Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயத்தின் செபம்

                                                                

                                                           திரு இருதய ஆண்டவர்க்குச் செபம்


ஆண்டவருடைய கல்லறைச் செபம்
தூய ஆவியை நோக்கிச் செபம்
விடுதலைச் செபம்

விடுதலை நோக்கிச் செபம்...................................................
திரு இருதய செபம்.....................................................................
கல்லறைச் செபம்........................................................................
இயேசுகிறீஸ்து நாதருடைய திருத்தோள் காயத்தின் செபம்......................................
இயேசுவின் திருமுகத்தைக் குறித்து 9ம் பத்திநாதர் இயற்றிய செபம்...................
இயேசுநாதருடைய திரு இதயத்தின் மன்றாட்டு.................................................................
திரு இருதய ஆண்டவர்க்குச் செபம்...........................................................................................
பரிசுத்த ஆவிக்குச் செபம்.................................................................................................................
என்னோடு தங்கும் ஆண்டவரே...................................................................................................
நற்கருணை வாங்கியபின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்..............................
இயேசுநாதருடைய திருமுகத்தை நோக்கிச் செபம்..........................................................
நம் அலுவல்களில் வெற்றி பெறச் செபம்................................................................................
நம் நாட்டுக்காகச் செபம்....................................................................................................................
புனித மிக்கேல் தேவதூதனுக்குச் செபம்..................................................................................

 

விடுதலை வேண்டுமா?

இனம்புரியாத பயம், வீண்கவலை, மோகஆசைகள், குடிவெறி பழக்கம், பில்லிசூனியம், செய்வினை தொல்லைகள், மன்னிக்க முடியாமை, தூக்கமின்மை, இவைகளால் நீ துன்பப்படுகிறாயா? உனக்கு விடுதலை தருபவர் இயேசு ஒருவரே! நீ அஞ்சாதே! ஏனெனில் நாம் உன்னோடு இருக்கின்றோம். உனக்கு உதவி செய்வோம். தம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும் என்கின்றார், ஆண்டவர். (இசை: 41:10) தினமும் காலையில் மாலையில் இந்த ஜெபத்தைச் சொல்லி வந்தால் வெற்றி உனக்கு.

என் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்துவே உம்மை வாழ்த்துகிறேன். போற்றுகிறேன், துதிக்கிறேன், ஆராதிக்கிறேன், உமக்கு நன்றி கூறுகிறேன். என் உடல், ஆவி, ஆன்மா அனைத்தையும், எனக்குள்ள யாவைற்றையும் உமக்கு ஒப்புவிக்கின்றேன். நீரே என் ஆண்டவர். நீரே என் மீட்பர், நீரே என் அரசர். நான் உமக்கு மட்டுமே சொந்தம்.

என் உடலையும், ஆவியையும், ஆன்மாவையும், என் சிந்தனை, சொல், செயல், உணர்வுகள், என் வாழ்வையும், வீடு நிலபுலம், உடமைகள், உயிருள்ள, உடலற்ற பொருட்களை சீர்குலைக்கும் எல்லா தீய சக்திகளையும், வஞ்சிக்கும், ஏமாற்றும், அழித்தொழிக்கும், ஏவல் பிசாசுகளையும் இயேசுக்கிறீஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினால் கட்டி அவருடைய திருப்பாதத்திலே தள்ளுகிறேன்.

ஏனெனில் நாங்கள் அனைவரும் அவருடைய விலைமதிக்கப் பெறாத திருரத்தத்தினால் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள். அவரே எங்கள் ஆண்டவர். அவரே எங்கள் மீட்பர். நாங்கள் என்றுமே அவருக்கு மட்டுமே சொந்தம். இதோ ஆண்டவரின் திருச் சிலுவை (மும்முறை சிலுவை அடையாளம் வரையவும்) எதிரிகளே! தூய ஆவிகளே ஓடிப்போங்கள். தாவீதின் குலத்தவரும் யூதாவின் சிங்கமுமான இயேசுக்கிறீஸ்து வெற்றி கொண்டார்.(லூக்.
17: 9-11) (மத்.28:19-20) (எபே: 1-7) (அப்.பணி.20:28) (யாத் 4:8)

 

சங்கீதம் 90 (தழுவல்)


ஆண்டவரே என் புகலிடம். நீரே என் அரண். நான் உம்மையே நம்பியுள்ளேன். ஏனெனில் என் பாவங்களிடமிருந்தும், தீயோனிடமிருந்தும் கொடியநோய், பஞ்சம் படை, ஆபத்து, விபத்து, அனைத்து கேட்டிலிருந்தும் என்னை மீட்டவர், நீர் ஒருவரே. நீர் வல்லவர், நல்லவர், அனைத்திற்கும் மேலானவர், ஆற்றல் மிக்கவர், உன்னை எதிர்த்து நிற்பவர் யார்? நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எந்தத் தீமையும் என்னை அணுகாது. எந்தத் துன்பமும் என் வீட்டை நெருங்காது. ஏனெனில் நான் செல்லும் இடமெல்லாம் என்னை பாதுகாக்கும்படி, உம் வானதூதருக்குக் கட்டளையிட்டுள்ளீர். நான் தடுக்கி விழாமல் வானதூதர்கள் என்னைப் பாதுகாப்பார்கள். நச்சுப் பாம்பின் மீதும், விரியன் பாம்பின் மீதும் நடந்து செல்லவும், பறவை நாகத்தையே காலால் மிதித்துப்போடவும், எனக்கு வல்லமை தந்துள்ளீர். உம்மையே சார்ந்திருப்பதால் எல்லாத் தீமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீர். நான் உம்மையே நோக்கிக் கூப்பிடுவதால், என் செபத்தைக் கேட்டு துன்பவேளையில் எனக்குத் துணை செய்வீர். என்னைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவீர். உம்மை நம்பினோரை நீர் என்றும் கைவிட மாட்டீர். உமக்கே என்றென்றும் புகழும் மகிமையும், ஆராதனையும், நன்றியும், புகழும் உண்டாவதாக! ஆமேன்.
 

சங்கீதம் 33 (தழுவல்)

ஆண்டவரே நான் என்றென்றும் போற்றுவேன். அவரது புகழை நான் இரவும் பகலும் பாடுவேன். என் ஆன்மா ஆண்டவரில் அகமகிழும். என் உடல் அவரில் இளைப்பாறும். நான் ஆண்டவரைத் தேடினேன். துன்ப வேளையில் அவரைக் கூவியழைத்தேன். அவர் என் கூக்குரலைக் கேட்டார். என் கண்ணீர் எல்லாமாய்த் துடைத்தார். எல்லாவித அச்சத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும், சோதனையிலிருந்தும், பிரச்சனையிலிருந்தும் என்னை அவர் விடுவித்தார். அவருக்கே என்றென்றும் புகழ்ச்சியும், மகிமையும், ஆராதனையும் உண்டாவதாக. அவரை நோக்குங்கள். நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள். ஆண்டவர் எங்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் தஞ்சம் புகுவோன் ஏமாற்றமடையான். அவரிடம் அஞ்சுவோர்க்கு எதுவும் குறைவுபடாது. உள்ளம் நொறுங்குண்டவர்க்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர். அவர் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பவர். திக்கற்ற என்னை விடுவித்த ஆண்டவர் உங்களையும் விடுவிப்பார். அவருக்கே என்றென்றும் துதி மகிமை எல்லாம் உண்டாவதாக. ஆமென்.

 

சங்கீதம் 15 (தழுவல்)


இறைவா! என்னைப் பாதுகாத்தருளும். உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன். நீரே என் ஆண்டவர். நீரே என் மீட்பர். உம்மையன்றி எனக்கு வேறு யாரும் துணையில்லை. நீரே என் உரிமைச் சொத்து. உம்மையன்றி எனக்கு நன்மை வேறேது. நீர் பாவிகளை வெறுப்பதில்லை. நான் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன். என் பாவத்தை எல்லாம் மன்னியும். அவைகளை ஆழ்கடலில் எறிந்து போடும் என் உள்ளத்தை வெண்பனிபோல் தூய்மையாக்கும். எனக்குத் தீமை செய்ய எண்ணுவோர் பலர் உண்டு. என்னை காப்பவர் நீரே. எனக்குப் பெருமை தருபவர், துணை புரிபவர் நீரே. நான் தலை நிமிர்ந்து நடக்கச் செய்பவர் நீர் ஒருவரே. ஆகவே என் ஆண்டவரே, நான் என்நேரமும் என் கண்முன் கொண்டிருப்பேன். அவர் இரவும் பகலும் என் வலப்பக்கத்தில் இருப்பதால், நான் எதற்கும் அஞ்சமாட்டேன். இதனால் என் உடலும் கவலையின்றி இளைப்பாறும். அவர் திரு முன் எனக்கு நிறை மகிழ்ச்சியும், அவர் வலக்கரத்தில் இடைவிடா இன்பத்தையும் காட்டுவார். என் ஆண்டவரே! நான் இடைவிடாமல் துதித்துப் போற்றுவேன். ஆமென்.
 

நன்றி இயேசுவே


ஆண்டவரே என் புகலிடம். நீரே என் அரண். நான் உம்மையே நம்பியுள்ளேன். எனக்கு எந்த தீங்கும் வராமல் என்னை அலைக்கழிக்கும் எல்லாத் தீய சக்திகளிலிருந்தும் விடுவிப்பவர் நீர் ஒருவரே. நீரே வல்லவர். நீரே நல்லவர். உம் திரு இரத்தம் என் கேடயம். நான் உமக்கு மட்டுமே சொந்தம். என் மீட்பராகிய ஆண்டவருக்கே என்றென்றும் புகழ் உண்டாவதாக. ஆமென்.
 

தூய ஆவியின் செபம்


தூய ஆவியே உம்மைப் போற்றுகின்றோம். எம்மில் ஒளியேற்றி, எமக்குத் திடம் அளித்து, எம்மைத் தேற்றும். நாங்கள் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும் உமது திட்டங்களை எமக்கு தெரியப்படுத்தினால் போதும். எம்மில் நீர் என்ன செயலாற்ற வேண்டுமென்பதை விரும்புகிறீரோ, அதை நாங்கள் ஏற்று அடிபணிகின்றோம். ஆமென்.
 

திருஇருதயச் செபம்


பரலோக பூலோக மன்னாவே! சீவியந் தரும் திவ்விய அப்பமே! பாவிகள் நாங்கள் உம்மை, வணங்கி ஆராதிக்கின்றோம். மனுக்குலத்தின் மீது கொண்ட மட்டற்ற அன்பினால், மதிப்பிட முடியாத உமது மாசற்ற திரு உயிரை எங்களுக்காகச் சிலுவை மரத்தில் பலியாக்கிய பின்னும், பாடுகளின் பலனை மனிதர் அறியாது பாவத்தில் வழுகிறார்களே என்று கருதி, திவ்விய நற்கருணையை ஏற்படுத்தி, எங்களுக்காக இரவென்றும் பகலென்றும் பாராது, கண்விழித்துக் காத்திருக்கும் திரு இருதயநாதரே! கவலையால் நிறைந்து, கண்ணீரால் கலங்கி, வேதனையால் வருந்தி, நொந்த உள்ளத்துடன், பாதை தெரியாப் பாலகர் பாவிகள் நாங்கள், உமது நேச இதயத்தின் வாசலண்டை வந்து வீழ்ந்து கிடக்கின்றோம். ஐயோ இரக்கம் காக்கும் இருதயமுடைய யேசுநாதரே! எங்கள் அழுகையைத் துடைப்பார் யாருமில்லை. தாங்கமுடியாத வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கி, உம்மண்டையே வந்து உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றோம். ஆ அன்பு நிறைந்த ஆண்டவரே! ஆதரவளிக்கும் கர்த்தாவே! அன்பிற்காய் பிறந்து அன்பிற்காய் அவதிப்பட்டு, உமது ஆருயிரை எங்களுக்காகச் சிலுவைமரத்தில் துறந்தீரே, அவனியில் எங்களுக்கு அன்பு செய்ய, ஆறுதலளிக்க யாருமில்லையே என்று அவதியுறும் நாங்கள், அன்பு நிறைந்த உமது இதயத்தை நோக்கி கதறி நிற்கின்றோம். கருணை நிறைந்த இருதயமே, உருகி நிற்கும் எங்களைப் பாரும். கடைசித் துளி இரத்தத்தையும் எங்களுக்காக ஈந்த இறைவா, பூங்காவனத்தில் நொந்து வருந்தின இயேசுவே, திரு இருதயநாதரே! உமது திரு இருதயத்தை மென்மேலும் வருத்தும் நாங்கள், யாரிடம் போய் ஆறுதல் அடைவோம். உம்மையல்லால் எம்மைத் தேற்றுவார் யாருண்டு. ஆற்றுவார் யாருண்டு. அரவணைப்போர் யாருண்டு. ஆறுதல் தருவார் யாருண்டு. எங்கள் அடைக்கலமும் நம்பிக்கையும் நீரல்லவோ, ஐயோ இரக்கத்தின் இருதயமே எங்களைப் பாரும். எங்கள் குடும்பங்களைப் பாரும். எங்களைச் சூழ்ந்துள்ள க
ஸ்ட துன்பங்களை தீரும். உமது ஆறுதலை அடைக்கலத்தை அண்டி வந்தோம். எம்மீது கருணை கூரும். உமது நேச அழைத்தலைப் புறக்கணிப்போர், உம்மை நாடி வர அருள் புரியும். உமது இரக்கத்தை இறஞ்சுவோர் மீது இரக்கமாயிரும். தங்கள் மனவேதனை தாங்காது அண்டி வந்தோர்க்கு ஆறுதலைக் கொடுத்தருளும். வியாதியால் வருந்துவோரை ஆசீர்வதியும். அந்தரித்து வந்தோரின் அழுகைக் கண்ணீரைத் துடையும். உமது சிநேக இருதயத்தின்மேல் மானிடர் மென்மேலும் சிநேகம் கொள்ளவும், உமது திரு இருதய பக்தி மென்மேலும் அதிகரிக்கவும் செய்யும். உமது நேச வேண்டுதலுக்கு இசைந்து உமது இருதயத்திற்கு ஆறுதல் தர ஆசிக்கும் எங்கள் மன்றாட்டுகளுக்கு இரங்கியருளும். பாவிகட்காய் பலியான திரு இருதயநாதரே, எங்கள் அனைவரையும் பாதுகாத்து, ஈட்டியால் துளையுண்ட உமது திரு இருதயத்தில் நின்று சொரிந்த கடைசித்துளி இரத்தத்தாலும், தண்ணீராலும் எங்களை அபிகேம் செய்து உமது திரு இருதயத்தண்டை சேர்த்தருளும். கடைசியாய் அன்பிற்குரிய இரட்சகரே! திரு இருதயமே! நற்கருணை நாதரே! நாங்கள் இந்தத் திருமணி ஆராதணையை உம்முடைய நேச இருதயதத்திற்கு ஒப்புக் கொடுத்து, உம்மை விட்டுப் பிரிய இருப்பதால், உம்முடைய ஆசீர்வாதத்தை இரந்து, உமது இருதயவாசலண்டை சாஸ் டாங்கமாக விழுந்துகிடக்கின்றோம். அவ்வாசீர்வாதம் எங்கள் மீதும், எமக்குள்ள யாவற்றின் மீதும் இருப்பதாக! ஆமேன்.
 

ஜெபம் 1


ஓ! அணை கடந்த திருப்பாடுகளே! ஓ! ஆழமான திருக்காயங்களே! ஓ! இரத்தப் பிரளயமே! ஓ! இன்பத்தையெல்லாம் கடந்த இன்பமே! ஓ! மிக்க கொடூரமான மரணமே! ஓ! மதுரமான இயேசுவே! தேவரீர் சிலுவையில் தொங்கியபொழுது அனுபவித்த கொடிய வேதனையையும், அளவில்லாத கஸ்தியையும் பார்த்து, என் கடன் துன்பங்களையும், சத்துராதிகளின் கொடுமைகளையும், ஒழித்து என்னை நல்மரணமடையச் செய்தருள வேண்டுமென்று உம்மையே கெஞ்சி மன்றாடுகிறேன். சுவாமி ஆமென். (1பர. 1அருள். 1திரி.)

 

ஜெபம் 2


நித்திய பிதாவே! இத்தினத்திலும், என் வாழ்நாள் அனைத்திலும் நான் கட்டிக் கொண்ட துரோகங்களுக்கு பரிகாரமாகவும், இன்றும் என்றும் சுத்த கருத்தில்லாமல் செய்யும் நற்கிரிகைகளைப் பரிசுத்தப்படுத்தவும், நான் அனுசரியாத புண்ணியங்களின் குறைகளைத் தீர்க்கவும், இயேசுவின் திரு இருதயத்தையும் அதன் சிநேகப்பெருக்கத்தையும், திருப்பாடுகளையும் ஞானப்பலன்களையும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறேன். சுவாமி ஆமென். (1பர. 1அருள். 1திரி.)
 

நமது திவ்விய இரட்சகருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட ஜெபத்தின் வரலாறு.


கர்த்தர் பிறந்த
803ம் வருடத்தில், நமது ஆண்டவருடைய திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த ஜெபமானது, பரிசுத்த பாப்பாண்டவரால் சார்ளஸ் என்னும் ராஐரவானவர் யுத்தத்துக்கு போகும்போது, அவர் யாதொரு தீங்குக்குள்ளாகாமல், சுகமே மீண்டுவர அவருக்குக் கொடுக்கப்பட்டது. இப்புனித ஜெபத்தை பிரதிதினமும் ஜெபித்தாலும், காதால் கேட்டாலும், அல்லது அவர்கள் அண்டையில் வைத்துக்கொண்டிருந்தாலும், அவர்கள் சடுதிமரணத்தால் சாகமாட்டார்கள். தண்ணீரில் மூழ்கியும், விசமுள்ள ஐந்துக்களாலும் சாகமாட்டார்கள். கர்ப்பவேதனைப்படும் எந்த ஸ்திரீகளும், இதை ஜெபித்தால் அவர்கள் யாதொரு துன்பமுமின்றி பிரசவிப்பார்கள். பிறந்த குழந்தைகளின் வலது பக்கத்தில் இந்த ஜெபத்தை வைத்திருந்தால், யாதொரு ஆபத்தும் நேரிடாது. இசிவு உண்டாகிறவர்களின் வலது பக்கத்தில் இதை வைத்திருந்தால், உடனே அவர்கள் எழுந்து ஆண்டவரைத் தோத்தரிப்பார்கள். இதை ஜெபித்துவரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும். இதை எப்பொழுதும் கூடவே வைத்துக் கொண்டிருப்பவர்கள், மின்னல், இடி, முழக்கங்களுக்கெல்லாம் தப்பி வாழ்வார்கள். இவர்கள் மரணநாள் நெருங்குகையில், மூன்றுநாள் முன்னதாகவே எச்சரிப்புக்குள்ளாவார்கள் என்று அநேக வேதபாரகர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஆண்டவருடைய கல்லறைச் செபம்


ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்த்தாவும், இரட்சகருமாகிய இயேசுக்கிறீஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காக கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர். ஆ! கிறீஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்களுடைய நினைவுகளைக் கவனியும். ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே! எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும். ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்களைச் சகல துன்பங்களில் நின்று காப்பாற்றும். ஆ! இயேசு இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் சத்துருக்களிடத்தினின்று எங்களைப் பாதுகாத்தருளும். ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றி நித்திய ஐவனைத் தந்தருளும். ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனு இயேசுநாதரே! எப்போதும் எங்கள் மீது இரக்கம் வையும். கர்த்தராகிய இயேசுக்கிறீஸ்து நாதருடைய மகிமையினாலும், அவருடைய பாடுகளினாலும், உயிர்த்தெழுதலினாலும், தெய்வத் தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும், எங்களைப் பரலோகத்தில் சேர்க்க, அந்நாளில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தும், பெரிய வெள்ளிக் கிழமையில் கல்வாரி மலையின்மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டும், நிக்கோதேமு சூசை என்னும் பக்தர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர். மெய்யாகவே நீர் பிறந்த பதின்மூன்றாம் நாள், மூன்று இராசாக்களால் தூபம், பொன், வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசுகிறீஸ்துநாதருடைய மகிமையானது, எங்கள் சத்துரக்களுடைய வஞசனைகளினின்று, இப்போது எப்போதும் காப்பாற்றும். ஆ! ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மீது கிருபையாயிரும். புனித மரியே, புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்.) ஆ! கர்த்தராகிய இயேசுவே! உம்முடைய பாடுகளின் வழியால் இந்தப் பாவ உலகத்தினின்று உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே. அப்படியே நாங்களும் எங்கள் அவஸ்தை நேரத்தில் எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல், பொறுமையோடு சகிக்கக் கிருபை கூர்ந்தருளும். உமது பாடுகளின் மூலமாக, எங்களுக்கு நேரும் எல்லா இடையூறுகளிலும் இப்போதும் எப்போதும் எம்மைத் தப்புவியும். ஆமென்.

 

நம்பிக்கை முயற்சி

எங்கள் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்குறுதி கொடுத்தபடியினாலே யேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்த பலன்களைப் பார்த்து, எங்கள் பாவங்களையெல்லாம் பொறுத்து எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்சபாக்கியத்தையும் தந்தருளுவீரென்று உறுதியாக நம்பியிருக்கின்றோம். ஆமென்.

 

இயேசுகிறீஸ்துநாதருடைய திருத்தோள் காயத்தின் செபம்


என் நேசத்துக்குரிய இயேசுவே! கடவுளின் மாசற்ற செம்மறிப் புருவையே! நான் மிகவும் நிர்ப்பாக்கிய பாவியானாலும், நீர் உமது பாரமான திருச் சிலுவையைச் சுமந்து கொண்டு போனபோது, உமது திருத்தோளை நிஸ்டுரமாய்க் கிழியச் செய்து, உமது திருச்சரீரத்திலுண்டான சகல காயங்களால், நீர் அனுபவித்த துயரத்தைப் பார்க்கிலும், அதிக துயரத்தை வருவித்த, உமது திருத்தோளின் காயத்தைச் சாஸ்டாங்கமாய் வணங்கி நமஸ்கரிக்கின்றேன்.

மட்டற்ற துயரப்பட்ட இயேசுவே! உம்மை ஆராதித்து, என்முழு இதயத்தோடு உம்மைப் புகழ்ந்து ஸ்துதித்து, உமது திருத்தோளின் கடூர காயத்திற்காக உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றேன். நீர் அனுபவித்த இந்த மட்டற்ற வேதனை, உமது சிலுவையின் பாரச்சுமையால் அதிகரித்ததின் மேல், நான் நொந்தழுது பாவியாகிய என்பேரில் தேவரீர் இரக்கமாய் இருக்கவும், என்பாவ அக்கிரமங்களைப் பொறுத்து, உமது சிலுவையின் பாதை வழியாய் என்னை மோட்சம் சேர்ப்பிக்கவும், தயை புரியவேண்டுமென்று உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஆமென்.

மதுர இயேசுவே! உமது திருத்தோளின் கடூர காயத்தைப்பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிரும். ஆமென். (1பர. 1அருள். 1திரி.)
 

இயேசுவின் திருமுகத்தைக் குறித்து பரிசுத்த பாப்பரசர் 9ம் பத்திநாதர் இயற்றிய செபம்


இனிய இயேசுவே! எங்களை உமது கிருபைக் கண்களால் நோக்கியருளும். அன்று வெரோணிக்கம்மாளை கிருபாகடாட்சமாகப் பார்த்து அருளினது போல, எங்கள் ஒவ்வொருவரையும் தயவாய்ப் பார்த்தருளும். உமது பிரத்தியட்ச தரிசனத்தை அடியோர்கள் இச்சரீரக் கண்களால் காண அபாத்திரவான்களால், என் இதயத்தை நோக்கி உமது திருமுக தரிசனத்தை திருப்பியருளும். இத்திவ்விய தரிசனத்தால் என் இருதயம் உற்சாகமடைந்து, இப்பிரபஞச
ஜீவிய ஞானயுத்தத்தில் எனக்கு அவசரமான மனத்திடனை அத்திருக் கிருபாகடாட்ச ஊறணியாலடையச் செய்தருளும். சுவாமி ஆமென்.
(1பர. 1அருள். 1திரி.)

செபிப்போமாக:
சகல சிருஸ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! உமது மகிமை பூலோகமெங்கும் நிறைந்திருக்கின்றது. உமது அடியேனுக்குப் பாவப் பொறுத்தல் தந்து என் அவசியங்களில் வேண்டிய வரங்களை அடையச் செய்தருளும். சுவாமி ஆமென்.

 

இயேசுநாதருடைய திரு இதயத்தின் மன்றாட்டுமாலை (பரிசுத்த பாப்பரசர் 23ம் அருளப்பரால் அங்கீகரிக்கப்பட்டது.)



* ஆண்டவரே இரக்கமாயிரும்
* கிறீஸ்துவே இரக்கமாயிரும்
* ஆண்டவரே இரக்கமாயிரும்
* கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
* கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்

* பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா!
எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி

* உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா!
எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி

* பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா!
எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி

* அர்ச்சியசிஸ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா!
எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி

* நித்தியபிதாவின் சுதனாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
எங்களை இரட்சித்தருளும், ஆண்டவரே

* மனுவுரு எடுத்த தேவவார்த்தையானவராகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* புதிய நித்திய ஏற்பாட்டினுடைய கிறீஸ்துவின் திருஇருதயமே
* பூங்காவனத்தில் அவஸ்தைப்பட்டபொழுது நிலத்தில் சிந்தப்பட்ட கிறீஸ்துவின்
   திருஇருதயமே
* கசையால் அடிபட்டபோது ஏராளமாய் சிந்தப்பட்ட கிறீஸ்துவின் திருஇருதயமே
* முள்முடி சூட்டப்பட்டபோது வடிந்தோடிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* சிலுவையில் சிந்தப்பட்ட கிறீஸ்துவின் திருஇருதயமே
* எங்கள் மீட்பின் விலையாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* பாவமன்னிப்புக்கு இன்றியமையாததான கிறீஸ்துவின் திருஇருதயமே
* திவ்விய நற்கருணையில் பானமாய் இருப்பதும், ஆத்துமாக்களைக் கழுவித்
 துடைப்பதுமான கிறீஸ்துவின் திருஇருதயமே
* இரக்கத்தின் பெருக்கமாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* பசாசுகளின்மேல் வெற்றி கொண்ட கிறீஸ்துவின் திருஇருதயமே
* வேதசாட்சிகளின் திடமாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* ஸ்துதியர்களுடைய பலமான கிறீஸ்துவின் திருஇருதயமே
* கன்னியர்களின் பிறப்பிடமாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* ஆபத்திலுள்ளவர்களின் சகாயமாகிய கிறீஸ்துவின் திருஇருதயமே
* துன்புறுவோரின் துயர் நீக்கும் கிறீஸ்துவின் திருஇருதயமே
*அழுகையில் ஆறுதல் அளிக்கும் கிறீஸ்துவின் திருஇருதயமே
* மனஸ்தாபப்படுவோரின் நம்பிக்கையான கிறீஸ்துவின் திருஇருதயமே
* மரிப்போரின் மனச்சாந்தியான கிறீஸ்துவின் திருஇருதயமே
* இருதயங்களில் அமைதியும், இனிமையுமான கிறீஸ்துவின் திருஇருதயமே
* நித்திய சீவியத்தின் வாக்குத்தத்தமான கிறீஸ்துவின் திருஇருதயமே
* ஆத்துமாக்களை உத்தரிப்பு ஸ்தலத்திலிருந்து விடுவிக்கும் கிறீஸ்துவின் திருஇருதயமே
* எல்லா மகிமைக்கும் மதிப்புக்கும் முற்றிலும் தகுதிவாய்ந்த கிறீஸ்துவின் திருஇருதயமே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடையசெம்மறிப் புருவையாகிய இயேசுவே!  எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடையசெம்மறிப் புருவையாகிய இயேசுவே!  எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடையசெம்மறிப் புருவையாகிய இயேசுவே!  எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

ஆண்டவரே உமது திரு இரத்தினால் எங்களை இரட்சித்தருளினீர்.
இறைவனுடைய அரசாக எங்களை அமைத்தீர்.

செபிப்போமாக:
சர்வவல்லவரும் நித்தியருமான சருவேசுரா! உமது ஏககுமாரனை உலக மீட்பராக நியமித்து அவரது இரத்தத்தால் பாவப்ப்பரிகாரம் பெறத் திருவுளமானீரே. எங்களது மீட்பின் விலைப்பொருளாகிய அந்தத் திரு இருதயத்தை வணங்கி, ஆராதித்து அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படவும், பரலோகத்தில் நித்திய சம்பாவனையைப் பெற்று மகிழவும், அருள்புரியுமாறு மன்றாடுகின்றோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.
 

விருத்தம்


சுத்தியல் குறடு சாட்டை சுவடு
வன்சிலுவை யாம்பி
குத்திய ஈட்டி மூங்கில் கூர்முனை
ஆணி கற்றுண்
மெத்திய கசைவார் பாசம்
மேவு முள் முடியோடெல்லாம்
கத்தனை வதைகள் செய்த
கருவிகள் இவையாமன்றோ

அவரது விலையில்லாக் குருதி போற்றி
மிகுந்த சேதனத்திற்கு சிந்திய திருக் குருதி போற்றி
கசையடியில் மசிந்து ஒழுகும் திருக் குருதி போற்றி
 

திரு இருதய ஆண்டவர்க்குச் செபம்


எல்லாம் வல்ல இறைவனே! நான் மிகுந்த விசுவாசத்துடன் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு இத்துன்பகரமான இவ்வேளையில் உமது வல்லமையான கரங்களால் ஆறுதல் அளித்தருளும். என்னிடம் பாராமுகமாய் இராதேயும் நல்ல இயேசுவே. உமது கரங்களை எனக்கு திறந்துவிடும். உமது வல்லமையான கரங்கள் தாம் நான் விரும்பும் சாந்தியை எனக்கு என்றும் அளிக்க வல்லன.

(உங்கள் மூன்று கஸ்டங்களைக் கூறவும்.)

என் ஆண்டவரே இரந்து கேட்கும் பாவியான என் இதயத்தின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும். உமது நித்திய வீட்டை நான் வந்து அடைய எனக்கு என்றும் வழி காட்டியருளும். ஆமென்.

இயேசுவே எனக்கு உதவியருளும்.

*
என் ஒவ்வொரு தேவைகளின் போதும் தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் உம்மிடம் வர இயேசுவே எனக்கு உதவியருளும்.

* என் சந்தேகங்களில், என் கலக்கங்கள், சோதனைகளில் இயேசுவே எனக்கு
   உதவியருளும்.

* என் நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துன்பங்கள் வேதனைகளில் இயேசுவே எனக்கு
    உதவியருளும்.

* மற்றவர் என்னை ஏமாற்றும்போது, உம்மை மட்டும் நம்பியிருக்கும் எனக்கு இயேசுவே
   எனக்கு உதவியருளும்.

* நீரே என் ஆண்டவர், மீட்பர் என நான் வருமபோது இயேசுவே எனக்கு உதவியருளும்.

* என்வாழ்வில் எல்லா முயற்சிகளுமே தோல்விகளாக மாறும்போது, இயேசுவே எனக்கு
    உதவியருளும்.

* நான் பொறுமையிழந்து என் சிலுவைகள் துன்பத்தின் மீது துன்பத்தைத் தரும்போது,
   இயேசுவே எனக்கு உதவியருளும்.

* நான் தனிமையில் வருத்தத்திலும், வேதனையிலும் உழலும்போது, இயேசுவே எனக்கு
   உதவியருளும்.

எப்போதும் எனது பலவீனங்கள், தோல்விகளின்போது, இயேசுவே எனக்கு உதவியருளும்.

முக்கிய குறிப்பு
இச்செபம் வல்லமை மிக்கது. உங்கள் வேண்டுதல் எவ்வளவு கஸ்டமானதாக இருந்தாலும், இச்செபத்தின் மூலம் அடையலாம். மாதத்தின் முதல் வெள்ளியிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு இச்செபத்தை ஜெபிக்கவும். ஓவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி, ஜெபம் முடிய அணைத்து விடவும். 15ந்தாவது நாள் முழு மெழுகுவர்த்தியையும் எரியவிடவும். 15 நாளும் ஒரே மெழுகுவர்த்தியை உபயோகிக்கவும்.

ஆண்டவரிலேயே மகிழ்ச்சிகொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

 

பரிசுத்த ஆவிக்கு ஜெபம்


எனக்கு ஒளியாயிருந்து உன்னத நிலையை நான் அடைய எனக்கு வழிகாட்டும். பரிசுத்த ஆவியே! உம் திரு நாமம் அர்ச்சிக்கப்படுவதாக! உமது அருட்கொடைகளின் மூலம் உன்னுள்ளத்தைப் பக்குவப்படுத்தி, எனக்கு தீங்கு செய்தோரை நான் மன்னிக்க நான் மன்னிக்க அருள் புரிபவரே, என்வாழ்வில் எச்சந்தர்ப்பத்திலும், எனக்கு உற்ற துணையான உமக்கு, இச்சிறிய செபத்தின் மூலம் நீர்செய்யும் சகலத்திற்கும் நன்றி கூறுகின்றேன். என் தேவைகள் எவ்வளவு முக்கியமானதாக இருப்பினும், எக்காரணம் கொண்டும் உம்மிலிருந்து விலகாமல் என்றும் உம்மில் நிலைத்திருப்பேனென உறுதி கூறுகின்றேன். நானும் என்னால் நேசிக்கப்படும் அனைவரும் என்றென்றும் உமது முடிவில்லா மகிமையில் பங்குபெற வேண்டுகிறேன்.
 


உங்கள் தேவை எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அடுத்தடுத்த 3 நாடகளுக்கு இச்செபத்தை உங்கள் தேவையைக் கேளாமல் சொல்லிவரின் உங்கள் தேவை நிறைவேறும். இச்செபத்தை பிரசுரிப்பதாக வாக்குப் பண்ணவும்.

ஓ! பரிசுத்த ஆவியே! உமக்கு நன்றி. உலக இரட்சகரான இயேசுவே, நீசப்பாவிகளின் மேல் அளவில்லாத இரக்கம் உள்ளவரே, முடியாத காரியங்களைக் கைகூடப்பண்ணியவரே, எங்கள் இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (மூன்று முறை சொல்லவும்)


என்னோடு தங்கும் ஆண்டவரே

நற்கருணை வாங்கியபின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்

என்னோடு தங்கும் ஆண்டவரே, உம்மை நான் மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மை கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.

என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க, உமது பலம் எனக்குத் தேவை.

என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என்வாழ்வில் எழுச்சி இல்லை.

என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே எனக்கு ஒளி. என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் வீழ்ந்து விடுவேன.;

உமது சித்தம் எதுவென எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே

உமது குரல் கேட்டு உம்மைப் பின் செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே

என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாய் நேசிக்கவும், எப்போதும் எமது உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன்.

நான் உமக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நீர் விரும்பினால், என்னோடு தங்கும் ஆண்டவரே,

என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடமாக இருக்க ஆசிக்கின்றேன்.

என்னோடு தங்கும் ஆண்டவரே, பொழுது சாய்கின்றது. இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்வில் மரணமும், தீர்ப்பும், முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன.  வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்படவேண்டும். இதற்கு நீர்தான் எனக்குத்தேவை. ஆண்டவரே பொழுது சாய்ந்து மரணம் எதிர் நோக்கும் வேளையில், இருள், சோதனைகள், சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகின்றேன். இருள்படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே! நீர்தான் எனக்குத்தேவை.

அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணை திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும், என்னைப் பலப்படுத்தும் அமுதாகவும், என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும், இருக்கும்படி அங்கே நான் கண்டுகொள்ளச் செய்தருளும்.

என்னோடு தங்கும் ஆண்டவரே, இறுதிவேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும், உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.

என்னோடு தங்கும் சுவாமி, தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதியற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங் கொடையை எனக்குத் தாரும் சுவாமி.

என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகிறேன். மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிக்கிறேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.
 

இயேசுநாதருடைய திருமுகத்தை நோக்கிச் செபம்


கொடிய உபாதைகளினாலும் பாடுகளினாலும், மனிதர்களில் இழிந்தவராகவும், வியாகுலம் நிறைந்த மனிதனாகவும் ஆன ஓ யேசுவே! ஒருக்கால் தெய்வீகத்தின் அழகு சௌந்தரியமும், இனிமையும் ஒளிவீசியதும், இப்போது ஓர் குஸ்டரோகியினதைப்போல ஆகியிருக்கிறதுமான உமது திருமுகத்தை ஆராதித்து வந்திருக்கிறேன். நைந்து, நொருங்கி, உருக்குலைந்த உமது திருமுகத் தோற்றத்தில், உமது அளவற்ற அன்பைக் காண்கிறேன். அதனால் நான் உம்மை நேசிக்கவும், மற்றவர்கள் உம்மை நேசிக்க செய்யவும், என் உள்ளம் ஆவலால் நிரம்பியிருக்கின்றது. ஒளி வீசும்வரை கற்கள் போன்று, உமது திருக்கண்ணில் ததும்பும் கண்ணீரை வாரிச் சேர்த்து, அவைகளினால் பாவிகளின் ஆத்துமாக்களை இரட்சிக்க விரும்புகிறேன்.

உமது ஆராதனைக்குரிய திரு முகத்தால் என் இருதயத்தை இன்பக் கடலில் ஆழ்த்தும். ஓ இயேசுவே! உமது தெய்வீக பிரதிமையை என் உள்ளத்தில் ஆழமாய்ப் பதித்தருளும். எனது இருதயம் உமது நேச அக்கினியால் பற்றிஎரியவும், அதனால் உமது ஜெகஜெரதி முகத்தை மோட்சத்தில் கண்டு ஆனந்திக்க அருகதை உள்ளவனாக ஆகவும், கிருபை புரிந்தருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். அன்றியும் எனது தற்போதைய தேவையில், எனது இருதய பேராவலைக் கையேற்றுக் கொண்டு, உம்மிடமாய் நான் தாழ்மையோடு கேட்கும் மன்றாட்டை அடியேனுக்கு தந்தருளும். சுவாமி ஆமென் யேசு.

 

நம் அலுவல்களில் வெற்றி பெற ஆண்டவருடைய திருப்பாடுகளைத் தியானித்துச் செய்யும் செபம்


உழைத்துத்தான் உண்ணவேண்டும் என்னும் உண்மையின் அடிப்படையில் நாம் அனைவரும் பலவேலைகளில் ஈடுபட்டு, அதில் நம்மை எதிர்நோக்கும் எல்லா பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் வெற்றிக்கான மிக ஆர்வமுடன் உழைத்து வருகின்றோம். ஆனால் நாம் அனைவரும் பாவிகள். இன்னும் பல பொழுதும் பாவஞ் செய்யும் பலவீனமான உள்ளமுடையவர்கள். ஆகையால் நமது கடின உழைப்பும் விடா முயற்சியும், மட்டும்போதாது. விண்ணகத் தந்தையின் வியக்கத்தகு கொடைகளையும், அருளையும் அள்ளி வரும் வாய்க்காலாக அமைந்த நம் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்துவின் திருப்பாடுகளையும், மரணத்தையும் இங்கு கொடுக்கப்பட்டபடி தியானித்து, இடைவிடாமல் செபித்து வந்தால், இறைவனின் கரம் இனி என்றும் நம்மோடு இருக்கும். வெற்றிமேல் வெற்றி வந்து நம்மைச் சேரும்.

 

செபம்1


அன்புருவான ஆண்டவரே! ஜெத்சமெனித்தோட்டத்தில் நீர் அனுபவித்த கொடிய மரண வேதனையின் பேறு பலன்களைக் கொண்டு, எங்கள் பாவங்களை மன்னித்து, நான் உம்மிடம் கேட்கும் (அவரவர் மனதின் விருப்பத்தைக் கூறவும்) இந்தக் காரியம் வெற்றிபெறச் செய்யும் ஆமென்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எமது அலுவல்கள் மேல் உமது அன்பின் ஒளியை வீசி அவை வெற்றிபெற அருள் செய்யும்.ஆமென்.

 

செபம்2


அன்பை எமக்களிக்க வந்த ஆண்டவரே! நீர் முள்முடி பூண்டு, கற்றுர்ணில் கட்டி அடிபட்டு அனுபவித்த வேதனைகளைப் பார்த்து எங்கள் பாவங்களை மன்னித்து நாங்கள் உம்மிடம் கேட்கும் (அவரவர் தேவையை நினைத்தல்) இந்தக் காரியம் வெற்றிபெற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா,எமது அலுவல்கள் மேல் உமது அன்பின் ஒளியை வீசி அவை வெற்றிபெற அருள் செய்யும். ஆமென்.
 

செபம்3


காலங்கடந்த இறைமகனே! நீர் சிலுவையின் பாரந் தாங்கமுடியாமல் மும்முறை கீழே விழுந்து அனுபவித்த வேதனைகளின் பேறுபலன்களைக் கொண்டு, எங்கள் பாவங்களை மன்னித்து நாங்கள் உம்மிடம் கேட்கும் (அவரவர் தேவையை நினைத்தல்) இந்தக் காரியம் வெற்றிபெற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா,எமது அலுவல்கள் மேல் உமது அன்பின் ஒளியை வீசி அவை வெற்றிபெற அருள் செய்யும். ஆமென்.
 

செபம்4


ஆண்டவரே! உம்திருக்கரங்களிலும, கால்களிலும் ஆணிவைத்து அறையும்போது, நீர் அனுபவித்த தாங்க முடியாத வேதனையின் பேறுபலன்களைக் கொண்டு, எங்கள் பாவங்களை மன்னித்து நாங்கள் உம்மிடம் கேட்கும் (அவரவர் தேவையை நினைத்தல்) இந்தக் காரியம் வெற்றிபெற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா,எமது அலுவல்கள் மேல் உமது அன்பின் ஒளியை வீசி அவை வெற்றிபெற அருள் செய்யும். ஆமென்.
 

செபம்5


ஆண்டவரே! நீர் எங்களுக்காக அனுபவித்த கசப்பான பாடுகளையும், கடைசித்துளிவரை சிந்திய உமது விலையில்லா திரு இரத்தத்தின் பேறுபலன்களையும் பார்த்து, எங்கள் பாவங்களை மன்னித்து நாங்கள் உம்மிடம் கேட்கும் (அவரவர் தேவையை நினைத்தல்) இந்தக் காரியம் வெற்றிபெற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எமது அலுவல்கள் மேல் உமது அன்பின் ஒளியை வீசி அவை வெற்றிபெற அருள் செய்யும். ஆமென்.

கீழ்காணும் செபத்தைச் சொல்லும் ஒவ்வொரு முறையும்
1000 ஆன்மாக்கள் உத்தரிப்பு ஸ்தலத்திலிருந்து மீட்கப்படுவர், என நமதாண்டவர் புனித ஜெர்கத்தம்மாளுக்கு வெளிப்படுத்தினார். மேலும உலகில் வாழும் பாவிகளுடைய பாவத்தினால் ஏற்பட்ட கடனைக் குறைக்கவும், இச்செபம் உதவும்.

என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வமகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு உதிரத்தை, இன்று உலகமெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலியோடு ஒன்றித்து, உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், உனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும், உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
 

தூய ஆவியை நோக்கிச் செபம்


நீ மகிழ்ச்சியுடன் வாழ். எளிதில் புனிதமடைய சுருக்கமானவழி உன்று சொல்லித்தருகின்றேன். நாள்தோறும் ஐந்து நிமிடங்கள் உன் ஐம்புலன்களை அடக்கி, அமைதியில் பின்வரும் செபத்தைச் சொல்.

தூய ஆவியே, என் ஆருயிரே! உம்மை ஆராதிக்கின்றேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்குத் திடமளித்து என்னைத் தேற்றும். நான் செய்ய வேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெரியபடுத்தினால் போதும், எனக்கு நடக்கவேண்டுமென்று நீர் விரும்புவதை, நான் அன்புடன் ஏற்று அடி பணிகின்றேன்.

இவ்வாறு நாள்தோறும் செபித்துவந்தால் உனது வாழ்வில் அமைதியும், அகமகிழ்வும் பொங்கி வழிந்தோடும். இடையூறுகள்  மத்தியில் திடம் கிடைக்கும். துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றலும், அருளுதவியும், இறுதியில் விண்ணக இன்பமும் நீ பெறுவாய். (கர்தினால் மெர்சியா)
 

நம் நாட்டுக்காக தேவதாயாருக்குச் செபம்


பேரன்பும் தயாபரமும் நிறைந்த தாயே! எமது நாட்டின் இராக்கினியும் பாதுகாவலுமானவரே! உமது பிள்ளைகளாகிய எமது இன்னல்கள் நிறைந்த இவ்வேளையில் கருணைக் கண்கொண்டு நோக்கியருள வேண்டுமென்று இரந்து மன்றாடுகின்றோம். நேசத்தாயே! யுத்த அபாயங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் எம்மைக் காப்பாற்ற, தக்க தருணங்களில் எமக்குப் பாதுகாவலாக வந்துள்ளீர்.

என்றுமே தோல்வி காணாத உம்முடைய அன்பைப் பார்த்து, சகலவிதமான வன்செயல்களிலிருந்தும் பகைமைகளிலிருந்தும், எம்மைக் காப்பாற்றியருள வேண்டுமென்று இரந்து மன்றாடுகிறோம். எமது நாட்டின் நீதியினதும் அன்பினதும் இராட்சியத்தைக் கட்டியெழுப்ப, அருள் புரிந்தருளும்.

அன்பான தாயே! உமது தாய்க்குரிய அன்பையும் காpசனையையும் நன்றாக அறிந்து கொண்ட நாம் எமது நாட்டிலுள்ள சகல மக்களையும் உமது அன்பான தாபரிப்பிலும் வழிநடத்துதலிலும் ஒப்படைக்கின்றோம். எங்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் உருவாக்க எமக்கு உதவி புரிந்தருளும். நாமனைவரும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளாக வாழ எம்மத்தியில் நிலையான சமாதானத்தைப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.
 

புனித மிக்கேல் தேவதூதருக்கு ஜெபம்

அதிதூதரான புனித மிக்கேலே! யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் துட்டதனத்திலும் அதன் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர், ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்தில் தள்ளிவிடும். - ஆமென்.
 

குடும்பச் செபம்

ஓவ்வொரு நாளும் எங்களைப் பாதுகாத்து வரும், இரக்கத்தின், அன்பின், அருளின் ஊற்றாகிய இறைவா! உமது முன்னிலையில் ஒன்றாக எங்களைக் கூட்டி, உமக்குப் புகழ் அஞ்சலி செலுத்த, உங்களுக்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்களை வழங்கி வருவதற்காய், உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் குடும்பத்தில் உமது திருக்குடும்பத்தை ஏற்படுத்தி, அதில் என்றும் நீரே தலைவராக இருந்து, எங்களை வழிநடத்தி வருவதற்காய், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

காலையும் மாலையும், இரவும் பகலும், நேற்றும் இன்றும், என்றும், உமது தூய ஆவியின் வரங்களால் எங்களை நிரப்பி, எங்களை தூய ஆவியின் தூண்டுதலின்படி, வழிநடத்தி வருவதற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உமது கரங்களில் எங்களைப் பொதித்து வைத்து, கண்ணின் மணிபோல் ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எம் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

எங்கள் அனைவரையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைக்கிறோம். நீர் எங்களை நிறைவாக ஆசீர்வதித்தருளும். இன்றுபோல் என்றும் வாழ, உமது அன்பில் நாளும் மகிழ்ச்சியுடன் வாழ, எங்களுக்கு வரம் தாரும்.

எங்களது தொழில் துறைகள், விவசாய நிலங்கள், அதில் பயிரிட்டிருக்கின்ற பயிர்வகைகள் அனைத்தையும், நீர் கண்நோக்கியருளும். எங்களது மகிழ்ச்சியில் நாளும் கலந்து கொள்ளும். எம் வீட்டு உயிரினங்கள் அனைத்தையும், உமது கரத்தால் தொட்டு ஆசீர்வதித்தருளும். எங்களது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் செய்கின்ற தொழில் நிறைவைக் காண உதவியருளும். உமது சித்தத்தை உணர்ந்து, உமக்கேற்ற குடும்பமாக வாழ அருள் புரியும். ஆமென்.
 

குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்


எங்கள் அன்பு இயேசுவே! நிறைவாழ்வை நோக்கிப் பயணம் செய்யும் நாங்கள், எங்கள் குடும்பத்தில் அன்புறவை வளர்த்து, இதயங்கள் இணைகின்ற இனிய குடும்பமாக வாழ, எங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நீரே எங்கள் குடும்பத்தின் தலைவராகவும், உற்ற நண்பராகவும் இருந்து, எங்களுக்கு வாழ்வளித்து வழிநடத்தி வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி கூறி உம்மைப் போற்றுகின்றோம். திருக் குடும்பக் காவலரே, எங்கள் வாழ்வின் இன்ப துன்ப வேளைகளில், உம்மை விட்டு விலகாமல், உம்மையே உறுதியாய் பற்றிக் கொண்டு வாழ்ந்திட, எங்களுக்கு அருள் தாரும்.

நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றிக் கொள்வதால் வளர்ச்சி காணவும், ஒருவரை ஒருவர் மதிப்பதால் நிறைவு பெறவும், பரிவுடன் செவிமடுப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் விழைகின்றோம். மனம் திறந்த உரையாடல் வழியாக, முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், மன்னித்து வாழ்வதில் மகிழ்ச்சி பெறவும், இணைந்து எங்கள் வாழ்வைத் திட்டமிடுவதால், உயர்வடையவும் ஆசிக்கின்றோம்.

எங்கள் குடும்ப வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைச் சந்திக்க, உமது ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று உறுதியாக நம்புகின்றோம். நாங்கள் சேர்ந்து செபிப்பதில் உமது பிரசன்னத்தை உணரவும், ஒருவர் ஒருவரிடம் உமது சாயலைக் காணவும், எங்கள் தியாக வாழ்வில் உமது அன்பை வெளிப்படுத்தவும், எங்களுக்கு அருள் புரியும்.

எங்கள் பெற்றோர்களுக்கு, தங்கள் அர்ப்பணத்தின் பயனாக நிறைவைத் தந்தருளும். குழுந்தைகளும், சிறுவர்களும், தேவையான அன்பும் அரவணைப்பும் பெற்று, பண்பும் அறிவும் கொண்டவர்களாக வளர, அருள் புரியும். இளைஞர்கள், இளம்பெண்கள், பயனுள்ள குறிக்கோள்களை வளர்த்து, தங்கள் ஆற்றலை நெறிப்படுத்தத் துணைபுரியும். எங்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து, இவ்வுலகை விட்டுப்பிரிந்த எங்கள் உறவினர்களுக்கு நிறை வாழ்வை அளித்தருளும்.

பல்வேறு இன்னல்களால் குடும்பத்தில் தவிக்கின்ற குடும்பங்களை, உமது பராமரிப்பிற்குக் கையளிக்கின்றோம். நோயுற்றோர், முதியோர், வறுமையில் வாடுவோர், கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என வாக்களிக்கின்றோம்.

சமூகநலனில் ஆர்வம் கொண்ட நல்லுள்ளங்கள், எங்கள் குடும்பத்தில் உருவாக எங்களை அர்ச்சித்தருளும். அன்பு, உண்மை, நீதி, சமாதானம், ஆகிய மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, உமது இறையாட்சிக்கு நாங்கள் சாட்சிகளாக வாழ அருள் புரியும். ஆமென்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!