✠ புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ✠
(Saints Cyril and Methodius) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
14 |
✠ புனிதர்கள் சிரில் மற்றும்
மெதோடியஸ் ✠ (Saints Cyril and Methodius)
*ஆயர்கள்/ ஒப்புரவாளர்கள்
(Bishops/ Confessors)
அப்போஸ்தலர்களுக்கு நிகரானவர்கள் (Equals to the Apostles)
ஐரோப்பாவின் பாதுகாவலர்கள் (Patrons of Europe)
அடிமைகளின் அப்போஸ்தலர்கள் (Apostles to the Slavs)
*பிறப்பு :
சிரில் : 826 அல்லது 827
*மெதோடியஸ் : 815
தெசலோனிக்கா, பைஸான்தீனிய பேரரசு (தற்போதைய கிரேக்க நாடு)
(Thessalonica, Byzantine Empire (Present-day Greece)
*இறப்பு :
சிரில் : ஃபெப்ரவரி 14, 869
ரோம் (Rome)
*மெதோடியஸ் : ஏப்ரல் 6, 885
வெலெராட், மொராவியா
(Velehrad, Moravia)
*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை (Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரன் திருச்சபை (Lutheran Church)
*பாதுகாவல் :
ரோமன் கத்தோலிக்க மற்றும் மரபுவழி திருச்சபைகளுக்கிடையேயான ஒற்றுமை
(Unity between Orthodox and Roman Catholics),
ஐரோப்பா (Europe),
பல்கேரியா (Bulgaria),
"மசெடோனியா" குடியரசு (Republic of Macedonia),
"செக்" குடியரசு (Czech Republic),
"ஸ்லோவேகியா" (Slovakia),
"ல்ஜூப்ல்ஜனா" உயர்மறை மாவட்டம்
(Archdiocese of Ljubljana)
புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இரு சகோதரர்களும்
"பைஸன்டைன்" (Byzantine) நாட்டின் கிறிஸ்தவ இறையியலாளர்களும்,
மறை பரப்பாளர்களுமாவர். அவர்களின் நற்பணிகள் மூலம், அனைத்து அடிமைகளின்
கலாச்சார வளர்ச்சியிலும் மேம்பாடு பெற்றனர். இதன் காரணமாகவே,
இவர்களிருவரும், "அடிமைகளின்அப்போஸ்தலர்" என்று போற்றப்பட்டனர்.
தற்போதைய கிரேக்க நாடான "பைஸன்டைன்" (Byzantine) நாட்டில் பிறந்த
இவர்களிருவரினதும் தந்தை பெயர் "லியோ" (Leo) ஆகும். "மரியா"
(Maria) இவர்களது தாயார் ஆவார். லியோ மற்றும் மரியாவுக்கு பிறந்த
ஏழு குழந்தைகளில் சிரில் கடைக்குட்டி ஆவார். சிரிலின் இயற்பெயர்
"காண்ஸ்டன்டைன்" (Constantine) ஆகும். இவர் தமது மரணத்தின்
சிறிது காலத்தின் முன்னே ரோம் நகரில் துறவறம் பெற்றபோது,
சிரில் என்னும் மதப் பெயரை ஏற்றுக்கொண்டார்.
"மைக்கேல்" (Michael) எனும் இயற்பெயர் கொண்ட மெதோடியஸ்,
துருக்கி நாட்டின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள "மைசியன் ஒலிம்பஸ்"
(Mysian Olympus) என்னுமிடத்தில் துறவறம் பெற்றபோது, தமது மதப்
பெயராக "மெதோடியஸ்" எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.
சிரிலுக்கு பதினான்கு வயது நடக்கையில் அவர்களது தந்தையார்
மரணமடைந்தார். அந்நிலையில், பேரரசின் முதலமைச்சர்களுள் ஒருவராயிருந்த
"தியோக்டிஸ்டோஸ்" (Theoktistos) என்பவர் அவர்களின் பாதுகாவலரானார்.
அவரே அவர்களது கல்விக்கும் உதவி புரிந்தார். இவர்கள் இருவரும்
சிறப்பான முறையில் கல்வியைப் பூர்த்தி செய்தனர். சிரில், தமக்கு
கிடைத்த ஆளுநர் பதவியை புறக்கணித்தார். ஆனால் அதே வேளையில்
அவரது சகோதரரான மெதோடியஸ் "ஸ்லாவிக்" (Slavic) மொழி பேசும் மக்கள்
வசிக்கும் பிராந்தியத்தில் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
சிரில், ஒரு துறவு மடத்தில் இணைந்தார். அவரது சகோதரர் மெதோடியஸ்,
சிறிது காலம் அரசு பதவியில் பணியாற்றிய பிறகு துறவு மடத்தில்
இணைந்தார்.
"மொராவியா" (Duke of Moravia) பிராந்திய பிரபு, கிழக்குப்
பிராந்திய பேரரசன் மைக்கேலிடம் (Eastern Emperor Michael) ஜெர்மன்
ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல் சுதந்திரமும் திருச்சபை
சுயாட்சியும் (Ecclesiastical Autonomy) கேட்டபொழுது, சிரில்
மற்றும் மெதோடியஸ் ஆகிய இருவரின் வாழ்வில் திட்டவட்டமான மாற்றம்
உண்டாகியது. அவர்கள் மறைப் பணியை ஏற்றுக்கொண்டனர்.
சிரிலுடைய முதல் பணி, கிழக்கு விதிமுறைகள் அமலிலிருந்த அப்பிராந்தியத்தில்
ஒரு புதிய எழுத்துக்களை கண்டுபிடித்தலாயிருந்தது. பின்னர், அவருடைய
சீடர்கள் சிரில்லிக் எழுத்துக்களை (Cyrillic alphabet) உருவாக்கினர்.
அவர்கள் சுவிசேஷங்கள், துதிப்பாடல், பவுல் எழுதிய கடிதங்கள் மற்றும்
வழிபாட்டு புத்தகங்கள் ஆகியனவற்றை இணைந்து "ஸ்லாவோனிக்" (Slavonic)
மொழியில் மொழிமாற்றம் செய்தனர். ஸ்லாவோனிக் வழிபாட்டு
முறையையும் உருவாக்கினர். மிகவும் சரளமாக அவர்கள் பிரசங்கித்த
முறையானது, ஜெர்மன் மதத்தவரிடையே எதிர்ப்பை உருவாக்கித் தந்தது.
அப்போதைய ஜெர்மன் ஆயர், ஸ்லாவிக் ஆயர்களையும் குருக்களையும் (Slavic
bishops and priests) அருட்பொழிவு செய்ய மறுத்தார்.
இதன் காரணமாக சிரில் ரோமுக்கு மேல்முறையீடு செய்தார். ரோம் நகருக்கு
பயணித்த சிரிலும், மெதோடியஸும் 'திருத்தந்தை இரண்டாம் அட்ரியான்'
(Pope Adrian II) தமது புதிய கண்டுபிடிப்பான "சிரில்லிக் எழுத்துக்களை"
(Cyrillic alphabet) அங்கீகரித்தது கண்டு அகமகிழ்ந்தனர். ரோம்
நகரில் துறவறம் பூண்ட சிரில், நீண்ட காலம் வாழ இயலாமல் ஐம்பதே
நாட்களில் மரணமடைந்தார்.
மெதோடியஸ் தமது மறை பணிகளை மேலும் பதினாறு வருடங்களுக்கு தொடர்ந்தார்.
அவர் ஸ்லாவிக் மக்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக செயல்பட்டார்.
புதிய ஆயர் ஒருவரை அருட்பொழிவு செய்தார்.
"பவேரியன் ஆயர்கள்" (Bavarian bishops) பலரது முன்னாள் அதிகார
வரம்பிலிருந்த பகுதிகள் நீக்கப்பட்டதால், அவர்கள் மெதோடியஸுக்கு
எதிராக பல குற்றச்சாட்டுப் புயலைக் கிளப்பினர். இதன் பயனாக,
ஜெர்மன் பேரரசன் லூயிஸ் (Emperor Louis the German) மெதோடியசை
மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்தினான். திருத்தந்தை எட்டாம்
ஜான் (Pope John VIII) அவரை விடுவித்தார்.
ஃபிராங்கிஷ் (Frankish) மொழி பேசும் குருக்களின் தொடர்ந்த தொந்தரவு,
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது. அவர்கள் தொடர்ந்து
மெதோடியஸின் மேலே மதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
தம்மைக் காத்துக்கொள்ளவும், தமது கண்டுபிடிப்பான ஸ்லாவோனிக்
வழிபாட்டு முறையின் பயன்பாட்டினை நிலைநிறுத்தவும், மெதோடியஸ்
ரோம் நகர் பயணித்தார். மீண்டும் தம்மை அவர் நிரூபித்தார்.
அதன்பின்னர், மெதோடியஸ் ஜுர வேகத்தில், எட்டே மாத காலத்தில்
மொத்த திருவிவிலியத்தையும் "ஸ்லாவோனிக்" (Slavonic) மொழியில்
மொழிபெயர்த்தார். 885ம் ஆண்டின் தவக்காலமான ஏப்ரல் மாதம்,
புனித செவ்வாய்க்கிழமையன்று (6ம் தேதி), தமது தேவாலயத்திலேயே
மெதோடியஸ் மரணமடைந்தார். அவர் மரிக்கும்போது அவரது சீடர்கள்
அவரைச் சுற்றியிருந்தனர்.
மெதோடியஸின் மரணத்தின் பின்னரும் அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து
எதிர்த்தே வந்தனர். சிரில் மற்றும் மெதோடியஸ் சகோதரர்களின் பணி
"மொராவியா" (Moravia) நாட்டில் முடிவுக்கு வந்தது. அவர்களது சீடர்கள்
சிதறிப்போயினர். ஆனால் இந்த வெளியேற்றங்கள் சிரில் - மெதோடியஸ்
சகோதரர்களின் ஆன்மீக, வழிப்பாட்டு, மற்றும் கலாச்சார பணிகளை "பல்கேரியா",
"போஹெமியா" மற்றும் "தென் போலந்து" (Bulgaria, Bohemia and
Southern Poland) ஆகிய நாடுகளில் பரப்புவதில் சாதகமான விளைவைத்
தந்தன. "மொராவியா" (Moravia) நாட்டின் பாதுகாவலர்களான இவர்கள்
விசேடமாக, "செக்" மற்றும் ஸ்லோவாக்" கத்தொலிக்கராலும் (Catholic
Czechs, Slovaks), "குரோஷியர்களாலும்" (Croatians), "செர்பிய"
மற்றும் "பல்கேரிய" (Orthodox Serbians and Bulgarians) மரபுவழி
திருச்சபையினராலும் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். சிரில் -
மெதோடியஸ் சகோதரர்கள் நீண்ட கால விருப்பமான "கிழக்கு மற்றும்
மேற்கு" திருச்சபைகளின் ஒன்றிப்பிற்காக சிறப்பாக பணியாற்றியிருந்தனர்.
1980ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul
II) இச்சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளின் (புனிதர் பெனடிக்டுடன்)
இணை பாதுகாவலர்களாக நியமித்தார்.
தூய சிரில், தூய மெதோடிசியுஸ் (பிப்ரவரி
14)
வாழ்க்கை வரலாறு
1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் நாள் திருத்தந்தை தூய இரண்டாம்
யோவான் பவுல் ஸ்லாவிக்கிற்குச் சென்றபோது ஸ்லாவிக்கின் திருதூதர்கள்
என்று அழைக்கப்படுகின்ற தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுசைக்
குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: தூய சிரில் மற்றும் தூய
மெதோடிசியுஸ் ஆகிய இருவரும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும்
கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் மிகச் சிறந்த முன்னோடிகள்.
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மேலே குறிப்பிட்ட
வார்த்தைகள் முற்றிலும் உண்மை. நற்செய்தி அறிவிப்பிற்கும்
கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் தூய சிரில் மற்றும் தூய
மெதோடிசியுஸ் மேற்கொண்ட தியாகங்கள் அதிகம். அவர்கள் எத்தகைய
தியாகங்களையும் இடர்பாடுகளையும் மேற்கொண்டு நற்செய்திப் பணியைச்
செய்தார்கள், அவர்களுடைய வாழ்வு நமக்கு எந்தளவுக்கு எடுத்துக்காட்டாக
இருக்கின்றது என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
வாழ்க்கை வரலாறு
சிரிலும் மெதோடிசியுசியுசும் உடன் பிறந்த சகோதரர்கள். முதலாமவர்
827 ஆம் ஆண்டும் இரண்டாமவர் 815 ஆம் ஆண்டும் பிறந்தார்கள். இரண்டு
பேரும் தெசலோனிக்காவில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில்
பிறந்தார்கள். சிரில் அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார்,
அதனால் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த பல்கலைக்கழகத்தில் பேராசியராகப்
பணியாற்றி வந்தார். மெதோடிசியுசோ மிகச் சிறந்த ஓவியரை விளங்கி
வந்தார் அதோடு கூட, ஆளுநராகப் பணியாற்றி வந்தார். 860 ஆம் ஆண்டு
இரண்டு பேரும் தாங்கள் ஆற்றி வந்த பணிகளைத் துறந்துவிட்டு துறவிகளாக
மாறி இறைப்பணி செய்யத் தொடங்கினார்கள்.
இச்சமயம் மொராவியா இளவரசன், சகோதரர்கள் இருவரையும் குறித்துக்
கேள்விப்பட்டு ஸ்லாவிக் மொழி பேசும் மக்களுக்கு மத்தியில் நற்செய்திப்
பணியாற்ற அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் அங்கு
சென்று நற்செய்திப் பணியாற்றத் தொடங்கினார்கள். ஏற்கனவே
ஸ்லாவிக் மொழி அவர்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்ததால், அவர்கள்
மக்களுக்கு மத்தியில் மிக எளிதாகப் பணி செய்ய முடிந்தது. இதற்கிடையில்
சகோதரர் இருவரும் ஆற்றி வந்த பணிகளை பிடிக்காது ஸ்லாவிக் பகுதியில்
இருந்த ஏனைய குருக்கள் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
இதனால் அவர்கள் அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஹட்ரின்ஸ்
என்பவரைச் சந்தித்து, தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னார்கள்.
அவர் அவர்கள் சொன்னதைக் கேட்டபின்பு, அவர்கள் தங்களுடைய நற்செய்திப்
பணியை செய்ய முழு ஆதரவும் அளித்தார், மட்டுமல்லாமல் அவர்களை இரு
நகர்களுக்கு ஆயராக நியமித்தார்.
திருத்தந்தையிடமிருது அனுமதி பெற்றுக்கொண்டு சிரிலும் மெதோடிசியசும்
உரோமையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். இடையிலேயே
சிரில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனார். இதனால் மெதோடிசியஸ் மட்டும்
முன்பிருந்த இடத்திற்குச் சென்று நற்செய்திப் பணி செய்யத் தொடங்கினார்.
தன் சகோதரரின் இறப்புக்குப் பிறகு, மெதோடிசியுஸ் இன்னும் உத்வேகத்தோடு
பணிசெய்யத் தொடங்கினார். விவிலியத்தை வெறும் எட்டு மாதங்களுக்கு
உள்ளாகவே ஸ்லாவிக் மொழியில் மொழிபெயர்த்துத் தந்து, மக்கள் தங்களுடைய
சொந்த மொழியில் இறைவார்த்தையை வாசிக்கவும் சிந்தித்தவும்
செய்தார். இதனால் நிறையப் பேர் கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்;
ஒருசிலர் மெதோடிசியுசை தங்களுடைய ஆர்மார்த்தமான குருவாக ஏற்றுக்கொண்டு,
அவர் வழியில் நடந்தார்கள். இப்படிப்பட்டவர் உடல் நலம் குன்றி
885 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுசின் விழாவைக் கொண்டாடும்
நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வம்
தூய சிரிலும் தூய மெதோடிசியுசும் நற்செய்தி அறிவிப்புப் பணியை
ஆர்வத்தோடு செய்து வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒருசமயம் சகோதரர்கள் இருவரும் பவேரிக்காவிற்குச் சென்றிருந்தபோது
அந்நாட்டு மன்னன் வித்தியாசமான ஓர் ஓவியம் வரைந்து தன்னுடைய
அரண்மனையில் வைக்க ஆசைப்படுகிறான் என்று கேள்விப்பட்டு தூய
மெதோடிசியுஸ் அவனுடைய அரண்மனைக்குச் சென்றார். அங்கு சென்றததும்
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியத்தை வரைந்து தந்தார்.
அது என்ன ஓவியம், பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் அதே
நேரத்தில் அச்சம் தருவதாகும் இருக்கின்றதே என்று கேட்டார். அதற்கு
மெதோடிசியுஸ் அவரிடம், இது இறுதித் தீர்ப்பு பற்றிய ஓவியம்.
உலக முடிவின்போது இப்படித்தான் இருக்கும் சொன்னதும், அந்நாட்டு
அரசன் அவருடைய வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மறையைத்
தழுவினான். அவனோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்தவ மறையைத்
தழுவினார்கள். இப்படி கிறிஸ்தவ மறையைத் தழுவிய மக்களுக்கு
மெதோடிசியுசும் சிரிலும் ஆர்வத்தோடு பணி செய்தார்கள்.
இவர்கள் இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின்
நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றோமா? அதனை ஆர்வத்தோடு அறிவிக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்ப்போம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய
மடலில், "நற்செய்தி அறிவிப்பது என்மேல் சுமத்தப் பட்ட கடமை" என்பார்.
ஆம், நற்செய்தி அறிவிக்கின்ற பணி நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான
பணி, அதனை நம்முடைய கடமையாக உணர்ந்து செய்யவேண்டும்.
ஆகவே, தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் விழாவைக்
கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று நற்செய்தி அறிவிக்கின்ற பணியை
ஆர்வத்தோடு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியூஸ்
ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு
(1கொரி.7:7)
தெசலோனிக்காவில் சிறப்புற்று விளங்கிய குடும்பத்தில்
கான்ஸ்டன்டைன் 827 ஆம் ஆண்டிலும் ,மெத்தோடியுஸ் 815 ஆண்டிலும்
பிறந்தார்கள் . (கான்ஸ்டன் டைன் தான் இறப்பதற்கு முன்பாக தமது
பெயரை சிரில் என்று மாற்றினார்) ஒருதாய் பிள்ளைகளான
இச்சகோதரர்கள் கல்வி கற்று நல்லறிவுடன் விளங்கினார்கள் . பல
ஸ்லாவிக் மக்கள் தெசலோனிக்காவில் குடியேறியதால் இவர்கள்
இருவரும் ஸ்லாவோனிக் மொழியை நன்கு பேசக் கற்றுக்கொண்டார்கள்.
அரசின் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த மெத்தோடியுஸ் உலக
நாட்டத்தின் மீது வெறுப்புக் கொண்டு துறவு மடத்திற்குச்
சென்றார். கொண்ஸ்தாந்தினோபிளில் படித்து கல்விமானாக,
பேராசிரியராக ,மெய்யியலாளராக விலங்கிய சிரில் பிறகு குருவாக
திருநிலைப்படுத்தப்பட்டார். இருவரும் இன்றைய உக்ரைன்
நாட்டிற்கு மறைப்பணியாளர்களாக 860 ஆம் ஆண்டு
அனுப்பப்பட்டார்கள் . அங்கிருந்த பைசான்டிய பேரரசர்
கல்வியறிவும், நிர்வாகத் திறமையும், மறைப்பணி ஆர்வமும் மிகுந்த
சிலரை மராவியன் பகுதிக்கு அனுப்ப நினைத்தார்.
மராவியன் ,மற்ற ஸ்லாவிக் பகுதிகளைப்போலவே, ஜெர்மனியின்
ஆதிக்கத்திற்கும், ஊடுருவலுக்கும் ஆளாகியிருந்தது. மராவியன்
அரசர் ரஸ்டிஸ் லாவ் தமது அரசைத் தக்க வைக்க வேண்டுமென்றால்,
ஜெர்மானிய மறைப்பணியாளர்களுக்குப் பதிலாக கீழை
மறைப்பணியாளர்கள் வந்து உள்ளுர் மக்களின் தாய் மொழியில் பேசி
வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று விரும்பினார் .அதன்படி
பேரரசர் இந்த இருவரையும் தேர்வு செய்து அனுப்பினார்.
கிரேக்கமும், இலத்தீனும் மட்டுமே மதிப்புப் பெற்றிருந்த காலம்
அது. எனவே ஸ்லாவிக் மக்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம்
கொடுக்க தங்களையே இருவரும் அர்ப்பணித்தார்கள் .
பணித்தளத்திற்குப் புறப்படும் முன்பே ஸ்லாவோனிக் மொழிக்கு
சிரில் எழுத்து வடிவம் கொடுத்ததாகச் சொல்வார்கள் .இன்னும்
சிரிலிக் என்னும் பெயரில் தான் அவர்களது எழுத்து வடிவம்
அழைக்கப்படுகிறது.
மராவியனுக்கு 863 இல் வந்த சிரில் வழிபாட்டு முறைகளை
ஸ்லாவோனிக் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்தார். கீழைத்
திருச்சபையில் உள்ளுர் மக்களின் மொழிக்கு செபங்களை
மாற்றிக்கொள்ளும் முறை இருந்தது. மேற்கத்தியத் திருச்சபையில்
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் வரை இலத்தீன் மற்றும்
கிரேக்க மொழிகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன.
பிறகு உரோமை சென்று ஸ்லாவிக் மக்களில் இருந்து குருக்களை
திருநிலைப்படுத்தவும், தாய் மொழியில் வழிபாடு நடத்தவும் அனுமதி
வேண்டினார்கள் . அடிமையில் இருக்கும் மக்கள் விழிப்படைந்து
விடுவார்கள் என்பதால் தாய்மொழி வழிபாட்டு முறையை ஜெர்மனியைச்
சேர்ந்தவர்கள் ஆதரிக்க வில்லை .எனவே இருவரும் நிறைய தடைகளைச்
சந்தித்தனர் .திருத்தந்தை இவர்களது பணியை நம்பி அனுமதி
அளித்தார். சிரில் மீண்டும் மராவியன் வருவதற்கு முன் பிப்ரவரி
14 , 869 இல் மரணமடைந்தார்.
அரசியல் சிக்கல்களை உருவாக்கி மெத்தோடியூஸ் திரும்பவும்
மராவியன் வருவதற்கு தடைகள்மேல் தடைகளை விதித்தார்கள் . கோசெல்
என்று மற்றொரு ஸ்லாவிக் அரசர் தமது பகுதியில் அனுமதித்தார்.
மெத்தோடியுஸ் அங்கிருந்து கொண்டு தாய்மொழியில் செபம் சொல்லி
,அருள் சாதனங்கள் கொடுத்தார். திருப்பலி நிறைவேற்றினார்
மற்றும் கட்டளை செபங்களைச் செபித்தார். இந்நிலையில்
மெத்தோடியுஸ் அயரானார். பிறகு கோசலும் பயந்துகொண்டு அனுமதி
மறுத்ததால் மற்றோர் இடத்திற்குப் பணியாற்றச் சென்றார்.
மெத்தோடியுஸ் திருச்சபைக்கு எதிராக வழிபாடு நடத்தி மக்களைத்
திசை திரும்புவதாக ஜெர்மனி ஆயர்கள் பழி சுமத்தினார்கள் .
ஜெர்மானியர்களைத் திருப்திப்படுத்த நினைத்த திருத்தந்தை தாய்
மொழியில் வழிபாடு நடத்தக் கூடாது என்று மெத்தோடியுசுக்குத் தடை
விதித்தார் .879-இல் உரோமைக்கு அழைத்து திருத்தந்தை
விசாரித்தார். தாய்மொழி வழிபாட்டின் அவசியத்தை மீண்டும்
கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மெத்தோடியுசுக்கு அனுமதி
அளித்தார். திருப்பலி செபங்கள், மற்ற செபங்கள், வாசகங்கள்
அனைத்தையும் ஸ்லாவோனிக் மொழியில் மாற்றினார் . ஏறக்குறைய
விவிலியம் முழுவதையும் மற்றும் திருச்சபைத் தந்தையர்களின்
எழுத்துகளையும் ஸ்லாவிக் மக்களின் தாய்மொழிக்கு
மொழிபெயர்த்தார் .884 ஏப்ரல் ஆறாம் தேதி இறந்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட போரில் அனைத்துமே
எரியூட்டப்பட்டதாக எல்லோரும் நினைத்தார்கள் .ஆனால்
மெத்தோடியுசின் சீடர் ஒருவர் அனைத்தையும் பத்திரமாக எடுத்துக்
கொண்டு மற்றொரு ஸ்லாவிக் நாட்டுப் பகுதிக்குச் சென்று
காப்பாற்றினார்.
தாய்மொழி சிந்தனையின் ஊற்றுக்கள் மற்ற மொழிகள் அறிவை விரிவு
செய்யும் வழிமுறைகள் வழிமுறைகளை மட்டும் கொண்டாடாது
சிந்திக்கும் திறன் பெற்றால் சீர்பெற்று வாழும் சமுதாயம் . |
|
|