Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் லூசி ✠(St. Lucy)
   
நினைவுத் திருநாள் : டிசம்பர் 13
 * ✠ புனிதர் லூசி ✠(St. Lucy)

 *அருட்கன்னி/ மறைசாட்சி : (Virgin and Martyr)

 *பிறப்பு : கி.பி. 286
சிசிலி Sizilien, இத்தாலி

 *இறப்பு : கி.பி. 304
சிராக்குஸ் (Syracuse)

 *ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

 *முக்கிய திருத்தலங்கள் :
சேன் ஜெரமியா, வெனிஸ் (San Geremia, Venice)

 *சித்தரிக்கப்படும் வகை :
நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண்; புனிதர் ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது

 *பாதுகாவல் :
கண்பார்வையற்றோர்; மறைசாட்சிகள்; பெருஜியா; இத்தாலி; ம்டார்ஃபா, மால்ட்டா, தொற்று நோய்கள், விற்பனையாளர்கள், சிராக்குஸ், தொண்டை நோய்கள், எழுத்தாளர்கள் நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி, இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து.

சிராக்குஸ் நகரின் புனிதர் லூசியா, கி.பி. 304ம் ஆண்டில், "டையோக்லெஷியானிக்" துன்புறுத்தல்களின் போது (Diocletianic Persecution) மரித்த இளம் கிறிஸ்தவ மறைசாட்சியும் புனிதரும் ஆவார். இவர் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய திருச்சபையினாரால் புனிதராக வணங்கப்படுகிறார். கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலியின்போது, பெயர் வாசித்து நினைவுகூரப்படும் அன்னை மரியாள் உள்ளிட்ட எட்டு பெண்களுள் லூசியும் ஒருவராவார்.

இந்த புனிதர், இத்தாலியின் சிசிலித் தீவில் சிராக்குஸ் எனும் ஊரில் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது தாய் நீண்ட காலமாகத் தீராத நோயால் கஷ்டப்பட்டார். எனவே ஒருநாள் அவரது உடல் நலத்திற்காகப் புனித ஆக்னஸ் திருத்தலத்தில் உருக்கமாகச் செபித்தார் லூசியா. அன்றிரவு அவரது கனவில் புனிதர் ஆகத்தா தோன்றி, உன் தாய்க்குத் தேவையான உடல்நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாக இருக்கும்போது என்னிடம் ஏன் வேண்டுகிறாய்? உனது விசுவாசமே உனக்குப் போதுமானது என்றார்.

அதன் பின்னர் லூசியாவின் தாயும் முழு குணம் அடைந்தார். இதனால் லூசியா பக்தியுள்ள கிறிஸ்தவளாக மாறினார். தனது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். தனது தாயின் அனுமதியோடு தம் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். லூசியாவை ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் இவரது புதிய தீர்மானத்தைக் கேட்டுக் கடும் கோபமடைந்தான். எனவே அவன், லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று சொல்லி ரோம் உயர் அதிகாரிகளிடம் அவரைக் கையளித்தான். இவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கவில்லையெனில் விலைமகளிர் விடுதியில் தள்ளப்படுவார் என எச்சரிக்கப்பட்டார்.

ஆயினும் இவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால் ஆயிரம் ஆண்களும் ஐம்பது காளைகளும் சேர்ந்து இவரைத் தள்ளினர். ஆனாலும் அவரை அசைக்க முடியவில்லை. எனவே அவரைச் சுற்றிப் பொருட்களை நிரப்பி தீ வைத்தனர். ஆயினும் அவர் அசையாமல் நின்றார். அவர் மேல் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றினார்கள். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஆனால் அவர் எதற்கும் அஞ்சாமல் தனது மரணம் பிற கிறிஸ்தவர்களுக்குப் பயத்தைக் குறைக்கும் மற்றும் விசுவாசமற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவர் இவ்வாறு பேசுவதைத் தடுக்க ஒரு வீரன் ஈட்டியால் அவள் தொண்டையைக் கிழித்தான். ஆனால் அந்த நேரத்தில் அங்கிருந்த ஓர் ரோம் அதிகாரி திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் ரோமுக்கு வரவழைக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு இறந்தான். லூசியா இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்று மறைசாட்சியாக இறந்தார். இவர் இறந்தது ஏறக்குறைய கி. பி. 310ம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.

ரோமப் பேரரசன் தியோக்கிளேசியன் காலத்தில் சுரங்கக் கல்லறைகளில் பயத்தினால் மறைந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு லூசியா உதவி செய்து வந்தார். அப்போது இவருக்கு இரண்டு கைகளிலும் நிறையப் பொருட்கள் இருந்ததால் பூமிக்கடியில் செல்ல வெளிச்சம் தேவைப்பட்டது. ஆதலால் தனது தலைக்கு மேல் ஒரு கீரிடம் செய்து அதில் மெழுகுதிரிகளை ஏற்றி இவர் சென்றதாகப் பாரம்பரியம் சொல்கிறது. எனவே இன்றும் லூசியாவின் விழாவான டிசம்பர் 13ம் தேதி ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒரு சிறுமி வெள்ளை அங்கி, சிவப்பு பெல்ட் அணிந்து தலையில் எரியும் மெழுகுதிரிகள் கிரீடத்துடன் பவனி செல்ல மற்ற சிறுமிகள் கைகளில் மெழுகுதிரிகளுடன் பவனி செல்கின்றனர். பெரியவர்கள் புனித லூசியாவுக்கென இயற்றப்பட்ட பாடலைப் பாடி இப்பவனியை வரவேற்று விழாக் கொண்டாடுகின்றனர்.

அன்று கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, மால்ட்டா, இத்தாலியின் சில பகுதிகள், போஸ்னியா, பவேரியா, குரோவேஷியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளிலும், இன்னும் ஸ்காண்டிநேவியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் பிற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் புனித லூசியா ஓர் இளம் பெண்ணாக மெழுகுதிரிகள் மற்றும் இனிப்புகளுடன் பவனியில் வந்து மக்களை மகிழ்விக்கிறார்.

இவர் குழந்தையாக இருக்கும்போது, எவரும் அறியாத வண்ணம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டார். இவரின் இளமைப்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமணம் நடக்கவிருந்த அந்நாளில் தன் கற்பை காக்கும்படி இடைவிடாமல் மிக உருக்கமாக செபித்தார். கடவுளும் அவரின் மன்றாட்டை ஏற்று வரமருளினார். அப்போது லூசியாவின் தாய் நோயால் துன்பப்பட்டார். இதனால் லூசியா தன் தாய் குணமடைய வேண்டுமென்று மீண்டும் செபித்து பலனை அடைந்தார்.

இவரின் விசுவாசத்தைக்கண்ட அரசன் தியொக்ளேசியன் லூசியாவை பிடித்துச் சென்று மிரட்டினான். இருப்பினும் லூசியாவின் உதடுகள் மட்டும் செபித்துக்கொண்டே இருந்தது. இதனால் கோபமற்ற அரசன் அவரை வீட்டு விலங்குகளை பராமரிக்கும் கடுமையான பணிகளை கொடுத்தான். அப்போதும் கூட லூசியா தன் பணிகளை மகிழ்ச்சியோடு செய்து பின்னர் தெருவிற்கு சென்று, பார்ப்போரை எல்லாம் தன்னுடன் அழைத்து, செபத்தில் ஆழ்த்தினார். இதனால் கோபமடைந்த அரசன் கொதிக்கும் எண்ணெயை அவரின் மீது ஊற்றினான். அப்போதும் கூட அவரின் உடலில் சிறு காயமும் ஏற்படாமல் கடவுள் அவரை காத்தார். இதனால் அரசன் ஆத்திரமடைந்து, அவரை ஈட்டியால் குத்திக் கொல்லும்படி கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படி லூசியா ஈட்டிகளின் அம்பிற்கு இரையாகி, மறைசாட்சியாக உயிர்நீத்தார். இவரின் உடல் சிராக்குசில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு அவரின் கல்லறை மேல் ஆலயம் கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

செபம்:
அன்பான ஆண்டவரே! நீரே எம் அரண்; நீரே எம் கேடயம். நற்செய்தியின் பொருட்டு துன்புறும் மக்களை நீர் நினைவுகூரும். உம் இரக்கத்தை அவர்களின் மீது பொழிந்து காத்தருளும், நீர் கூறும் நற்செய்திகளைக்கேட்டு நாளும் நீர் காட்டும் வழியில் எம் வாழ்வை செலுத்து வழிகாட்டி எம்மை நடத்திட வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய லூசியா (பிரகாசியம்மாள்) (283 -304)

"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்" (மத் 5: 11-12)

வாழ்க்கை வரலாறு

"பிரகாசியம்மாள்" என அன்போடு அழைக்கப்படும் லூசியா 283 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள சிராக்யுஸ் என்ற ஊரில் இருந்த ஓர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இறந்துபோனார். எனவே இவர் தன்னுடைய தாய் யூத்திசியாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

லூசியா, சிறுவயது முதலே தன்னிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் நல்ல பண்போடு வளர்ந்து வந்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய கற்பு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்துவந்தார். இவர் இப்படி தன்னை முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்துகொண்டிருக்க, இவருடைய தாயார் யூத்திசியாவோ இவருக்குத் தெரியாமல் இவரை பஸ்காசியுசுக்கு மணமுடித்துக் கொடுக்க திட்டம் தீட்டினார். ஆனால், இதை எப்படியோ தெரிந்துகொண்ட லூசியா மிகவும் வருந்தினார். அதே நேரத்தில் தன்னுடைய தாயின் முடிவில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று இறைவனிடம் இறைவிடாது ஜெபித்து வந்தார்.

இதற்கிடையில் லூசியாவின் தாயார் யூத்திசியா தனக்குப் பல காலமாக இருந்த இரத்தப்போக்கு சரியாக வேண்டும் என்பதற்கு அவர் தன்னுடைய மகளைக் கூட்டிக்கொண்டு அருகில் இருந்த ஆகத்தம்மாளின் கல்லறைக்கு செபிக்கச் சென்றார். அங்கு ஜெபித்ததன் பயனாக, அவருக்கு இருந்த இரத்தப் போக்கு நின்று போனது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு லூசியா தன் தாயாரிடம் ஆண்டவருக்காகக் கன்னியாகவே வாழ இருக்கும் தன்னுடைய விருப்பத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய தன்னுடைய விருப்பத்தையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் லூசியாவின் தாயார் அவருடைய விருப்பத்திற்கு மறுப்புச் சொன்னபோதும், லூசியா தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாய் இருந்ததைக் கண்டு, அவர் அவருடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் லூசியா தனக்குச் சொந்தமான சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்காக தன்னை அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

விஷயம் அறிந்த ஆளுநன் பஸ்காசியுஸ், லூசியாவிடம் வந்து, தன்னை மணமுடித்துக்கொள்ள கேட்டுக்கொண்டான். லூசியாவோ, ஆண்டவருக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துவிட்டதால், யாரையும் மணமுடிப்பதாக இல்லை என்று சொல்லி தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாய் இருந்தார். இதைக் கேட்டு சினமுற்ற அவன், அப்போது உரோமையின் அரசனாகிய இருந்த டயோக்ளசியனிடம் சென்று, "லூசியா ஒரு கிறிஸ்தவள், அவளை அப்படியே விட்டுவைப்பது நல்லதன்று" என்று போட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டான். டயோக்ளசியனோ கிறிஸ்தவர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டவன், அவனுக்கு லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று தெரிந்ததும், அவன் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, அவளை இழுத்து வரச்சொன்னான். படைவீரர்கள் லூசியாவை எவ்வளவுதான் இழுத்தாலும் அவர்களால், அவளை ஒரு அடிகூட இழுக்கமுடியவில்லை. காரணம் இயேசு அவரை யாரும் இழுக்க முடியாதபடி பார்த்துக்கொண்டார்.

பாடைவீரர்கள் யாரும் லூசியாவை இழுத்துவர முடியாத செய்தியைக் கேள்விப்பட்ட அரசன், லூசியாவை தீயிலிட்டுக் கொழுத்த ஆணையிட்டான். அப்போதும் தீ அவரை ஒன்றும் செய்யவில்லை. கடைசியில் அவன் லூசியாவை தன்னுடைய வாளால் வெட்டிக் கொன்றுபோட்டான். லூசியாவோ 304 ஆம் ஆண்டு தன்னுடைய இருப்பத்தியோறாம் வயதில் கிறிஸ்துவுக்காக உயிர்நீத்து மறைசாட்சியானார். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய இறைவார்த்தை, "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்பதாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூசியாவின் வாழக்கை வரலாற்றை வாசித்த நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விசுவாசத்தில் வேரூன்றி இருத்தல்

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து கூறுவார், "இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே, மீட்கப்படுவார்" என்று. தூய லூசியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நமக்கு அந்த இறைவார்த்தைதான் நினைவுக்கு வருகின்றது. லூசியா, கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை விட்டுவிடவேண்டும் என்று உரோமை அரசன் எவ்வளவோ கொடுமைகளை, சித்ரவதைகளை அவருக்குக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், அவரோ எதற்கும் அஞ்சாது விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். லூசியாவைக் குறித்து படிக்கின்ற நாமும் அவரைப் போன்று விசுவாசகத்தில் வேறொன்றி இருக்கவேண்டும் என்பதுதான் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

இந்த இடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் மறைபோதகப் பணியைச் செய்து வந்த ஜான் அர்ட்லி (John Ardly) அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள்ளதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஜான் அர்ட்லி, மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துச் சொன்னதற்காக ஆட்சியாளர்கள் அவரைப் பிடித்து, தீயில் போட்டு எரித்துக் கொல்வதற்கு அவரை கொலை களத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது அவரை இழுத்துச் சென்ற படைவீர்களில் ஒருவன், "தீயில் எரிந்து சாம்பலாவது எவ்வளவு கொடிய தண்டனை என்பது உனக்குத் தெரியாதா? பேசாமல் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உன்னுடைய நாட்டுக்கு ஓடிப்போ, எதற்காக இந்த சித்ரவதைகளை எல்லாம் அனுபவிக்கவேண்டும்?" என்றான். அதற்கு ஜான் அர்ட்லி அவனிடம், "என்னுடைய தலையில் உள்ள முடிகள் எத்தனை இருக்கின்றதோ அத்தனை முறை எனக்கு வாழ்வு கிடைத்தாலும் நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனே ஒழிய, உயிருக்குப் பயந்து ஓட மாட்டேன்" என்றார். இதைக் கேட்டு அந்தப் படைவீரன் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனான்.

ஆம், கிறிஸ்துவுக்காக எதையும், ஏன் நம் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான சீடத்துவ வாழ்க்கை.

ஆகவே, தூய லூசியாவைக் குறித்து வாசித்து அறிந்த நாம், அவரைப் போன்று விசுவாசத்தில் வேரூன்றி இருப்போம். அதன்மூலம் இயேசுவின் உண்மைச் சீடர்களாவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா