Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஸ்தேவான் ✠(St. Stephen)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 26)
✠ புனிதர் ஸ்தேவான் ✠(St. Stephen)

 திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி :
(Deacon and Promartyr)

இறப்பு : கி.பி. சுமார் 34
ஜெருசலேம், ஜூதாயு, ரோமப் பேரரசு
(Jerusalem, Judaea, Roman Empire)

ஏற்கும் சபை/ சமயம் :
அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளும்

திருவிழா : டிசம்பர் 26

சித்தரிக்கப்படும் வகை :
கற்கள், திருத்தொண்டர் உடை, தூப கலசம், நற்செய்தி நூல்

பாதுகாவல் :
சவப்பெட்டி செய்வோர், திருத்தொண்டர்கள், பீட சிறுவர், தலைவலி; குதிரைகள்; கொத்தனார்கள்; செர்பியா

புனித ஸ்தேவான் கிறிஸ்தவத்தின் முதல் இரத்தசாட்சி ஆவார். கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்த் தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார். திருத்தூதர் பணிகளின்படி, இவர், எருசலேம் நகரில், ஆதி திருச்சபையின் திருத்தொண்டராவார். அவருடைய போதனைகள், பல்வேறு ஜெபக்கூடங்களின் உறுப்பினர்களின் பகைமையை தூண்டியது.

இறப்பு :
திருத்தூதர் பணிகளின்படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர்.
~ திருத்தூதர் பணிகள் 6:11

விசாரணையின் போது, ஸ்தேவான் பின்வருமாறு கூறினார்:
"இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்."
~ திருத்தூதர் பணிகள் 7:56

திருத்தூதர் பணிகள் 6 மற்றும் 7ம் அதிகாரங்கள் இந்த விசாரணையை விவரிக்கின்றன.

தூஷிப்பவராகவும், இறை பழி சொல்பவராகவும், வசைபாடுபவராகவும் குற்றம் சாட்டப்பட்ட இவர், தன்மீது அறிக்கையிடப்படும் தீர்ப்பைக் காண வந்து காத்திருந்த யூத அதிகாரிகளின் முன்னர் நீண்ட உரையாற்றினார்.

பின்னர், இவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் கல்லெறிந்து கொல்லப்பட்டார். அவர் மறைசாட்சியாக கொல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சியான "பரிசேயர்" (Pharisee) "டார்சஸ்" நகரைச்சேர்ந்த "சவுல்" (Saul of Tarsus) எனும் இளைஞரிடம் மேலுடைகளை ஒப்படைத்தார்கள். (இவரே பின்னாளில் அப்போஸ்தலரான பவுல் (Paul the Apostle) ஆவார்). ஸ்தேவானை துன்புறுத்தியபோது யூதர்கள் அப்போது நேர்மையாளர்களை கொலை செய்வதாக அவர் சாடினார்.

"எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையம் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்று விட்டீர்கள்."
~ திருத்தூதர் பணிகள் 7:52)

பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.

கல்லறை :
இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. கி.பி. 415ம் ஆண்டு, எருசலேமிற்கு திருப்பயணம் செய்தபோது, "லூசியான்" (Lucian) என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின்படி இவரது மிச்சங்கள், "பெய்ட் ஜிமல்" (Beit Jimal) எனும் இடத்திலிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் நாள், கிறிஸ்தவ முதல் மறைசாட்சியின் உடலின் மிச்சங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, "ஹகியா சியோன்" (Church of Hagia Sion) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதே நாள், இவரது நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. கி.பி. 439ம் ஆண்டு, இவரை கௌரவிக்கும் விதமாக, "பேரரசி ஏலியா யூடோசியா", (Empress Aelia Eudocia) "டமாஸ்கஸ் வாயிலின்" (Damascus Gate) வடக்கே ஒரு புதிய தேவாலயம் கட்டி, இவரது மிச்சங்களை மாற்றினார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இவ்வாலயம் இடிக்கப்பட்டது. "செயின்ட் எட்டியேன்" (Saint-tienne) என்றழைக்கப்படும் ஒரு இருபதாம் நூற்றாண்டு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க ஆலயம், அதே இடத்தில் கட்டப்பட்டது. அதேவேளை, மற்றுமொரு "கிரேக்க மரபுவழி திருச்சபையின்) (Greek Orthodox Church of St Stephen) ஆலயமொன்று, இவரது பெயராலேயே, இவர் மறைசாட்சியாக கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் கட்டப்பட்டது.

எருசலேமின் பிரதான வடக்கு வாயிலை, "புனிதர் ஸ்தேவான் வாயில்" (Saint Stephen's Gate) என்று "சிலுவைப் போராளிகள்" (The Crusaders) முதலில் அழைத்தனர்.

பிற்காலத்தில், ரோம் நகரின் வெளிப்புற சுவர்களில் தூய லாரன்ஸ் பேராலயம்" (Basilica of Saint Lawrence outside the Walls) கட்டப்பட்டபோது, திருத்தந்தை "இரண்டாம் பெலாஜியஸ்" (Pope Pelagius II) புனிதர் ஸ்தேவானுடைய உடலின் மிச்சங்களை எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா