Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மார்கரெட் ✠ (St. Margaret of Cortona)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 22
  ✠ புனிதர் மார்கரெட் ✠ (St. Margaret of Cortona)

*நோயாளிகளின்பால் இரக்கம் கொண்டவர், நிறுவனர் :
(Tender of Sick and Foundress)

*பிறப்பு : 1247
டுஸ்கனி, இத்தாலி (Tuscany, Italy)

*இறப்பு : 22 ஃபெப்ரவரி 1297
கொர்டோனா, இத்தாலி (Cortona, Italy)

*ஏற்கும் சமயம் :
மூன்றாம் நிலை புனித ஃபிரான்சிஸ் சபை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Third Order of St. Francis, Roman Catholic Church)

*புனிதர்பட்டம் : மே 16, 1728
திருத்தந்தை 13ம் பெனடிக்ட் (Pope Benedict XIII)

*பாதுகாவல் :
மயக்குதலுக்கெதிராக (Against Temptations), பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Falsely Accused People), வீடற்றவர்கள் (Homeless People),
பித்துப்பிடித்த நிலை (Insanity), பெற்றோரை இழப்பு (Loss of Parents), மன நோய் (Mental Illness), மன நோயாளிகள் (Mentally Ill People), தாதிகள் (Midwives),
செய்த பிழைக்கு மனம் வருந்தும் பெண்கள் (Penitent Women), தனியாகவுள்ள தாய்மார்கள் (Single Mothers), தமது பக்திக்காக பரிகாசம் செய்யப்பட்டவர்கள் (People Ridiculed for their Piety), திருந்திய விபச்சாரிகள் (Reformed Prostitutes), பாலியல் மயக்குதல் (Sexual Temptation), பொதுநிலைப் பெண்கள் (Single Laywomen), மூன்றாம் குழந்தைகள் (Third Children)


புனிதர் மார்கரெட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த "மூன்றாம் நிலை புனித ஃபிரான்சிஸ் சபையைச்" (Third Order of St. Francis) சேர்ந்த துறவி ஆவார்.

இவர், "ச்சியுசி" (Diocese of Chiusi) மறை மாவட்டத்தின் அருகேயுள்ள "லாவியானோ" (Laviano) என்ற சிறிய நகரிலே விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவருக்கு ஏழு வயதாகையில் இவரது தாயார் மரித்துப் போனார். தந்தை மறுமணம் செய்துகொண்டார். வளர்ப்புத் தாயாரின் சிறு அன்பிலே அடங்காத, தன்னிச்சையான, பொறுப்பற்ற பெண்ணாக மார்கரெட் வளர்ந்தார்.

இவருக்கு பதினேழு வயதாகையில், "வாலியானோ" (Valiano) நகரின் பிரபுவான "கூக்ளியேமோ" (Gugliemo di Pecora) என்பவரின் மகனான இளைஞனை சந்தித்தார். அந்த இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனார். விரைவிலேயே தாம் "மான்டேபல்சியானோ" (Montepulciano) என்ற இடத்தினருகேயுள்ள ஒரு கோட்டை அரண்மனையில் குடியிருத்தப்பட்டிருப்பதை உணர்த்த மார்கரெட், தாம் அங்கே அவ்விளைஞனின் மனைவியாக வாழவில்லை என்பதை உணர்ந்தார். பிறர் எவரையும் சந்திக்கவோ பேச அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் அவனது மனைவி என்ற நினைப்பே அவரை இதற்காகவெல்லாம் பொறுத்துக்கொள்ள வைத்தது. பல சமயங்களில், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்திருந்தான். ஆனால், அப்படி ஒரு நாள் வரவேயில்லை. இருந்தும், சுமார் பத்து வருடங்கள் இவ்வாறு அவனுடன் வாழ்ந்த மார்கரெட் அவனுக்கு ஒரு ஆண் குழந்தையை ஈன்று கொடுத்தார்.

ஒருநாள், வெளியே சென்றிருந்த மார்கரெட்டின் காதலன் திரும்பி வரவில்லை. அவனுடன் சென்றிருந்த அவனுடைய பிரியமான வேட்டை நாய் மட்டும் அவனில்லாமலேயே திரும்பி வந்தது. எச்சரிக்கை அடைந்த மார்கரெட்டை அவனுடைய வேட்டை நாய் காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அங்கே, அவனுடைய உயிரற்ற உடலையே காணக் கிடைத்தது.

இந்த அதிர்ச்சி மார்கரெட்டை செப மற்றும் தப வாழ்வில் ஈடுபட வைத்தது. தமது காதலன் தமக்கு தந்திருந்த பரிசுப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு, தமது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு அவர் தமது தந்தையின் இல்லம் சென்றார். ஆனால், அவரது வளர்ப்புத் தாயார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மனம் வெறுத்துப்போன மார்கரெட், தமது மகனுடன் "கார்ட்டோனா" (Cortona) எனும் இடத்திலுள்ள ஃபிரான்சிஸ்கன் (Franciscan Friars) துறவு மடம் சென்று தஞ்சமடைந்தார். அங்கே, அவரது மகன் ஒரு துறவியானார். மார்கரெட் புலால் உணவு வகைகளைத் தவிர்த்து, காய்கறி மற்றும் ரொட்டி போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.

மூன்று வருட சோதனை காலத்தின் (Probation) பின்னர், 1277ம் ஆண்டு, புனித ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை துறவு சபையில் (Third Order of Saint Francis) இணைந்தார். புனிதர் ஃபிரான்சிசை முன்மாதிரியாகக் கொண்ட மார்கரெட், அன்றாட உணவுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பிச்சை எடுத்து உண்டார்.

"கார்ட்டோனா'வில்" (Cortona) செப தப வாழ்க்கையை மேற்கொண்ட மார்கரெட் நோயுற்ற, வீடற்ற மற்றும் ஏழைகளுக்காக அங்கேயே ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். அம்மருத்துவமனையின் செவிலியர்க்காக "மூன்றாம் நிலை சகோதரிகள் சபை" (Congregation of Tertiary Sisters) என்றொரு அமைப்பினை நிறுவினார். அவர், "இரக்கத்தின் அன்னை" (Our Lady of Mercy) என்றொரு சபையையும் நிறுவினார். அதன் உறுப்பினர்களும் மருத்துவமனையின் நோயாளிகளுக்கு சேவை செய்வதிலேயே ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒருநாள், செபம் செய்துகொண்டிருந்த மார்கரெட்டின் காதுகளில், "நீ என்ன விரும்புகிறாய் எளிய சிறு பெண்ணே?" (What is your wish, poverella ("little poor one?") என்றொரு கேள்வி அசரீரியாகக் கேட்டது. அதற்கு பதிலாக, "ஆண்டவர் இயேசுவே, நீரன்றி வேறெதுவும் எனக்கு வேண்டாம்" என்று பதிலளித்தார்.

பல சந்தர்ப்பங்களில், மார்கரெட் பொது விவகாரங்களில் பங்கேற்றார். இரண்டு முறை தெய்வீக கட்டளைகளைப் பின்பற்றி, ஒரு இளவரசனைப் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்த "அரேஸோவின் ஆயர்" (Bishop of Arezzo) "குகிலியேமோ உபெர்டினி பஸ்ஸி" (Guglielmo Ubertini Pazzi) என்பவருக்கேதிராக சவால் விட்டார்.

சில காலத்தின் பின்னர் பாழ்பட்டுப்போன அன்றைய "புனித பாசில்" (Church of St Basil) தேவாலயத்திற்குச் (தற்போது - தூய மார்கரிட்டா தேவாலயம் - Santa Margherita) சென்ற மார்கரெட், மீதமுள்ள தமது காலத்தை அங்கேயே செலவிட்டார். பின்னர், 1297ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 22 ம் நாள், மரணமடைந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா