✠
தூய மெக்டில்ட்
✠ (St.
McDillet) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
26 |
தூய மெக்டில்ட்
✠ (St.
McDillet)
நிகழ்வு
மெக்டில்ட் பிறக்கும்போதே பேச்சு மூச்சு இல்லாமல்தான் பிறந்தார்.
அவர் இவ்வாறு பிறந்ததைப் பார்த்துவிட்டு, அவருடைய பெற்றோர் ஒரு
கணம் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் மெக்டில்ட்டின்
பெற்றோர் அவரைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினர். அங்கிருந்த
குருவானரிடம், தங்களுடைய குழந்தை இறப்பதற்கு முன்பாக
திருமுழுக்கு கொடுக்கவேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு குருவானவர்
அவர்களிடம், "உங்களுடைய குழந்தை இறக்கமாட்டாள்; அவள் நீண்ட
நாட்கள் வாழ்ந்து, ஒரு
புனிதையாக மாறுவாள்" என்றார்.
குருவானார் சொன்னது போன்றே மெக்டில்ட் நீண்ட நாட்கள் உயிர்
வாழ்ந்து ஒரு புனிதையாக மாறினாள்.
வாழ்க்கை வரலாறு
மெக்டில்ட், 1240 ஆம் ஆண்டு சாக்சினியில் உள்ள எய்ஸ்லெபன் என்னும்
இடத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே மிகுந்த பக்தியோடு வளர்ந்து
வந்தார். இவருக்கு ஏழு வயது நடக்குபோது இவருடைய தாயார் இவரது
மூத்த சகோதரியான ஜெத்ரூத் தங்கியிருந்த துறவுமடத்திற்குக்
கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவருடைய வாழ்க்கை நெறியைப்
பார்த்துவிட்டு, அதிலேயே இலயித்துப்போன மெக்டில்ட், தானும் ஒரு
துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை தன்னுடைய தாயாரிடம் வெளிப்படுத்தினார்.
அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க மெக்டில்ட் துறவு மடத்தில்
சேர்ந்து, துறவு வாழ்வுவுக்குத் தன்னை முழுதாய் அர்ப்பணித்தார்.
மெக்டில்ட், துறவு மடத்தில் வாழ்ந்து வந்த நாட்களில் மிகவும்
தாழ்ச்சியாகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஞானத்தோடும்
வாழ்ந்து வந்தார். அவரிடமிருந்த தாழ்ச்சி அவரை மேலும் மேலும்
உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால், துறவு மடத்தில் சேர்ந்த சில
ஆண்டுகளிலேயே அவர் நவ கன்னியர்களுக்கு பயிற்சி கொடுக்கின்ற சகோதரியாக
உயர்ந்தார், இன்னும் சில ஆண்டுகளில் சபைத் தலைவியாகவே உயர்ந்தார்.
மெக்டில்ட், மிகச் சிறந்த குரல் வளம் கொண்டிருந்தார். அதனால்
துறவுமடத்தில் இருந்த பாடற்குழுவிற்குப் பொறுப்பாளராய்
மாறினார். மெக்டில்ட்டின் குரல் எல்லாருக்கும் பிடித்த ஒரு குரலாய்
இருந்தது. ஆண்டவர் இயேசு அவருக்கு அவ்வப்போது காட்சி
கொடுக்கின்ற சமயங்களில் அவரை
"நைடிங்கள்" என்று சொல்லி புகழ்வார்.
அந்தளவுக்கு அவர் இனிமையான குரல்வளத்தைப் பெற்றிருந்தார்.
மெக்டில்ட், இளைய வயதினராக இருந்தாலும் மிகுந்த ஞானத்தோடு விளங்கினார்.
அவர் இவ்வாறு ஞானத்தோடு விளங்கியதால், அவரிடத்தில் ஆலோசனை கேட்பதற்கு
நிறையப் பேர் வந்து போனார்கள். குறிப்பாக டொமினிக்கன் சபைத் துறவிகள்,
சபைப் பொறுப்பாளர்கள் கூட அவரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காக வந்துபோனார்கள்.
எல்லாருக்கும் அவர், இறைவன் தனக்கு என்ன வெளிப்படுத்தினாரோ அதனை
அவர்களுக்கு ஆலோசனையாக வழங்கினார். மெக்டில்ட், ஆண்டவர் இயேசுவின்
திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அக்காட்சிகளில் ஆண்டவர்
இயேசு அவருக்கு நிறைய உண்மைகளை வெளிப்படுத்தினார். அந்த உண்மைகள்
எல்லாம் பிற்காலத்தில் Book of Special Grace என்ற பெயரிலே
எழுதப்பட்டன.
மெக்டில்ட், அவ்வப்போது உடல் நோய்களுக்கு உள்ளானார். ஆனாலும்
அவை அவருடைய பணிக்குத் தடையாக இருக்கவில்லை. அவர் தொடர்ந்து
மனவுறுதியோடு எல்லாப் பணிகளையும் செய்து வந்தார். இப்படி இறைவனுடைய
கரங்களில் வல்லமையுள்ள ஒரு கருவியாய் செயல்பட்டு, எல்லாருக்கும்
ஆலோசனை வழங்கிய மெக்டில்ட் 1298 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மெக்டில்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
1. திரு இருதய ஆண்டவரிடத்தில் பக்தி
தூய மெக்டில்ட்டைக் குறித்துச் சொல்கின்றபோது, நிறையப் பேர்
இவர்தான் இயேசுவின் திரு இருதயப் பக்தியைத் தொடங்கி வைத்தவர்
என்று சொல்வார்கள். அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆண்டவர்
இயேசு அவருக்குக் கொடுத்த காட்சிகள் சான்றுகளாக இருக்கின்றன.
திரு இருதய ஆண்டவர் அவரிடத்தில் அடிக்கடி சொல்கின்ற வார்த்தைகள்,
"தினமும் காலையில் நீ துயில் எழும்போது எனது இதயத்திற்கு வணக்கம்
செலுத்துவது உனது முதற்பணியாகட்டும். அதே சமயம் உனது இதயத்தை
எனக்குக் கொடு" என்பதாகும். இயேசு சொன்னது போன்று மெக்டில்ட்,
தனது இதயத்தை ஆண்டவருக்குக் கொடுத்து, அவருடைய இதயத்திற்கு
நாளும் வணக்கம் செலுத்தி வந்தார்.
தூய மெக்டில்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று
திரு இருதய பக்தியில் சிறந்து விளங்குவதுதான் இன்றைய நாளில்
நாம் செய்ய வேண்டிய தலையாய காரியமாக இருக்கின்றது.
ஆகவே, மெக்டில்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று
இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், திரு இருதய ஆண்டவரிடத்தில்
மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017. |
|
|