Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மிக்வெல் கோர்டேரோ✠(St. Miguel Cordeiro)
   
நினைவுத் திருநாள் : (பிப்ரவரி/ Fev- 09)
✠ புனிதர் மிக்வெல் கோர்டேரோ✠(St. Miguel Cordeiro)

என் அருள் உனக்குப் போதும்:வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் (2 கோரி 12:9)
ஈக்குவேடார் நாட்டின் முதல் புனிதரான மிக்வெல், குவன்கா எனும் இடத்தில் 1854, நவம்பர் ஏழாம் தேதி பிறந்தார். பிரான்சிஸ்கோ என்பது இவரின் இயற்பெயராகும். சமூகத்தில் தலைநிமிர்ந்து நின்ற பெற்றோருக்குப் பிறந்த இவர் ஐந்து வயது வரை நிற்க முடியாதபடி ஊனமாக இருந்தார். மெல்ல மெல்ல கால் தாங்கி நடக்க ஆரம்பித்தார் .புனித தெலசாலின்,கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையினர் நடத்திய பள்ளியில் 1864 ஆம் ஆண்டு சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் . இச்சபையினர் அப்போதுதான் ஈக்குவேடார் நாட்டிற்கு வந்து பணியைத் தொடங்கி இருந்தார்கள்.
படிப்பில் கவனம் செலுத்தியதுடன் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ்ந்தார் .தமது 13-ஆம் வயதில், குருத்துவப் பயிற்சி பெற 1868, மார்ச் 24-ஆம் தேதி கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையில் சேர்ந்தார். சபையில் சேர்ந்த பிறகு தமது பெயரை மிக்வெல் என்று மாற்றிக்கொண்டார். ஆசிரியப் பணியைத் தமது பணியின் இலக்காகக் கொண்டு பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து, எல் செபோலார் என்னும் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமது சிறப்பான அனுபவங்களுடன் அப்பள்ளியில் 32 ஆண்டுகள் சேவையாற்றினார். இனிமையாகப் பழகும் குணத்தால் எல்லாருக்கும் நண்பரானார். "ஆண்டவருக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் வேலை செய்யுங்கள் " என்று கூறி எல்லாரையும் ஊக்கப்படுத்தினார் .தமது 17 ஆம் வயதிலேயே மாணவர்களுக்காகத் தாமே பாடப் புத்தகங்களை எழுதிக் தயார் செய்தார் .இவர் எழுதிய சில பாடங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நாடு முழுமைக்கும் பயன்படுத்தியது .பாடம் நடத்தும் முறை, விளையாட்டுகள், நாடகங்கள், தியான உரைகள் மற்றும் எழுச்சியூட்டும் எழுத்துக்களால், எல்லாரையும் ஈர்த்தார்.

மறைக்கல்வி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் மிக்வெல் அதிக ஆனந்தம் அடைந்தார் .அதிலும் முதல் முதலாக இறை உணவு பெற இருக்கும் மாணவ, மாணவிகளைப் பயிற்றுவிக்கும்போது. தன்னையே மறந்து இறைவனின் பிரசன்னத்திற்கு வழிநடத்துவார். இவருடைய காலத்தில் திருச்சபை மற்றும் குருக்களுக்கு எதிராகச் சிலர் கிளர்ந்தெழுந்து கொலைசெய்தும், ஆலயங்களைத் தீக்கிரையாக்கியும் கொடூர தாண்டவம் ஆடினார். அப்போது அவர்களின் கையிலிருந்து நற்கருணையைக் காப்பாற்ற அதனை எடுத்துக்கொண்டு ஊனமான காலுடன் எட்டு கிலோமீட்டர் நடந்தே சென்றார்.
நவதுறவிகளுக்குப் பயிற்சியாளராக 1896- 1905 வரை இருந்த மிக்வெல்,1907-ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டார் .அங்கே ஏற்கனவே இச்சபையினர் பணி செய்துகொண்டு இருந்தார்கள் . ஜப்பான் சென்று சபையின் பயன்பாட்டிற்குத் தேவையான எழுத்துக் கருவூலங்களை பிரெஞ்சு மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தார்.
ஸ்பெயினில் பார்சிலோனா அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிக்வெல் தொடர்ந்த வேலைப் பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சலும் சேர்ந்துகொள்ள உடல் நிலை மேலும் மோசமானது. கடைசியில் 1910, பிப்ரவரி ஒன்பதாம் தேதி இறைவனடி சேர்ந்தார் .திருத்தந்தை ஆறாம் பவுல் 1977, அக்டோபர் 30 அன்று அருளாளர் பட்டம் வழங்கினார் .திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1984,அக்டோபர் 21-இல் புனித நிலைக்கு இவரை உயர்த்தினார் .சமயம் சார்ந்து மட்டுமல்ல; ஈக்குவேடார் நாட்டின் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார் மிக்வெல்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள நாம் உழைக்கத் தயாரானால் குறையின்றி அவர்களுக்கு குதூகலிப்பார்கள்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா