Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠✠ புனிதர் முதலாம் சில்வெஸ்டர் ✠ (St. Sylvester I)
   
நினைவுத் திருநாள் : டிசம்பர் 31
 *  ✠ புனிதர் முதலாம் சில்வெஸ்டர் ✠ (St. Sylvester I)

 33ம் திருத்தந்தை : (33rd Pope)

 பிறப்பு :
சாந்தாஞ்சலோ ஆஸ்காலா, அவெல்லீனோ (Sant'Angelo a Scala, Avellino)

 இறப்பு : டிசம்பர் 31, 335
ரோம், இத்தாலி (Rome, Italy)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 31

திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் (Pope Sylvester I) ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் 314ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் நாளிலிருந்து 335ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் வரை திருப்பணி செய்தார். இவருக்கு முன் ஆட்சியிலிருந்தவர் திருத்தந்தை "மில்டியாட்ஸ்" (Pope Miltiades) ஆவார். திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் கத்தோலிக்க திருச்சபையின் 33ம் திருத்தந்தை ஆவார்.

இத்திருத்தந்தையின் திருப்பணிக் காலத்தில் ரோம் நகரில் பேரரசன் காண்ஸ்டண்டைன் (Constantine) வலிமை மிக்கவராக விளங்கினார். அவர்களின் ஆட்சியின்போது ரோம் நகரில் தலைசிறந்த பேராலயங்கள் பல கட்டப்பட்டன. அவற்றுள் சிறப்பாக, புனித பேதுரு பேராலயம், "தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்" (Basilica of St. John Lateran), "எருசலேம் திருச்சிலுவை பேராலயம்" (Santa Croce in Gerusalemme), "பழைய தூய பேதுரு பேராலயம்" (Old St. Peter's Basilica) ஆகியவையும், பிற பல மறைச்சாட்சியரின் கல்லறைகள் மீது கட்டப்பட்ட ஆலயங்களும் உள்ளடங்கும்.

திருப்பணிக்காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :

முதலாம் சில்வெஸ்தரின் திருப்பணியின் போது, கி.பி. 325ம் ஆண்டு, "நிசேயா பொதுச் சங்கம்" (First Council of Nicaea) நிகழ்ந்தது. அச்சங்கத்தைக் கூட்டியது சில்வெஸ்டர் அல்ல, மாறாக காண்ஸ்டண்டைன் (Constantine) மன்னன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சங்கத்தில் சில்வெஸ்டர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவருடைய பதில் ஆட்களாக "வீத்துஸ்" (Vitus), "வின்சென்சியுஸ்" (Vincentius) என்னும் இரு மூப்பர்-குருக்கள் (Legates) கலந்துகொண்டனர். சங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் கோர்தோபா ஆயர் ஓசியுஸ் என்பவர். சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை சில்வெஸ்தர் ஏற்று, ஒப்புதல் வழங்கினார்.

திருத்தந்தையின் வாழ்க்கை பற்றிய புனைவு நிகழ்ச்சிகள் :

சில்வெஸ்தரின் வாழ்க்கையில் நடந்ததாக சில நிகழ்வுகள் பிற்காலத்தில் (கி.பி. 5ம் நூற்றாண்டு) புனையப்பட்டன. காண்ஸ்டண்டைன் மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டதாகவும், சில்வெஸ்தர் அவருக்குத் திருமுழுக்கு அளித்ததும் மன்னரின் நோய் நீங்கியதாகவும் புனைவுகள் உருவாகின. கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்ற மன்னர் சில்வெஸ்தருக்குத் தலைவணங்கினார். சில்வெஸ்தர் ஒரு மணிமுடியை எடுத்து காண்ஸ்டண்டைன் மன்னனின் தலையில் சூடினார்.

பிற்காலத்தில் எழுந்த இப்புனைவு வலியுறுத்திய கருத்து இது:
மன்னருக்கு அதிகாரம் வழங்கியவர் திருத்தந்தையே. எனவே திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரமும் உலக ஆட்சி அதிகாரமும் உண்டு. இக்கருத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் திருத்தந்தையர் ஆன்மிகத் தலைவர்களாக மட்டுமன்றி, அரசியல் ஆட்சியாளர்களாகவும் தங்கள் பதவியை நியாயப்படுத்தினர். மேலும் ஆட்சியாளர்களை நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் தமக்கு அதிகாரம் உண்டு என்றும் உரிமைகொண்டாடினர்.

மற்றொரு புனைவுப்படி, சில்வெஸ்டர் ஒரு பறவை நாகத்தைக் கொன்று, அந்த விலங்கின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்தவர்களுக்கு அற்புதமாக மீண்டும் உயிர் கொடுத்தார். சில்வெஸ்டரைச் சித்தரிக்கும் ஓவியங்களில் பறவை நாகம் இடம்பெறுவது இப்புனைவின் அடிப்படையில்தான்.

இறப்பும் அடக்கமும் :
சில்வெஸ்தரின் பணிக்காலம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் நீடித்தது. அவர் 335ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் இறந்தார். அவரது உடல் ரோம் நகரை அடுத்த சலாரியா சாலையில் அமைந்த புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீபகுதிகளை 762ம் ஆண்டில் திருத்தந்தை "முதலாம் பவுல்" ரோம் நகருக்கு உள்ளே அமைந்த சில்வெஸ்டர் ஆலயத்தில் மீள் அடக்கம் செய்தார்.

நினைவுத் திருவிழா :
கத்தோலிக்க திருச்சபை சில்வெஸ்டரின் நினைவுத் திருவிழாவை டிசம்பர் மாதம், 31ம் நாள் கொண்டாடுகிறது. கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளும் கிழக்கு மரபுவழி கத்தோலிக்க சபைகளும் ஜனவரி மாதம், 2ம் நாள் சிறப்பிக்கின்றன.
 
=================================================================================
தூய சில்வெஸ்டர்

"நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்கு தளபதியாகவும் தலைவராகவும் ஏற்படுத்தியுள்ளேன்" (எசா 55:4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய சில்வெஸ்டர், மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமையில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த ஆசிரியரும் குருவுமான சாரிதியுஸ் என்பவரிடத்தில் கல்வி கற்று, பின்னாளில் குருவாக மாறினார்.

சில்வெஸ்டர், குருவான சமயத்தில் டயோக்ளசியன் என்பவன் உரோமையை ஆண்டுவந்தான். அவன் கிறிஸ்தவர்களைக் கடுமையாக சித்ரவதை செய்துவந்தான். அவனுடைய இறப்புக்குப் பின்பு கான்ஸ்டன்டைன் உரோமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். 312 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் நாள், அவன் மாக்செண்டியுஸ் என்பவனோடு போர்தொடுக்க வேண்டி வந்தது. அதனால் மன்னர் கான்ஸ்டன்டைன் திரு அவையின் உதவியை நாடினான். அந்தப் போரில் அவனுக்கு வெற்றி கிடைத்ததும் அவன் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். இதனால் நிறைய விஷயங்கள் முற்றிலுமாக மாறின.

இதற்கிடையில் திருத்தந்தையாக இருந்த மில்தியாதேஸ் இறந்துவிட, சில்வெஸ்டர் 33 வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார். இதற்குப் பின்பு அவர், மன்னர் கான்ஸ்டன்டைனின் ஒத்துழைப்போடு நிறைய வளர்ச்சிப் பணிகளை செய்யத் தொடங்கினார். அதற்கு முன்பாக டாக்மாடிஸ்ட் என்ற தப்பரைக் கொள்கையினையும், 325 ஆம் ஆண்டு நடந்த நிசேயா பொதுச் சங்கத்தின் வழியாக ஆரியப்பதத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த ஆரியபதம் கிறிஸ்துவின் இறைத் தன்மையை மறுத்துவந்தது. அதனால் திருத்தந்தை சில்வெஸ்டர் அதனைக் கடுமையாகக் கண்டித்து, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இதற்குப் பின்பு இவர் நிறைய வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தார். குறிப்பாக மன்னர் கான்ஸ்டன்டைனின் ஒத்துழைப்போடு லாத்தரன் பேராலயம், சாந்தா குருஸ் பேராலயம், தூய பேதுரு பசிலிக்கா போன்றவற்றைக் கட்டி எழுப்பினார். மேலும் ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த மறைசாட்சிகளினுடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்தெடுத்தார். இவற்றோடு கூட திரு வழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் நிறைய நல்ல காரியங்களைச் செய்தார். இவருடைய காலத்தில்தான் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாகவும் ஆண்டவருடைய நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

திருத்தந்தை சில்வெஸ்டர், பல்வேறு பணிகளைச் செய்தார். அவற்றையெல்லாம் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் தான் செய்தார். இவர் செய்துவந்த பணிகளைப் பார்த்துவிட்டு மன்னரும் தன்னுடைய இருப்பிடத்தை உரோமையிலிருந்து காண்டாண்டிநோபிலுக்கு மாற்றிக்கொண்டு, திரு அவை மேலும் மேலும் வளர ஒத்துழைப்பை நல்கினார்.

இப்படி பல்வேறு பணிகளை மிகச் சிறப்பாக செய்து, திரு அவையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய திருத்தந்தை சில்வெஸ்டர், 335 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவர்தான் மறைசாட்சியாக உயிர்துறக்காமல் தூயவர் கூட்டத்தில் இணைந்த முதல் தூயவர் அல்லது புனிதர் என்பது குறிப்பிடத் தக்கது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சில்வெஸ்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவோம்


தூய சில்வெஸ்டர் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் செய்த நிறைய காரியங்களை தொலைநோக்குப் பார்வையுடன்தான் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய காலத்தில்தான் கிறிஸ்தவம் அரச மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இப்படிப்பட்ட சூழலில், எதை எதையெல்லாம் செய்தால், திரு அவை எதிர்காலத்தில் நல்லவிதமாய் வளரும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செய்தார். அதனால்தான் திரு அவை இன்றைக்கு இந்தளவுக்கு வளர்ந்து நிற்கின்றது. இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் நம்முடைய இந்திய நாட்டில் தோன்றிய தூய குரியாகோஸ் எலியா சவராவைக் குறித்துச் சொல்லியாக வேண்டும். இவர் கேரளத் திரு அவையில் பல காரியங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்தான் இந்திய மண்ணில் முதன்முதலாக இருபாலருக்கும் துறவற சபையை (CMI, CMI) நிறுவியவர். இவர்தான் கேளராவில் அச்சகத்தைக் கொண்டுவந்தவர், இவர்தான் 40 மணிநேர நற்கருணை ஆராதனையை அறிமுகப் படுத்தியவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்தான் அறிவே ஆயுதம், கல்வியே பலம் என்று ஆலயத்தை ஒட்டியே பள்ளிக்கூடம் இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து அதனை செயல்படுத்தினார். இன்றைக்கு கல்வியில் கேரளா மாநிலம் முதல் இடத்தில் இருக்கின்றது என்று சொன்னால், அதற்கு இவர் எடுத்த முன் முடிவுகள், திட்டங்கள்தான் காரணம் என்றால், அது மிகையில்லை.

ஆகவே, தூய சில்வெஸ்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தூய குரியாகோசைப் போன்று, எதையும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துப் செய்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா