Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் செபாஸ்டியன் வால்ஃபிரே ✠(Blessed Sebastian Valfrè)
   
நினைவுத் திருநாள் : (ஜனவரி/ Jan - 30)
✠ அருளாளர் செபாஸ்டியன் வால்ஃபிரே ✠(Blessed Sebastian Valfrè)

 கத்தோலிக்க குரு/ டூரின் நகர அப்போஸ்தலர் :

பிறப்பு : மார்ச் 9, 1629
வெர்டுனோ, சவோய்
(Verduno, Duchy of Savoy)

இறப்பு : ஜனவரி 30, 1710 (வயது 80)
டூரின், சவோய்
(Turin, Duchy of Savoy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம் : ஜூலை 15, 1834
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

முக்கிய திருத்தலம் :
ஒரேட்டரி ஆலயம், டூரின்
(Oratory Church of Turin)

நினைவுத் திருநாள் : ஜனவரி 30

அருளாளர் செபாஸ்டியன் வால்ஃபிரே, ஒரு கத்தோலிக்க குருவும், புனிதர் பிலிப் நேரியின் (Saint Philip Neri) ஒரேட்டரி சபை (Oratory) உறுப்பினரும் ஆவார். டூரின் (Turin) நகரின் உள்ளூர் ஒரேட்டரி சபையின் குருவாக நீண்ட காலம் அந்நகர மக்களுக்கு பணியாற்றியதால் டூரின் நகர அப்போஸ்தலர் (Apostle of Turin) என்றும் அழைக்கப்படுகிறார்.

அன்றைய இத்தாலியின் சவோய் (Duchy of Savoy) பிராந்தியத்தின் "வெர்டுனோ" (Verduno) நகரில், ஏழை பெற்றோருக்குப் பிறந்த இவர், கஷ்ட ஜீவனத்திலும், மிகவும் முயன்று போராடி, டூரின் பல்கலையில் பட்டம் பெறும்வரை விடாமுயற்சியுடன் பல்வேறு பல்கலைகளில் பயின்றார்.

டூரின் நகரிலுள்ள புனிதர் பிலிப் நேரியின் (Saint Philip Neri) ஒரேட்டரி (Oratory) என்றழைக்கப்படும் நாவன்மை அல்லது பிரசங்கக்கலை சபையில், அச்சபையின் நிறுவனரான பிலிப் நேரியின் நினைவுத் திருநாளான கி.பி. 1651ம் ஆண்டின், மே மாதம், 26ம் நாளன்று இணைந்தார். அதற்குப் பின்வரும் வருடம், ஃபெப்ரவரி மாதம், 24ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கி.பி. 1656ம் ஆண்டு, இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

டூரின் நகர மக்களுக்கு அவராற்றிய சேவையில், நோய்வாய்ப்பட்டவர்களை கவனிப்பதிலும், அம்மக்களுக்கு ஒப்புரவு அளிப்பதிலும் பெரும் கீர்த்தி பெற்றார். சவோய் அரசவையின் (House of Savoy) பிரபுவான "இரண்டாம் விக்டர் அமேடியஸ்" (Duke Victor Amadeus II) மற்றும் பல்வேறு அரசவை உறுப்பினர்களின் ஒப்புரவாளராக பணியாற்றினார். ஏழைகளிலும், ராச்சியத்தின் அவசியப்படும் மக்களிலும் அக்கறை கொண்டிருந்த இவர், விதவைப் பெண்களுக்கும் அநாதைகளுக்கும் உதவுவதிலும் மிகுந்த கவலை கொண்டிருந்தார். அத்துடன், சிறைக் கைதிகளைக் காண அடிக்கடி செல்வதுடன், அவர்களுக்கும் ஆறுதலளிப்பார். இறுதியில், டூரின் பேராயர் அலுவலக நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த நியமனத்தை அவர் நிராகரித்தார்.

கி.பி. 1678-80ம் ஆண்டுகளில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின்போதும், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் (King of France) "பதினான்காம் லூயிஸ்" (Louis XIV) மற்றும் "பியேமொண்ட்" (Piemonte) ஆகியோரிடையே நடந்த போரின்போது நடந்த டூரின் நகர 17 வார முற்றுகையின்போதும் வால்ஃபிரே ஏழை எளிய மக்களுக்கு செய்த சேவைகள் அளப்பற்றதும், பாராட்டுதலுக்கு உரியதாகும். போரின்போது இராணுவ வீரர்களுக்கு அவர் மிஷனரியாகவும் பணியாற்றினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா