Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கான்ராட் ✠ (St. Conrad of Piacenza)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 19
   ✠ புனிதர் கான்ராட் ✠ (St. Conrad of Piacenza)

*ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவி, யாத்திரீகர் :
(Franciscan tertiary, pilgrim and hermit)

*பிறப்பு : 1290
கலேண்டாஸ்கோ நகர், தூய ரோம பேரரசு
(Commune of Calendasco, Holy Roman Empire)

*இறப்பு : ஃபெப்ரவரி 19, 1351
நோடோ, சிசிலி அரசு
(Noto, Kingdom of Sicily)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church (Third Order of St. Francis and Sicily)

*முக்திபேறு பட்டம் : 1515
திருத்தந்தை பத்தாம் லியோ
(Pope Leo X)

*புனிதர் பட்டம் : ஜூன் 2, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

*முக்கிய திருத்தலங்கள் :
புனித நிக்கோலஸ் பேராலயம், நோடோ,
சிராகஸ் பிராந்தியம், இத்தாலி
(Cathedral of St. Nicholas, Noto, Province of Syracuse, Italy)

*பாதுகாவல் :
குடலிறக்க நோய்கள் குணமாதல், கலேண்டாஸ்கோ, நோடோ
(Cure of Hernias, Calendasco and Noto)

புனிதர் கான்ராட், செய்த பிழைக்கு மனம் வருந்தும் - வருத்தம் தெரிவிக்கும், "புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை துறவற சபையின் (Third Order of St. Francis) இத்தாலி நாட்டின் துறவியாவார்.

"கொர்ராடோ கான்ஃபலோனியேரி" (Corrado Confalonieri) எனும் இயற்பெயர் கொண்ட இவர், நகரின் முக்கிய பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தம்மைப் போன்றே பிரபுக்கள் குடும்பமொன்றில் பிறந்த இளம் பெண்ணான "எஃப்ரோஸின்" (Ephrosyne) என்பவரை தமது இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். எல்லா இளைஞர்களைப் போலவே வாழ்க்கை இனிமையாக சென்றது.

ஒருநாள் தமது வீட்டின் அதிகார வரம்புக்குள்ளேயே வழக்கமான பொழுதுபோக்கு அம்சமாக இவர் விளையாடும் வேட்டையின்போது, புதர்களினூடே இருக்கும் ஜீவராசிகள் வெளிவரும் என்பதற்காக, தமக்கு துணையாக வந்த பணியாளர்களிடம் பக்கத்திலுள்ள புதர்களுக்கு தீமூட்ட சொன்னார். எதிர்பாராவிதமாக காற்று திசை மாறி வீசவே, சிறு தீ பக்கத்திலுள்ள வயல்வெளிகளுக்கு பரவி, பின்னர் அருகாமையிலுள்ள காட்டில் பரவியது. அங்கிருந்து உடனேயே தப்பி ஓடினார் கொர்ராடோ.

ஒன்றுமறியா அப்பாவியான விவசாயி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டார். பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

கொர்ராடோ பகிரங்கமாக தமது தவறை ஒப்புக்கொண்டார். அப்பாவி விவசாயியின் உயிரைக் காப்பாற்றினார். ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்டஈடாக அவரது சொத்துக்கள் அனைத்தையும் நகர நிர்வாகம் பறிமுதல் செய்துகொண்டது.

திடீரென ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டதாலும், கொர்ராடோவின் கோழைத்தனத்துக்கு ஈடு செய்யும் சுய தண்டனை முயற்சியாகவும் கொர்ராடோவும் அவரது மனைவியும் இந்நிகழ்வில் ஆண்டவரின் கைகளைக் கண்டனர். இதன் விளைவாக, 1315ம் ஆண்டு, கொர்ராடோவும் அவரது மனைவியும் பிரிய முடிவு செய்தனர்.

கொர்ராடோ மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் (Franciscan tertiaries) துறவியர் சபையில் இணைந்தார். "எஃப்ரோஸின்" "எளிய கிளாராவின் சபை" (Order of Poor Clares) எனும் பெண்களுக்கான துறவியர் இல்லத்தில் இணைந்து துறவியானார். தூய்மைக்கான கொர்ராடோ'வின் கீர்த்தி வேகமாக பரவியது. அவரைக் காண வரும் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக அவரது தனிமை அழிக்கப்பட்டது. இதன் காரணமாக தமது யாத்திரையைத் தொடங்கினார். முதலில் ரோம் நகருக்கு சென்ற அவர், அங்கிருந்து புனித பூமிக்கும், மால்ட்டாவுக்கும் சென்றார். அதன் பிறகு சுமார் 1340ம் ஆண்டு, சிசிலியிலுள்ள ஒரு தொலைவான இடமான "பலெர்மோ'வுக்கு" (Palermo) சென்ற கொர்ராடோ, 11 வருடங்கள் தமக்காகவும் உலகத்துக்காகவும் செபத்தில் ஈடுபட்டிருந்தார்.

செபமும் தவமுமே அவரைச் சூழ்ந்திருந்த தூண்டுதல்களுக்கு பதில் என்பதை கண்டறிந்த கான்ராட், தாம் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக கூறியபடியே, 1351ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 19ம் தேதியன்று, சிலுவையாண்டவரின் முன்னே முழங்கால்படியிட்டு செபிக்கையில் மரணமடைந்தார். அவருடைய உடல், அவரது வேண்டுகோளின்படி, நகரிலுள்ள தூய நிக்கோலஸ் (Church of St. Nicholas) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.தூய கொன்ராட்.

"நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத் 3:8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் கொன்ராட் இத்தாலியில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தவர். இவர் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வேட்டையாடுவதில் அதிக நாட்டம் கொண்ட கொன்ராட் தன்னுடைய சகாக்களோடு ஒரு சமயம் வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் குறிவைத்த விலங்கானது தப்பித்து புதருக்குள் ஓடி ஒழிந்தது. இதனால் அவர் அந்த விலங்கை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று புதருக்குத் தீ வைத்தார். அந்தத் தீயானது பரவி பெருவாரியான இடத்தை அழித்து நாசமாக்கியது. இதற்கிடையில் அந்த வழியாக வந்த ஓர் ஏழைக் குடியானவன்தான் இதற்கு காரணம் என்று சொல்லி அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றது.

இச்செய்தி கேள்விப்பட்ட கொன்ராட் மிகவும் மனம் வருந்தினார். உடனே அவர் அரசாங்கத்திடம் சென்று, "நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம், தன்னை எப்படியும் தண்டித்துக் கொள்ளலாம்" என்றார். அதற்கு அரசாங்கம் அவரிடமிருந்து பெரும் இழப்பீட்டுத் தொகையைக் கோரியது. உடனே அவர் தன்னுடைய நிலம், சொத்து பத்துகள் அனைத்தையும் விற்று இழப்பீட்டைக் கட்டினார். எல்லாவற்றையும் இழப்பீடாக் கட்டியபிறகு அவர் பரம ஏழையானார். அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானும் தன்னுடைய மனைவியும் துறவறம் பூனுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன்னுடைய மனைவியை புனித கிளாரம்மாள் சபைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைத்துக்கொண்டு, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

கொன்ராட், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தன்னுடைய தவற்றுக்காக வருந்தாத நாளே இல்லை. தன்னுடைய வாழ்வின் அடுத்த முப்பது ஆண்டுகளில் அவர் நோட்டாவிற்குச் சென்று, அங்கிருந்த திருச்சிலுவையின் முன்பு முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் வேண்டுதலால் நிறைய அற்புதங்கள் நடைபெறுவதை அறிந்து நிறைய மக்கள் அவரிடத்தில் சென்றார்கள். அவர் அவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டி ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தந்தார். அவர் மூப்படைந்ததும், அப்படியே இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கொன்ராட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மனமாற்றம்

தூய கொன்ராட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக எந்தளவுக்கு மனம்வருந்தி, அதன்பின் மனம்திருந்தி வாழ்ந்துக் வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் நாம் செய்த தவற்றை உணர்ந்து, திருந்தி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று (லூக் 15: 7) ஆம், ஒரு பாவி மனமாறுவதால் வரக்கூடிய மகிழ்ச்சியை விடவும் இறைவனுக்கு வேறு என்ன பெரிய மகிழ்ச்சி வந்துவிடும்!.

கிரேக்க இலக்கியங்களில் வரக்கூடிய ஒரு நிகழ்வு. ஹெலன் என்ற இளவரசி ஒருவர் இருந்தார். அவர் பேரழகியாக இருந்தார். ஒரு சமயம் எதிரி நாட்டவர் ஹெலனுடைய நாட்டின்மீது போர்தொடுத்து, அவரை கைதியாக நாடு கடத்திச் சென்றனர். அங்கே அவர் தன்னிலை மறந்துபோய் விபச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் ஹெலனைக் காதலித்த இளைஞன், அவர் எங்கே இருக்கிறார் என்று தேடியலைந்து இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார். அந்த இளைஞர் ஹெலனிடம் சென்று, உண்மையில் அவர் யார், தான் யார் என்பதை எடுத்துச் சொன்னான். அப்போதுதான் ஹெல்னுக்குப் புரிந்தது உண்மையில் தான் யார்?, தான் ஏன் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று. உடனே அவர் தன்னுடைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, தன்னை அன்பு செய்த காதலனை மணந்துகொண்டார்.

ஹெலன் தன்னுடைய தவறை உணர்ந்ததும் மனம் திருந்தி வாழத் தொடங்கினார். அது போன்று நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து மனந்திருந்து வாழ்வதுதான் கடவுளுக்கு ஏற்ற செயலாகும்.

ஆகவே, தூய கொன்ராட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று குற்றங்களை உணர்ந்து, உண்மையான மனமாற்றம் அடைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா