Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜூலியானா ✠ (St. Juliana of Nicomedia)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 16
   ✠ புனிதர் ஜூலியானா ✠ (St. Juliana of Nicomedia)

*மறைசாட்சி : (Martyr)

*பிறப்பு : கி.பி. 286
"கம்பேனியா"விலுள்ள "குமாயே" (Cumae in Campania)

*இறப்பு : கி.பி. 304
நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ் (Nicomedia or Naples)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)

*பாதுகாவல் : நோய்கள்

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க "பேகன்" (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், "அஃப்ரிகனஸ்" (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்" (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, "பிதினியா" (Bithynia) நாட்டின் "ரோம ஆளுனராக" பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற ரோம ஆளுனர் எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, ரோம ஆளுனரின் முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன் பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.



மறைசாட்சி நிக்கேமேடியன் நகர் ஜூலியானா Juliana von Nikomedien,Turkey

பிறப்பு
285,
நிக்கோமேடியன், துருக்கி

இறப்பு
304,
நிக்கோமேடியன், துருக்கி

இவர் ஓர் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை மிகுந்த பக்தி கொண்டவர். ஆனால் இவரின் தாய் கடவுள் பக்தியே கடுகளவும் இல்லாதவர். ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் பொய் கூறிவிட்டு தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார். இவர் தனது 9 ஆம் வயதிலேயே தான் எலாய்சியுஸ் Eleusius என்றழைக்கப்படும் இளைஞனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கண்ட திருக்காட்சியை தன் தந்தையிடம் எடுத்துரைத்தார்.

ஜூலியானா தனது 18 ஆம் வயதை அடைந்தார். திருமணம் செய்யப்போகும் நாள் வந்தபோது எலாய்சியஸ் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன். இவர் திருமணம் செய்து கொள்ள பெண்கேட்டு வந்தான். ஆனால் அவன் வேறு மதத்தை சார்ந்தவனாக இருந்ததால் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக வாழ்ந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்ற ஜூலியானா அவனை மதம்மாற்றினார். இதனால் மற்ற மதத்தினரால் ஜூலியானா வதைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். எரியும் இரும்பு ஆலையில் இறக்கப்பட்டார். பிறகு கொதிக்கும் தாரினால் உடல் முழுவதும் ஊற்றப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து 1207 ல் இவரின் உடல் நேயாப்பல் Neapel என்ற நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

செபம்:
மரித்தோர்க்கெல்லாம் மீண்டும் உயிர்ப்பளிக்கும் எல்லாம் வல்லவரே, உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் தன் தாயையும் எதிர்த்து உம்மைப் பின் தொடர்ந்த புனித ஜூலியானாவின் செப வாழ்வின் கண்டு வியப்படைந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். உமக்கெதிராக செயல்படும் மக்களை நீர் கண்ணோக்கியருளும். அவர்களும் உம்மை அறிந்துக் கொண்டு உமது சாட்சியாகத் திகழ்ந்திட உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மறைப்பணியாளர் ஆயர் ஒனேசிமுஸ் Onesimus
பிறப்பு : 1 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 1 ஆம் நூற்றாண்டு, உரோம் (?)


2. சபை நிறுவுநர் பிலிப்பா மாரேரி Philippa Mareri
பிறப்பு : 1200, மாரேரி, இத்தாலி
இறப்பு : 1236 போர்கே எஸ், பீட்ரோ Borgo S.Pietro, இத்தாலி


3. மெட்ஸ் நகர் ஆயர் சிமியோன் Simeon von Metz
பிறப்பு : 4 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 380, மெட்ஸ், பிரான்சு
பாதுகாவல் : தண்ணீரால் உண்டாகும் விபத்திலிருந்து

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் -இயேசு
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா