Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

தூய கேத்ரின் தே ரிச்சி (St. Catherine de Ricci)
  Image result for தூய கேத்ரின் தே ரிச்சி  
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 13
 தூய கேத்ரின் தே ரிச்சி (St. Catherine de Ricci)


"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" - இயேசு.


வாழ்க்கை வரலாறு


கேத்ரின், 1522 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 ஆம் நாள், இத்தாலியில் உள்ள ப்ளாரென்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வாணிபம் செய்துவந்ததால், குடும்பம் செல்வச் செழிப்பில் திளைத்தது, அதனால் அவர் எந்ததொரு குறையும் இல்லாமல் வளர்ந்துவந்தார். கேத்ரின் தன்னுடைய பள்ளிக்கல்வியை மொன்டிசெல்லி என்னும் இடத்தில் கற்றார். அங்கு இவர் கல்வி கற்கும்போதே இறைவன் அழைப்பினை உணர்ந்து, துறவற சபையில் சேர்ந்தார்.


துறவற சபையில் சேர்ந்தபின்பு கேத்ரின் இயேசுவின் பாடுகளைக் குறித்து அதிகமாக தியானித்தார். அவர் அப்படி இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கும்போது பலநேரங்களில் பரவச நிலையை அடைந்தார். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தொடங்குகின்ற இந்த தியானம் வெள்ளிக்கிழமை மதியம் வரை நீடிக்கும். இதன்மூலம் கேத்ரின் இறைவனுடைய ஆசிர்வாதத்தை சிறப்பாகப் பெற்றார். அவர் இறைவனின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட உண்மையை அறிந்த மக்கள், ஆயர்கள், கர்தினால்கள், ஏன் திருத்தந்தையர்கள் கூட அவருடைய ஆலோசனையைக் கேட்பதற்காக வந்தார்கள். இது ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், இன்னொருபுறம் அவருடைய சபை அருட்சகோதரிகளால் மக்களை ஏமாற்றுகின்றார், நாடகம் போடுகின்றார் என்று கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகக்கப்பட்டார். இது கேத்ரினுக்கு மிகப் பெரிய வேதனை. அதனால் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிப்பதை நிறுத்திக்கொண்டார்.


கேத்ரின், என்னதான் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிப்பதை நிறுத்திக்கொண்டாலும் இயேசு அவரை வேறொரு விதமாய் தெரிந்துகொண்டு சிறப்பு செய்தார். ஆம், ஆண்டவராகிய இயேசு கேத்ரினுக்கு ஐந்து காய வரத்தைக் கொடுத்து, அவரை தன்னுடைய பாடுகளில் பங்குகொள்ளச் செய்தார். இதனால் கேத்ரின் மிகுந்த உடல் வேதனைக்கு உள்ளானார். ஆனாலும் ஆண்டவருடைய வேதனையில் தானும் பங்கு கொள்கின்றேன் என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார். இப்படி அவருடைய ஆன்மீக வாழ்வு ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர், தான் இருந்த சபையில் நவ கண்ணியர்களுக்குப் பொறுப்பாளர், துணை சபைத் தலைவி, தலைவி என்று பொறுப்புகளில் உயர்ந்துகொண்டே இருந்தார். இப்படி இயேசுவின் பாடுகளில் பங்குகொண்டு, உத்தம துறவியாக வாழ்ந்து வந்த கேத்ரின் 1590 ஆம் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1746 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினான்காம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய கேத்ரினின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


விமர்சனங்களை துணிவோடு எதிர்கொள்ளும் மனதிடம்

தூய கேத்ரின் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தொடர்ந்து தியானித்து வந்ததால், அவர் நாடகமாடுகின்றார், வெளிவேடம் போடுகின்றார் என்று அவருடைய சபை சகோதரிகளால் விமர்சிக்கப்பட்டார். அதைக் கண்டெல்லாம் அவர் சிறுதும் பயப்படாமல் ஏறக்குக்றைய பதினைந்து ஆண்டுகள் அதையே செய்துவந்தார். இவ்வாறு அவர் தன்னை வசிபாடியவர்களுக்கு, தன்னை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். தூய கேத்ரினை நினைவுகூரும் நாம், அவரைப் போன்று எதிர்வரும் விமர்சனங்களைத் துணிவோடு எதிர்கொள்கின்றோமா? அல்லது பின்வாங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


இந்த இடத்தில் அருளாளர் ரோஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ரோசிற்கு தான் செய்துவருகின்ற நற்செயல்களைப் பார்த்துவிட்டு மக்கள் ஏதாவது பேசுவார்களோ? தவறாக விமர்சிப்பார்களோ? என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. இந்த பயத்தினை எப்படியாவது போக்கவேண்டும் என்று நினைத்தார். ஒருநாள் அவர் நடந்துகொண்டிருந்தபோது குறுக்கே ஒரு தேள் வந்தது. அந்தத் தேள் அவரைக் கொட்ட நினைத்தது. அப்போது அவர் தான் அணிந்திருந்த காலணியால் ஓங்கி ஒரு மிதி மிதித்து அதைக் கொன்றார். பின்னர் அவர் தன்னுடைய மனந்திற்குள்ளே நினைத்துக்கொண்டார். "கொட்ட வந்த தேளைப் போன்று தேவையற்ற விமர்சங்களை காலில் போட்டு மிதித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் சிறந்தது" என்று. ஆம், தேவையற்ற விமர்சனங்களை நினைத்து வருந்திக்கொண்டிருந்தால், அதனால் பாதிக்கப்படுவது என்னமோ நாம்தான். அவற்றைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடப்பதுதான் சாலச் சிறந்த ஒரு செயலாகும். தூய கேத்ரினும் அப்படித் தான் தன்மீது சுமத்தப்பட்ட தேவையற்ற விமர்சனங்களை காலில் போட்டு மிதித்து தொடர்ந்து போய்கொண்டே இருந்தார்.


ஆகவே, தூய கேத்ரினின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரின் அன்பில் நிலைத்திருப்போம், அவருடைய பணியை சிறப்பாகச் செய்வோம், அப்போது எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா