Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜெரோம் எமிலியானி ✠ (St. Jerome Emiliani)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 8
 
 ✠ புனிதர் ஜெரோம் எமிலியானி ✠ (St. Jerome Emiliani)

*மனிதாபிமானி மற்றும் "சோமாஸ்ச்சி" தந்தையர் சபை நிறுவனர்:
(Humanitarian and Founder of the Somaschi Fathers)

*பிறப்பு : கி.பி. 1486
வெனிஸ், இத்தாலி (Venice)

*இறப்பு : ஃபெப்ரவரி 8, 1537
சோமாஸ்கா, இத்தாலி (Somasca, Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*அருளாளர் பட்டம் : 1747
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் (Pope Benedict XIV)

*புனிதர்பட்டம் : 1767
திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட் (Pope Clement XIII)

*பாதுகாவல் : கைவிடப்பட்ட குழந்தைகள், அனாதைகள்

புனிதர் ஜெரோம் எமிலியானி, ஒரு இரக்க குணமுள்ள மனிதாபிமானியும், "சோமாஸ்ச்சி தந்தையர்" சபை (Somaschi Fathers) நிறுவனரும், புனிதரும் ஆவார்.

வெனிஸ் நகரில் "ஆஞ்செலோ எமிலியானி" (Angelo Emiliani) என்ற தந்தைக்கும் "எலியோநோர் மௌரோசெனி" (Eleonore Mauroceni) என்ற தாயாருக்கும் பிறந்தவர். இவரது தந்தையார் இவரது சிறு வயதிலேயே மரித்துப்போனார்.

இவர் தமது 15 வயதில் இராணுவத்தில் சேர்வதற்காக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஓரிரு போர்களில் ஈடுபட்ட ஜெரோம், நாளடைவில் "ட்ரேவிசோ" (Treviso) மலையின் கோட்டைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அக்கோட்டையின் பாதுகாப்புக்கான சண்டையில் இவர் போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்கு இறைவனின் அன்னை மரியாளிடம் அவர் மனமுருக செபித்ததே காரணம் என்பர்.

"ட்ரேவிசோ" (Treviso) மலையிலுள்ள அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு யாத்திரை சென்றார். அன்னைக்கு காணிக்கையாக தாம் அணிந்திருந்த சங்கிலிகளை உண்டியலில் இட்டார். தமது ஓய்வு நேரத்தையெல்லாம் பக்தியிலும், தொண்டுப் பணிகளிலும், இறையியல் கற்பதிலும் செலவிட்டார்.

ஜெரோம் 1518ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப் பட்டார்.

1528ம் ஆண்டு, பஞ்சமும் பிளேக் நோயும் தலைவிரித்தாடியபோது, இவரை அனைத்து இடங்களிலும் காண முடிந்தது. நோயாளிகளுக்கும், அனாதைகளுக்கும், கைவிடப்பட்ட மக்களுக்கும், சேவை செய்யும் இவரது ஆர்வத்தையும் காண முடிந்தது. தமது சொந்த செலவிலேயே நோயாளிகளைக் கவனித்தார். மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு உணவிட்டார். "புனித ரோஸ்" (St. Rose) தேவாலயத்தினருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நோயாளிகளையும் அனாதைகளையும் தங்கவைத்து கவனித்துக்கொண்டார்.

1531ம் ஆண்டு, "வெரோனா" (Verona) சென்ற இவர், அங்குள்ள குடிமக்களிடம் ஒரு மருத்துவமனை கட்டும்படி ஊக்குவித்தார். "ப்ரெஸ்ஸியா" (Brescia), "பெர்கமோ" (Bergamo), "மிலன்" (Milan) மற்றும் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தின் (Northern Italy) அநேக இடங்களில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்குமான அநாதை இல்லங்களை நிறுவினார். "பெர்கமோ" (Bergamo) நகரில் மனந்திருந்திய பாலியல் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி நிறுவினார்.

"அலெஸ்ஸான்றோ" (Alessandro Besuzio) மற்றும் "அகோஸ்டினோ" (Agostino Bariso) ஆகிய இரண்டு அருட்பணியாளர்கள் இவருக்குத் துணையாக இவருடன் இணைந்தனர். 1532ம் ஆண்டு, ஜெரோம் மத குருக்களுக்கான ஒரு மத அமைப்பினை நிறுவினார். அனாதைகள், நோயாளிகள் மற்றும் ஏழைகளின் பராமரிப்பு ஆகியவை, இந்த அமைப்பின் முக்கிய பணிகளாக இருந்தன.

ஜெரோம் இவ்வமைப்பினை பாதுகாவல் சம்மனசுகளுக்கு அர்ப்பணித்தார். இவ்வமைப்பினை இறைவனின் அன்னை அதிதூய கன்னி மரியாளிடமும், தூய ஆவியானவரிடமும் அர்ப்பணித்த இவர், பாதுகாவலுக்காக இறை தூதர் அர்சிஷ்ட ரபேலிடம் ஒப்படைத்தார். 1540ம் ஆண்டு, திருத்தந்தை "மூன்றாம் பவுல்" (Pope Paul III) இச்சபைக்கு அங்கீகாரம் அளித்தார்.

ஒருமுறை, வேகமாக பரவின தொற்றுநோயின்போது சேவை செய்துகொண்டிருந்த ஜெரோம், பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 1537ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, "சோமாஸ்கா" (Somasca) நகரில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா