Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் மேரி ஃபிரான்செஸ் ஸ்செர்வியெர் ✠
(St. Mary Frances Schervier)
  Limage contient peut-tre : 1 personne, debout  
நினைவுத் திருநாள் : (டிசம்பர்/ Dec - 15)
✠ அருளாளர் மேரி ஃபிரான்செஸ் ஸ்செர்வியெர் ✠(St. Mary Frances Schervier)

 மறைப்பணியாளர்/ ஆன்மீக சபைகளின் நிறுவனர் :
(Religious and Foundress)

பிறப்பு : ஜனவரி 8, 1819
ஆச்சென், ஜெர்மனி
(Aachen, Germany)

இறப்பு : டிசம்பர் 14, 1876 (வயது 57)
ஆச்சென், ஜெர்மனி
(Aachen, Germany)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 28, 1974
(Pope Paul VI)

நினைவுத் திருநாள் : டிசம்பர் 15

அருளாளர் மேரி ஃபிரான்செஸ் ஸ்செர்வியெர், "தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின்" (Third Order Regular of St. Francis) அருட்சகோதரியருக்கான (Religious Sisters) இரண்டு ஆன்மீக சபைகளை (Religious Congregations) நிருவியவராவார். இரண்டு சபைகளுமே ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவையாகும். "தூய ஃபிரான்சிசின் எளிய சகோதரியர்" (Poor Sisters of St. Francis) எனப்படும் ஒரு சபை, இவரது சொந்த நாடான ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. மற்றொரு சபையான "எளிய மக்களின் ஃபிரான்சிஸ்கன் சகோதரியர்" (Franciscan Sisters of the Poor), பின்னாளில் "ஐக்கிய அமெரிக்க நாடுகளில்" (United States) நிறுவப்பட்டது.

ஜெர்மனியின் "வடக்கு ரெய்ன் வெஸ்ட்பாலியாவிலுள்ள" (North Rhine-Westphalia) "ஆச்சென்" (Aachen) எனுமிடத்திலுள்ள ஊசித்தொழிற்சாலையின் முதலாளியான இவரது தந்தை "ஜோஹன் ஹெய்ன்ரிச்" (Johann Heinrich Schervier), வசதிமிக்கவரும், அந்நகரின் மேயருமாவார். இவரது ஃபிரெஞ்ச் தாயாரான "மரியா லூயிஸ் மிகியோன்" (Maria Louise Migeon) "ஆஸ்திரியாவின் பேரரசர் முதலாம் ஃபிரான்சிசின்" (Emperor Francis I of Austria) ஞானக்குழந்தை (Goddaughter ) ஆவார்.

இவருக்கு பதின்மூன்று வயதாகையில், இவரது தாயாரும் இரண்டு சகோதரியரும் காச நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப் போயினர். தமது குடும்பத்துக்கு தலைவரான மேரி ஃபிரான்செஸ், எழைகளின்பால் இரக்கம் காட்டும் தயாள குணம் கொண்டவராயிருந்தார்.

கி.பி. 1837ம் ஆண்டு, திருச்சபையின் உரிமைகள் மீதான ஒரு சர்ச்சையில், "ப்ரூஸியன் அரசாங்கம்" (Prussian Government) "கோலோன் பேராயர்" (Archbishop of Cologne) "கிளெமென்ஸ் ஆகஸ்ட்" (Clemens August von Droste-Vischering) என்பவரை சிறையில் அடைத்தது. இது, பொதுமக்களிடையே பெரும் எதிர்வினையை உருவாக்கியது. இதன் எதிரொலியாக, ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் தாக்கம், "வெஸ்ட்பாலியா" (Westphalia) மற்றும் "ரைன்" (Rhine) மாநிலங்களில் அதிகம் ஏற்பட்டது.

இந்த ஆன்மீக விழிப்புணர்வு காரணமாக, சில முக்கிய "ஆச்சென்" (Aachen) நகர பெண்கள், ஏழைகளின் நிவாரணத்திற்காக ஒரு சமுதாயத்தைத் தொடங்கினர். அச்சமூகத்தில் இணைய மேரி ஃபிரான்செசை அனுமதிக்குமாறு அவரது தந்தையை அணுகினர். முதலில் அனுமதித்த அவரது தந்தை, பின்னர், தமது மகள் ஏழை நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளிலேயே சேவை செய்ததைக் கண்டு மழுப்ப தொடங்கினார். எங்கே, தொற்று நோய்களை அவர் தமது வீட்டுக்கே கொண்டுவந்து விடுவாரோ என பயந்தார். ஏழைகளுக்காக தமது செலவில் "தூய யோவான் சமையலறை" (Saint John's Kitchen) நிறுவிய, ஆச்சென் நகரின் "தூய பவுல் பங்கின்" (Saint Paul Parish) பங்குத் தந்தையான "ஜோசஃப் இஸ்டாஸ்" (Joseph Istas) ஃபிரான்செசை ஆழமாக ஈர்த்திருந்தார். ஃபிரான்செஸ், அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கியிருந்தார். ஆனால், 1843ம் ஆண்டு அருட்தந்தை ஜோசஃப் இஸ்டாசின் அகால மரணத்தால் அவர்களது நட்பு திடீரென்று முடிந்தது.

அதன் பின்னர், கி.பி. 1844ம் ஆண்டு, ஃபிரான்செஸும் நான்கு பெண்களும் "தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை" (Third Order of St. Francis) சபையில் இணைந்தனர்.

கி.பி. 1845ம் ஆண்டு, ஃபிரான்செசின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அவரது தந்தை மரணமடைந்தார். அவரது குடும்ப நண்பரான "கெட்ரூட் ஃபிரான்க்" (Getrude Frank) அவரை "சிஸ்டெரிசியர்களின்" (The Order of Cistercians of the Strict Observance) சபையில் சேர வற்புறுத்தினார். ஆனால், ஃபிரான்செசும் மற்றும் நான்கு பெண்களும் இணைந்து, ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்கான ஒரு சமூகத்தை தொடங்குவதற்காக தமது வீடுகளை விட்டு வெளியேறி, அருட்தந்தை ஒருவரின் அனுமதியுடன் ஒரு சிறு வீட்டில் தங்கினர். அச்சமூகத்தின் தலைவராக ஃபிரான்செஸ் தேர்வு செய்யப்பட்டார். அருட்சகோதரிகளின் வாழ்க்கை பாரம்பரியமாக இருந்தது, ஆன்மீகப் பயிற்சிகளிலும், வீட்டு கடமைகளிலும், நோய்வாய்ப்பட்ட ஏழைகளுக்கு சேவை செய்வதிலும் நேரத்தை செலவிட்டனர். அவர்கள் தமது சமூகத்தின் மையக்கருவை உருவாக்கினர். அது, "தூய ஃபிரான்சிசின் எளிய சகோதரியர்" (Poor Sisters of St. Francis) எனும் பெயர் பெற்றது.

கி.பி. 1845 முதல் 1848ம் ஆண்டுவரை, அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சேவை செய்தனர். அவர்கள் தமது சிறிய வீட்டிலேயே விபச்சாரப் பெண்களுக்கும் சேவை செய்தனர். "சிஃபிலிஸ்" (Syphilis) எனப்படும் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட விபச்சாரப் பெண்களுக்கும் சேவையாற்றினார். தமது ஆதரவுக்காக நன்கொடைகளையே முழுமையாக நம்பியதால், சகோதரிகள் தீவிர வறுமையை அனுபவித்தனர். கி.பி. 1849ம் ஆண்டில் மேலும் அதிகமான பெண்கள் இவர்களது குழுவுடன் சேர்ந்தனர். ஆச்சென் நகருக்கு வெளியிலும் இவர்களது சேவை விரிவடைந்தது. காலரா, தட்டம்மை, புற்றுநோய் மற்றும் டைபாயிட் போன்ற நோயுற்றோருக்கு சேவை செய்வது மட்டுமல்லாது ஆச்சென் நகர சிறைச்சாலையில் அடைபட்டிருந்த பெண் கைதிகளுக்கு நல்வழி காட்டினர். அவர்களது விடுதலையின் பிறகு, அவர்களது வேலை வாய்ப்பிற்கு உதவி புரிந்தனர்.

கி.பி. 1851ம் ஆண்டு, ஜூலை மாதம், இரண்டாம் தேதி, இவர்களது சமூகத்திற்கு உள்ளூர் ஆயரிடமிருந்து திருச்சபை அங்கீகாரம் கிடைத்தது. விரைவிலேயே அவர்களது சமூகத்திற்கு ஒரு ஆன்மீக சபைக்கான அங்கீகாரம் கிடைத்தது. உற்சாகமடைந்த அருட்சகோதரியர், தமது சபையை வெளிநாடுகளுக்கும் பரவச் செய்யும் முயற்சியிலிறங்கினர். அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, ஓஹியோ, மற்றும் வடக்கு கென்டீனா ஆகிய இடங்களில் ஜெர்மன் புலம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு அமெரிக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல மருத்துவமனைகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்னை ஃபிரான்சஸ் மேற்பார்வையிட்டார். பின்னர், குறிப்பாக உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மரணத்தின் பரவலான காரணம் கண்டறிய முயற்சிகளெடுத்தார்.

கி.பி. 1863ம் ஆண்டு, அன்னை ஃபிரான்சஸ் ஐக்கிய அமெரிக்கா வருகை தந்தார். அமெரிக்க சிவில் யுத்தத்தில் (American Civil War) காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் அருட்சகோதரியருக்கு உதவி செய்தார். "நியூ ஜெர்சி" "ஹொபோக்கன்" (Hoboken, New Jersey) எனுமிடத்திலுள்ள "செயிண்ட் மேரி மருத்துவமனை" (St. Mary Hospital), இப்பணிகளுக்காகவே நிறுவப்பட்டது. இவர், கி.பி. 1868ம் ஆண்டு, இன்னொருமுறை அமெரிக்காவுக்கு வருகை தந்தார். இவ்வருகையின்போது, தமது சபையின் பன்னிரண்டு சகோதரியரைக் கொண்டு, அமெரிக்காவின் தென்கிழக்கு மத்திய பிராந்திய மாநிலமான "கென்டக்கியின்" (Kentucky) நகரான "கோவிங்க்டனில்" (Covington) கட்டப்பட்ட "தூய எலிசபெத்" மருத்துவமனையின் (St. Elizabeth Hospital) அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றார்.

அன்னை ஃபிரான்சஸ், கி.பி. 1876ம் ஆண்டு மரித்தார். அவர் மரித்தபோது, உலகமெங்குமுள்ள அவரது சபையில் 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா