Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூயதாக்கப்பட்ட புனிதர் சப்பாஸ் ✠(St. Sabbas the Sanctified)
   
நினைவுத் திருநாள் : (டிசம்பர்  / Dec- 05)
✠ தூயதாக்கப்பட்ட புனிதர் சப்பாஸ் ✠(St. Sabbas the Sanctified)

வணக்கத்துக்குரிய தந்தை/ மடாதிபதி :
(Venerable Father/ Abbot)

பிறப்பு : கி.பி. 439
செசெரியா மஸாகா, கப்படோஸியா
(Caesarea Mazaca, Cappadocia)

இறப்பு : டிசம்பர் 5, 532
ஜெருசலேம், பாலஸ்தீனம் பிரைமா
(Jerusalem, Palaestina Prima)

ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம் :
தூய சப்பாஸ் மடாலயம், கிட்ரோன் பள்ளத்தாக்கு
(Saint Sabbas Monastery, Kidron Valley)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 5

புனிதர் சப்பாஸ், ஒரு கப்படோசியன் சிரியன் துறவியும் (Cappadocian-Syrian monk), குருவும் (Priest), பாலஸ்தீனத்தில் (Palaestina Prima) வாழ்ந்திருந்த புனிதருமாவார். இவரது பெயர் அராமைக் (Aramaic) மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அராமைக் மொழியில் இதன் அர்த்தம், முதியவர் என்று வரும். இவர், எண்ணற்ற பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். இவர் நிறுவிய மடங்களில் முக்கியமானது, "மார் சபா" (Mar Saba) மடாலயம் ஆகும்.

புனிதர் சப்பாஸ், கப்படோஸியாவின் (Cappadocia) "செசெரியா மஸாகா" (Caesarea Mazaca) அருகேயுள்ள "முட்டலாஸ்கா" (Mutalaska) எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, இராணுவ தளபதியான (Military Commander) "ஜான்" (John) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "சோஃபியா" (Sophia) ஆகும்.

இராணுவ பணிகளின் காரணமாக "அலெக்ஸ்சாண்ட்ரியா" (Alexandria) பயணித்த இவரது பெற்றோர், ஐந்து வயதான இவரை இவரது தாய்மாமனிடம் விட்டுச் சென்றனர். இவருக்கு எட்டு வயதாகையில், இவர் அருகேயிருந்த "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) என்பவரது துறவு மடத்தில் சேர்ந்தார். புத்திசாலியான சிறுவன், விரைவிலேயே கற்றுத் தேர்ந்து, பரிசுத்த வேதாகமத்தின்பேரில் ஒரு நிபுணர் ஆனார். மீண்டும் இவ்வுலக வாழ்க்கைக்கு திரும்பவும், திருமணம் செய்துகொள்ளவும் அழுத்தம் தந்த இவரது பெற்றோரின் ஆலோசனைகளை சப்பாஸ் தீர்க்கமாக நிராகரித்தார்.

அவர் பதினேழு வயதானபோது, துறவற சமயச் சடங்குகளுக்காக தலையை முழுவதுமாக மழித்துக்கொண்டார் (Monastic Tonsure). பத்து வருடங்கள் "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) துறவு மடத்தில் செலவிட்ட அவர், பின்னர் அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) பயணித்தார். பின்னர் அங்கிருந்து, புனிதர் பெரிய யூத்திமியஸ் மடாலயம் (Monastery of Saint Euthymius the Great) சென்றார். ஆனால், புனிதர் பெரிய யூத்திமியஸ் அவரை அங்கிருந்து, அருகாமையிலுள்ள கண்டிப்பான செனொபிடிக் விதிகளைக் (Strict Cenobitic Rule) கடைபிடிக்கும் "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) எனும் மடாதிபதியின் மடாலயத்திற்கு அனுப்பினார். சப்பாஸ், தமது முப்பது வயது வரை இந்த மடாலயத்தில் கீழ்ப்படிதலுடன் வசித்தார்.

மூத்த "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) இறந்த பிறகு, அவரது பின்வரும் வாரிசு, சப்பாசை ஒரு குகையில் ஒதுங்கி வாழுமாறு ஆசீர்வதித்தார். சனிக்கிழமைகளில், அவர் தனது வசிப்பிடத்தைவிட்டு, மடாலயத்திற்கு வந்து, அங்கு அவர் தெய்வீக சேவைகளில் கலந்துகொண்டு சகோதர துறவியர்களுடன் உணவு உண்பார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன் வசிப்பிடத்தை விட்டு வெளியேறாதபடி சப்பாஸ், அனுமதி பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் குகைக்குள் தனியாக வாழ்ந்தார்.

புனிதர் பெரிய யூத்திமியஸ் (Saint Euthymius the Great), இளம் துறவியின் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கண்டு, அவருடைய வாழ்க்கையை கவனமாக வழிநடத்தி, அவரை தம்முடன் வனாந்தரத்தில் வாழ இட்டுச் சென்றார். அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம், 14ம் தேதி முதல், குருத்து ஞாயிறுவரை அங்கு தங்கினர். சப்பாசை மூத்த குழந்தை என்று அழைத்த புனிதர் பெரிய யூத்திமியஸ், அவரை துறவற நல்லொழுக்கங்களில் வளர ஊக்குவித்தார்.

சப்பாஸ் பல்வேறு மடாலயங்களை நிறுவினார். சப்பாஸின் ஜெபங்களின் மூலம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வறண்ட காலத்தின் போது, இவரது ஜெபங்களின் மூலம் ஏராளமான மழையைப் பெற்றார்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் குணமானார்கள்.

கி.பி. 491ம் ஆண்டு, ஜெருசலேம் நகரின் குலபதி அல்லது பரம்பரைத் தலைவர் (Patriarch Salustius of Jerusalem), இவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். கி.பி. 532ம் ஆண்டு, சப்பாஸ் மரணமடைந்தார்.

=================================================================================

தூய சபாஸ் 05 12 2018


"உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலி 3:8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சபாஸ், 439 ஆம் ஆண்டு, கப்படோசியாவில் (தற்போதைய துருக்கி) உள்ள முடலஸ்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓர் இராணுவ அதிகாரி. வேலை விசயமாக சபாஸின் தந்தை அலெக்ஸ்சாந்திரியாவிற்கு மாற்றப்பட்டதால், சபாஸ் அவருடைய மாமாவின் கண்காணிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரோ சபாசை கொடுமைப்படுத்தத் தொடங்கினார். இதனால் அவர் வீட்டை விட்டு ஓடிப்போய், ஊருக்கு வெளியே இருந்த ஒரு துறவற மடத்தில் தஞ்சமடைந்து, அங்கேயே சில ஆண்டுகாலம் வாழ்ந்துவந்தார்.

சபாஸிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது புனித பயணமாக எருசலேமிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் தூய தியோக்திஸ்துஸ் என்பவரைச் சந்தார். அவரோ வனத்தில் துறவியாக இருந்து ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அவர்பால் ஈர்க்கப்பட்ட சபாஸ், அடுத்த பத்தாண்டுகளுக்கு அவரோடு ஒரு சீடரைப் போன்று இருந்து, பயிற்சிகள் பல பெற்றார். இதற்குப் பின்பு சபாஸ், தியோக்திஸ்துஸ் என்பவரிடமிருந்து விடைபெற்று தூய யுதிமியுஸ் என்பவருடைய வழிகாட்டுதலில் தனியாகச் சென்று துறவற வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

சபாஸ் தன்னுடைய துறவற வாழ்க்கையில் ஜெபத்திற்கும் தவத்திற்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார், அமைதியில் நீண்ட நேரம் செலவழித்தார். இவருடைய துறவற வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, பலர் இவரிடத்தில் சீடர்களாக வந்துசேர்ந்தார்கள். சபாஸ் தன்னிடத்தில் சீடராகச் சேர்ந்த அனைவருக்கும் நல்லவிதமாய் பயிற்சிகள் கொடுத்து, அவர்களைக் கடவுளுக்கு உகந்தவர்களாக மாற்றினார்.

ஒருசமயம் இவர் அலெக்ஸ்சாந்திரியாவிற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது தற்செயலாக இவருடைய பெற்றோரை இவர் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தங்களுடைய மகன் இப்படி துறவியாக மாறியிருப்பதைக் கண்டு, அதிர்ந்து போனார்கள். "மகனே! தயவுசெய்து நீ இந்த துறவுகோலத்தைக் களைந்துவிட்டு, எங்களோடு வந்துவிடு" என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். ஆனால் சபாஸ் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே இருந்தார். இதனாலே கண்ணீர் வடிந்த கண்களோடு அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

இதற்குப் பின்பு தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிய சபாஸ், 483 ஆம் ஆண்டு, புதிதாக ஒரு துறவுமடத்தைக் கட்டி எழுப்பினார். இதில் எகிப்திலிருந்தும் அர்மேனியாவிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் சீடர்களாக வந்து சேர்ந்தார்கள். சபாஸ் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிய இருந்து, அவர்களை நேரிய பாதையில் வழிநடத்திச் சென்றார்.

இப்படி அவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும் அவரது உடல்நலம் குன்றியது. இதனால் அவர் 532 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சபாஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்

தூய சபாஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்துபோகின்றது. அவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் ஜெபித்துக்கொண்டே இருந்தார். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்காவிட்டாலும் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்தவர்களாய் வாழ்வது மிகச் சிறப்பான ஒரு செயலாகும். நற்செய்தியை வாசிக்கின்றது, இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார் என்று அறிகின்றோம். இயேசுவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய சபாசைப் போன்று ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து ஜெபிக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

காந்தியடிகள் ப்ரெடோரியாவுக்குச் (Pretoria) சென்றிருந்த சமயம், அங்கு தனக்குத் தெரிந்த ஒருசில கிறிஸ்தவ நண்பர்களைப் பார்த்திவிட்டுப் போகலாம் என அவர் நினைத்தார். அது இரவுநேரம். காந்தியடிகள் ஒரு நண்பருடைய வீட்டின் கதவைத் தட்டினார். சிறுதுநேரத்தில் உள்ளே இருந்து அவருடைய நண்பர் வெளியே வந்தார். அப்போது காந்தியடிகள் தற்செயலாக நண்பருடைய வீட்டினுள்ளே பார்த்தார். அங்கே அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜெபித்துக் கொண்டிருந்தனர். காந்தியடிகளைப் பார்த்ததும், அவர்கள் ஜெபத்தை நிறுத்திவிட்டு, அவரை இன்முகத்தோடு வரவேற்க வந்தார்கள்.

உடனே காந்தியடிகள், "எதற்கு ஜெபிப்பதை நிறுத்திவிட்டீர்கள்?, நீங்கள் யாரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அவர் என்னைவிடப் பெரியவர். ஆதலால், தொடர்ந்து நீங்கள் ஜெபியுங்கள். நான் அப்புறம் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் விடைபெற்றுப் போகும்போது தனது நண்பருடைய குடும்பம் எந்தளவுக்கு ஜெபிக்கின்ற குடும்பமாக இருக்கின்றது என்று வியந்துகொண்டே போனார்.

காந்தியடிகளின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு, நம்முடைய ஜெபம் மெச்சக்கூடியதாக இருக்கின்றதா?, நமது ஜெப வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததாக இருக்கின்றதா? என்று சிந்திக்க நம்மை அழைக்கின்றது. ஜெபம் ஒரு ஓடத்திற்கு துடுப்பு போன்றது. துடுப்பு இல்லாமல், ஓடத்தின் கதி அதோ கதிதான்.

ஆகவே, தூய சபாஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப செயல் வீரர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா