Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் பாஸ்கால் ✠(St. Paschal I)
   
நினைவுத் திருநாள் : (பெப்ரவரி / Fev- 11)
✠ புனிதர் முதலாம் பாஸ்கால் ✠(St. Paschal I)

 98ம் திருத்தந்தை :
(98th Pope)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

பிறப்பு : கி.பி. 775
ரோம், திருத்தந்தை மாநிலம்
(Rome, Papal States)

இறப்பு : ஃபெப்ரவரி 11, 824
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

நினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 11

புனிதர் முதலாம் பாஸ்கால், கி.பி. 817ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாள் முதல், கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள்வரை, கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்த இவர் கத்தோலிக்க திருச்சபையின் 98ம் திருத்தந்தை ஆவார். பாஸ்கால் என்னும் பெயர் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன். ஆகிய மொழிகளில் "உயிர்த்தெழுதல் சார்ந்த" என்று பொருள்படும்.

ஆரம்ப வாழ்க்கை :
"பாஸ்கால் டேய் மஸ்ஸிமி" (Pasquale dei Massimi) எனும் இயற்பெயர் கொண்ட பாஸ்கால், பிறப்பினால் ரோம் நகரைச் சார்ந்தவர். அவருடைய தந்தை பெயர் "போனோசஸ்" (Bonosus). தாயார் "எபிஸ்கோபா தியோடரா" (Episcopa Theodora) ஆவார். இளமைப் பருவத்திலேயே அவர் ரோம குருகுலத்தில் சேர்ந்தார். இலாத்தரன் அரண்மனையில் இருந்த கல்விக்கூடத்தில் திருப்பணியிலும் விவிலியப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். துணைத் திருத்தொண்டராக துறவு வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கத்தோலிக்க குருவாகவும், திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo III) காலத்தில் "புனித ஸ்டீஃபன் துறவு மடத்தின்" (Monastery of St. Stephen of the Abyssinians) மடாதிபதியாகவும் பணியாற்றினார். அப்போது ரோமுக்கு திருப்பயணமாக வந்த மக்களுக்கு அவர் பணிபுரிந்தார். திருத்தந்தை "மூன்றாம் லியோ" (Pope Leo III) இவரை கர்தினாலாக (Cardinal of Santa Prassede) உயர்த்தினார்.

திருத்தந்தையாக நியமனம் :
திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் (Stephen IV) காலமான (ஜனவரி 24, 817) உடனேயே பாஸ்கால் திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் (கி.பி. 817 ஜனவரி 25) அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்; திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.

பேரரசரோடு உறவு :
பேரரசர் லூயிஸுடன் (Emperor Louis the Pious) தமக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதைக் காட்டும் வகையில் திருத்தந்தை பாஸ்கால் பல தூதுவர்களை அனுப்பினார். பேரரசர் லூயிஸும் கி.பி. 817ல் "லூயிஸ் ஒப்பந்தம்" என்னும் ஆவணத்தை எழுதி, திருத்தந்தைக்கு அனுப்பி, திருத்தந்தை தம் ஆட்சிப்பீடத்தை முறையாக ஏற்றுக்கொண்டார் என்று அங்கீகாரம் வழங்கினார். அந்த ஆவணம் இன்றும் உள்ளது.

லூயிஸ் மகன் "லோத்தேர்" (Lothair) திருமணம் செய்துகொண்டபோது, திருத்தந்தை தூதுவர்கள் வழியாக அவருக்குப் பரிசுகள் அனுப்பினார். கி.பி. 823ம் ஆண்டு வசந்த காலத்தில் "முதலாம் லோத்தேர்" (Lothair I) ரோமுக்குச் சென்றார். அங்கு ஏப்ரல் மாதம், 5ம் நாள் திருத்தந்தை பாஸ்கால், முதலாம் லோத்தேரை இத்தாலியின் அரசனாக அறிவித்து, ஆடம்பரமாக அவருக்கு முடிசூட்டினார்.

சுருப வணக்கம் முறையானது என்னும் போதனை :
பாஸ்காலின் ஆட்சி காலத்தில், ரோம் நகரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. "பைசன்டைன் பேரரசில்" (Byzantine Empire) சொரூப வணக்கத்தை எதிர்ப்போரை எதிர்த்ததன் காரணத்தாலும், "மொசைக் கலைஞர்களை" (Mosaic artists) ரோம் வரவழைத்து தேவாலயங்களை அலங்கரிக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த ""பைசன்டைன் பேரரசன் இரண்டாம் மைக்கேல் (Byzantine Emperor Michael II), இவற்றை நிறுத்த முயற்சிக்குமாறு ஃப்ரான்கிஷ் மன்னன் லூயிசுக்கு (Frankish King Louis the Pious) கடிதம் எழுதினான்.

இதன் காரணத்தால், துன்புறுத்தப்பட்ட துறவியர் நாடுகடத்தப்பட்டனர். லியோவால் சட்டமுறைக்கு எதிராக காண்ஸ்டாண்டிநோபுளின் மறை முதுவராக நியமிக்கப்பட்ட தியோடோசியுஸ் என்பவர் அரசனின் ஆணைக்குப் பணிந்தார். ஆனால் தியொடோர் என்னும் தலைமைத் துறவி (Theodore of Studium) சுருப வணக்கம் முறையானதே என்று வலியுறுத்திக் கூறினார்.

இதை விரும்பாத மன்னன் லியோ தியொடோரை நாடு கடத்தி கொடுமைப்படுத்தினார். அதே சமயத்தில் தியோடோசியுசும் திருத்தந்தைக்குத் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் திருத்தந்தை அவருடைய போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தியொடோருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் துன்பங்களுக்கு நடுவிலும் உண்மையான கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று ஊக்குவித்தார்.

நாடுகடத்தப்பட்ட துறவியருக்கு ஆதரவு :
சுருப வணக்கம் முறையானதே என்று கூறிய பல துறவியரை மன்னன் லியோ கிரேக்க நாட்டிலிருந்து துரத்திவிட்டார். அத்துறவியரைத் திருத்தந்தை பாஸ்கால் மனமுவந்து வரவேற்றார். ரோமில் புதிதாக நிறுவப்பட்ட புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, புனிதர்கள் செர்ஜியுஸ் மற்று பாக்குஸ் ஆகிய துறவியர் இல்லங்களில் அத்துறவியரை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டார்.

ஆலயங்களைச் சீரமைத்தல் :
திருத்தந்தை முதலாம் பாஸ்கால் பல ஆலயங்களைப் புதுப்பித்துச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக, "தூய பிராஸ்செட்" (Santa Prassede), "டிரஸ்டேவரிலுள்ள தூய செசிலியா" (Santa Cecilia in Trastevere), "டொமினிக்காவிலுள்ள தூய மரியா" (Santa Maria in Domnica) ஆகிய ஆலயங்களை முற்றிலும் புதுப்பித்துக் கட்டியதைக் குறிப்பிடலாம்.

மரணம் :
ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள், திருத்தந்தை முதலாம் பாஸ்கால் காலமானார். அவருடைய உடல் புனித பிராக்சேதிஸ் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை முதலாம் பாஸ்காலின் நினைவுத் திருவிழா, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா