Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஸ்கொலாஸ்டிகா ✠ (St. Scholastica)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 10
 
  ✠ புனிதர் ஸ்கொலாஸ்டிகா ✠ (St. Scholastica)

*கன்னியர் மற்றும் சபை நிறுவனர் :
(Virgin and Religious Founder)

*பிறப்பு : கி.பி. 480
நூர்சியா, ஊம்ப்ரியா, இத்தாலி (Nursia, Umbria, Italy)

*இறப்பு : ஃபெப்ரவரி 10, 547
மோண்ட்டே கேசினோ, இத்தாலி (Monte Cassino)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)

*பாதுகாவல் :
வலிப்பு நோயுள்ள குழந்தைகள் (Convulsive Children), பள்ளிகள், பரிட்சைகள், மழை, இடியிலிருந்து (Invoked Against Storms and Rain), அருட்கன்னியர் (Nuns), ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள லி மன்ஸ் (Le Mans in France) புத்தகங்கள், வாசித்தல்

புனிதர் ஸ்கொலாஸ்டிகா, ரோமன் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதராவார். ஒன்பதாம் நூற்றாண்டின் பாரம்பரியத்தின்படி, இவரும் "நூர்சியா நகரின் புனிதர் பெனடிக்ட்டும்" (St. Benedict of Nursia) இரட்டைக் குழந்தைகளாக பிறந்த சகோதரர்கள் ஆவர்.

இத்தாலி நாட்டின் நூர்சியா, ஊம்ப்ரியா (Nursia, Umbria) என்னுமிடத்தில் வசதியான பெற்றோருக்கு 480ம் ஆண்டு பிறந்த ஸ்கொலாஸ்டிகாவின் தந்தையார் பெயர், "ஆன்சியஸ் யூப்ரோபியஸ்" (Anicius Eupropius) ஆகும். தாயார், "கிளாடியா" (Claudia Abondantia Reguardati) ஆவார். ஸ்கொலாஸ்டிகா சிறு வயதிலேயே ஆலயத்தில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தார். அவருடைய சகோதரர் பெனடிக்ட் உயர் கல்விக்காக ரோம் புறப்படும்வரை தமையனும் தங்கையும் ஒன்றாகவே வளர்ந்தனர்.

அக்காலத்தில், ஸ்கொலாஸ்டிகாவின் வர்க்கமுள்ள ஒரு ரோம இளம் பெண்ணானவள் தமது தந்தையின் வீட்டில் தனது திருமணம் ஆகும்வரை இருக்கலாம்; அல்லது, அவள் துறவறம் பெற்றுச் செல்லும் வரை இருக்கலாம். ஆனால் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாயும் மரபு வழிப்படி சொத்துரிமை உள்ளவர்களாயும் இருந்தார்கள். சிலபல தருணங்களில் ஒத்தவயது பெண்கள் ஏதேனும் ஒருவரது வீட்டில் கூடி மத சமூகங்களை உருவாக்கினர். அதன்படியே ஸ்கொலாஸ்டிகாவின் வீட்டிலும் சில மத பெண்கள் தங்கியிருந்தனர். ஸ்கொலாஸ்டிகா தமது இளம் வயதிலேயே ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்ணாகையால், தந்தையின் மரணம் வரை தமது வீட்டிலேயே இருந்தார். தந்தையின் மரணத்தின் பின்னர், அவரும், அவருடன் இருந்த மத பெண்களும், அருகாமையிலுள்ள பெனடிக்டைன் துறவு மடத்திற்கு சென்றனர்.

ஸ்கொலாஸ்டிகா வருடத்தில் ஒருதடவை தமது தமையனார் பெனடிக்ட் தங்கியிருந்த மடத்தினருகே இருந்த ஒரு இடத்திற்கு சென்று அவரை சந்திப்பது வழக்கம். இருவரும் ஒன்றாக செபிப்பதிலும், வழிபடுவதிலும், புனித நூல்கள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதிலும் அந்த நாளை செலவிட்டனர்.

ஒருமுறை, சகோதரர்கள் இருவரும் அதேபோல் பெனடிக்டின் மடத்தினருகே உள்ள ஒரு வீட்டில் சந்தித்து வழிபாட்டிலும் செப காரியங்களிலும் ஈடுபட்டிருந்தனர். அன்றிரவு இரவு உணவின் பின்னர் பெனடிக்ட் தமது மடத்திற்கு புறப்பட தயாரானார். அவரது சகோதரியான ஸ்கொலாஸ்டிகா தமது மரண நாள் நெருங்குவதை உணர்ந்து, பெனடிக்ட் செல்வதை தடுத்தார். மாலைவரை தம்முடன் தங்கியிருந்து ஆராதனை மற்றும் சம்பாஷிப்பதில் ஈடுபட கேட்டுக்கொண்டார். ஆனால் பெனடிக்டோ "தாம் செல்வது தவிர்க்க இயலாதது" என்றார்.

தமது வேண்டுகோளை தமையன் மறுத்ததும், உடனே கண்களை மூடி, கைகளை இணைத்து கூப்பியபடி செபம் செய்ய ஆரம்பித்தார் ஸ்கொலாஸ்டிகா. அவர் செபிக்கத் தொடங்கியபோது, வானம் தெளிவாக இருந்தது. ஆனால், அவர் செபித்து முடித்ததும், உடனே அவர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியே ஒரு காட்டுப் புயல் சுழற்றியடிக்க தொடங்கியது. திடீரென இடி மின்னலுடன், பெருமளவில் மழை பெய்தது, அதுமட்டுமல்ல பெனடிக்ட், அல்லது அவருடன் இருந்த அவரது துறவிகளால், அங்கிருந்து வெளியேற இயலவில்லை.

"ஆண்டவர் உன்னை மன்னிப்பாராக; நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்ட சகோதரனிடம், "இன்றிரவு என்னுடன் தங்குமாறு நான் உன்னை வேண்டினேன், நீ கேட்க மறுத்துவிட்டாய்; நான் என் கடவுளிடம் வேண்டினேன்; செவிமடுத்த அவர், என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார்; ஆகவே, உன்னால் இயன்றால் நீ இப்போது என்னை தனியே விட்டுவிட்டு போகலாம்; நீ தாராளமாக உன்னுடைய மடத்திற்கு போ." என்று பதிலளித்தார். பெனடிக்டால் தமது மடத்திற்கு திரும்ப இயலவில்லை. அவர்களிருவரும் அன்று இரவு முழுதும் செபிப்பதிலும், சம்பாஷிப்பதிலும் கழித்தனர்.

மூன்று நாட்களின் பிறகு, தமது சகோதரியின் ஆன்மா, ஒளிரும் வெண்ணிற புறா வடிவில் உயரே பரலோகம் பறந்து செல்வதை பெனடிக்ட் கண்டார். ஸ்கொலாஸ்டிகாவின் உடலை தமது துறவு மடத்திற்கு எடுத்துவந்த பெனடிக்ட், தமக்கென தயாரித்து வைத்திருந்த கல்லறையில் தங்கையின் உடலை அடக்கம் செய்தார்.

ஸ்கொலாஸ்டிகா, பெண்களுக்கான பெனெடிக்டைன் துறவுமட கிளை (Women's Branch of Benedictine Monasticism) ஒன்றின் நிறுவனர் ஆவார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா