✠ புனிதர் பீட்டர் கனிசியஸ் ✠ (St. Peter
Canisius) |
|
|
|
நினைவுத் திருநாள் :
டிசம்பர்
21 |
* குரு,
மறைப்பணியாளர், மறைவல்லுநர் :
(Priest, Religious and Doctor of the Church)
*
பிறப்பு : மே 8, 1521
நிஜ்மெகன், ஹப்ஸ்பர்க் நெதர்லாந்து (தற்போதைய நெதர்லாந்து)
(Nijmegen, Habsburg Netherlands)
*
இறப்பு : டிசம்பர் 21, 1597 (வயது 76)
ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
(Fribourg, Switzerland)
*
ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
*
அருளாளர் பட்டம் : 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)
*
புனிதர் பட்டம் : மே 21, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI)
*
முக்கிய திருத்தலங்கள் :
புனித மிக்கேல் கல்லூரி, ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
(College of St. Michael, Fribourg, Switzerland)
*
பாதுகாவல் :
கத்தோலிக்க அச்சகங்கள், ஜெர்மனி (Catholic press,
Germany)
புனித பீட்டர் கனிசியஸ் ஒரு பிரபல "டட்ச் இயேசு சபை கத்தோலிக்க
குரு" (Dutch Jesuit Catholic priest) ஆவார். இவர், "எதிர்
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தின்"போது (Protestant
Reformation) ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria),
போஹேமியா (Bohemia), மோராவியா (Moravia), மற்றும் சுவிட்சர்லாந்து
(Switzerland) ஆகிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளையும்
கத்தோலிக்க விசுவாசம் பற்றியும் மக்களுக்கு பிரசங்கித்த காரணத்தால்
இவர் பெயர் பிரபலம் பெற்றது. எதிர் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப்
பின்பு கத்தோலிக்க திருச்சபை ஜெர்மனியில் கண்ட மறுமலர்ச்சிக்கு
பெரும்பாலான காரணம் இவரது தலைமையிலான இயேசு சபைதான் என நம்பப்படுகின்றது.
இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின்
மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.
1521ம் ஆண்டு, அந்நாளைய ரோமப்பேரரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட
"நிஜ்மெகன்" (Nijmegen), "ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தில்" (Habsburg
Netherlands) (தற்போதைய நெதர்லாந்து) பிறந்த பீட்டர் கனிசியஸின்
தந்தை வசதியான டச்சு நாட்டின் நகரச் சட்ட முதல்வரான (Burgomaster)
"ஜாகோப் கனிஸ்" (Jacob Kanis) ஆவார். இவரது தாயாரின் பெயர்
"எகிடியா வன் ஹௌவேனிஞ்சன்" (Egidia van Houweningen) ஆகும்.
இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார்.
கொலோன் நகர பல்கலையில் (University of Cologne) கல்வி கற்ற கனிசியஸ்,
1540ல் தமது பத்தொன்பதே வயதில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கே
அவர் இயேசு சபை நிறுவனர்களில் ஒருவரான "பீட்டர் ஃபாபரை" (Peter
Faber) சந்தித்தார். அவர் மூலமாகவே 1543ம் ஆண்டில் புதிதாய் தொடங்கப்பட்ட
இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் இணைந்த முதல் "டட்ச்"
(Dutchman) இன கிறிஸ்தவரும் இவரேயாவார்.
அந்நாளில் பீட்டர் கனிசியஸ் தமது பிரசங்கங்களாலும் எழுத்துக்களாலும்
மிகவும் செல்வாக்குள்ள கத்தோலிக்கராக திகழ்ந்தார்.
பீட்டர் கனிசியஸ், கையில் கிடைத்த வசதிகளையும் வாய்ப்புகளையும்
கொண்டு முதல் ஜெர்மன் மொழி பேசும் இயேசு சபை கல்லூரி ஒன்றினை (German-speaking
Jesuit college) நிறுவி பராமரித்து நிர்வகித்தார். அதே
வேளையில் நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி நற்செய்தி
பிரசங்கிப்பதிலும் பல்கலையில் விவாதங்கள் மற்றும் கற்பிப்பதிலும்
நேரத்தையும் காலத்தையும் செலவிட்டார். கடினமான மற்றும் அப்போதைய
ஆபத்தான அவரது பணிச்சுமைகளினூடே கல்லூரிகளுக்கும் நகரின்
சுற்றுப்பகுதிகளுக்கும் அடிக்கடி அவர் மேற்கொண்ட பயணங்களாலும்
அவரது பிரசங்கங்களாலும் அவர் ஜெர்மனியின் இரண்டாவது அப்போஸ்தலராக
உருவானார்.
பீட்டர் கனிசியஸ் "பேரரசன் முதலாம் ஃபெர்டினாண்டிடம்" (Emperor
Ferdinand I) ஒரு வலுவான செல்வாக்கை பெற்றிருந்தார். பேரரசரின்
மூத்த மகன் (பின்னாளில் இரண்டாம் மேக்ஸ்மிலியன்) (Later
Maximilian II), நீதிமன்ற போதகர், திருமணமான பாதிரியார் போன்ற
பதவிகளுக்கு "டன்ஹௌசெர்" (Tannhauser) எனும் ஜெர்மன் கவிஞரை நியமித்திருந்தார்.
அவர் லூதரன் கோட்பாடுகளைப் போதித்தார். இதனால் பீட்டர் கனிசியஸ்,
தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாகவும் நேரிலும் பேரரசரிடம்
தெரிவித்தார். பொது விவாத மேடைகளில் டன்ஹௌசெரிடம் தமது கடும்
எதிர்ப்பினைத் தெரிவித்தார். இதனால் வேறு வழியற்ற மேக்ஸ்மிலியன்
(Maximilian II) டன்ஹௌசெரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானான்.
ஆனால் தமது வாழ்நாள் முழுதும் பீட்டர் கனிசியஸுக்கு எதிராக
காழ்ப்புணர்வு கொண்டிருந்தான்.
1591ம் ஆண்டில், எழுபது வயதான பீட்டர் கனிசியஸுக்கு ஏற்பட்ட பக்கவாதம்
(Stroke), அவரது உடலின் ஒரு பகுதியை செயலிழக்கச் செய்தது. அதே
உடல்நிலையுடன் அவர் தமது பிரசங்கங்களையும், பிற பணிகளையும் தமது
செயலாளரின் உதவியுடன், தமது மரணம்வரை தொடர்ந்தார்.
1597ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் தேதி, ஸ்விட்சர்லாந்திலுள்ள
(Switzerland) ஃப்ரிபோர்க் (Fribourg) எனுமிடத்தில் மரித்த
இவரது உடல், ஆரம்பத்தில் நிக்கோலஸ் ஆலயத்தில் (Church of St.
Nicholas) அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல், அவர்
நிறுவியதும், தமது கடைசி காலத்தின் ஒரு வருடத்தை அவர் செலவிட்ட
இடமுமான இயேசு சபை கல்லூரி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கே,
பிரதான பலிபீடத்தின் முன்பாக அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடைசியாக அவர் தங்கியிருந்த அறை அருட்பணியாளர்களுக்கான சிற்றாலயமாக
மாற்றப்பட்டுள்ளது.
=================================================================================
தூய பீட்டர் கனிசியுஸ்
"மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே
அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்
கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்
(லூக் 2:46)
வாழ்கை வரலாறு
இன்று நாம் தூய பீட்டர் கனிசியுஸின் நினைவுநாளைக்
கொண்டாடுகின்றோம். இவர் 1521 ஆம் ஆண்டு, மே திங்கள் 8 ஆம்
நாள், நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகேன் என்னும் இடத்தில் பிறந்தார்.
இவருடைய தந்தை நிஜ்மெகேன் நகர மேயர். எனவே இவர் எல்லா வசதி
வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியாக வளர்ந்துவந்தார்.
இவர் தன்னுடைய உயர் கல்வியை கோலோக்னேவில் (Cologne) இந்த பல்கலைக்கழகத்தில்
கற்றுவந்தார். இந்த சமயம்தான் மார்டின் லூதர் திரு அவையை
விட்டு வெளியேறி இருந்தார், இயேசு சபை அப்போதுதான் உயதமாகி இருந்தது.
பீட்டர் கனிசியுஸின் கனவெல்லாம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற
பேராசிரியராக மாறவேண்டும் என்பதாக இருந்தது. இதற்க்காக பீட்டர்
கனிசியுஸ் கடுமையாக உழைத்து வந்தார்.
அப்போதுதான் இயேசு சபையில் சேர்ந்திருந்த பீட்டர் பேபர் என்பவர்
பீட்டர் கனிசியுசை, தூய இஞ்ஞாசியரிடம் கூட்டி வந்தார். அவர்
பீட்டர் கனிசியுசிடம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி எடுத்துச்
சொன்னார். இயேசுவால் ஈர்க்கப்பட்ட பீட்டர் கனிசியுஸ், இயேசு சபையில்
சேர்ந்து, 1546 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய
பின்பு பீட்டர் கனிசியுஸ் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச்
சென்று வகுப்புகள் எடுத்துக் கொண்டும் போதித்துக் கொண்டும் வந்தார்.
இவருடைய போதனையைக் கேட்க பிராடெஸ்டன்ட் சபையைச் சேர்ந்த சகோதர்கள்
உட்பட பலர் ஆர்வமாய் வந்தார்கள்.
பீட்டர் கனிசியுஸ், அப்போதிருந்த திருத்தந்தையோடு ஓர் இறையியலாளர்
என்ற முறையில் மிக நெருக்கமாக இருந்தார். திரிதெந்திய பொதுச்
சங்கம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு தப்பரைக் கொள்கைகளை கடுமையாகச்
சாடி, திரு அவையின் கருத்துகளை மிக ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இதனால் இவர் பலருடைய பாராட்டையும் பெற்றார். கிறிஸ்துவின் நற்செய்தியை
எல்லா மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கால்நடையாகவே
முப்பதாயிரம் கிலோமீட்டருக்கு மேல் நடந்துசென்று போதித்தார்.
சிசிலி, உரோமை, பவரியா, வியன்னா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து. போலந்து
போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்று இவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
மக்களுக்கு அறிவித்தார். இவர் செய்துவந்த நற்செய்திப் பணியைப்
பார்த்துவிட்டு மக்கள் இவரை "இரண்டாம் திருத்தூதர்" என்றே அழைக்கத்
தொடங்கினார்கள். இவர், குழந்தைகள் முதல் பெரியவர் வரை மறைகல்வி
கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக மறைக்கல்வி தொடர்பாக நிறையப்
புத்தகங்களை எழுதி, அவற்றை மக்களுடைய பயன்பாட்டிற்குக்
கொடுத்தார்.
பீட்டர் கனிசியுஸ் மருத்தவமனையில் இருந்த நோயாளிகளையும்,
சிறையில் இருந்த கைதிகளையும் சந்தித்து, அவர்களிடத்தில் ஆறுதல்
வார்த்தைகளை மொழிந்தார். இத்தனைக்கும் அவருடைய உடல் மிகப்
பலவீனமாக இருந்தாலும் இதுபோன்ற பணிகளை அவர் தொடர்ந்து
செய்துவந்தார்.
இப்படி இறைவனுடைய கைகளில் ஒரு வல்லமையுள்ள கருவியாகச்
செயல்பட்ட பீட்டர் கனிசியுஸ், 1597 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம்
நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1925 ஆம் ஆண்டு புனிதர்
பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பீட்டர் கனிசியுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம்,
அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நினைத்த வாழ்க்கை கிடைக்காதபோது, கிடைத்த வாழ்க்கையை
மகிழ்ச்சியாய் எடுத்துக்கொண்டு சாதிப்போம்.
தூய பீட்டர் கனிசியுஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப்
பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்புதான்
நினைவுக்கு வந்து போகின்றது. பீட்டர் கனிசியுசிற்கு பெரிய
பேராசிரியராக மாறவேண்டும் என்பது ஆசை, இலட்சியம் எல்லாம்.
ஆனால், அது நடக்காமல், வேறொன்று அதாவது, அவர் நற்செய்திப்
பணியாளராக மாறியபோது வருந்தவில்லை. மாறாக அந்தப் பணியை அவர்
செவ்வனே செய்து, "இரண்டாம் திருத்தூதர்" என அழைக்கப்படும்
பேறுபெற்றார். நாமும் கூட, நாம் நினைத்தது நிறைவேறவில்லை
என்பதற்காக வருந்திக் கொண்டிருக்காமல், கிடைத்ததை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதில் சாதித்துக் காட்டுவதே சாலச்
சிறந்தது.
ஒரு மாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரப்போனார்.
அங்கிருந்த எழுத்தர் மாணவரிடம், "என்ன பிரிவு வேண்டும்?" என்று
கேட்டார். மாணவரோ, "தியாலாஜி" என்று சொல்ல, எழுத்தருடைய காதில்
"ஜியாலஜி" என்று விழுந்தது. உடனே எழுத்தர் அவரை ஜியாலஜி
பிரிவில் இணைத்துவிட்டு அவரிடத்தில் கையொப்பம் கேட்டார்.
மாணவரும்கூட அதைக் கவனிக்காமல் கையொப்பமிட்டுத் தந்துவிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது.
மாற்றிக்கொள்ளத் தயங்கினார். ஜியாலஜி பிரிவிலேயே சேர்ந்து
படித்தார். கவனக் குறைவால் விருப்பப்பட்ட துறை கிடைக்காத போது
கிடைத்த துறையையே விரும்பித் தொடங்கினார். கடைசியில் அவர்
படித்து தங்கப் பதக்கமும் பெற்றார்.
இது ஒரு சிறிய நிகழ்வுதான். ஆனாலும் நினைத்த வாழ்க்கை அமையாத
போது, அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினால்,
சாதனைகள் பல செய்யலாம். இதற்கு இந்த நிகழ்வும் தூய பீட்டர்
கனிசியுஸின் வாழ்வும் சான்றுகள்
ஆகவே, தூய பீட்டர் கனிசியுஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம்,
அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை ஆர்வமாய்
மக்களுக்கு அறிவிப்போம். கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|
|