Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தாமஸ் பெக்கட் ✠(St. Thomas Becket)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 29)
✠ புனிதர் தாமஸ் பெக்கட் ✠(St. Thomas Becket)

 கேன்டர்பரி பேராயர்/ மறைசாட்சி :
(Archbishop of Canterbury/ Martyr)

பிறப்பு : டிசம்பர் 21, 1118
சீப்சைட், லண்டன்
(Cheapside, London)

இறப்பு : டிசம்பர் 29, 1170
கேன்டர்பரி பேராலயம்
(Canterbury Cathedral)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 21, 1173
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)

புனிதர் பட்டம் : ஃபெப்ரவரி 21, 1173
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)

முக்கிய திருத்தலம் :
கேன்டர்பரி பேராலயம்
(Canterbury Cathedral)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 29

புனிதர் தாமஸ் பெக்கட், கி.பி. 1162ம் ஆண்டு முதல் கி.பி. 1170ம் ஆண்டில் மறைசாட்சியாக கொலை செய்யப்படும்வரை "கேன்டர்பரி பேராயராக" (Archbishop of Canterbury) இருந்தவராவார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை புனிதர் என்றும் மறைசாட்சி என்றும் வணங்குகின்றது. கி.பி. 1162ம் ஆண்டில், கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்குச் சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக (King of England) இருந்த "இரண்டாம் ஹென்றி" (Henry II), தாமஸ் பெக்கெட்டை பேராயராகப் பரிந்துரைத்தார். திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றி அவர் இங்கிலாந்தின் மன்னரான இரண்டாம் ஹென்றியுடன் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர்.

அப்போஸ்தலரான புனிதர் தோமையரின் நினவுத் திருநாளான டிசம்பர் மாதம் 21ம் தேதி பிறந்த பெக்கட்'டின் தந்தையின் பெயர், "கில்பர்ட் பெக்கட்" (Gilbert Beket) ஆகும். தாயாரின் பெயர், "மெட்டில்டா" (Matilda) ஆகும். ஒரு துணி-ஆடை வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய கில்பர்ட், கி.பி. 1120களில் லண்டன் மாநகரில் உள்ள தமது சொத்துக்களின்பேரில் வாடகையாக வந்த வருமானத்தைக் கொண்டு வசதியாக வாழ்ந்தவர். சில காலம் இவர் லண்டன் மாநகரின் தலைவராகவும் (Sheriff) இருந்திருக்கிறார். கில்பர்ட்டின் பணக்கார சிநேகிதர்களில் ஒருவரான "ரிச்சர் டி லா'ஐக்லே" (Richer de L'Aigle) என்பவர், வேட்டையாடுவதில் ஆர்வமுள்ள தாமசை "ஸுஸ்செக்ஸ்" (Sussex) என்னுமிடத்திலுள்ள தமது தோட்டங்களுக்கு அடிக்கடி அழைப்பதுண்டு. தாமஸ், 'ரிச்ச'ரிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டார். பின்னாளில், தாமசுக்கு எதிரான க்ளேரண்டன் அரசியல் சட்டத்தில் (Signatory of the Constitutions of Clarendon) கையெழுத்திட்டவர் ரிச்சர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பத்து வயதில் லண்டன் புனித பவுல் தேவாலயத்தின் "மெர்டன்" துறவு மடத்தில் (Merton Priory) கல்வி கற்க அனுப்பப்பட்டார். தமது இருபது வயதில் சுமார் ஒரு வருடம் பாரிஸ் நகரில் இருந்த இவர், நியதி அல்லது சிவில் சட்டம் ஆகியவற்றை கற்கவில்லை.

கேன்டர்பரியின் பேராயரான "தியோபால்ட்" (Theobald) என்பவர் தாமசின் பேரில் கொண்ட நம்பிக்கையின் பேரில், தமாசை முக்கிய சில பணிகளுக்காக ரோம் மற்றும் 'போலோக்னா' (Rome and Bologna) ஆகிய இடங்களுக்கு அனுப்பினார். அத்துடன், அவரை கிறிஸ்தவ சமயச் சட்டங்கள் கற்பதற்காக "ஆக்செர்ரே" (Auxerre) நாட்டுக்கும் அனுப்பினார்.

தாமசின் திறமையில் அதிக நம்பிக்கை கொண்ட தியோபால்ட், அச்சமயம் காலியாக இருந்த (Lord Chancellor) பதவிக்கு தாமசை நியமிக்கும்படி அப்போதைய அரசன் இரண்டாம் ஹென்றியிடம் பரிந்துரைத்தார். கி.பி. 1155ம் ஆண்டு, ஜனவரி மாதம் தாமஸ் அவ்வுயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். நிலக்கிழார்கள், தேவாலயங்கள் மற்றும் ஆயர் பேரவைகள் ஆகியனவற்றிலிருந்து அரசனின் பாரம்பரிய வருவாய்களை வசூலிக்கும் பணியில் கறாராக இருந்தார். அரசன் தமது மகனான ஹென்றியை தாமசின் இல்லத்தில் தங்குவதற்கு அனுப்பினார். அக்காலத்தில் அரச வாரிசுகள் வெளி பிரபுக்களின் இல்லங்களில் தங்குவது பாரம்பரிய செயலாக இருந்தது. தாமஸ் தம் மீது தமது தந்தையை விட அதிகளவு பாசம் வைத்திருந்ததாக ஹென்றி கூறினார்.

கி.பி. 1162ம் ஆண்டு, கேன்டர்பரியின் பேராயரான "தியோபால்ட்டின்" மரணத்தின் பின்னர், தாமஸ் பேராயர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். கி.பி. 1162ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாள், அரசவை ஆயர் மற்றும் பிரபுக்கள் குழுக்களால் அவரது தேர்தல் உறுதி செய்யப்பட்டது. தாமஸ், திருச்சபையை விட அரச பணிகளுக்கே முக்கியத்துவம் தருவார் என அரசன் எதிர்பார்த்தார். ஆனால், துறவு வாழ்விற்கான தாமசின் பிரசித்தி பெற்ற மாற்றம் அப்போது நிகழ்ந்தது.

கி.பி. 1162ம் ஆண்டு, ஜூன் மாதம், இரண்டாம் நாள் குருத்துவம் பெற்ற தாமஸ் பெக்கட், "வின்செஸ்டர்" மாகாணத்தின் ஆயர் "ப்லாய்சின் ஹென்றி" (Henry of Blois, the Bishop of Winchester) மற்றுமுள்ள கேன்டர்பரியின் ஆயர்களால் கி.பி. 1162ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் நாள், கான்டர்பரியின் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

புதிதாக நியமனம் பெற்ற பேராயர் தம்மிடம் ஏற்கனவே இருந்த (Lord Chancellor) பதவியை ராஜினாமா செய்ததாலும், பேராயருக்கான உரிமைகள் மற்றும் அதிகாரங்களை திரும்ப தம்மிடமே தரவேண்டுமென கோரியதாலும் தாமஸ் பெக்கட் மற்றும் அரசன் இரண்டாம் ஹென்றியின் மத்தியில் பிளவு அதிகரிக்கத் தொடங்கியது. ஆங்கிலேய பாதிரியார்கள் மீதுள்ள மதச்சார்பற்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உள்ளிட்ட இவை, இவ்விருவரிடையே தொடர் மோதல்களுக்கும் வெறுப்புக்கும் வழி வகுத்தது. பெக்கெட்டுக்கு எதிராக மற்ற ஆயர்களின் செல்வாக்கைப் பெற "வெஸ்ட்மின்ஸ்டரில்" (Westminster) ஹென்றி மேற்கொண்ட முயற்சிகள், அக்டோபர் கி.பி. 1163ல் தொடங்கியது. தாமஸ் பெக்கெட்டின் மீது நடவடிக்கை எடுக்க "ராயல் அரசிடமிருந்து" (Royal government) பாரம்பரிய ஒப்புதலை ஹென்றி கேட்டுப் பெற்றார். இதனால், அரசர் ஹென்றியின் உரிமைகளுக்கு ஒப்புக்கொள்ளும்படியும், தவறினால் அரசியல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தாமஸ் பெக்கட் "க்ளேரண்டன்" (Clarendon) மூலமாக அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டார்.

"க்ளேரண்டனின்" அரசியலமைப்பு :
(Constitutions of Clarendon)
கி.பி. 1164ம் ஆண்டு, ஜனவரி மாதம், 30ம் நாளன்று, "க்ளேரண்டன்" அரண்மனையில் பெரும்பான்மையான ஆங்கிலேய கிறிஸ்தவ குருமார்கள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு அரசர் இரண்டாம் ஹென்றி தலைமை வகித்தார். தமது முழு திறமையையும் அதிகாரத்தையும் உபயோகித்து தாமஸ் பெக்கட்டுக்கு எதிராக பதினாறு அரசியலமைப்புகளிலும் ஆங்கிலேய கிறிஸ்தவ குருமார்களின் ஒப்புதலைப் பெற்றார். வேறு வழியற்ற பெக்கட், "க்ளேரண்டன்" அரசியல் சட்ட உட்பொருளுக்கு ஒப்புகொண்டு தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவற்றில் கையெழுத்திட மறுத்தார்.

கி.பி. 1164ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 8ம் நாளன்று, "நார்த்தாம்டனின் கோட்டையில்" நடந்த மகா சபையில் (Great Council at Northampton Castle) ஆஜராகி, அரசு அதிகார அவமதிப்பு மற்றும் தவறான செயல்பாடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு பெக்கெட்டுக்கு ஹென்றி உத்தரவிட்டார். மகாசபையில் ஆஜரான குற்றம் சாட்டப்பட்ட பெக்கட்,விசாரணையிலிருந்து எறியப்பட்டார். தண்டனையாக கண்டம் விட்டு கண்டம் கடத்தப்பட்டார்.

நாடு கடத்தலும் அஞ்ஞாத வாசமும் :
பெக்கட் தப்பியோடிய பேராயராக அறிவிக்கப்பட்டு, அவர் மீதும் அவரது உதவியாளர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகிய அனைவருக்கெதிராகவும் அரசர் ஹென்றி தொடர் அரசாணைகளைப் பிறப்பித்தார். ஆனால், ஃபிரான்ஸ் நாட்டின் அரசர் ஏழாம் லூயிஸ் (King Louis VII) பெக்கட்டுக்கு பாதுகாப்பளித்தார். ஹென்றியின் கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான பயமுறுத்தல்கள் தீரும்வரை பெக்கட், ஃபிரான்ஸின் 'பொன்டிக்னி' எனும் இடத்திலுள்ள சிஸ்ட்டர்சியன்' மடத்தில் (Cistercian abbey of Pontigny) சுமார் இரண்டு வருடங்களைக் கழித்தார்.

திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் பெக்கட் மீது அனுதாபம் கொண்டிருந்தாலும், ஒரு சாதகமான இராஜதந்திர அணுகுமுறையையே நாடினார். கி.பி. 1167ம் ஆண்டு, திருத்தந்தை பிரதிநிதிகள் (Papal legates) அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டனர்.

இறுதியில், சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பேரரசர் அலெக்சாண்டர் கி.பி. 1170ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பினார். வேறு வழியற்ற ஹென்றி, தாமஸ் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து திரும்பிச் செல்ல அனுமதிகும் ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டான்.

அரசியல் படுகொலை (Assassination):
கி.பி. 1170ம் ஆண்டு, ஜூன் மாதம், "யோர்க்" பேராயர் (The Archbishop of York), "லண்டன்" ஆயர் (Bishop of London), மற்றும் "ஸலிஸ்பரி" ஆயர் (Bishop of Salisbury) ஆகியோர் இணைந்து "யோர்க்" நகரில் இரண்டாம் ஹென்றியின் மகனான இளைய ஹென்றிக்கு அரச முடி சூட்டினர். இது, கான்டர்பரியின் முடிசூட்டும் தனி உரிமையை முடிவுக்கு கொண்டுவந்தது. அதே வருடம் நவம்பர் மாதம்,பெக்கட் இம்மூன்று ஆயர்களை கிறிஸ்தவ திருச்சபையிலிருந்து விலக்கி வைத்தார். மூன்று ஆயர்களும் "நார்மண்டியிலுள்ள (Normandy) அரசரைக் காண விரைந்திருந்த வேளையிலும் பெக்கட் தமது எதிர்ப்பாளர்களை விலக்கியே வைத்தார். இத்தகவல்கள் யாவும் இளம் அரசன் ஹென்றியின் தந்தையான இரண்டாம் ஹென்றியின் காதுக்கு சென்றடைந்தது. தகவல்களைக் கேட்டறிந்ததும் கோபமுற்ற இரண்டாம் ஹென்றி உச்சரித்த வார்த்தைகளை அவரது உதவியாளர்கள் விவரிக்கின்றனர். ஆனால் அவற்றுக்கான சரியான நிரூபணங்கள் இன்னதான் என்று எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பொதுவான மேற்கோல்களின்படி, "யார் இந்த தொல்லை வாய்ந்த கிறிஸ்தவ குருவை ஒழித்துக்கட்டுவார்கள்" என்று சொன்னதாக அறியப்படுகிறது. "ரெஜினால்ட்" (Reginald FitzUrse), "ஹக் டி ஃமோர்வில்" (Hugh de Morville), "வில்லியம்" (William de Tracy) மற்றும் "ரிச்சர்ட்" (Richard le Breton) ஆகிய நால்வரும் இப்பணிக்கு நியமிக்கப்பட்டனர்.

கி.பி. 1170ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 29ம் தேதியன்று, நால்வரும் கேன்டர்பரி சென்றடைந்தனர். கேன்டர்பரியின் துறவி "கேர்வாசின்" (Monk Gervase) கூற்றுபடியும், சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சி "க்ரீம் எட்வர்டின்"படியும் (Edward Grim) அவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்களை ஆலயத்தின் வெளியேயுள்ள மரத்தினடியில் மறைத்து வைத்தனர். கவசத்தை ஆடைகளினடியிலும் ஒளித்து வைத்தனர். அவர்கள், தாமஸ் பெக்கட் "வின்செஸ்டர்" (Winchester) சென்று தமது நடவடிக்கைகளுக்கான காரங்களை ஒப்புவிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெக்கட் அதனை மறுத்தார். அதுமட்டுமல்லாது, இரண்டாம் ஹென்றியின் உத்தரவுகளுக்கு கீழ்படிவதாக ஒப்புக்கொள்ளும்படியும் வற்புறுத்தினர். இவற்றையெல்லாம் பெக்கட் மறுத்த காரணத்தால் ஆத்திரம் கொண்ட அந்நால்வரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஆலயத்தினுள்ளே விரைந்தனர். இதற்கிடையே துறவியர் செபிக்கும் ஆலயத்தின் மேல்மாடிக்கு செல்லும் படிக்கட்டினருகே பெக்கட் வந்தடைந்திருந்தார்.

பின்னர், நடந்தவற்றை நேரில் பார்த்த சாட்சியான க்ரீம் விளக்குகிறார்.-
முதலாமவன் சட்டென்று பெக்கட்டின் மீது பாய்ந்து அவரது தலையிலிருந்த கிரீடத்தின் முனையில் வெட்டினான். இரண்டாமவன் அவரது தலையில் வெட்டினான். ஆனாலும் பெக்கட் ஸ்திரமாக நின்றுகொண்டிருந்தார். மூன்றாவது வெட்டு விழுந்ததும் பெக்கட் முழங்கால்களிலும் கைகளிலும் விழுந்தார். உயிருள்ள பலியாக தம்மையே அர்ப்பணித்த பெக்கட் முணுமுணுத்த குரலில், "இயேசுவின் பெயருக்காகவும் திருச்சபையின் பாதுகாவலுக்காகவும் நான் மரணத்தை தழுவ தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் மூன்றாமவன் மீண்டும் ஏற்படுத்திய பயங்கரமான காயம், அவரை குப்புற விழ வைத்தது. இந்த வெட்டில், அவரது தலையிலிருந்த கிரீடம் கீழே விழுந்தது. தலையினுள்ளிருந்து வெண்ணிற மூளை வெளியே வந்து விழுந்தது. தேவாலயத்தின் தரை பெக்கட்டின் இரத்தத்தால் நனைந்தது. இரக்கமற்ற மூன்றாமவன் புனித குருவும், விலைமதிப்பற்ற தியாகியுமான தாமஸ் பெக்கட்டின் கழுத்தில் ஏறி மிதித்தபடி, அவரது இரத்தம் மற்றும் மூளையை தேவாலயத்தின் நடைபாதைகளில் சிதறடித்தான். பின்னர், "வாருங்கள் ஓடிவிடலாம், இவன் இனி உயிர் பிழைக்க மாட்டான்" என்று கூவினான்.

=================================================================================
தூய தாமஸ் பெக்கட்

"சீடர் குருவைவிடப் பெரியவர் அல்ல, பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள், வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?" (மத் 10: 24,25)

வாழ்க்கை வரலாறு

இன்று அன்னையாம் திரு அவை தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் 1118 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள், இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை பாரிஸில் படித்து வந்தார். அப்போது இவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பராமரித்துக் கொள்ள, இவர் தன் சொந்த ஊருக்குத் திரும்பிவந்தார்.

ஒருசில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, தாமஸ் பெக்கட், காண்டர்பேரியில் பேயராக இருந்த தியோபோல்டிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். பேராயர் தியோபோல்ட் தாமஸ் பெக்கட்டிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு 1154 ஆம் ஆண்டு, அவரை முதன்மைத் திருத்தொண்டராக நியமித்தார். இப்படியே தாமஸ் பெக்கட்டின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டு அரசரும் தாமஸ் பெக்கட்டின் நெருங்கிய நண்பருமான இரண்டாம் ஹென்றி என்பவன், அவரை துணைவேந்தராகவும், பேராயர் தியோபோல்டின் மறைவிற்குப் பிறகு காண்டர்பேரியின் பேராயராகவும் நியமித்தான். அவன் ஏன் இப்படியெல்லாம் செயல்படுகிறான் என்பதைக் குறிப்பால் அறிந்த தாமஸ் பெக்கட், துணைவேந்தர் பதவியைத் துறந்து, காண்டர்பேரியின் பேராயர் பொறுப்பினை மட்டும் வைத்துக்கொண்டு மக்களுக்கு சிறப்பாக பணிகளைச் செய்து வந்தார்.

தாமஸ் பெக்கட் துணை வேந்தர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு தன்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டார் என நினைத்த மன்னன் இரண்டாம் ஹென்றி, 1164 ஆம் ஆண்டு Constitutions of Clarendon என்ற சட்டத்தை இயற்றி, ஆயர்கள், குருக்கள் தனக்குக் கீழ் பணிசெய்யவேண்டும், திரு அவையில் தன்னுடைய தலையீடு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தான். இதனை தாமஸ் பெக்கட் மிகக் கடுமையாக எதிர்த்து, 'திரு அவைக்கு திருத்தந்தைதான் தலைவரே ஒழிய, அரசர் அல்ல. எனவே அரசர் எந்தவிதத்திலும் திரு அவையின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது' என்று தன்னுடைய குரலைப் பதிவு செய்தார். இதனால் வெகுண்டெழுந்த மன்னன் இரண்டாம் ஹென்றி, தாமஸ் பெக்கட்டை எப்படியாவது வீழ்த்தலாம் என்று திட்டம் தீட்டினான். அவனுடைய திட்டத்தை உணர்ந்து தாமஸ் பெக்கட், பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு அரசராக இருந்த ஏழாம் லூயிஸ் மன்னர் அவரை இன்முகத்தோடு வரவேற்று அவருக்கு அடைக்கலம் தந்தார்.

1164 ஆம் ஆண்டிலிருந்து 1170 ஆம் வரை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள், தாமஸ் பெக்கட் பிரான்ஸ் நாட்டில் இருந்து, அப்போது இருந்த திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் வழியாக இங்கிலாந்து நாட்டில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட கடுமையாக உழைத்தார். 1170 ஆம் ஆண்டு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டபோது தாமஸ் பெக்கட் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று, காண்டர்பேரியில் பேராயராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் ஒருசில ஆயர்கள் திருத்தந்தைக்குக் கீழ்படியாமல், அரசருக்குக் கீழ்ப்படிந்து வந்ததை தாமஸ் பெக்கட் கண்டித்ததால், மன்னன் இரண்டாம் ஹென்றி, "இவர் (தாமஸ் பெக்கட்) நமக்கு மிகவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவரைக் கொன்றுவிடுங்கள்" என்று தன்னுடைய படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அதனடிப்படையில் படைவீரர்கள் தாமஸ் பெக்கட்டை 1170 ஆம் ஆண்டு, டிசம்பர் 29 ஆம் நாள் கொன்றுபோட்டார்கள். இவருக்கு 1174 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 12 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவருக்கு மட்டும் பணிந்து நடப்போம்!

தூய தாமஸ் பெக்கட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் மன்னன் இரண்டாம் ஹென்றிக்குப் பணிந்து நடக்காமல், திருத்தந்தைக்கும் அவருக்குத் தலைவராக இருக்கின்ற ஆண்டவருக்கு மட்டுமே பணிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவருக்கு மட்டுமே பணிந்து நடக்கின்றோமா? அல்லது மனசாட்சியை அடகுவைத்துவிட்டு, நம்முடைய சொகுசான வாழ்க்கைக்காக யாராருக்கெல்லாமோ பணிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

16 ஆம் நூற்றாண்டில் திரு அவையில் போராட்டம் வெடித்தபோது, இங்கிலாந்தை ஆண்டுவந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னன், "இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற எல்லாக் குருக்களும் ஆயர்களும் எனக்குத்தான் கீழ்ப்படியவேண்டும். இதை மீறி யாராவது திருத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் தமேஸ் நதியில் தூக்கி வீசப்படுவார்கள்" என்று உத்தரவிட்டான். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறையப் குருக்கள், ஆயர்கள், "நாங்கள் திருத்தந்தைக்குத்தான் கீழ்ப்படிந்து நடப்போம் என்று உறுதியாக இருந்தார்கள். இதனால் அவர்கள் அனைவரும் மன்னன் முன்பாக இழுத்துவரப்பட்டார்கள்.

மன்னன் அவர்களை விசாரித்தான். அப்போது அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "நாங்கள் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கும் சீசருக்கு உரியதை சீசருக்கும் கொடுக்கச் சொன்ன இயேசுவின் வழி வந்தவர்கள். அதனால் நாங்கள் திருத்தந்தைக்குத்தான் கீழ்ப்படிவோம். மீறி நீர் எங்களை தமேஸ் நதியில் தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை. என்றைக்கோ ஒருநாள் சாகப் போகிறோம். அது இன்றைக்கே, இறைவனுக்காக இறந்தால் என்ன?" என்றார்கள். இதைக் கேட்டு அரசன் மிரண்டு போனான்.

நம்முடைய வாழ்விற்கான ஆதாரம் இறைவன் மட்டும்தானே தவிர, வேறு யாருமல்ல. ஆகவே, தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா