✠ அருளாளர் செபாஸ்டியன் டி அபரிஸியோ ✠(Blessed Sebastian de Aparicio) |
|
|
|
நினைவுத் திருநாள் :
பெப்ரவரி
25 |
✠ அருளாளர் செபாஸ்டியன் டி அபரிஸியோ ✠(Blessed Sebastian de Aparicio)
✠மறைப்பணியாளர், ஒப்புரவாளர் :
(Religious and Confessor)
✠பிறப்பு : ஜனவரி 20, 1502
எ குடினா, ஔரென்ஸ், ஸ்பெயின்
(A Gudina, Ourense, Spain)
✠இறப்பு : ஃபெப்ரவரி 25, 1600 (வயது 98)
புவெப்லா டி லாஸ் ஏஞ்சலிஸ், புவெப்லா, மெக்ஸிகோ, புதிய
ஸ்பெயின்
(Puebla de los Angeles, Puebla, Mexico, New Spain)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(மெக்ஸிகோ மற்றும் ஃபிரான்சிஸ்கன் இளம் துறவிகள் சபை)
(Roman Catholic Church)
(Mexico and the Order of Friars Minor)
✠முக்திபேறு பட்டம் : மே 17, 1789
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)
✠பாதுகாவல் :
போக்குவரத்து தொழில் (மெக்ஸிகோ)
(Transport industry (Mexico)
அருளாளர் செபாஸ்டியன் டி அபரிஸியோ மெக்ஸிகோ நாட்டில் குடியேறி
வாழ்ந்த ஒரு ஸ்பேனிஷ் காலணி வாசி (Spanish colonist) ஆவார்.
தமது வாழ்நாள் முழுதும் ஒரு கால்நடை வளர்ப்பு பண்ணைப் பணியாளராகவும்
சாலைப் பணியாளராகவும் பணிபுரிந்த இவர், ஸ்பெயின் மெக்சிகோவை
வெற்றிகொண்ட பிறகு, ஃபிரான்சிஸ்கன் இளம் துறவிகள் சபையில் (Order
of Friars Minor) குருத்துவம் பெறாத ஒரு துறவியாக (Lay
Brother) இணைந்தார். அடுத்து வந்த தமது வாழ்வின் நீண்ட இருபத்தாறு
ஆண்டுகளையும் தாம் சார்ந்திருந்த துறவற சபைக்காக பிச்சை எடுப்பதில்
கழித்த இவர், மரித்தபோது பெரும் கீர்த்தியுடன் மரித்தார்.
ஸ்பெயின் நாட்டின் "ஔரென்ஸ்" (Ourense) என்ற இடத்தில் அபரிஸியோ
பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஜுவான் டி அபரிஸியோ" (Juan de
Aparicio) ஆகும். தாயார் பெயர் "தெரெசா டெல் ப்ரடோ" (Teresa
del Prado) ஆகும். அபரிஸியோ தமது பெற்றோருக்கு மூன்றாவதாக
பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் மிகவும் பக்தியான ஏழை
விவசாயிகளாவர். இவர் தமது சிறுவயதிலிருந்தே ஆடு மாடுகளை
மேய்க்கும் பணி செய்தார். கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடம்
சென்றறியாத அபரிஸியோ, செபிப்பதற்கு தமது பெற்றோரிடம்
கற்றுக்கொண்டார். எழுதப் படிக்க அறியாவிடினும், தமது பக்தி
முயற்சிகளில் அவர் சிறிதும் பின்தங்கிவிடவில்லை.
ஒருமுறை, 1514ம் ஆண்டு, கொடூரமான பிளேக் நோய் பரவியது.
அந்நோய் அபரிஸியோவையும் பீடித்தது. தனிமைப்படுத்தப்பட்ட
சமூகம் அவரை அங்கிருந்து தனிமைபடுத்தும்படி வற்புறுத்தியது.
வேறு வழியற்ற அவரது பெற்றோர் அருகேயிருந்த காட்டில் அவருக்காக
மறைவாக ஒரு சிறு குடிலை கட்டி அவரை அங்கே தனிமையில் விட்டுச்
சென்றனர். உதவிகளற்ற அபரிஸியோ நோயால் தனிமையில் வாடினார்.
ஒருநாள் ஒரு பெண் ஓநாய் அங்கே வந்தது. அபரிஸியோ தங்கியிருந்த
மறைவிடத்தை கண்டுபிடித்த அது, அவரது குடிலுக்குள் தலையை
நுழைத்து அவரது நோயால் பாதிக்கப்பட்ட உடலின் ஒரு பாகத்தை
முகர்ந்து பார்த்தது. பின்னர் அதைக் கடித்து, நக்கிவிட்டு
ஓடிப்போனது. அதன்பின்னர் அபரிஸியோ'வின் நோய் தீர ஆரம்பித்தது.
வளர்ந்த அபரிஸியோ தமது குடும்பத்திற்காக உழைத்துச்
சம்பாதிக்கும் கட்டாயத்தில் இருந்தார். அதனால் அவர் தமது ஊரை
விட்டு கிழக்கே "சலமான்கா" (Salamanca) என்ற இடத்திற்கும், தூர
தென் பிராந்தியங்களுக்கும் பயணித்து விவசாய கூலிப் பணிகளை
செய்தார். ஆனால், அவரது வெளிப்படையான, பார்வைக்கு நல்ல
தோற்றத்தினால் கவரப்பட்ட பெண்கள் பலரால் அடிக்கடி பாலியல்
தொல்லைகளுக்கு ஆளானார். அதனால் கற்பு நிலை மாறாத வாழ்க்கை வாழ
வேண்டுமென்ற அவரது உறுதி நிலைகுலையும் என்பதை உணர்ந்தார்.
ஆகவே, அங்கிருந்து தப்பிச் சென்ற அபரிஸியோ, புதிதாக வெற்றி
பெற்ற அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்க முடிவு செய்தார். வெற்றி
பெற்ற ஸ்பெயின் மக்களுக்கும் உதவ எண்ணினார். அங்கேயே தமது
கத்தோலிக்க விசுவாசத்தை ஊக்குவிக்க விரும்பினார். ஒருவிதமாக
"புவேப்லா" (Puebla) மாநிலத்தில் தங்கிய அபரிஸியோ, உள்நாட்டு
மக்காச் சோளம் மற்றும் ஐரோப்பிய கோதுமை ஆகியவற்றை பயிரிட்டார்.
பயிர்வகைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு
செல்லும் முயற்சியாக எருது, குதிரை போன்ற கால்நடைகளை
பயிற்சியளித்தல் மற்றும் சீரான சாலைகள் இல்லாத மெக்ஸிகோ
நாட்டில் அவர் வசிக்கும் "புவேப்லா" (Puebla)
மாநிலத்திலிருந்து "வெராக்ரூஸ்" (Veracruz) துறைமுகம் வரை
சாலைகள் அமைத்து அதனை செப்பனிடல் போன்ற பணிகளைச் செய்தார்.
அபரிஸியோ ஓரளவு வசதி பெற்றார். பின்னர், அங்குள்ள கிராம
மக்களுக்கு ஏர் உழவும், எருது மற்றும் குதிரை போன்ற கால்நடைகளை
பழக்குவதற்கும் கற்று கொடுத்தார். பிறகு, மக்களின் ஏகோபித்த
வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார்.
அறுபது வயதான அபரிஸியோ ஏழ்மையின் காரணமாக திருமணம் பற்றிய
எதிர்பார்ப்பின்றி வாழ்ந்திருந்த ஒரு இளம்பெண்ணை
கைப்பிடித்தார். அவர்கள் ஏற்கனவே பேசி வைத்து ஒப்பந்தம்
செய்துகொண்டது போல தாம்பத்தியமற்ற வாழ்க்கை வாழ்ந்தனர். அவரை
விட மிகவும் இளவயது பெண்ணான அவரது மனைவி ஒரு வருடத்திலேயே
மரணமடைந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், ஏற்கனவே முதல்
மனைவியுடன் செய்துகொண்டது போன்ற ஒப்பந்தம் செய்துகொண்டு, "மரிய
எஸ்டேபன்" (Mara Esteban) என்ற இளம்பெண்ணை திருமணம்
செய்துகொண்டார். அபரிஸியோ'வுக்கு எழுபது வயதாகையில் அவரது
இரண்டாவது மனைவி "மரிய எஸ்டேபன்" மரணமடைந்தார்.
இரண்டாவது மனைவியையும் இழந்த அபரிஸியோ மிகவும்
நோய்வாய்ப்பட்டார். தமது வாழ்க்கையை மறு மதிப்பீடு செய்யத்
தொடங்கினார். மிகவும் சாதாரண ஆடைகளை உடுத்திய அவர் பெரும்பாலான
நேரங்களை ஆலயங்களில் செலவிட்டார். யாரோ தம்மை அடிக்கடி அர்ப்பண
வாழ்விற்கு அழைப்பதாக உணர்ந்தார். அவர் அடிக்கடி அங்குள்ள
ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்திற்கு சென்றுவர ஆரம்பித்தார்.
அங்குள்ள துறவியரிடம் தாம் துறவறத்தில் இணைவது தொடர்பான
சந்தேகங்களை கேட்பார்.
இங்ஙனம் ஒருநாள், அவருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும்
துறவி ஒருவர், அவருக்கு ஓர் ஆலோசனை சொன்னார். அதன்படி, சில
வருடங்களுக்கு முன்னர் மெக்ஸிகோவில் நிறுவப்பட்டிருந்த "எளிய
கிளாரா" (Monastery of Poor Clares in Mexico) துறவு
மடத்திற்கு தமது சொத்துக்கள் அத்தனையையும் கொடுத்து விடுவது;
அங்கேயே தங்கியிருந்து அடிப்படைத் தன்னார்வலராக சந்நியாசிகளின்
புற தேவைகளுக்காக சேவை புரிவது. இந்த ஆலோசனைக்கு ஒப்புக்கொண்ட
அபரிஸியோ 1573ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் நாளன்று, இதற்கான
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு வருடத்தின் பின்னர், தமது நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி
அவர் துறவு மடத்தின் "குருத்துவம் பெறாத அருட்சகோதரராக" (Lay
Brother) விண்ணப்பித்தார். ஒருவருட கால பயிற்சி மற்றும்
செபங்களின் பின்னர், துறவு மடத்தின் தலைமைத் துறவி அவரை
"குருத்துவம் பெறாத அருட்சகோதரராக" ஏற்றுக்கொண்டார். 1574ம்
ஆண்டு, ஜூன் மாதம், ஒன்பதாம் நாளன்று, தமது 72 வயதில்
துறவறப்புகுநிலையில் இணைந்தார்.
"சாண்டியாகோ" (Santiago) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்திற்கு
அபரிஸியோ அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு சமையல் பணி, தோட்ட
வேலைகள், சுமை தூக்கும் பணி, மற்றும் தேவாலயங்களில் உள்ள
புனிதப் பொருட்களைக் காக்கும் பணி ஆகியன கொடுக்கப்பட்டன.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட துறவியர் இருந்த மடத்தின்
அனைத்துப் பணிகளும் இவர்முன் இருந்தன. வயதான மற்றும் நோயுற்ற
துறவியர்க்காக உணவு மற்றும் பிற தேவைகளுக்காக தெருக்களில்
சென்று பிச்சை எடுத்தார். ஒருகாலத்தில், மெக்ஸிகோவின் சாலைகளை
கட்டியவர், இன்று அதே சாலைகளில் பிச்சைக் காரனாக அலைந்து
திரிந்தார். தமது வயதையும் மீறி சுறுசுறுப்பாக பணியாற்றினார்
அபரிஸியோ.
அவருக்கு ஒரு எருது வண்டியும், இரண்டு எருதுகளும்
கொடுக்கப்பட்டன. அதில் அவர் மெக்ஸிகோ நகரெங்கும் சென்றார்.
சுற்றுப்புற கிராமங்களுக்கும் சென்று கூவி கூவி பிச்சை
கேட்டார். மெக்ஸிகோ வாசிகளுக்கு அவர் மிகவும்
பரிச்சயமாகிப்போனார். பல நாட்கள் இரவு நேரங்களில், மோசமான பருவ
நிலைகளிலும் தெரு ஓரங்களிலேயே படுத்தார். ஒரு கையில்
செபமாலையும் மறு கையில் எருதின் கயிறும் இருக்கும்.
இருபத்தாறு நீண்ட வருடங்கள் அவர் இதுபோலவே சேவை புரிந்தார்.
துறவி என்றால் இவர்போன்றே இருக்க வேண்டும் என்று மெக்ஸிகோ
வாசிகள் கூறுமளவுக்கு அவர் துறவிகளின் முன்மாதிரியாகத்
திகழ்ந்தார். அவர் போகுமிடமெல்லாம் தேவதூதர்கள்
பின்செல்வார்கள் என்று மெக்ஸிகோ வாசிகள் அறிவித்தனர்.
குடலிறக்க நோயினால் வேதனையுற்ற அவர் தமது 98 வயதில், 1600ம்
ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 25ம் நாளன்று, மரணமடைந்தார். ஆறு
மாதங்களின் பின்னர் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, அது
சிதையாமல் காணப்பட்டது. இரண்டு வருடங்களின் பிறகு அது மீண்டும்
தோண்டி எடுக்கப்பட்டபோதும், அது சிதையாமல் காணப்பட்டது. அவரது
சிதையாத உடலை "புவேப்லா" (Puebla) நகரிலுள்ள "தூய
ஃபிரான்சிஸ்கோ" (Church of San Francisco) தேவாலயத்தில்
இன்றும் காணலாம். |
|
|