குரலை உடனிருந்தவர்களும் கேட்டனர். ஆனால் வியப்பில் ஆழ்ந்தனர். சவுல் எழுந்தபோது கண்கள் திறந்திருந்தும் எதனையும் காணும் திறனை இழந்திருந்தார். உடனிருந்தவர்கள் அவரது கைகளை பிடித்து தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள். அங்கே மூன்று நாள் பார்வையற்று இருந்தார். எதுவும் உண்ணவும் குடிக்கவுமில்லை.

அந்நகரில் அனனியா என்ற சீடர் இருந்தார். ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் அங்கே தர்சு நகர சவுல் தேடு. அவர் ஒரு காட்சியை கண்டுள்ளார். அக்காட்சியில் அனனியா என்பவர் வந்து சவுல் பார்வையடைய வேண்டுமென்று தமது கைகளை அவர் மீது வைப்பதாக காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார். அதற்கு அனனியா "அவன் கிறிஸ்துவர்களை அழிக்க கங்கனம் கட்டித்திரிபவன் ஆயிற்றே" என்று கூற, ஆண்டவர் "நீ அங்கு செல், என் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தேர்ந்து கொண்டவரே அவர்! எனது கருவியாக செயல்படுவார். பிற இனத்தாருக்கும் அரசர்களுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துரைக்கும் கருவியே! என்றார். என் பொருட்டு அவர் எத்துன்பம் அடைய வேண்டும் என்பதும் அவருக்கு காட்டுவேன்" என்றார்.

உடனே அனனியா நகருக்குச் சென்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவர் பெயரால் அவர் மீது கைகளை வைக்க தூய ஆவியின் ஒளி கீற்றுக்கள் அவரது விழிகளை திறக்கச் செய்து அதிலிருந்து செதில்கள் விழுந்தன. மீண்டும் சவுல் பார்வை பெற்றவராய் ஆண்டவரின் ஒளியை பெற்று கிறிஸ்துவின் கருவியாக மாறினார்.


வாழ்க்கை வரலாறு


இன்று நாம் பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அதனால் தூய பவுலைப் பற்றி ஒருசில உண்மைகளை அறிந்துகொள்வோம்.

தூய பவுல் கி.பி. 9 ஆம் ஆண்டளவில் யூதாவின் பன்னிரு குலங்களில் ஒன்றான பெஞ்சமின் குலத்தில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது. இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார். உலகப் பொதுமொழியாயிருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் எருசலேம் சென்று, புகழ்பெற்ற கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றார். யூதக் கோட்பாடுகளைக் கில்லேல் என்பவரது விளக்கங்களைத் தழுவிக் கடைப்பிடிக்கும் பரிசேயர் சமயப் பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்த்தீனாவில் இருந்திருக்கலாம் எனக் கூற இடம் உண்டு.

இப்படிப்பட்டவர் யூத மதத்தின்மீது இருந்த பற்றினால் கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தத் தொடங்கினார். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு இவர் உடன்பட்டிருந்தார் என்று திருத்தூதர் பணிகள் நூலிலே நாம் வாசிக்கின்றோம் (திப8:1). ஒருமுறை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில்தான் ஆண்டவராகிய இயேசு அவரைத் தடுத்து ஆட்கொள்கிறார். அவரை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவுக்கும் கருவியாக ஏற்படுத்துகிறார்.

தூய பவுல் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க மூன்று திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. முதல் நற்செய்திப் பயணத்தைக் கி.பி. 46-48 ஆண்டுகளில் மேற்கொண்டு, சைப்பிரசுக்கும் சின்ன ஆசியா நாட்டுப் பகுதிகளுக்கும் சென்று திருச்சபையை நிறுவினார் (திப 13,14; 2 திமொ 3:11). கி.பி. 49 ஆம் ஆண்டில் எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டு பிற இனத்தாரிடையே தூய ஆவி செயல்படுதலைப் பற்றி எடுத்துரைத்துத் தமது பணிக்குச் சங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டார் (திப15; கலா 2:3-9). கி.பி. 50-52க்கு உட்பட்ட காலத்தில் பவுல் தமது இரண்டாவது நற்செய்திப் பயணத்தை மேற்கொண்டு, தாம் ஏற்கனவே நிறுவிய சபைகளை வலுப்படுத்தினார். பின்னர் மாசிதொனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து, அங்கும் திருச்சபைகளை நிறுவினார் (திப 15-18). கி.பி. 53-57 வரை மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது கலாத்தியா, பிரிகியா, கொரிந்து, மாசிதோனியா, இல்லிரிக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று திருப்பணி ஆற்றினார்.

அதன்பிறகு எபேசு நகரை மையமான பணித்தளமாகக் கொண்டு பவுல் செயல்பட்டார். அங்குச் சிறைப்பட்டார். அக்காலத்தில் அவர் சில சிறைக்கூட மடல்களை எழுதியிருக்கலாம். பின் கி.பி. 58 ஆண்டு எருசலேமில் கைதானார். கி.பி. 60 வரை செசரியாவில் சிறைப்பட்டிருந்தார். உரோமைப் பேரரசர் சீசரே தமக்குத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பவுல் கேட்டுக்கொண்டதால் உரோமைக்கு அனுப்பப் பெற்றார். அங்கு போகும் வழியில் கப்பல் அழிவுற நேரிட்டதால் மால்தா தீவினருக்கு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்பு பவுல் உரோமை வந்தடைந்து இரு ஆண்டுகள் வீட்டுக் கைதியாகவே இருந்துகொண்டு நற்செய்தி அறிவித்து வந்தார். பின்பு பவுல் விடுதலை பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருப்பார் என நம்ப இடமிருக்கிறது. மீண்டும் கி.பி. 60 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் பவுல் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய பவுலடியாரின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருச்சபையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், பவுலடியாரின் மனமாற்றத்திற்குப் பிறகுதான் ஆண்டவரது நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது, திருச்சபை இன்னும் அதிகமாக வலுப்பெற்றது.

மேலும் விவிலியத்தில் ஒரு நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுகிறபோது அது மிகவும் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து மூன்றுமுறை முன்னறிவிக்கின்றார். இயேசுவின் வாழ்வில், மீட்பின் வரலாற்றில் பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது. அதைப் போலவே பவுலின் மனமாற்ற நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுவதை வைத்துப் பார்க்கும்போதே (திப 9,22, 26) அது திருச்சபையின் வரலாற்றில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, இந்த வேளையில் தூய பவுலடியாரின் மனமாற்ற விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. நாம் ஒவ்வொருவரும் மனமாறவேண்டும்.

பவுலடியார் யூத மதத்தின்மீது கொண்ட ஆழமான பற்றுறுதியினால், அம்மதத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த கிறிஸ்தவ மதத்தையும் அதனைப் பின்பற்றியவர்களையும் வேறொரு அழிக்க நினைத்தார். அதாவது தான் செய்வது தவறு என்று தெரியாமலே தவறுசெய்கிறார் தூய பவுல். அப்போதுதான் ஆண்டவர் இயேசு அவரைத் தடுத்தாட்கொண்டு அவருக்கு உண்மையை உணர்த்துகிறார், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது தன்னையே துன்புறுத்துவது என எடுத்துரைக்கிறார். உடனே அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, யாரைத் துன்புறுத்தத் துணிந்தாரோ, அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிகிறார். ஆகவே, பவுலடியாரைப் போன்று நாமும் நம்முடைய தவற்றை உணர்ந்து இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். இதுதான் நமக்கு முன்னால் உள்ள சவாலாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் "தவறு செய்கிறோம்" என்று தெரியாமலே செய்கிறோம். இதுதான் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.

ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொண்டி நொண்டி நடந்தார்கள். நீண்ட நாட்களாக அவர்கள் இப்படியே நடந்து வந்ததால், நொண்டி நொண்டி நடப்பதுதான் இயல்பானது என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு புதிய ஆள் வந்தார். அவர் நன்றாக நடக்கக்கூடியவர். அவர் அங்கே இருக்கும் மக்கள் நொண்டி நொண்டி நடப்பதைப் பார்த்துவிட்டு, என்ன இந்த மக்கள் இப்படி நடக்கிறார்களே, இவர்களுக்கு எப்படி நடக்கவேண்டும் என்று கற்றுத்தரவேண்டும் என முடிவுசெய்து அவர்களிடத்தில் சென்றார். அவர் நடந்து வருவதைப் அந்த ஊரைச் சேர்ந்த ஒருசில பெரியவர்கள், அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். இவர் அம்மனிதர்களிடம், "நான் நடப்பது போன்று இப்படி நடக்கவேண்டும் என்று அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்தார்கள். ஒருசிலர், "நாங்கள் நடப்பதுதான் சரியானது, உமக்கு ஒன்றும் நடக்கத் தெரியவில்லை, எப்படிப் பேசவேண்டும் என்று கூடத்தெரியவில்லை" என்று சொல்லி அவரைப் பார்த்து சத்தமாகச் சிரித்தார்கள்.

இதை பார்த்த அந்த புதிய மனிதர், நமக்கெதற்கு வம்பு என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்.

கதையில் வரும் அந்த ஊர்க்கார்கள் போன்று தான் நாமும், நாம் செய்வது தவறு என்று தெரியாமலே செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே, நாம் தூய பவுலடியாரைப் போன்று, நம்முடைய தவற்றை உணர்ந்து திருந்தி நடப்பதுதான் இறைவனுக்கு உகந்த காரியமாகும்.


2. கிறிஸ்தவர்களில் கிறிஸ்து

பவுலின் மனமாற்றம் நமக்குத் தரும் இரண்டாவது செய்தி கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பதாகும். பவுலடியார் எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நோக்கிச் செல்கிறபோது, வானத்திலிருந்து தோன்றிய ஒளியானது அவரைச் சூழ்ந்துகொள்ள அவர் தான் பயணம் செய்த குதிரையிலிருந்து கீழே இடறி விழுகிறார். அப்போது அவர், "ஆண்டவரே நீர் யார்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்கிறார் (திப 9:6). இங்கே இயேசு தன்னை கிறிஸ்தவர்களோடு, திருச்சபையோடு இணைத்துகொள்கிறார் அல்லது அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது உண்மை. நாம் நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளுக்கு ஒன்று செய்ய, அது இறைவனுக்கே செய்வதாகும் (மத் 25:40) என்ற உண்மையை இங்கே நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

எனவே, தூய பவுலடியாரின் மனமாற்ற விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் நம்முடைய தவறுகளை உணர்ந்து மனமாறி, ஆண்டவரிடம் திரும்பி வருவோம், அதே நேரத்தில் அடுத்தவரில் ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து, எல்லாரையும் அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


*- Palayamkottai Fr. Maria Antonyraj,*

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

அழைப்பு பெற்றவர்கள் நாம்.

அழைப்பின் அர்த்தத்தை உணர்ந்திட வேண்டும்.

அழைப்பிலே ஆழம் காண வேண்டும்.

அழைப்பினை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்திட வேண்டும்.

திருமுழுக்கு பெற்ற எல்லாருக்கும் இது பொதுவானதே.

GOSPEL READING: MARK 16:15-18

Belief in God and the baptism are essential for the salvation. God wanted that the whole world should be saved. This was the reason for the commission which sent the disciples into the whole world. Proclamation of the good news became the top priority for the salvation.

The signs that accompanied them were clear indications of the spread of the kingdom of God. They had control over demons (spirit world); they had mastery over languages (spread over other land); they had the gift of life (poison and serpents had no effect on them); they also had the gift of wholeness (healed people).

நற்செய்தியை பறைசாற்றுதல் வழியாக நம்பிக்கை வளர்கிறது. நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர். மீட்புப் பெறுதல்தான் இறைவன் இவ்வுலகிற்கு கொடுக்கும் சிறந்த கொடை. நம்பிக்கைகொண்டவர்கள் தீமை மீதும்> மொழிகள் மீதும்> உடல் மீதும்> உயிர் மீதும் அதிகாரம் கொண்டிருப்பர். Fr. Theo SDB

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
எப்பொழுதும்


தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

புதிய நம்பிக்கையாக வளர்ந்து கொண்டிருந்த நசரேய மதத்தை (கிறிஸ்தவம்) வேரறுக்க, கையில் வாளோடு புறப்பட்டவர், இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்.

ஆட்கொள்ளப்பட்ட அன்றே ஆள் புதிய மனிதராகின்றார்.

"நான்" என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் மனம், இறைவன் பக்கம் திரும்பி, இனி எப்போதும் "நீ" என்று சொல்வதுதான் மனமாற்றம்.

பவுல் இதை ஒருமுறை சொன்னது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார். அதனால்தான் அவரால், "வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்!" என சொல்ல முடிந்தது.

தன் பின்புலம், தன் திருச்சட்டம், தன் இனம், தன் உறவு, தன் தொழில், தன் விருப்பு-வெறுப்பு, தன் நண்பர்கள் வட்டம், தன் சொந்த ஊர் அனைத்தையும் விட்டுவிட அவரால் எப்படி முடிந்தது? அவரின் தைரியம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்று நமக்கெல்லாம் மனமாற்றம் தேவையில்லைதான்.

நாம் பிறந்தவுடன் இயேசுவின் உடலுக்குள் திருமுழுக்கு பெற்றுவிட்டோம்.

இது மட்டும் போதுமா?

இல்லை.

மனமாற்றம் என்பது அர்ப்பணம்.

எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் வாக்குறுதி இது.

காலையில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிக்க வேண்டும் என்று தூங்கப்போய், 6 மணிக்கு அலாரம் அடிக்கும் போது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்! என போர்வையை இழுக்க கை போகும்போது, "வேண்டாம்" என்று என் மனம் சொன்னால், அது மனமாற்றம்.

அர்ப்பணத்தில் என்ன பிரச்சினை என்றால், அது நீண்ட காலம் நீடிக்க முடியாததுதான்.

மனமாற்றம் என்பது நீண்டகால அர்ப்பணம் (long-term or perpetual commitment).

இன்று நாம் வாழும் வியாபார உலகத்தில் எதுவும் நீண்டகாலம் இருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவதில்லை. இன்றைய மார்க்கெட் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தேதியை குறித்து விடுகிறது. சீக்கிரம் முடிவு தேதி இருந்தால், சீக்கிரம் மக்கள் பயன்படுத்தி, சீக்கிரம் வியாபாரம் நடக்கும் என எல்லாமே நடக்கிறது. பால், தண்ணீர், பிஸ்கட், அரிசி, பருப்பு, கோக், தேன், மருந்து, பற்பசை, ரோஸ் பவுடர், மாய்சரைசர், எண்ணெய், க்ரீம், சீப்பு, சோப்பு, கண்ணாடி என எல்லாவற்றுக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கிறது.

நாம் வாங்கிய இரண்டு நாட்களில், மற்றொரு புதிய பொருள் வந்துவிடுகிறது.

இது பொருட்களில் மட்டுமல்ல. நம் வாழ்க்கை மதிப்பீடுகளையும் முழுமையாக மாற்றிவிட்டது.

40 வருட திருமண வாழ்வு, 40 வருட ஆசிரியப் பணி என்றெல்லாம் இனி நாம் பெருமையடைய முடியாது. மொழி , வேலை, நட்பு நீடிக்கும் காலமும் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் வாழும் நாட்களை கூட்டிவிட்டோம். ஆனால், இந்த நாட்களுக்குள் வாழும் வாழ்க்கையை குறைத்துவிட்டோம். இதுதான் பெரிய முரண்.

இன்று ஒருநாள் நான் குடிக்காமல் இருப்பதோ, திருடாமல் இருப்பதோ, இலஞ்சம் வாங்காமல் இருப்பதோ கஷ்டமல்ல. நீண்டகாலம் குடிக்காமலும், திருடாமலும், இலஞ்சம் வாங்காமலும் இருப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

இப்பொழுதின் ஒவ்வொரு பொழுதும், "நான்," "நீ" என இறைவன் பக்கம் நான் திரும்பினால், இப்பொழுது மட்டுமல்ல...எப்பொழுதும் மனமாற்றம், அர்ப்பணம் சாத்தியமே.






 தூய பவுலின் மனமாற்றத்தின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

"பவுல்" என்றால் கிரேக்கத்தில் "சிறியது" என்பது பொருள். ஆகையால்தான், பழைய மொழிபெயர்ப்பில் நாம் இவரை "சின்னப்பர்" என அழைக்கின்றோம்.

இந்த "சின்னான்" கிறிஸ்தவத்தின் தடத்தையே மாற்றியவர்.

வரலாற்றின் இயேசுவுக்கும், நம்பிக்கையின் கிறிஸ்துவுக்கும் இணைப்புக்கோடாய் இருப்பவர் இவர்.

இவரின் மனமாற்றம் பற்றி நான்கு இடங்களில் வாசிக்கிறோம் (திப 9:1-9, 22:6-16, 26:12-18, கலா 1:15-19). இந்த நான்கு கதையாடல்களுக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் இருந்தாலும், இவைகள் கொண்டிருக்கும் ஒரே ஒற்றுமை "மனமாற்றம்".

சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகிறார்.

"ஒரு கிறிஸ்தவனைக் கூட விட்டுவைக்க மாட்டேன்" என வாளெடுத்துச் சென்றவர், "வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்" என்று பல்டியடிக்கின்றார்.

பவுலின் மனமாற்றம் எனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:

அ. நம் திட்டம் அல்ல. அவரின் திட்டமே.

ஒவ்வொரு பொழுதும் நாம் ப்ளானரில் எடுத்து ஏதோ ஒரு நிகழ்வைக் குறிக்கும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார் என்பது என் நம்பிக்கை. "இவனுக்கு நான் ஒரு ப்ளானர் வைத்திருக்க இவன் ஏதோ எழுதுகிறானே!" என அவர் தனக்குள் சொல்லிக்கொள்வார். பவுலும் வாளெடுத்துச் சென்றபோது கடவுள் தனக்குள் சிரித்துக்கொள்வார்.

ஆ. அதிக ஆழம். அதிக அன்பு.

அதிக ஆழமாக பவுல் விழுந்ததால் கடவுளை அதிகமாக அன்பு செய்கிறார். இது அகுஸ்தினாருக்கும் பொருந்தும். ஒரு கயிறு அறுந்து கட்டப்படும்போது அதன் இரண்டு நுனிகளும் தங்களை அறியாமல் அருகில் வருகின்றனவே. அது போல! அருள் இறங்க முடியாத ஆழம் என்று நம் வாழ்வில் எதுவும் கிடையாது. நாம் ஆழமாகச் சென்று ஒளிந்து கொண்டாலும் அவர் நம்மைத் தேடி வருவார். பவுலைத் தேடி வந்ததுபோல.

இ. நோ டர்னிங் பேக்

புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கியவுடன் தன் பழையவற்றோடு உள்ள இணைப்பை முழுவதுமாக வெட்டிக்கொண்டார். ஆங்கிலத்தில் இதை, "படகுகளை எரிப்பது" என்று சொல்வார்கள். தான் வந்த படகை எரித்துவிட்டு புதிய இடத்தில் காலடிகளைப் பதித்துக்கொள்வது.

குதிரையில் வந்த சின்னான், விழுந்தார், எழுந்தார்.

அவரின் மனமாற்றம் நம் மனமாற்றம்கூட.

அவர் மனம் மாறிடாவிடில் கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சின்ன ஸெக்ட் ஆக நின்று போயிருக்கும்.

என் மனமாற்றம் கூட எங்கோ இருக்கும் யாருக்கும் பயன்படலாம்.

கொஞ்சம் மனமாறுங்க பாஸ்!

- Rev Fr YESU KARUNANIDHI
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா