Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல் ✠
(St. Gabriel of Our Lady of Sorrows)
     
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 27
    ✠ வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல் ✠ (St. Gabriel of Our Lady of Sorrows)

*பிறப்பு : மார்ச் 1, 1838
அசிசி, திருத்தந்தையர் மாநிலம் (தற்போது இத்தாலி)
(Assisi, Papal States (Now Italy)

*இறப்பு : ஃபெப்ரவரி 27, 1862 (அகவை 23)
இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு.
(Isola del Gran Sasso, Kingdom of Italy)

*முக்திபேறு பட்டம் : மே 31, 1908
திருத்தந்தை பத்தாம் பயஸ்

*புனிதர் பட்டம் : மே 13, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

*ஏற்கும் சமயம் :
புனித கபிரியேல் பேராலயம், அப்ருஸ்ஸ்ஸி
(San Gabriele, Teramo, Abruzzi)

*பாதுகாவலர் :
மத குருமார்கள், குருத்துவ மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இத்தாலியின் அப்ருஸ்ஸ்ஸி (Abruzzi)


ஃபிரான்செஸ்கோ பொஸ்சென்ட்டி (Francesco Possenti) எனும் இயற்பெயர் கொண்ட "வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்" ஒரு இத்தாலிய பாடுகளின் சபையின் (Passionist Clerical Student) குருத்துவ மாணவர் ஆவார். ஒரு தொழில்முறை குடும்பத்தில் பிறந்த இவர், இறைவனின் பாடுகளின் சபையில் சேர்வதற்காக தமது எதிர்கால இலட்சியங்களை விட்டுக்கொடுத்தவர். துறவு சபையின் வாழ்க்கை அசாதாரணமானதாக இல்லாவிடினும், துறவு சபையின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தார். வியாகுல அன்னையின்பால் இவர் கொண்ட பக்தியின் காரணமாக இவர் பிரபலமாக அறியப்பட்டார்.

ஃபிரான்சிஸ், 1838ம் ஆண்டு, மார்ச் மாதம், முதல் நாளன்று, இத்தாலியின் அசிசி நகரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் "சான்டே" (Sante) ஆகும். அவர், உள்ளூர் அரசு அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர். இவருடைய தாயாரின் பெயர் "அக்னேஸ்" (Agnes) ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பதினோறாவது குழந்தை ஆவார். 1841ம் ஆண்டு, "ரோஸா" (Rosa) என்ற இவரது தங்கை மரணமடைந்தார். 1842ம் ஆண்டு, இவருக்கு நான்கு வயதாகையில், இவருடைய ஏழு வயதான "அடேல்" (Adele) என்ற சகோதரியையும், பின்னர் அதே வருடத்தில் தன்னுடைய தாயை இழந்தார்.

ஃபிரான்சிஸ் தமது குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் தமது சகாக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். தமது தொண்டு மற்றும் பக்தியால் புகழ் பெற்றவராயிருந்தார். கடின குணமுள்ள இவர், விரைவில் கோபமடையும் தன்மையுள்ளவராகவும் இருந்தார். தமது ஆரம்ப கல்வியை "கிறிஸ்தவ சகோதரர்களிடம்" (Christian Brothers) கற்ற இவர், பின்னர் இயேசு சபையினரின் (Jesuits) கல்லூரியில் (முக்கியமாக லத்தீன் மொழியில்) பயின்று வெற்றிகரமான மாணவர் என்று பெயரெடுத்தார்.

1851ம் ஆண்டு, ஒருமுறை தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ், நோயினின்றும் குணமடைந்தால் மத வாழ்வில் இணைவதாக உறுதிமொழி எடுத்தார். ஆனால், நோய் குணமானது எடுத்த உறுதிமொழி மறந்து போனது. அதேபோல், ஒருமுறை அவர் தமது நண்பர்களுடன் வேட்டையாட சென்றபோது, தவறுதலாகச் சுடப்பட்ட ஒரு துப்பாக்கி ரவையிலிருந்து மயிரிழையில் தப்பினார்.

1848ம் ஆண்டு, இவரது சகோதரர் "பால்" (Paul) மரணமடைந்தார். 1853ம் ஆண்டு, இவரது சகோதரர் "லாரன்ஸ்" (Lawrence) தற்கொலை செய்துகொண்டார். 1853ம் ஆண்டு, ஃபிரான்சிஸ் மீண்டும் நோயில் வீழ்ந்தார். இம்முறை அவருக்கு தொண்டையில் கட்டி வந்திருந்தது. இம்முறையும் அவர் நோய் குணமானால் மத வாழ்வில் இணைவதாக வேண்டிக்கொண்டார். நோய் குணமானது. இம்முறை அவர் நிஜமாகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அவர் இயேசு சபையில் சேர விண்ணப்பித்தார். ஆனால் ஏதோ காரணங்களுக்காக அது தாமதித்தது. தற்போது மீண்டுமொரு துயர சம்பவம் நடந்தது. அவரது தாயாரின் மரணத்தின் பின்னர் அவரை அன்புடன் கவனித்து வந்த அவரது தமக்கையார் "மேரி லூயிஸா" (Mary Louisa) காலரா நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

"ஸ்போலேடோ" (Spoleto) நகரை பாதித்த காலரா நோயின் தாக்கத்தின் பின்னர், நகரின் மத குருமார்களும் குடிமை அதிகாரிகளும் இணைந்து அன்னை மரியாளின் பண்டைய சொரூபங்களின் ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். ஃபிரான்சிஸும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அன்னை மரியாளின் ஒரு சொரூபம் இவரைத் தாண்டிச் செல்கையில், "நீ இன்னும் ஏன் இவ்வுலகில் இருக்கிறாய்" என்று ஒரு குரல் அசரீரியாக இவருக்குள்ளேயே கேட்டதாக உணர்ந்தார். இச்சம்பவம் இவர் துறவற வாழ்வில் இணைய தீவிரமாக தூண்டிய முதல் சம்பவமாகும். அவர் "பாடுகளின் சபையில்" இணைய ஒரு மத குருவின் ஆலோசனைகளை வேண்டினார். ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் கொண்ட தனிப்பட்ட பக்தியே இவரை "பாடுகளின் சபையில்" இணைய தூண்டியது.

ஃபிரான்சிஸின் தந்தையார் இவரை துறவறம் செல்ல அனுமதிக்க மறுத்தார். தமது பல்வேறு உறவினர்கள் மூலம் இவரது மனதை மாற்ற முயற்சிகள் பல செய்தார். ஆனால், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஃபிரான்சிஸின் நோக்கங்கள் உணமையானவை என்றும் வெறும் சலனங்களல்ல என்றும் புரிந்து கொண்டார்.

"மொர்ரோவெல்" (Morrovalle) என்ற இடத்திலுள்ள "பாடுகளின் சபையின்" துறவறப்புகுநிலையில் இணைவதற்காக ஃபிரான்சிஸ் தமது சகோதரரும் "டொமினிக்கன் துறவியுமான" (Dominican Friar) "அலோஸியஸுடன்" (Aloysius) புறப்பட்டார். 1856ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் நாளன்று, அவர்கள் அங்கே சென்று சேர்ந்தனர். இரண்டு தினங்களின் பின்னர் அவர் பாடுகளின் சபையினரின் ஆடைகளைப் பெற்றுக்கொண்டார். வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்' என்ற பெயரை தமது மதப் பெயராக ஏற்றுக்கொண்டார். ஒரு வருடத்தின் பின்னர் அவர் "பாடுகளின் சபையின்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இவர் "பாடுகளின் சபையின்" தமது மாணவப் பருவத்தில் தாம் ஒரு வெற்றிகரமான மாணவர் என்பதை நிரூபித்தார். துறவற வாழ்வில் இன்னல்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றார். பணியில் முன்மாதிரியாக விளங்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். குழப்பகாலங்களிலும் போராட்ட சூழல்களிலும் கடவுளின் அன்பு மற்றும் பிறரன்பு எல்லாவித வேறுபாடுகளையும் களைந்துவிடும் என நிருபித்தார். கடுமையான துறவற வாழ்வில் பாதிப்படைந்தார். விரைவிலேயே இவர் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டார்.

சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்து வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி "ஓ என் அன்னையே துரிதமாக வாரும்" என்று சொல்லியபடியே, ஃபெப்ரவரி 27,1862ம் நாள் தன்னுடைய கனவாகிய குருத்துவத்தை அடைய முடியாமல் உயிர்விட்டார்.

இவர் மாணவராக "பாடுகளின் சபையில்" பயிற்சியில் இருந்த காலத்தில் துறவு சபையின் தலைவராக இருந்த "அருட்தந்தை 'தூய மரியாளின் நார்பெர்ட்" (Father Norbert of Holy Mary) கூறுகையில், "மரண தருவாயில், அன்னை மரியாளை கபிரியேல் நேரில் கண்டார்" என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)

நிகழ்வு

பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலின் இயற்பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்தே வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். ஒரு சமயம் தனியாய் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை மரியா அவரிடத்தில் பேசினார், "பிரான்சிஸ்! நீ உலக வாழ்க்கையின்மீது பற்றுக் கொள்ளாமல், உண்மையான இறைவனில் பற்றுகொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்". அன்னை மரியா அவரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துபோனார். பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு அப்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. உடனே அவர் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, அன்னை மரியா தன்னிடத்தில் சொன்னதையும் துறவியாகத் தான் மாற இருப்பதையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் அவருடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரான்சிஸ் பொசன்ட்ரி தன்னுடைய பிடியில் மிக உறுதியாக இருந்ததால், அவரை அவருடைய விருப்பம் போல் துறவு வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர். பிரான்சிஸ் பொசன்ட்ரி, தனது விருப்பம் போல் திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து பின்னாளில் பெரிய புனிதரானார்.

வாழ்க்கை வரலாறு

பிரான்சிஸ் பொசன்ட்ரி, 1838 ஆம் ஆண்டு, சாந்தே, ஆக்னஸ் என்ற தம்பதியருக்கு 11 வது மகனாகப் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல் பிரான்சிஸ் பொசன்ட்ரி, சிறுவயதிலேயே பக்தியில், அதிலும் குறிப்பாக வியாகுல அன்னையிடம் அளவு கடந்த பக்திகொண்டு விளங்கினார். இப்படி அவர் வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு ஜெபிக்கின்றபோதுதான், அன்னை மரியா அவருக்குத் தோன்றி, அவரை இறைப்பணி செய்ய அழைத்தார். உடனே அவர் தன் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு, திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து உன்னதத் துறவியாக விளங்கி வந்தார்.

திருப்பாடுகளின் சபையின் சேர்ந்த பின்பும்கூட அவர் வியாகுல அன்னையிடம் கொண்டிருந்த அன்பில் மாறவில்லை, அன்னை மரியாவிற்கு பாடல் இயற்றுவதும் அவர் புகழை எங்கும் பரப்புவதுமாய் இருந்தார். பிரான்சிஸ் பொசன்ட்ரி சபையில் சேர்ந்தபிறகு வியாகுல அன்னையின் மீது கொண்ட அன்பினால், அவர்மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் தனது பெயரை வியாகுல அன்னையின் கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், "அன்னை மரியாவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்கு, அன்னை ஏராளமான நன்மைகள் செய்வார்" என்பதாகும்.

பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு 24 வயது ஆகும்போது காச நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். இவருடைய புண்ணிய, எடுத்துகாட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு இவருக்கு 1920 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1.அன்னை மரியாவிடம் பக்தி

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார், அது அவருக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. நாமும் அன்னை மரியாவின் துணையை நாடி அவர் வழியில் நடக்கும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, "ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது" என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் - இசைமேதை, "E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்" என்றார்.


இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கு நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். எப்படி அந்த ஆர்மோனியம் வாசித்தவர், இசைமேதையை தன்னுடைய துணைக்கு அழைத்தாரோ அதுபோன்று நாம் நம்பிக்கையோடு அவரை, அன்னை மரியாவைத் துணைக்கு அழைத்தால், அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்கள் இன்பமாகவும், சோதனைகள் சாதனைகளாக மாறும் என்பது உண்மை.

ஆகவே, வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று அன்னை மரியாவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை அன்னை மரியா வழியாகப் பெற்று மகிழ்வோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா