✠ புனிதர் அருளானந்தர் ✠(St. John De
Britto) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
4 |
✠ புனிதர் அருளானந்தர்
✠(St. John De Britto)
*மறைசாட்சி : (Martyr)
*பிறப்பு : மார்ச் 1, 1647
லிஸ்பன், போர்ச்சுகல் (Lisbon, Portugal)
*இறப்பு : ஃபெப்ரவரி 4, 1693
ஓரியூர், தமிழ் நாடு, இந்தியா (Oriyur, Tamil Nadu, India)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
*அருளாளர் பட்டம் : ஆகஸ்ட் 21,
1853
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)
புனிதர் பட்டம் : ஜூன் 22, 1947
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் (Pope Pius XII)
*முக்கிய திருத்தலங்கள் :
புனித அருளானந்தர் ஆலயம்,
ஓரியூர்
*பாதுகாவல் :
போர்ச்சுகல், சிவகங்கை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்
(Portugal, Roman Catholic Diocese of Sivagangai)
புனிதர் ஜான் டி பிரிட்டோ (புனிதர் அருளானந்தர்), போர்ச்சுகல்
நாட்டைச் சேர்ந்த இயேசு சபை குருவும், மறைசாட்சியும் ஆவார்.
இவர் "போர்ச்சுகலின் புனித பிரான்சிஸ் சேவியர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம் :
ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்ச்சுகீசிய குடும்பத்தில்
பிறந்தார். தந்தை, பிரேசிலின் ஆளுநராக இருந்து இறந்தவர்.
1662ம் ஆண்டில் இயேசு சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில்
கல்வி கற்றார். 1673ம் ஆண்டில் மதப் போதனைக்காக
தென்னிந்தியாவில் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை
தமிழில் அருளானந்தர் என மாற்றினார். பின்னர் அவர் ஐரோப்பாவுக்குத்
திரும்பி, 1683ம் ஆண்டு, லிஸ்பன் திரும்பினார். இரண்டாம்
பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டியும், அவர்
மீண்டும் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் 1690ம் ஆண்டு, மதுரை
சென்றார்.
மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய ஈடுபாடுகளற்ற இந்தியக் கத்தோலிக்கத்
திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர்
மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றி
புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார்.
கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு
எடுத்துரைத்தார். "இராபர்ட் தெ நோபிலி" இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப்
பயன்படுத்தினார்.
கிழவன் சேதுபதியும் அருளானந்தரும் :
ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும்
நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன்
சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய்
இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த
ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக்
கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச்
சொன்னார் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர்
தடியத்தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக்
கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.
முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது 1693ம்
ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன்
சேர்த்துக் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு
இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு
குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி
மாதம், 11ம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார்.
ஜனவரி மாதம், 31ம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு
கொண்டு வரப்பட்டார். சிறையில் 1693ம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம்,
3ம் தேதி அவர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
"ஜனவரி மாதம், 28ம் நாள், என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன்
முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது.
கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய
உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக்
கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு
நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான்
மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை
நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்துவந்த பணிகளுக்குக்
கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம்
இப்போது வந்துவிட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப்
பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே.
வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல்
என்னால் எழுதுவது முடியாது..."
1693ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதாம், 4ம் நாள், கொலையாளிகள்
பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச்
சென்று தலையைத் துண்டித்தனர்.
தூய அருளானந்தர் (பிப்ரவரி 04)
நிகழ்வு
1693 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அருளானந்தர்
கொலை களமாகிய ஒரியூரை நோக்கி குதிரைவண்டியில் கட்டி இழுத்துச்
செல்லப்பட்டார். அவருடைய உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம்
வழிந்தோடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் புல்லூர் என்ற இடத்திற்கு
அருகே சென்றபோது, அருளானந்தரின் நிலைகண்டு அவர்மீது பரிதாபப்பட்ட
ஓர் இந்துப் பெண்மணி தன்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் மோர்
கொண்டு வந்து, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். அதை அன்போடு
பருகிய அருளானந்தர் அந்தப் பெண்மணியிடம், "இந்த ஊரின் பெயர் என்ன?"
என்று கேட்டார். அதற்கு அவர், "புல்லூர்" என்றார். அருளானந்தர்
அவரிடம், "இனிமேல் இந்த புல்லூர் என அழைக்கப்படாது, மாறாக
நெல்லூர் என அழைக்கப்படும்" என்று ஆசிர்வதித்து சென்றார்.
அவர் ஆசிர்வதித்தனால், இன்றைக்கு அந்த ஊர் நெல் விளையும் ஊராக
விளங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும்
வறண்டு கிடக்கும்போது இந்த ஊர்மட்டும் வளம்கொழிக்கும் ஊராக இருப்பதைப்
பார்க்கும்போது அது அருளானந்தரின் ஆசிர்வாதமன்றி வேறு என்னவாக
இருக்க முடியும்? என்று எண்ணத் தோன்றுகிறது.
வாழ்க்கை வரலாறு
அருளானந்தர் என அன்போடு அழைக்கப்படும் ஜான் தே பிரிட்டோ 1647
ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் பிறந்தார்.
இவருடைய குடும்பம் போர்ச்சுகல் நாட்டு மன்னர் இரண்டாம் பெட்ரோ
என்பவருக்கு மிக நெருக்கமான குடும்பம். இம்மன்னரும் ஜான் தே
பிரிட்டோவும் மிக நெருக்கமான நண்பர்கள். ஜான் தே பிரிட்டோ சிறுவயதில்
அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருந்தார். இதனால் இவருடைய
அன்னை இவரை தூய சவேரியாரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.
"சவேரியாரே! என்னுடைய மகன் உயிர் பிழைத்தால், உம்மைப் போன்று
என்னுடைய மகனையும் அருட்பணிக்காக அனுப்பி வைப்பேன்" என்றார்.
அவர் ஜெபித்தது போன்று ஜான் தே பிரிட்டோ உயிர்பிழைத்தார். அதனால்
அவருடைய அன்னை அவருடைய இறைப்பணிக்காக அர்பணித்தார்.
கி.பி. 1663 ஆம் ஆண்டு, ஜான் தே பிரிட்டோ சேசு சபையில்
சேர்ந்து 1673 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
படிக்கின்றபோதே அறிவோடும் ஞானத்தோடும் இருந்ததால் குருமடத்தில்
இவரை பேராசிரியராக பொறுப்பில் அமர்த்த நினைத்தார்கள். ஆனால்,
இவரோ, "நான் தூய சவேரியாரைப் போன்று இந்தியாவிற்குச் சென்று மறைபோதகப்
பணியாற்றவேண்டும்" என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
இது அவருடைய தாய்க்குப் பிடிக்கவே இல்லை. அவர், தன்னுடைய மகன்
அருகே இருந்து இறைப்பணி ஆற்றினால் நன்றாக இருக்குமே என்று
நினைத்தார். ஆனால் தன் மகன் இப்படி தொலைதூர நாட்டிற்குச்
சென்று இறைப்பணி ஆற்றப்போவதாகச் சொல்கிறானே என்று சொல்லி, மேலிடத்திற்கு
எல்லாம் சென்று, அவனைத் தடுக்கப் பார்த்தார். அதற்கு ஜான் தே
பிரிட்டோ, "இந்தியாவிற்குச் சென்று திருமறையைப் போதிப்பதுதான்
தன்னுடைய இலட்சியம்" என மிக உறுதியாக இருந்தார். அதனால் அவருடைய
தாயார் மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி வைத்தார்.
1678 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கோவாவில் வந்திறங்கிய ஜான் தே
பிரிட்டோ இங்கே இருந்த சூழ்நிலைகளைப் பார்த்துவிட்டு, ஓர் இந்து
சந்நியாசியை போன்று உடை தரித்து, தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் ஜான் தே பிரிட்டோ என்ற தன்னுடைய பெயரை அருளானந்தர்
என மாற்றிக்கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா
மக்களுக்கும் அறிவித்தார். அப்போது மதுரையை தலைமைப்பீடமாகக்
கொண்டு மதுரை மிஷன் செயல்பட்டுக்கொண்டிருந்தது. சில காலத்திலேயே
அதன் தலைமைப் பெறுப்பை ஏற்றுக்கொண்டு ஜான் தே பிரிட்டோ என்ற அருளானந்தர்
தொடக்கத்தில் தட்டுவாச்சேரி என்ற பகுதியில் மறைபோதகப் பணியைச்
செய்தார். இப்போது அவ்வூர் தஞ்சாவூருக்கு அருகே உள்ளது.
அருளானந்தர், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதைக்
கேட்ட மக்களில் நிறையப்பேர் மனமாற்றினார்கள், கிறிஸ்தவ மதத்தைத்
தழுவிக்கொண்டார். அப்போது அங்கே இருந்த குறுநில மன்னர் அருளானந்தரையும்
அவரைச் சேர்ந்த மக்கள் சிலரையும் சிறையில் அடைத்து சித்ரவதை
செய்தான். இதற்கிடையில் அந்த குறுநில மன்னனின் அரண்மனையில் இருந்த
குதிரைகள், யானைகள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு கீழே விழுந்தன.
இதனால் பயந்துபோன அந்த குறுநில மன்னன், அருளானந்தர் சாதாரண மனிதர்
கிடையாது, அவர் இறைமனிதர். அதனால்தான் அவரைத் துன்புறுத்த, அரண்மனையில்
இருக்கு உயிரினங்கள் நோயில் விழுகின்றன என்பதை உணர்ந்து, அவரையும்
அவரோடு இருந்தவரை விடுதலை செய்து அனுப்பி வைத்தான். அத்தோடு அப்பகுதியில்
நற்செய்தியை அறிவிக்கவேண்டாம் என்று சொல்லி எச்சரித்து அனுப்பி
வைத்தான்.
அதன்பிறகு அருளானந்தர் தஞ்சாவூர் பகுதியிலிருந்து இராமநாதபுரம்
பகுதிக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியில்
இருந்த சாதாரண மக்கள் அருளானந்தர் போதித்த நற்செய்தியைக்
கேட்டு மனம்மாறினார்கள், கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இந்த
நேரத்தில்தான் அருளானந்தருக்கு அவருடைய சொந்த மண்ணிலிருந்த,
அவருடைய நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ என்பவரிடமிருந்து
அழைப்பு வந்தது. அதனால் 1687 ஆம் ஆண்டு அவர் போர்ச்சுகல்
நாட்டிற்குச் சென்றார். அங்கே மன்னன் இரண்டாம் பெட்ரோ அருளானந்தரை
தன்னுடைய அரசபையில் ஆலோசகராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் அருளானந்தரோ, இந்தியாவில் மறைபோதகப் பணியைச் செய்து, அங்கே
தன்னுடைய உயிரைத் துறப்பதற்கு தனது கனவு, இலட்சியம்" என்று
சொல்லி மறுத்துவிட்டார். சில நாட்கள் போர்ச்சுகலில் இருந்த அருளானந்தர்
மீண்டுமாக 1690 ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.
இந்தியாவிற்கு வந்த அருளானந்தர் மீண்டுமாக இராமநாதபுரம் பகுதியில்
தன்னுடைய மறைபோதகப் பணியை இன்னும் சிறப்பாக செய்யத் தொடங்கினார்.
அப்போது தடியத் தேவா என்னும் குறுநில மன்னன் நோய்வாய்ப்பட்டுக்
கிடந்தான். அவனுக்கு எத்தனையோ வைத்தியர்கள் வந்து சிகிச்சை அளித்தும்
அவனுடைய நோய் நீங்கவில்லை. இந்த நேரத்தில் அவன் அருளானந்தரைக்
குறித்தும் அவரால் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் கேள்விப்பட்டான்.
எனவே, அவன் அருளானந்தரை தன்னுடைய அரண்மனைக்கு வரவழைத்து ஜெபிக்கக்
சொன்னான். அருளானந்தர் அவனுக்காக இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்.
அற்புதமாக அவனிடமிருந்த நோய் அவனைவிட்டு விலகியது. இதனால் அவன்
அருளானந்தரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றான், அவன்
திருமுழுக்குப் பெற்றபிறகு கிறிஸ்துவின் போதனைகளைக் குறித்து
இன்னும் அறியத் தொடங்கினான். அவன் ஐந்து மனைவிகளோடு
வாழ்ந்துகொண்டிருந்தான். இயேசுவின் போதனைகளைக் கேட்டபிறகு, அவன்
தன்னுடைய முதல் மனைவியை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, மற்ற
நான்கு பேரையும் அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தான். தடியத்
தேவாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நான்கு மனைவியருள் ஒருவர் மன்னர்
சேதுபதியின் சகோதரி. இச்செய்திக் கேட்டு மன்னன் சேதுபதி சீற்றம்
கொண்டான். அவன் கூலியாட்களை வைத்து இப்பிரச்சனைக்குக் காரணமாகிய
அருளானந்தரை கொலைசெய்யத் திட்டம் தீட்டினான்.
1693 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மன்னன் சேதுபதி அருளானந்தரைக்
கைது செய்து பலவாறாக சித்ரவதை செய்தான். பாழுங்கிணற்றில் தலைகீழாக
இறக்கினான், பாறையில் உருட்டிவிட்டான். இப்படியாக அருளானந்தரை
பல்வேறு விதங்களில் சித்ரவதை செய்தான். பிப்ரவரி மாதம்
நான்காம் தேதி அருளானந்தரை ஒரியூருக்கு இழுத்துச் சென்றவன், அங்கே
ஒரு கழுமரத்தில் ஏற்றி, தலையையும் கைகளையும் கால்களையும்
துண்டித்தான். இதனால் அருளானந்தர் ஓரியூர் மண்ணிலே ஆண்டவர் இயேசுவுக்காக
மறைசாட்சியாக உயிர் துறந்தார். அருளானந்தர் இறந்தபிறகு ஏழு
நாட்கள் தொடர்ந்து அவ்வூரில் மழை பெய்தது. இத்தனைக்கும் அது
கோடைகாலம்.
அருளானந்தர் மறைசாட்சியாக உயிர்நீத்த செய்தியைக் கேள்விப்பட்ட
போர்ச்சுகலில் இருந்த அவருடைய அன்னை மிகவும் வருந்தி, துக்கம்
கொண்டாவோருக்கான ஆடையை உடுத்தினார். ஆனால் அருளானந்தரின்
நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ, "இது துக்கப்பட வேண்டிய
காரியம் கிடையாது, மகிழ்ந்திருக்கவேண்டிய காரியம்" என்று
சொல்லி அந்த அன்னைக்கு அரசிக்கு உரிய ஆடை அணிவித்து, அவரை சிறப்பு
செய்தான்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மறவ நாட்டு மாணிக்கம் என அன்போடு அழைக்கப்படும் தூய அருளானந்தரின்
விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக்
கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்திக்காக உயிர் துறத்தல்
தூய அருளானந்தர் ஆண்டவர் இயேசுவுக்காக, அவருடைய நற்செய்திக்காக
தன்னுடைய உயிரைத் துறந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. அருளானந்தர்
நினைத்திருந்தால் மன்னன் பெட்ரோவின் அரண்மனையில் அரசபை உறுப்பினராக
சுகபோக வாழ்வு வாழ்ந்திருக்க முடியும். அல்லது ஏதோவொரு ஒரு
குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு நிம்மதியாக
வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர்
இந்திய மண்ணிற்கு வந்து, நற்செய்தியை அறிவித்து அதன்வழியாக தன்னுடைய
உயிரை இழப்பதையே இலட்சியமாகக் கொண்டுவாழ்ந்தார். அதன்படி அவர்
தடியத் தேவா வின் தவற்றைச் சுற்றிக்காட்டி, அவரை மனமாறச்
செய்தார். அதற்காகவே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.
அருளானந்தருக்கும் நற்செய்தியில் வரும் திருமுழுக்கு
யோவானுக்கும் ஒருசில நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது என்பதை
நாம் மறந்துவிடக் கூடாது. திருமுழுக்கு யோவான் மன்னன் ஏரோதின்
தவற்றைச் சுட்டிக்காட்டியதால் ஏரோதியாள் சூழ்ச்சி செய்து அவரைக்
கொன்றுபோட்டாள். அதைப் போன்றுதான் அருளானந்தரும் தடியரின் தவற்றைச்
சுட்டிக்காட்டியதால், அவருடைய ஐந்து மனையர்களுள் ஒருத்தியான
கடலாயி தன்னுடைய சகோதரனான மன்னன் சேதுபதியின் வழியாக அருளானந்தரின்
உயிரைப் பறித்தாள். ஆகவே இரண்டு பேருமே உண்மையை, நற்செய்தி அறிவித்ததனால்,
அது பிடிக்காத பெண்ணின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்கள்.
நாமும் எத்தகைய இடர்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும் நற்செய்தியை
அறிவித்து, அதன்வழியாக நம்முடைய உயிரைத் தருவதுதான் நமக்கு
முன்னால் இருக்கும் சவாலாக இருக்கின்றது.
ஆண்டவர் இயேசு கூறுவார், "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால்
அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தால்ன் மிகுந்த விளைச்சலை
அளிக்கும்" (யோவான் 12:24). நாம் இயேசுவுக்காக உயிர்துறக்கும்போதுதான்
நமது வாழ்வு முழுமை பெறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆப்ரிக்க நாடுகளில் மறைபோதகப் பணியைச் செய்தவர் Chuck Colson
என்பவர். ஒருமுறை அவர் இளைஞர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது,
"இயேசுவுக்காக உயிர் துறப்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய
பேற்றிற்காக நான் ஒவ்வொரு நாளும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
அப்போது ஓர் இளைஞன் எழுந்து, "இயேசுவுக்காக உயிரை இழக்க நினைப்பது
மடமையிலும் மடமை" என்றார். அதற்கு அந்த மறைபோதகர்,
"இயேசுவுக்காக உயிரை இழப்பது மடமை என்றால், நீ வாழ்வது கூட மடமை"
என்றார். அவன் எதுவும் பேசாது அமைதியான்.
இயேசுவுக்காக நம்முடைய உயிரைத் துறப்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய
பேற்றினை தூய அருளானந்தர் பெற்றார். அவருடைய விழாவைக்
கொண்டாடும் நாமும் இயேசுவின் பணியை தொடர்ந்து செய்வோம். ஆண்டவர்
இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் தருவோம், அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Palayamkottai. Fr. Maria Antonyraj.
அர்ச்.தெபிரித்தோஅருளானந்தர் -
வேதசாட்சி (கி.பி.1663)
பிரபு வமிசத்தைச் சேர்ந்த அருளானந்தர் சிறு
வயதில் போர்ச்சுகல் தேசத்து இராஜாவின் குமாரனுக்குத் தோழனாக
நியமிக்கப்பட்டு, இராஜ அரண்மனையில் வளர்ந்துவந்தார்.
அவ்விடத்தில் அவருக்குண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து
புண்ணியவாளராய் நடந்துவந்தார். இவர் கடின வியாதியில்
விழுந்து, அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் வேண்டுதலால் குணம்
அடைந்து, அவருடைய மாதிரிகையைப் பின்பற்றி, சேசு சபையில்
சேர்ந்தார். அஞ்ஞானிகளை மனந்திருப்ப ஆவல்கொண்டு, அதற்குத் தன்
உறவினர் களாலும் விசேஷமாய்த் தன் தாயாராலும் உண்டான
தடைகளையெல்லாம் வெற்றிகொண்டு இந்திய தேசத்திற்கு பயணம்
செய்தார். பல இடங்களில் வேதம் போதித்து, மதுரை நாட்டில்
வேதத்திற்காக உழைத்தார். இவ்விடத்தில் அஞ்ஞானிகளால் உண்டான
துன்பதுரிதங்களுக்கு அஞ்சாமல், அநேகருக்கு ஞானஸ்நானம்
கொடுத்தார். கடின வியாதியால் வருந்தின ஒரு இராஜ பிரபு
அருளானந்தருடைய வேண்டுதலால் குணமடைந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
இவனுக்கிருந்த ஐந்து மனைவிகளில் ஒருத்தியை மாத்திரம்
வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கிவிட்டான். மீதமிருந்த நான்கு
ஸ்திரீகளில் அரசனுடைய பேத்தியான ஒருவள் அருளானந்தர்மேல் அதிக
கோபாவேசங்கொண்டு அவரைக் கொல்லக் கட்டளையிடும்படி அரசனை
மன்றாடினாள். அரசன் தன் பேத்தியின் பேச்சை மறுக்க
முடியாதவனாய், அருளானந்தரைச் சிரச்சேதம் செய்யக்
கட்டளையிட்டான். அவ்வாறே அர்ச். அருளானந்தர் ஓரியூரில்
வேதசாட்சியாக மரணமடைந்தார்.
யோசனை
தேவ பணிவிடைக்கு சர்வேசுரனால்
அழைக்கப்படுகிறவர்களுக்கு உண்டாகும் தடைகளை தைரியத்துடன்
வெல்லவேண்டும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|
|