✠தூய ஃபாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டா✠
(Saints Faustinus and Jovita) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
15 |
✠தூய ஃபாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டா✠
(Saints Faustinus and Jovita)
படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்
(சீஞா 16:16)
ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டார் இருவரும் இத்தாலியில் , லம்பார்தேயில்
உள்ள ப்ரசியா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் .உடன்
பிறந்த சகோதரர்கள் . முதலாமவர் குருவாக இருந்தார் .இரண்டாமரோ
திருத்தொண்டராக இருந்தார் .பாரம்பரியத் தகவல்களின்படி இருவருமே
தீவிரமாக நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச்
செய்வதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது தெரிகிறது.
கிறிஸ்தவர்களைக் கொன்றழித்து ஆனந்தம் அடைந்த அரசர்களை மகிழ்விக்க
ஆளுநர்களும் கங்கனம் கட்டிச் செயல்பட்டார்கள் . அப்படியான ஆளுநர்களுள்
ஒருவரான ஜூலியன் இச்சகோதரர்கள் இருவரையும் கைது செய்தான்
.துன்புறுத்தி குதூகலித்தான் .ப்ரசியாவிலிருந்து பிலான் நகருக்கும்
அங்கிருந்து உரோமைக்கும் ,பிறகு நேப்பிள்ஸ் பகுதிக்கும்
மீண்டும் ப்ரசியாவுக்கும் இருவரையும் கட்டி இழுத்துச்
சென்றான்.
அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கமா வந்து பேரரசர் அட்ரியன் இருவரைப்
பற்றியும் விசாரித்தான் .இதைக் குறித்து ,அப்போது பேரரசன் அட்ரியனுடன்
ப்ரசியாவுக்கு வந்திருந்த புனித கலாசெருஸ் எழுதியுள்ளார் .இவர்
ப்ரசியாவைத் தாய் மண்ணாகவும் ,பேரரசர் அட்ரியன் அரசவையில் அதிகாரியாகவும்
இருந்தவர்.
விசாரணையின்போது சூரியனை வணங்கும்படி கட்டளை பிறப்பித்தான் பேரரசன்
. அதை மறுத்து, "உலகிற்கு ஒளிதர சூரியனைப் படைத்த இறைவனைத் தவிர
வேறொன்றையும் வணங்க மாட்டேன் " என்று ஃபாஸ்டினுஸ் துணிச்சலுடன்
பதிலுரைத்தார்.
தாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த
சிலை ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்த ஜோவிட்டா
"விண்ணகத்திலிருந்து ஆட்சி செய்யும் இறைவனையே நாங்கள் வணங்குகிறோம்
. அவரை சூரியனைப் படைத்தார். நீங்களும் இந்த சிலையும் கருகிப்போவீர்கள்
.இதை வணங்கும் அனைவருக்கும் அவமானமே வந்து சேரும்" என்று ஒளிபடைத்த
கண்ணினனாக முழங்கினார்.
உடனேயே அச்சிலை கறுத்துப்போனது. அங்கு நின்றிருந்த பூசாரிகளை
அனுப்பி சிலையைச் சுத்தம் செய்யும்படி அரசன் கட்டளையிட்டான் .
பயந்து நடுங்கி தயங்கியபடியே அவர்கள் சென்றார்கள் . சென்று அச்சிலையைத்
தொட்டதும் அது சாம்பல் போல உதிர்ந்து விழுந்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போன பேரரசன் பசியோடும் பட்டினியோடும்
வளர்க்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு இரையாக்கு வதற்காக அதன்
குகைகளுக்கு இருவரையும் இழுத்துச் செல்ல கட்டளையிட்டான் . அதன்படியே
வீரர்கள் செய்தார்கள் . குகையின் கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கங்கள்
பாய்ந்து வந்தன . பாய்ந்து வந்த சிங்கங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு
பணிந்து நின்றன .இதை நேரில் பார்த்த புனித கலாசெருஸ் உண்மைக்
கடவுளை நம்பித் தன்னோடு 12 ஆயிரம் மக்களைச் சேர்த்துத்
திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவரானார்.
பிறகு இருவரையும் சிறையில் அடைத்து உணவும், நீரும் கொடுக்காது
பட்டினி போட்டு கொல்லத் தயாரானார்கள் . சிறையில் இருந்தபோது வானதூதர்கள்
வந்து இருவரையும் திடப்படுத்தினார்கள் . பயம் போக்கி மகிழ்ச்சி
அளித்தார்கள் .அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த ஒளியைப்
பார்த்த எண்ணற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள் .
நிறைவில் இருவரும் தலை வெட்டப்பட்டு மறைசாட்சி ஆனார்கள் .இது
120 ஆம் ஆண்டில் நடந்தது.
தங்கள் நாட்டின் முதன்மைப் பாதுகாவலராக வைத்த இவர்களிடம் மன்றாடுவதுடன்
, இவர்களின் புனிதப் பொருள்களையும் ப்ரசியா மக்கள் பாதுகாத்து
வருகிறார்கள்
.
ஒளிரும் இறைவனின் திரு முக தரிசனத்தை படைப்பு அனைத்திலும்
தேடுவோர் அவை சொல்லும் வாழ்விற்கான இறை நற்செய்தியைக் கண்டுகொள்ள
முடியும்.
=======================================================================
(ஃபெப்ரவரி 15)
புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா
"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப்
பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்ல்போது நீங்கள்
பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில்,
விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
இவ்வாறே, உங்களுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள்
துன்புறுத்தினார்கள் (மத் 5: 11,12)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் உடன் பிறந்த
சகோதரர்கள். இருவரும் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கு
இத்தாலியில் உள்ள பிரசியாவில் பிறந்தவர்கள். இவர்களுடைய காலத்தில்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. இப்படிப்பட்ட
சமயத்திலும் சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை
மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்கள்.
ஒருசமயம் பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை
மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கும்போது உரோமை ஆளுநன் ஜூலியன்
அங்கு வந்தான். அவன் எப்போதும் அரசனை மகிழ்ச்சிப்படுத்தவும்
அதன்வழியாக ஆதாயம் அடைவதுமாக இருந்தான். சகோதரர்கள் இருவரும்
போதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவன், இருவரையும் தெருக்களில்
இழுத்துக்கொண்டு போய் அரசன் முன்பாக நிறுத்த நினைத்தான். எனவே
அவன் அவர்கள் இருவரையும் படைவீரர்களிடம் பிரசியாவிலிருந்து மிலனுக்கும்
பின்னர் மிலனிலிருந்து உரோமைக்கும் இழுத்துக்கொண்டு போக ஆணையிட்டான்.
அதன்படி படைவீரர்கள் பாஸ்டினுசையும் ஜோவிட்டாவையும் தெருக்களில்
இழுத்துக்கொண்டு போகும்போது உரோமை அரசன் அட்ரியன் அங்கு வந்தான்.
அவன் அவர்களிடம், "நீங்கள் இருவரும் உங்களுடைய கடவுளை மறுத்தலித்துவிட்டு
சூரியனை வணங்கினாலோ அல்லது இங்கே இருக்கும் சிலையை வணங்கினாலோ
நான் உங்களை விடுவித்து விடுவேன" என்றான். அதற்கு ஜோவிட்டா,
"நாங்கள் உண்மைக் கடவுளான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தவிர
வேறு யாரையும் வணங்க மாட்டோம். மேலும் இதோ இருக்கின்றதே இந்தச்
சிலை கருகிப்போகிவிடும" என்றார். அவர் சொன்னதுபோன்றே சிறுது
நேரத்தில் அந்தச் சிலை கருகிச் சாம்பலானது.
இதனால் சினம்கொண்ட அரசன் அவர்கள் இருவரையும் சிங்கத்திற்கு
முன்பாக இரையாகப் போட்டான். ஆனால், சிங்கம் அவர்களை ஒன்றுமே
செய்யவில்லை. இதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன அரசன் அவர்களை
சிறையில் அடைத்துவைத்து கொடுமையாகச் சித்ரவதை செய்ய காவலர்களைப்
பணித்தான். காவலர்கள் அவர்களை எவ்வளவோ கொடுமைப்படுத்தியபோதும்
தங்கள் நம்பிக்கையில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். இதற்கிடையில்
வானதூதர் சகோதரர்கள் இருவருக்கும் முன்பாகத் தோன்றி அவர்களை நம்பிக்கையில்
திடப்படுத்தினார். இதனால் அவர்கள் இருவரும் இன்னும் நம்பிக்கையில்
உறுதியானார்கள். அவர்கள் சிறைக்குள்ளே ஆண்டவரின் நற்செய்தியை
வல்லமையோடு எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். இதனால் சிறையில் இருந்த
நிறையப் பேர் ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.
இதைக் கண்ட சிறை அதிகாரி செய்தியை அரசனிடம் சொல்ல, அவன் சினமுற்று
சகோதரர்கள் இருவரையும் தலை வெட்டிக் கொன்றான். இவ்வாறு
பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் இரத்தம் சிந்தி ஆண்டவர் இயேசுவுக்கு
சான்று பகர்ந்தார்கள்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டாவின் விழாவைக்
கொண்டாடுகின்ற நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை ஏற்றல்
தூய பாஸ்டினுசும் தூய ஜோவிட்டாவும் ஆண்டவர் இயேசுவுக்காக பல
துன்பங்களை அனுபவித்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர்கள் இருவரையும் நினைவுகூரும் நாம், ஆண்டவர் இயேசுவுக்காக,
அவருடைய நற்செய்தியின் விழுமியங்களுக்காக துன்பங்களை மனமுவந்து
ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார்,
"என்னைப் பின்பற்ற விரும்பும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத்
தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக்
காத்துக்கொள்ள விரும்பும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்
பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவார் (மத்
16: 24, 25) என்று. தூய பாஸ்டினுசும் தூய ஜோவிட்டாவும் ஆண்டவர்
இயேசுவுக்காக பல துன்பங்களை அனுபவித்தார்கள், ஏன் தங்களுடைய உயிரையும்
தந்தார்கள். அதனால் அவர்கள் இந்த மண்ணுலகில் இல்லாவிட்டாலும்
நம்முடைய மனங்களில் குடிகொண்டு இருக்கிறார்கள். நாமும் இவர்களைப்
போன்று ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை மனமுவந்து ஏற்றுகொள்கின்றபோது,
இறைவனின் அருளைப் பெறுவது உறுதி.
ஆகவே, பாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டாவைப் போன்று ஆண்டவர் இயேசுவின்
நற்செய்தியை மக்களுக்கு துணிவுடன் அறிவிப்போம். அதனால் வரக்கூடிய
துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம். இறைவழியில் எப்போதும்
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
|
|
|