Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠ (Blessed Pius IX)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 7
 
 ✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠ (Blessed Pius IX)

*255வது திருத்தந்தை : (255th Pope)

*பிறப்பு : மே 13, 1792
செனிகல்லியா, மார்ச்சே, திருத்தந்தை நாடுகள்
(Senigallia, Marche, Papal States)

*இறப்பு : பெப்ரவரி 7, 1878 (வயது 85)
திருத்தூதரக அரண்மனை, ரோம் நகரம், இத்தாலி
(Apostolic Palace, Rome, Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*முக்திப்பேறு பட்டம் : செப்டம்பர் 3, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

"ஜியோவன்னி மரிய மஸ்டாய் ஃபெர்ரெட்டி" (Giovanni Maria Mastai Ferretti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் ஒன்பதாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையின் 255வது திருத்தந்தையாக 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாள் முதல், 1878ல் தமது மரணம்வரை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

1792ம் ஆண்டும், மே மாதம், 13ம் நாள், "செனிகல்லியா" (Senigallia) என்னுமிடத்தில், "கிரோலமோ டேய் கொண்டி ஃபெர்ரெட்டி" (Girolamo dei conti Ferretti) எனப்படும் பிரபுக்கள் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர், பிறந்த அன்றே திருமுழுக்கும் பெற்றார். "வோல்டேர்ரா" மற்றும் ரோம் (Volterra and in Rome) நகரிலுள்ள "பியாரிஸ்ட்" (Piarist College) கல்லூரியில் கல்வி கற்றார். தமது சொந்த ஊரான "செனிகல்லியாவில்' (Senigallia) இறையியல் கற்ற இவர், 1814ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் சிறையிருப்பிலிருந்து (French captivity) திரும்பியிருந்த திருத்தந்தை ஏழாம் பயசை (Pope Pius VII) சந்தித்தார். 1815ம் ஆண்டு, திருத்தந்தையின் உயர் காவலராக இணைந்த இவர், திடீரென தமக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக வி்ரைவிலேயே அதிலிருந்து நீக்கப்பட்டார். திருத்தந்தையின் கால்களில் தஞ்சமடைந்த இவரை எழுப்பிய திருத்தந்தை இவர் இறையியல் படிப்பைத் தொடர ஆதரவு தந்தார்.

1819ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் தேதி, இவர் குருத்துவம் பெற்றார்.
1827ம் ஆண்டு, தமது 35 வயதில் மஸ்டாய் திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவால் (Pope Leo XII) "ஸ்போலேட்டோ" (Spoleto) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1840ம் ஆண்டு, "புனித மர்செல்லினோ ஈ பியெட்ரோவின்" கர்தினால் குருவாக (Cardinal-Priest of Santi Marcellino e Pietro) அறிவிக்கப்பட்டார்.

1846ம் ஆண்டு, திருத்தந்தை பதினாறாம் கிரகோரியின் (Pope Gregory XVI ) மரணத்தின் பின்னர் நடந்த திருத்தந்தை தேர்தலில் மஸ்டாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். தமது பெயரையும் ஒன்பதாம் பயஸ் (Pius IX) என்று ஏற்றுக்கொண்டார்.

32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவ திருத்தந்தை ஆவார். இவர் கூட்டிய "முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்" (The First Vatican Council) (1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாளின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாளுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870ம் ஆண்டு, அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகளின் ஆரம்ப கட்டத்திலே, அதனை இத்தாலிய அரசு தீவிரமாக எதிர்த்தது. அவருடைய சர்வாதிகாரமான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியலை காரணம் காட்டி, சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் விமர்சித்ததால், அவரது முக்திபேறு பட்டம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. திருத்தந்தை "இரண்டாம் ஜான் பவுல்" (Pope John Paul II) 1985ம் ஆண்டு, ஜூலை மாதம், ஆறாம் நாளன்று, இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.

2000ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மூன்றாம் தேதி, திருத்தந்தை "இருபத்திமூன்றாம் யோவானோடு" (Pope John XXIII) இவருக்கும் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.
இவரது நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி 7 ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா