Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

தூய ஒனேசிம் ✠ (St. Onesimus)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 16
 
தூய ஒனேசிம் ✠ (St. Onesimus)

 

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)

பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை சட்டம் ஆகும்.

ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.

பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.

சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)

திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர் குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.

தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.



மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீர் அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். (லூக் 23: 43)

வாழ்க்கை வரலாறு

ஒனேசிம், பிரிகியாவைச் சேர்ந்தவர். இவர் கொலோசை நகரில் இருந்த பெரும் செல்வந்தராகிய பிலமோனிடம் அடிமையாய் வேலை பார்த்து வந்தார். ஒருசில காரணங்களால் ஒனேசிம் பிலமோனிடமிருந்து தப்பியோடி உரோமைச் சிறையில் இருந்த பவுலிடம் தஞ்சம் புகுந்தார். அங்கே சிலகாலம் அவரோடு தங்கி, அவருக்கு உதவிகள் புரிந்து வந்தார். இதற்கிடையில் பவுல், ஒனேசிம் தன்னோடு இருப்பது நல்லதல்ல, அவர் அவருடைய தலைவராகிய பிலமோனோடு இருப்பதே நல்லது என்று உணர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "ஒனேசிமை மன்னித்து, அவரை அடிமையாக அல்ல, அன்புச் சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் ஒனேசிமை பிலமோனிடம் அனுப்பி வைக்க, அவர் அவருடைய குற்றங்களை மன்னித்து தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் ஒனேசிம், பிலமோனிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டுமாக பவுலோடு இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு திமொத்தேயுவுக்குப் பின், எபேசு நகரின் ஆயராக உயர்ந்தார். அங்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு எடுத்துரைத்தார். இயல்பிலே சிறந்த பேச்சாளராய் விளங்கிய இவர், மறையுரைகளை வல்லமையோடு ஆற்றினார். இந்த நேரத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. இதில் இவர் 18 ஆண்டுகள் சித்ரவதையை அனுபவித்தார். அத்தகைய தருணங்களில் எல்லாம் இவர் ஆண்டவர் இயேசுவின் மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். கி.பி. 95 ஆம் ஆண்டு, வதைப்போர் இவருடைய கால்களையும் தொடையையும் முறித்து இவரைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு ஒனேசிம் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஒனேசிமின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


மனமாற்றம்


ஒனேசிமின் வாழ்க்கை வரலாற்றை ஒருகணம் நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக தன்னுடைய தலைவரிடமிருந்து தப்பியோடி, பின்னர் தன்னுடைய தவற்றை உணர்ந்து தலைவரிடம் சென்று, மன்னிப்புக் கேட்டு, அவரிடமே பணியாற்றுகின்றார். ஓனேசிமின் இந்த மனமாற்றம் பின்னாளில் அவரை ஒரு பெரிய புனிதராக மாற்றுகின்றது. பாவம் அல்லது தவறு செய்யும் எவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனமாறவேண்டும். அப்படி மனம்மாறுகின்றபோது அவருடைய வாழ்க்கை எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதிக்கின்ற முதல் போதனையே மனமாற்றம்தான். "காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது (மாற் 1:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறுவதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த இடத்தில், நம்முடைய இந்திய நாட்டில் மிகப் பெரிய ஞானியை வாழ்ந்து மறைந்த சாது வாஸ்வானி அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும். ஒரு சமயம் சாது வாஸ்வானி நடத்தி வந்த மீரா பள்ளிக்கூடத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து அங்கிருந்த பொருள்களைத் திருடிக்கொண்டு ஓட முயன்றான். ஆனால், துரதிஸ்டவசமாக அவன் அங்கிருந்த காவலரிடம் மாட்டிக்கொள்ள, அவர் திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அந்தத் திருடனுக்கு கடுந்தண்டனை கொடுத்தார். இதற்கிடையில் செய்தி அறிந்த சாது வாஸ்வானி நீதிபதியிடம் சென்று, "ஐயா! அவன் திருடன் அல்ல, என் சகோதரன்தான். அவன் என்னுடைய பள்ளிக்கூடத்திலிருந்து எதையும் திருடவில்லை, அவனை விட்டுவிடுங்கள்" என்றார். மிகப் பெரிய ஞானி இவர். நிச்சயமாக இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து, நீதிபதி அவனை விடுதலை செய்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த திருடன் சாது வாஸ்வானியிடம் வந்து, "நான் செய்தது மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டீர்களே, இனிமேலும் நான் திருடமாட்டேன், மனமாறி நல்ல மனிதனாக வாழ்வேன்" என்று சூளுரைத்து அதன்படி வாழ முயன்றான்.

மிகப்பெரிய திருடனை சாது வாஸ்வானி மன்னித்த உடன், மனம்மாறி புதிய மனிதனாக வாழ முற்பட்டான். இறைவனும் நம் பாவங்களை மன்னித்துவிட்டார். ஆகவே, நாம் மனம்மாறி புதிய மனிதனாக வாழ்வதுதான் சிறப்பானது.

ஆகவே, தூய ஒனேசிமின் விழாவை கொண்டாடும் நாம் மனம்மாறி புதிய மனிதர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா