Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அடேலா ✠ (St. Adela of Normandy)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 24
   ✠ புனிதர் அடேலா ✠ (St. Adela of Normandy)

*பிலாயிஸ், சார்ட்ரெஸ் மற்றும் மியூக்ஸ் நகரங்களின் கோமாட்டி :
(Countess of Blois, Chartres, and Meaux)

*பிறப்பு : 1067
நோர்மண்டி, ஃபிரான்ஸ் (Normandy, France)

*இறப்பு : மார்ச் 8, 1137 (வயது 6970)
மர்ஸிக்னி-ஸுர்-லொய்ர், ஃபிரான்ஸ் (Marcigny-sur-Loire, France)

புனிதர் அடேலா, ஃபிரான்ஸ் நாட்டின் "பிலாயிஸ்" (Blois), "சார்ட்ரெஸ்" (Chartres) மற்றும் "மியூக்ஸ்" (Meaux) நகரங்களின் கோமாட்டியும், "பிலாயிஸ்" கோமகன் (Count of Blois) "இரண்டாம் ஸ்டீஃபனின்" (Stephen II) மனைவியுமாவார். இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக வணங்கப்படுகின்றார்.

1096-1100 மற்றும் 1101-02 ஆண்டு காலங்களில், தமது கணவர் இல்லாத காலத்தில், "பிலாயிஸ்" நகரின் அரசாட்சிப் (Regent of Blois) பிரதிநிதியுமாவார். 1102 முதல் 1120ம் ஆண்டு வரையான காலத்தில், வயது வராத தமது மகனுக்குப் பதிலாக அரசாட்சிப் பிரதிநிதியாக ஆண்டார்.

இவர், இங்கிலாந்து நாட்டின் "முதல் நார்மன் அரசனான" (First Norman King of England) "முதலாம் வில்லியமின்" (William I) மகளாவார். இங்கிலாந்து நாட்டின் அரசியான "மெட்டில்டா" (Matilda of Flanders) இவரது தாயாராவார். இங்கிலாந்தின் அரசனான "ஸ்டீஃபன்" (Stephen) மற்றும் "வின்ச்செஸ்டர்" ஆயரான (Bishop of Winchester) "ஹென்றி" (Henry of Blois) ஆகியோர் இவரது குழந்தைகளாவர்.

இவர் பிறந்த வருடம் சரியாக தெரியாத காரணத்தால், 1066 மற்றும் 1070 ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில் இவர் பிறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இவரது தந்தை இங்கிலாந்தின் ஆட்சிக்கு வந்த பிறகு பிறந்த காரணத்தால், இவர் 1067ம் ஆண்டு பிறந்திருக்கலாம். இவர், இங்கிலாந்தின் அரசன் முதலாம் ஹென்றிக்கு (King Henry I of England) மிகவும் பிடித்த சகோதரியாவார். லத்தீன் அறிவைக் கொண்ட அடேலா ஒரு சிறந்த கல்வியாளரும், சுறுசுறுப்பும், வீரமும் கொண்ட பெண்ணாவார்.

சுமார் 1083ம் ஆண்டு, அடேலா, தமது பதினைந்தாவது வயதில், பிலாயிஸ் கோமகனின் (Count of Blois) மகனான "ஸ்டீஃபன் ஹென்றியை" (Stephen Henry) திருமணம் செய்துகொண்டார். ஸ்டீஃபன் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இவரைவிட மூத்தவராக இருந்தார். ஸ்டீஃபன், 1089ம் ஆண்டு, தமது தந்தையின் மரணத்தின் பின்னர், "பிலாயிஸ்" (Blois), "சார்ட்ரெஸ்" (Chartres) மற்றும் "மியூக்ஸ்" (Meaux) நகரங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்.

ஸ்டீஃபன் ஹென்றி, 1096ம் ஆண்டு, தமது மைத்துனரும், "நார்மண்டியின் பிரபுவுமான" (Duke of Normandy) "ராபர்ட் கர்தூஸ்" (Robert Curthose) என்பவருடன் இணைந்து, திருத்தந்தை இரண்டாம் அர்பன் (Pope Urban II) அவர்களால் "புனித பூமியை" (Holy Land) மீட்பதற்காக அழைக்கப்பட்ட முதலாம் சிலுவைப் போரில் (First Crusade) பங்குகொள்ள இணைந்தார். அடேலாவுக்கு ஸ்டீபன் எழுதிய கடிதங்களில் சிலுவைப் போரின் தலைவர்களின் அனுபவங்களையும், தாம் இல்லாத காலத்தில் அவர் பிலாய்சை சிறப்பாக ஆளுவார் என்ற தமது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தார்.

10951098ம் ஆண்டுகாலங்களில் முதலாம் சிலுவைப்போரின்போதும், பின்னர் இரண்டாம் தடவையாக 1101ம் ஆண்டும், தமது கணவர் நாட்டிலில்லாத காலங்களில் சிறப்பாக ஆட்சிப் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். இக்காலகட்டங்களில், புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு துறவியருக்கு அனுமதியளித்தார். இவர், "சார்ட்ரஸ்" (Bishop of Chartres) ஆயரான "புனிதர் இவோ" (Saint Ivo of Chartres) என்பவருடன் இணைந்து பல்வேறு காரியங்களைச் செய்தார். தமது ஆட்சிக் காலத்தில், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கன்னியாஸ்திரிகளை கட்டுப்படுத்துவது, மற்றும் ஏற்றுக்கொண்ட சத்தியப் பிரமாணங்கள் பற்றின பெரும் பிரச்சினைகள் சம்பந்தமாக இருவரும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். கணவர் இல்லாத காலங்களில் அடேலா நாடு முழுதும் பயணித்தார். பிரச்சனைகளை தீர்த்துவைத்தார். பொருளாதார வளர்ச்சிகளை ஊக்குவித்தார். அரசருடன் இணைந்து போருக்குச் செல்லுமாறு வீரர்களை தூண்டினார்.

1100ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடு திரும்பிய ஸ்டீஃபன், 1101ம் ஆண்டு இரண்டாம் சிலுவைப் போரில் கலந்துகொண்டார். இறுதியில், 1102ம் ஆண்டு, எகிப்து நாட்டின் "ஃபடிமிட் கலிபேட்" (Fatimid Caliphate) என்பவருடன் நடந்த "ரம்லா போரில்" (Battle of Ramla) பொறுப்பேற்றிருந்த ஸ்டீஃபன், நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனார்.

கணவரின் மரணத்தின் பின்னர், வயதுக்கு வராத மகன் "திபௌட்" (Thibaud) ஆட்சி பொறுப்பேற்கும் வரை அடேலா நாட்டை ஆண்டார். மகன் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் ஆட்சியில் வழிகாட்டினார்.

பக்தியுள்ள, பெனடிக்டைன் துறவியர்பால் அனுதாபம் கொண்ட அடேலா, தமது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பல்வேறு உயர் ஆசிரியர்களை நியமித்திருந்தார். அடேலா, தமது இளைய மகன் ஹென்றியை கருத்தரித்திருந்த வருடம், அவரது கணவரான ஸ்டீஃபன், சிலுவைப்போர் காரணமாக ஃபிரான்சிலிருந்தார். ஹென்றிக்கு இரண்டு வயதானபோது, அவரை கிழக்கு ஃபிரான்சின் "க்லுனி" (Cluny) எனுமிடத்திலுள்ள முன்னாள் பெனடிக்டைன் (Former Benedictine monastery) துறவு மடமான "க்லுனி" (Cluny Abbey) துறவு மடத்திலுள்ள ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார். மத்திய கால வழக்கங்களின்படி, ஹென்றி கடவுளின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டார்.

வளர்ந்த ஹென்றி, இங்கிலாந்து நாட்டின் "சொம்ரேஸ்ட்" (Somerset) எனுமிடத்திலுள்ள "பில்டொன்" (Pilton) பங்கிலுள்ள "கிளஸ்டோன்பரி" (Glastonbury) மடத்தின் மடாதிபதியானார். பின்னர், "வின்ச்செஸ்டர்" (Bishop of Winchester) ஆயரானார். அவர் பாலங்கள், கால்வாய்கள், அரண்மனைகள், கோட்டைகள், மற்றும் முழு கிராமங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டுமான பணிகளுக்கு நிதியுதவி செய்தார். மேலும், டஜன் கணக்கான மடாலயங்களையும் சிற்றாலயங்களையும் கட்டிய ஆயர் ஹென்றி, புகழ்பெற்ற, மதிப்பு மிக்க "வின்செஸ்டர் பைபிள்" (Winchester Bible) உள்ளிட்ட பல புத்தகங்களுக்கு நிதியுதவி செய்தார்.

அடேலா தனது மூத்த மகனான வில்லியம் (William) உடன் சண்டையும் சச்சரவுகளும் கொண்டிருந்தார். முன்னர், தமது வாரிசாக வில்லியமை நியமித்திருந்தபோதிலும், 1107ம் ஆண்டு, அவரை வாரிசாக மாற்றுவதற்காக தனது தம்பி தியோபல்டை (Theobald) நியமித்தார்.

அடேலா, 1120ம் ஆண்டு, "மார்சிக்னி பள்ளியில்" (Marcigny Convent) ஓய்வு பெற சென்றார். அவர் தமது குழந்தைகள், மற்றும் அவர் ஏற்கனவே ஆட்சி செய்த நிலப்பிரதேச தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்புகொண்டிருந்தார். அவர்களுடன் தொடர்புகொள்வதோடு, தமது செல்வாக்கை பிரதேசங்களில் பராமரிக்கவும் செய்தார்.

அதே வருட இறுதியில், தமது கணவருடன் கடல் பயணம் செய்துகொண்டிருந்த அடேலாவின் மகளான "லூசியா-மஹௌட்" (Lucia-Mahaut) தாம் பயணம் செய்த "வெள்ளைக் கப்பல்" (White Ship) மூழ்கியதால் மரணமடைந்தார். ஆங்கிலேயர் சிம்மாசனத்தில் தனது மகன் ஸ்டீஃபனைக் காண்பதற்காக அடேலா நீண்ட காலமாக வாழ்ந்தார். அவர், 1137ம் ஆண்டு, "மார்சிக்னியில்" (Marcigny) மரித்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா