Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அன்னி லின் ✠ (St. Anne Line)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 27
   ✠ புனிதர் அன்னி லின் ✠ (St. Anne Line)

*ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்க மறைசாட்சி :
(English Roman Catholic martyr)

*பிறப்பு : 1563
எஸ்செக்ஸ், இங்கிலாந்து (Essex, England)

*இறப்பு : ஃபெப்ரவரி 27, 1601
டிபர்ன், இங்கிலாந்து (Tyburn, England)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : டிசம்பர் 15, 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் (Bl. Pope Paul VI)

புனிதர் அன்னி லின், ஒரு ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்க மறைசாட்சியாவார். தமது கணவர் மரித்ததன் பின்னர், ரோமன் கத்தோலிக்க குருமார்களை மறைத்து வைப்பதிலும், அவர்களுக்கு இரகசிய இருப்பிடம் தருவதிலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில், முதலாம் எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth I) ஆட்சிகாலத்தில், ரோமன் கத்தோலிக்க குருமார்களை மறைத்து வைப்பதுவும், அவர்களுக்கு இரகசிய இருப்பிடம் தருவதுவும் சட்ட விரோத காரியங்களாகும். இறுதியில், "டிபர்ன்" (Tyburn) நகரில், ஒரு கத்தோலிக்க குருவுக்கு இரகசிய இருப்பிடம் கொடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை அவரை ஒரு மறைசாட்சியாக அறிவித்தது. அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் (Bl. Pope Paul VI), 1970ம் ஆண்டு, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

"அலைஸ் ஹைகம்" (Alice Higham) எனும் இயற்பெயர் கொண்ட இவர், "பியூரிடன் வில்லியம் ஹைகம்" (Puritan William Higham) என்பவரின் மகளாவார். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசனான (King of England; Lord/King of Ireland) "மூன்றாம் ஹென்றியின்" (Henry VIII) அரசவையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த "ரோகர் ஹைகம்" (Roger Heigham) வில்லியம் ஹைகமின் தந்தை ஆவார்.

ஏறத்தாழ 1560ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பிறந்த அலைஸ் ஹைகம், தமது சகோதரர் வில்லியமுடனும் (William), 1583ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் தாம் மணந்துகொண்ட "ரோகர் லின்" (Roger Line) என்பவருடனும், சுமார் 1580ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு மனம் மாறினார். வில்லியம் மற்றும் ரோகர் லின் இருவருமே, கத்தோலிக்கர்களாக மாறிய காரணத்தால், தமக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்களை இழந்தனர். அலைஸ் ஹைகம், தமது வரதட்சினைகளை இழந்தார். கத்தோலிக்கர்கள் மத்தியில், திருமணமான "அலைஸ்", "அன்னி" என்று அறியப்பட்டது. ஆனால், இவர் ஏற்கனவே தாம் மதம் மாறியபோது அந்த பெயரை ஏற்றுக்கொண்டிருந்தார்.

ரோகர் லின் மற்றும் வில்லியம் ஹகம் இருவரும் திருப்பலியில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டனர். வில்லியம் ஹைகம், இங்கிலாந்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது, ரோகர் லின், டச்சு மொழி பேசும் பெல்ஜியம் (Belgium) நாட்டின் வடக்கு பிராந்தியமான "ஃபிளான்டர்ஸ்" (Flanders) நாடு கடத்தப்பட்டார். ரோகர் லின், ஸ்பெயின் அரசனிடமிருந்து தமக்கு கிடைத்த சிறு சலுகைத் தொகையில் ஒரு பகுதியை 1594ம் ஆண்டில் தாம் மரிக்கும்வரை தனது மனைவிக்கு தவறாமல் அனுப்பினர்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், ஆங்கிலேய இயேசுசபை குருவான (English Jesuit priest) தந்தை ஜான் ஜெரார்ட் (Father John Gerard) என்பவர், மறைந்து வாழும் கத்தோலிக்க குருமாருக்காக ஒரு அகதிகள் இல்லத்தை திறந்தார். அதற்கு நிர்வாகியாக, புதிதாய் கைம்பெண்ணான உடல் நலம் கெட்டிருந்த அன்னி லின் நியமிக்கப்பட்டார். தந்தை ஜான் ஜெரார்ட் சிறையிலிருந்த மூன்று வருட காலமும் அன்னி லின் அகதிகள் இல்லத்தை திறம்பட நடத்தினார். இறுதியில் தந்தை ஜான் ஜெரார்ட், லண்டன் கோபுரத்திற்கு மாற்றப்பட்டார். அங்கே சித்திரவதை செய்யப்பட்ட அவர், அதிலிருந்து தப்பிச் சென்றார். அவர் தமது சுயசரிதத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

"சிறையில் இருந்து நான் தப்பித்த பிறகு, அன்னி லின் அந்த வீட்டை நிர்வகிப்பதை விட்டுவிட்டாள். அப்போதிருந்து அவர் பல மக்களுக்கு அறிமுகமானவர் ஆவார். எனக்காக எந்த வீட்டையும் அவர் ஏற்பாடு செய்வது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பற்றதாக இருந்தது. அதற்கு பதிலாக, அவள் மற்றொரு கட்டிடத்தில் குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து, அங்கே குருக்களை தங்கவைத்தாள். ஆயினும், ஒரு நாள், (இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்த தினத்தன்று) அவள் வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் கத்தோலிக்கர்களை திருப்பலி காண அனுமதித்தாள். சில அயலார்கள் அன்று கூட்டத்தைக் கவனித்த அதே வேளை, சில காவலர்களும் கூட்டத்தில் இருந்தனர்."

"அன்னை மரியாளின் சுத்திகரிப்பு விழா" (Purification of Our Blessed Lady) என்றும், "இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்த தின விழா" (Presentation of Jesus at the Temple) என்றும் அழைக்கப்படும் 1601ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் இரண்டாம் நாளன்று, அன்னி லின் வீடு சோதனை செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த நாளில், திருப்பலியின் முன்னர், மெழுகுவர்த்திகள் பாரம்பரியப்படி அர்ச்சிக்கப்படுகின்றன. இந்த சடங்கின் போது, காவலர்கள் திடீரென புகுந்து கைது செய்தனர்.

"அருட்தந்தை பிரான்சிஸ் பேஜ்" (Fr. Francis Page) எனும் குருவானவரால், லின் ஏற்பாடு செய்திருந்த விசேட மறைவிடத்திற்குள் நழுவிப் போக முடிந்தது. பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், "மார்கரெட் கேஜ்" (Margaret Gage) எனும் இன்னுமொரு பெண்மணியுடன் அன்னி லின் கைது செய்யப்பட்டார். திருமதி மார்கரெட் கேஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்; பின்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால் லின் "நியூகேட்" (Newgate Prison) சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

1601ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 26ம் நாளன்று, "ஓல்ட் பெய்லி லேனில்" (Old Bailey Lane) உள்ள செஷன்ஸ் ஹவுஸில் (Sessions House) அவர் விசாரிக்கப்பட்டார். காய்ச்சலால் பலவீனமாக இருந்த லின், நடக்க இயலாததால் ஒரு நாற்காலியில் வைத்து கொண்டுசெல்லப்பட்டார். ஒரு குருவானவரை மறைத்து வைத்ததற்காகவும், இன்னமும் ஆயிரம் குருவானவர்களை மறைத்து வைக்க இயலவில்லையே என்பதற்காகவும் வருத்தப்படுவதாக கூறினார். "சர் ஜான் போப்ஹாம்" (Sir John Popham) எனும் நீதிபதி, ஒரு செமினரி குருவானவருக்கு உதவிய குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

1601ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, "அருளாளர் ரோகர் ஃபில்கோக்" (Blessed Fr. Roger Filcock) மற்றும் "அருளாளர் மார்க் பர்க்வொர்த்" (Blessed Fr. Mark Barkworth) ஆகிய இரண்டு குருவானவர்களின் முன்னிலையில் அன்னி லின் தூக்கிலிடப்பட்டார். அவர்களும் அன்றைய தினமே தூக்கிலிடப்பட்டார்கள். அன்னி லின், விசாரணையின்போது தாம் சொன்னதையே தூக்கு மேடையிலும் பார்வையாளர்களின் முன்னிலையில் சத்தமாக பின்வருமாறு கத்தி கூறினார்:. "ஒரு கத்தோலிக்க பாதிரியாரைத் தற்காத்துக்கொண்டதற்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை நான் செய்ததை என் மனப்பூர்வமாகவே செய்துள்ளேன். ஒரு குருவானவரை மறைத்து வைத்ததற்காக, ஆனால், இன்னமும் ஆயிரம் குருவானவர்களை காக்க இயலாததற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்"
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா