Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ தூய பிளைஸ்✠ (St. Blaise)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 3
 
 ✠ புனிதர் பிளெய்ஸ் ✠ (St. Blaise)

*மறைசாட்சி, தூய உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

புனிதர் பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் ஆண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. புனிதர் பிளெய்ஸ், மறைசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய புனிதர் பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அப்போஸ்தலர்களின்படி, கைது செய்யப்பட்டு, சிறைச் சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் தனது ஜெபங்களைக் கொடுத்தார்; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாளும், "கிழக்கு மரபுவழி" (Eastern Orthodox) மற்றும் "கிரேக்க கத்தோலிக்க" (Greek Catholic) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் பதினொன்றாம் தேதியும் நினைவுகூறப்படுகின்றது.


தூய பிளைஸ் (Blaise) (பிப்ரவரி 03)

நிகழ்வு

கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக் காலத்தில் செபாஸ்டி என்ற இடத்தில் (தற்போதைய அர்மேனியா) ஆயராக இருந்த பிளைஸ் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தின் பொருட்டு கொல்லப்படுவதற்காக கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

அவ்வாறு அவர் இழுத்துச் செல்லப்பட்டபோது சிறுவன் ஒருவன் தொண்டையில் மீன்முள் குத்தி மிகவும் அவதிப்பட்டான். அவனைப் பார்த்து அவன்மீது இரக்கப்பட்ட பிளைஸ் அவனைத் தன்னருகே அழைத்து அவனுடைய தொண்டையில் கைவைத்து ஜெபித்தார். உடனே அந்த சிறுவனது தொண்டையில் இருந்த மீன்முள்ளானது வெளியே வர, அவன் வேதனையிலிருந்து சுகம் பெற்றான். பிளைஸ் சிறுவனது தொண்டையிலிருந்து மீன்முள்ளை நீக்கி அவனுக்கு சுகம் தந்ததால், அதன் அடையாளமாக அவருடைய விழாவின்போது யாராரெல்லாம் தொண்டை வலியால் அவதியுறுகிறார்களோ அவர்களுடைய தொண்டையில் குருக்கள் கை வைத்து ஜெபிப்பார்கள். அவர்களும் நலம் பெற்றுச் செல்வார்கள்.

வாழ்க்கை வரலாறு

தொடக்கத் திருச்சபையில் மிக முக்கியமான ஆளுமையாக புனிதராக அறியப்பட்டவர் தூய பிளைஸ். ஆனால் இவரைக் குறித்த செய்திகள் அவ்வளவாக இல்லை என்பதுதான் உண்மை.

தூய பிளைஸ் கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது. அப்படிருந்தாலும் ஏராளமான பேர் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய உயிரே போனாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து மட்டும் ஒருபோதும் தளரமாட்டோம் என்றளவுக்கு இருந்தார்கள். இவர்களில் தலைசிறந்தவராக அறியப்பட்டவர் பிளைஸ்.

செபாஸ்டி என்ற இடத்தில் ஆயராக இருந்த பிளைஸ் ஆட்சியாளர்களால் கிறிஸ்துவை மறுதலித்து உரோமைக் கடவுளை வழிபடப் பணிக்கப்பட்டார். ஆனால் பிளைசோ கிறிஸ்துவின் மீதுகொண்ட விசுவாசகத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சீற்றம் கொண்ட கப்பதோசியாவைச் சார்ந்த அக்ரிகோலா என்ற ஆளுநன் பிளைசை கொலைகளத்திற்கு இழுத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்யச் சொன்னான். இதனால் 316 ஆம் ஆண்டில் பல்வேறு விதமாக சித்ரவதை செய்யப்பட்டு அவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விசுவாசத்தில் உறுதி

தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவரிடமிருந்த உறுதியான விசுவாசம் - நம்பிக்கைதான். அவர் எத்துணை அச்சுறுத்தல்கள் வந்தபோதும் பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தபோதும் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மட்டும் மனம் தளரவே இல்லை. அவரிடத்தில் இருந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், "என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்... என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மனவுறுதியுடன் மனவுறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்" என்று. (மத் 10: 18, 22) ஆம், நாம் இயேசுவின் பொருட்டு பல்வேறு துன்பங்களையும் கொடுமைகளையும் சந்திக்க நேரிடலாம், அத்தகைய தருணங்களில் நாம் மனம்தளர்ந்து போய் விசுவாசத்தைக் கைவிட்டுவிடக்கூடாது, இறுதிவரை மனவுறுதியுடன் தூய பிளைசைப் போன்று சாவுக்கு அஞ்சாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் மீட்கப்படுவோம்.

இந்த இடத்தில் இன்னொரு நிகழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

எட்டாம் ஹென்றியின் ஆட்சியில் இரண்டு குருக்கள் கிறிஸ்துவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்து, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் அவர்கள் இருவரையும் தன்னிடம் அழைத்து, "கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது, மீறி அறிவித்தால் தாமஸ் (Thames) நதியில் தூக்கி வீசப்பட்டு, கொலைசெய்யப்படுவீர்கள்" என்றான். அதற்கு அந்தக் குருக்கள் இருவருமே ஒருமித்த குரலில், "எங்களுடைய இலக்கு விண்ணகம் அடைவதுதான், அதனை நாங்கள் நீரில் வைத்து இறந்து பெற்றால் என்ன? நிலத்தில் இறந்து பெற்றால் என்ன?" என்றார்கள். இதைக் கேட்டு மன்னன் மிரண்டுபோய் நின்றான்.

சாவுக்குப் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்த அந்த குருக்களும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகை. தூய பிளைசும் அப்படித்தான் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.

ஆகவே, தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று கிறிஸ்துவின்மீதுகொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Palayamkottai. Fr. Maria Antonyraj.
அர்ச்.ப்ளாஸியார் - மேற்றிரானியார்,வேதசாட்சி (கி.பி.316) 

                இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் செபாஸ்த் என்னும் நகருக்கு மேற்றிராணியாரானார். அக்காலத்திலுண்டான பயங்கரமான வேத கலாபனையினிமித்தம் இவர் ஒரு மலைக் கெபிக்குச் சென்று அவ்விடத்தில் ஜெபதபம் புரிந்துவந்தார். பல பிணிகளால் வருந்திய சிங்கம், புலி முதலிய காட்டு மிருகங்கள் அக்குகைக்குள் சென்று, அர்ச்சியசிஷ்டவரால் குணமடைந்து  வருவதுண்டு. ஓரு நாள் அந்நாட்டு அதிபதியின் ஊழியர் அந்;தக் காட்டில் வேட்டையாடுகையில், காட்டு மிருகங்கள் மேற்படி குகையில் ஜெபஞ் செய்யும் ப்ளாஸியருக்காகக் காத்திருப்பதைக் கண்டு, அதைத் தங்கள் எஜமானுக்கு அறிவித்தார்கள். அதிகாரியின் உத்தரவுப்படி சேவகர் ப்ளாஸியாரைப் பிடித்துக ;கொண்டு வருகையில், இறந்துபோன ஒரு குழந்தையை உயிர்ப்பித்ததைக் கண்ட சேவகரில் சிலர் கிறீஸ்தவர்களானார்கள். ப்ளாஸியார் வேதத்தை மறுதலித்துப் பொய் தேவர்களை வணங்கும்படி அதிகாரி செய்த முயற்சிகள் எல்லாம் வீணானதால், அவரை கொடூரமாய் அடிப்பித்து, சிறையிலடைத்தான்.  சிறையிலும் அநேக நோயாளிகள் அவரால் குணப்படுத்தப்பட்டார்கள்.  இவரது காயங்களிலிருந்து வடியும் இரத்தத்தை சில ஸ்திரீகள் பக்;தியோடு தொட்டு தங்கள் மேல் பூசிக்கொண்டதினால், அதிபதி அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் நெருப்பு அவர்களைச் சுடாததினால் சிரச்சேதம் செய்வித்தான். வேதசாட்சியை அதிபதியின் கட்டளைப்படி ஆழமான ஜலத்தில் அமிழ்த்தியும் அவர் சாகாததினால், அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை

                நாம் பக்தியோடு ஜெபிப்பதுடன், பக்திமான்களைப் பழித்துப் பரிகாசம் செய்யாமலும் இருப்போமாக.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா