Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயத்தின் செபம்

                                                                

     

                                                             இதய ஆண்டவரின் வாக்குறுதிகள்

திரு இதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியா வழியாக தம் பக்தர்களுக்கு 12 சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார்

1.  அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. 
அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. 
எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.
4.
வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத  
  
அடைக்கலமாயிருப்போம்.
5. 
அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.
6.
நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக
  இருக்கும்.
7.
புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.
8.
பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9.
எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை
  ஆசீர்வதிப்போம்.
10.
கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.
11.
திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி
   பொறிக்கப்படும்.
12.
தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை
   உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம்
   அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ
   இறக்க மாட்டார்கள்
 

திரு இதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்

         கிறிஸ்தவக் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்க உமக்குள்ள ஆவலைப் புனித மார்கரீத்து மரியம்மாள் வழியாகத் தெரிவித்த இயேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மட்டில் உமக்குள்ள சர்வ அதிகாரத்தை பிரத்தியட்சமாய் அங்கீகரிக்கும்படி இதோ இன்று இங்கே கூயிருக்கிறோம்.

       இன்று முதல் உமது சீவியத்தைப் பின்பற்றி நடக்க ஆசிக்கிறோம். நாங்கள் யாவரும் சமாதானமாய் இணைந்து வாழ்வதற்கு அவசியமான புண்ணியங்கள் இந்தக் குடும்பத்தில் நாளுக்கு நாள் விருத்தியடைய வேண்டுமென்று விரும்புகிறோம். நீர்தாமே ஜெயித்து விலக்கியிருககும் உலகப் பற்றுதல்களையெல்லாம் எங்களை விட்டு அகற்றிப்போட ஆசிக்கிறோம். கபடற்ற எங்கள் விசுவாசத்தின் காரணத்தால் எங்கள் மத்தியில் அரசாள்வீராக. முழு இருதயத்தோடு உம்மை நேசிப்பதால் எங்கள் இருதயங்களின் அரசராக வீற்றிருப்பீராக. திவ்விய நற்கருணையில் உம்மை அடிக்கடி உட்கொள்வதினால் எங்கள் சிநேகத்தை அதிகரித்தருளும்.

        , இயேசுவின் திரு இதயமே! எங்கள் மத்தியில் உமது சிம்மாசனத்தை ஸ்தாபித்து ஆத்தும சரீர, விசேஷமாய் நாங்கள் செய்கிற முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். சகல கவலை விசாரங்களையும் உங்களிடமிருந்து நீக்கியருளும். எங்கள் இன்பங்களை அர்ச்சித்து, துன்பங்களினின்று எங்களை இரட்சித்தருளும்.

        எங்களில் யாராகிலும் உம்மை எப்போதாவது மனநோகப் பண்ணுவோமேயானால், தூய திருஇருதயமே மனஸ்தாபப்படும் பாவியின் மட்டில் நீர் இரக்கமும் தயையும் உள்ளவர் என்பதை நினைவு கூர்ந்தருளும். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியும்படி எங்களுக்குள் மரணம் நேரிடும்போது மரிக்கிறவர்களும், உயிரோடு இருப்பவர்களும் எல்லாரும் உமது திருச்சித்தத்திற்கு அமைந்தவர்களாய் நடப்போம். கடைசியாய் ஒருநாள் நாங்கள் எல்லாரும் மோட்ச இராச்சியத்தில் ஒன்றுகூடி உமது மகிமை வரப்பிரசாதங்களை சதாகாலமும் ஸ்துதித்துத் தோத்தரிக்கும் பாக் கியம் கிடைக்குமென்ற நம்பிக்கையால் ஆறுதலடைவோம். இந்த எங்கள் காணிக்கையைப் புனித மரியாயின் மாசற்ற இருதயமும், மகிமை நிறைந்த பிதாப் பிதாவாகிய புனித சூசையப்பரும் உம்மிடம் செலுத்தி, எங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை மறவாதிருக்கும்படி எங்களுக்கு உதவி செய்வீர்களாக.

எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திருஇருதயம் ஸ்துதிக்கப்படுவதாக.
இறைவா! இறந்து போன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல் உம் அடியார்கள் அனைவருக்கும் பயன்படுவதாக. அனைத்துப் பாவங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, உம் மீட்பில் அவர்கள் பங்குபெற அருள்வீராக!

இந்த வழிபாட்டிலே பங்குகொள்ள இயலாமல் வேற்றிடங்களில் இருக்கும் உறவினர், உபகாரிகள், நண்பர்களுக்காகவும் வேண்டுகிறோம். இறைவா, இவர்களையெல்லாம் உமது அன்பிலே காத்து, அருளினால் நிறைத்து வழிநடத்தியருளும். என்றென்றும் வாழ்த்து ஆட்சி செய்கின்றவர் நீரே - ஆமென்.

 

                                              வேண்டுதல்

ஆயிரக்கணக்கான மற்ற குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது உரிமையாகவும், மனுமக்களால் தமக்கு நேரிடும் சிநேகத்துக்கு நன்றிகெட்டதத்தனத்துக்குக் பரிகாரமான வாசஸ்தலமாகவும் தெரிந்தெடுத்துக்கொள்ள சித்தமான இயேசுவின் திரு இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக.

ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும் படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம். எங்களுக்கு நேரிடும் துன்ப துரிதங்கள்
, இன்ப சந்தோஷங்கள்,
மனக்கவலை சகலத்திலும் நீர் எங்களோடிருப்பதை பற்றி மனமகிழிகிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளி வர நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உமது திருஇருதய சோபனத்ததை எங்களுக்கும் விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறீரா கையால், எங்கள் ஆத்துமம் உம்மை நாடித் தேடுகின்றது. ஈட்டியால் குத்தி திறக்பப்பட்ட உமது விலாவினின்று ஓடி வரும் சீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப்போம்.

முடிவில்லாத சீவியத்திற்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழு வதும் கையளிக்கிறோம். ஓ! இயேசுவின் திரு இருதயமே எங்களைவிட்டு ஒருபோதும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்டிபச் செய்யவும், இதுமுதற்கொண்டு உழைத்து வருவோம். உலகத்தைப் பரிசுத்தமாக்கும்படி அதைச் சுட்டெரிக்கும் தேவஅக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லிடம் கொடுத்த வீடுபோல் இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாய் இருப்பதாக! உமது திருஇருதயத்தோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்தருளும். பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக்கிடைப்பார்களாக. அத்தியந்த நேசமுள்ள இரட்சகரே! எகிப்து தேசத்திற்கு நீர் சிறு குழந்தையாய்ப் போனபோது உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம்போலவென்கிலும் இவ்வீடு இருக்கும்படிச் செய்தருளும்.


ஓ! இயேசுவே எழுந்தருளி வாரும். நசரேத்தூரில் உமது தருத்தாயானவள் எவ்விதமாய் நேசிக்கப்பட்டாளோ, அவ்விதமே இங்கேயும் அவளை உருக்கமாய் நேசித்து வருகிறோம். மிகவும் பிரமாணிக்கமாயுள்ள அததம சிநேகிதரே, எங்கள் கஸ்தி துன்பவேளையில் நீர் இங்கே இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாயிருந்திருக்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லையாதலால், இப்போதே எழுந்தருளிவாரும். எங்களோடே வாசஞ்செய்ய கிருபைகூர்ந்தருளும். ஏனெனில் மாயஉலகம் எங்களை மயக்கி, உம்மை மறந்து போகும்படி ஏவித்தூண்டுகிறது. நாங்களோவெனில், உம்மோடு என்றென்றைக்கும், ஐக்கியமாயிருக்க ஆசையாய் இருக்கிறோம். எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் சஞ்சரித்த காலத்தில் உரைத்ததுபோல், இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன் என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக! ஆண்டவரே இதை உமது வாசஸ்தலம் ஆக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி ஸ்துதித்து எப்போதைக்கும் உம்மோடு உமக்குப் பிரியமுள்ளவர்களாக சீவிக்கும்படி உதவி செய்தருளும்.

, இயேசுவே! ஜெயசீலரான் ஆண்டவரே! உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் சங்கித்து ஸ்துதிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. - ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே
, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!
இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!
இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!

புனித மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித மார்கரீத்து மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

 

                                    அனுதின வேண்டுதல்

, இயேசுவின் திரு இதயமே! உமது அரசு வருக! அனைத்து இன மக்களுக்கும் நீர் அரசாக இருப்பீராக!  உமக்கு பிறமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரம் அல்ல, ஊதாரியைப்போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கம் நீர் உத்தம அரசாராய் இருப்பீராக! அமைதியின் அரசியாகிய புனித மரியாவின் மாசற்ற இதயத்தின்  வழியாக, எங்கள் நாட்டில் உமது அரசை நிறுவீராக! எங்கள் குடும்பங்களினுள் நுழைந்து, அவற்றை உமக்கே சொந்தமாக்கியருளும். இவ்விதம், உலகின் கோடிமுனை தொடங்கி மறு கோடிமுனை மட்டும் ''நம் அரசாரகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயம் வாழ்த்தப்படுவதாக! என்றென்றைக்கும் அத்திரு இதயம் புகழப்படுவதாக!'' என்று ஒரே குரலொலியாய் இருப்பதாக! -ஆமென்.
 

இயேசுவின் திரு இதயத்தை நோக்கி மன செபங்கள்

இயேசுவின் திரு இதய அன்பே, உமது அன்பு இதயத்தில் பற்றியெறிய செய்தருளும்.
இயேசுவின் திரு இதயத் திடமே, என்னை திடப்படுத்தியருளும்
இயேசுவின் திரு இதய இரக்கமே, எனக்கு மன்னிப்பளித்தருளும்
இயேசுவின் திரு இதயப் பொருமையை, என் குறைகளை பொருத்தருளும்,
இயேசுவின் திரு இதய அரசே, என்னை உம் வசப்படுத்தியருளும்
இயேசுவின் திரு இதய சித்தமே, என்னை ஆட்கொள்ளும்
இயேசுவின் திரு இதயப் பற்றுதலே, என் இதயத்தைத் தகனப்பலியாக்கியருளும்
அமல உற்பவியான கன்னிமரியே, இயேசுவின் திரு இதயத்திடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

 

இயேசு நாதருடைய திரு இதயத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம்

(புனித மார்கரீத்து மரியா)

இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்
(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.

இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே.  ! தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.

எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம் மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.
 

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்:

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.

தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற் றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்
.
 

 இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்:

எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிக ளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தி யுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமா யிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்து என்றென்றைக்கும் விலக்கிவிட வும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யும் துணிகிறோம்.

ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச் செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.

எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழு வதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் - ஆமென்.
 

கழுவாய் வேண்டுதல் (திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இயற்றியது)

மனுக்குலத்தின்மட்டில் உமக்குள்ள அணைகடந்த அன்புக்குக் கைம்மாறாக, மிகுந்த மறதியையும் அசட்டைத்தனத்தையும் நிந்தையையும் பெறுகிற இனிய இயேசுவே! உமது அன்பு இதயம் எல்லாவிடங்களிலும் அனுபவிக்கிற மறதி, நிந்தைகளுக்கெல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய் புரிய ஆவல் கொண்டு, உமது பீடத்தின் முன்பாக இதோ, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.

அத்தகைய பெரிய அவமானங்களுக்கு, ஐயையோ, நாங்களும் உடந்தையாய் இருந் திருக்கிறோம் என்பதை உணர்ந்து, எங்கள் முழு உள்ளத்தோடு அவைகளை வெறுத்து, எங்களை மன்னிக்கும்படி உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்ல, மீட்புப் பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய், தங்கள் பிடிவாதம் பற்றுறுதிக்குறைவை முன்னிட்டு, மேய்ப்பரும் வழிகாட்டியுமான உம்மைப் பின்பற்ற மாட்டோம். என்பவர்களின் பாவங்களுக்காகவும், திரு முழுக்கு வாக்குறுதிகளை மீறி, உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை உதறிவிட்ட வர்களின் பாவங்களுக்காகவும் மனதார கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.

உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும் கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்ற உடையாலும், நடத்தையாலும் கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கி வலையிலிட்ட அசுத்த துர்மாதிரி கைகளுக்காகவும், ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி மீறியதற்காகவும், உமக்கும் உம் புனிதர்களுக்கும் விரோதமாகச் சொன்ன வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும் கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். உலகில் உம் பதிலாளியான திருத்தந்தைக்கும், உம்முடைய குருக்களுக்கும் செய்யும் அவமானங்களுக்காகவும், உம் அன்பின் திருவருட் சாதனத்தையே மனம்பொருந்தி அலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால் பங்கப்படுத்தியதற்காகவும், இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின் உரிமைகளையும் போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.

, இறைவனாகிய இயேசுவே, இத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள் இரத்தத்தினாலே தூய்மைப்படுத்த இயலும் என்றால், எவ்வளவோ பாவிகளை! உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்ககெல்லாம் கழுவாயாக, நீர் சிலுவையில் உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து நாள்தோறும் எங்கள் பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.

உம்முடைய கன்னித்தாயும், புனிதர்கள் அனைவரும், பக்தியுள்ள எல்லா பற்றுறுதி யாளர்களும், செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்து, அவற்றை ஒப்புக் கொடுக்கிறோம். உமது அணை கடந்த அன்பை அலட்சியம் செய்ததற்காகவும், கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்த பாவங்களுக்காகவும் உமது அருள் துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன் வாக்களிக்கிறோம். இனிமேலாக, நாங்கள் பற்றுறுதியின் தளராமல் தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்து, நற்செய்திக் கட்டளைகளையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் அனுசரித்து வருவோம். பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால் ஆனமட்டும் தடுப்போம். பலர் உம்மைப் பின் பற்றும்படி எங்களால் இயன்ற அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.

, அன்பு இயேசுவே! கழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற புனித கன்னி மரியாவின் வழியாக, நாங்கள் செய்யும் கழுவாய் முயற்சி எனும் முழுமனக் காணிக்கையை ஏற்றருளும். நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்கு நாங்கள் எல்லோருக்கும் ஒரு நாள் வந்து சேரும்படி, எங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும் வரம் ஈந்து, எங்கள் கடமையிலும் உமக்குப் புரிய வேண்டிய பணியிலும் சாவு மட்டும் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும் - ஆமென்.
 

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:

ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத் தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை
; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார் பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர் களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக்கடவதாக.

ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ண மான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப்பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய்
, "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
 

திரு இருதய மன்றாட்டுமாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்

விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே,
-
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே,
 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே,
 
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
-
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, -
 
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே,
-
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, -
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்
 

இயேசுவின் திரு இருதயச் செபமாலை:

கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.

, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!