✠ புனிதர் முதலாம் டாமசஸ் ✠(St. Damasus I) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(டிசம்பர்/
Dec -
11) |
✠ புனிதர் முதலாம் டாமசஸ்
✠(St. Damasus I)
✠37ம் திருத்தந்தை :
(37th Pope)
✠பிறப்பு : கி.பி. 305
ரோம் நகரம், மேலை ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)
✠இறப்பு : டிசம்பர் 11, 384
ரோம் நகரம், மேலை ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠நினைவுத் திருவிழா : டிசம்பர் 11
பாதுகாவல் :
தொல்பொருள் ஆய்வாளர்கள்
(Archaeologists)
திருத்தந்தை புனிதர் முதலாம் டாமசஸ் (Pope St. Damasus I), கத்தோலிக்க
திருச்சபையில் ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி.
366ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதலாம் தேதி முதல், கி.பி.
384ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் தேதி வரை ஆட்சி செய்தார்.
இவர் கத்தோலிக்க திருச்சபையின் 37ம் திருத்தந்தை ஆவார்.
பிறப்பும் வளர்ப்பும் :
டாமசஸ், ரோம் நகரில் ஸ்பேனிஷ்-போர்த்துகீசிய பெற்றோருக்குப் பிறந்தவர்
என்று கருதப்படுகிறது. டாமசஸ் சிறுபருவத்திலிருந்தே ரோமில்தான்
வளர்ந்தார். இவரது தந்தையின் பெயர் "அண்டோணியஸ்" (Antonius) ஆகும்.
டாமசசின் தாயாரின் பெயர் "லாரென்ஷியா" (Laurentia) ஆகும். இவர்
பின்னாளில் குருத்துவம் பெற்று "புனித லாரன்ஸ்" (Church of St.
Lawrence (San Lorenzo) ஆலயத்தில் குருவாக சேவை புரிந்தார்.
டாமசஸ், தமது தந்தை குருவாக பணி புரிந்த ஆலயத்திலேயே
திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆலயத்திலேயே
அவர் குருத்துவமும் பெற்றார். இதே ஆலயம், பின்னாளில் ரோம் நகரின்
புறநகர்ப் பகுதியின் பேராலயமானது. (Basilica of Saint Lawrence
outside the Walls in Rome)
அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை "லிபேரியஸ்" (Pope
Liberius) கி.பி. 355ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட வேளையில்,
திருத்தொண்டரான டாமசஸும் அவருடன் சென்றார். பின்னர் அவர்
ரோமுக்குத் திரும்பிவந்து, லிபேரியசுக்குப் பதிலாக எதிர்
திருத்தந்தையாகச் செயல்பட்ட இரண்டாம் பெலிக்சு என்பவரின் கீழ்
பணிபுரிந்தார்.
அச்சமயத்தில் நாடுகடத்தப்பட்ட லிபேரியசின் பதவியில் யார் நியமிக்கப்பட்டாலும்
அவரைத் திருத்தந்தையாக ஏற்கப் போவதில்லை என்று ரோம் குருக்களும்
மக்களும் உறுதிபூண்டிருந்த போதிலும் டாமசஸ் எதிர் திருத்தந்தையை
ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டாமசஸ், தாம் திருத்தந்தையாகப்
பதவி ஏற்ற நாளிலிருந்து திருத்தந்தையின் பதவியோடு இணைந்த அதிகாரத்தை
வலியுறுத்தினார் என்பது வரலாற்று உண்மை.
திருத்தந்தையாக நியமனம் பெறல் :
நாடுகடத்தப்பட்டிருந்த திருத்தந்தை லிபேரியஸ் ரோமுக்குத்
திரும்பிவந்து, மீண்டும் திருத்தந்தை பதவியில் அமர்ந்ததும்,
டாமசஸ் அவரோடு இணக்கம் செய்துகொண்டு, அவரது அதிகாரத்தை ஏற்றுக்
கொண்டு பணிபுரிந்தார்.
திருத்தந்தை லிபேரியஸ், கி.பி. 366ம் ஆண்டில் இறந்தார்.
அவருக்கு வாரிசாகப் புதிய திருத்தந்தையாக யாரை நியமிப்பது
என்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது. டாமசஸ் திருத்தந்தை
பதவிக்கு எவ்வாறு நியமனம் பெற்றார் என்பது குறித்து இரு
வரலாற்று வரைவுகள் உள்ளன.
அதிக நம்பகமான வரைவு :
திருத்தந்தை லிபேரியஸ் உயிரோடு இருக்கும்வரை அவரே
திருச்சபையின் தலைவர் என்று ஏற்றுகொண்டவர்கள் அவருடைய
இறப்புக்குப் பின் டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா ஆலயத்தில்
ஒன்றுகூடி "உர்சீனஸ்" (Deacon Ursinus) என்னும்
திருத்தொண்டரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் ரோம்
ஆயராகவும் திருத்தந்தையாகவும் திருநிலைப்பெற்றார்.
மற்றொரு வரலாற்று வரைவுப்படி, லிபேரியசை எதிர்த்தவர்கள்
ஒன்றுகூடி உர்சீனஸ் என்பவரைத் திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுத்தனர்.
எவ்வாறாயினும், எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்ட ஃபெலிக்சு
என்பவருக்கு விசுவாசமாக இருந்த ஒரு பெரிய குழுவினர் ரோமில்
உள்ள லுச்சீனா புனித லாரன்சு ஆலயத்தில் கூடி, திருத்தொண்டர்
டாமசசைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.
திருத்தந்தை டாமசஸ் கிறிஸ்தவக் கொள்கைகளை நிலைநாட்டுதல் :
ஆட்சி அமைப்பைச் சார்ந்தவர்களும் உயர்குடியினரும் திருத்தந்தை
டாமசஸுக்கு ஆதரவு அளித்தனர். அவரது அவையும் செல்வக் கொழிப்பில்
திளைத்தது.
திருத்தந்தை டாமசஸ் திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைக்
கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் கண்டனம் செய்த
தப்பறைகளுள் சில:
☆ ஆரியனிச கொள்கை (Arianism) (இயேசு கிறிஸ்து கடவுளின்
படைப்பே, கடவுள் அல்ல என்னும் கொள்கை).
☆ அப்போல்லினாரியனிச (Apollinarianism) கொள்கை (இயேசு கடவுள்
என்பதால் அவருக்கு மனித ஆன்மா கிடையாது என்னும் கொள்கை)
☆ மாசெடோனியனிச (Macedonianism) கொள்கை (தூய ஆவி கடவுள் அல்ல
என்னும் கொள்கை)
திருத்தந்தையின் அதிகாரம் வலியுறுத்தப்படல் :
ரோமின் ஆயரும் அனைத்துலகத் திருச்சபையின் தலைவருமாக இருக்கின்ற
திருத்தந்தை, இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தை
இவர் மிகவும் வலியுறுத்தினார். புனித பேதுருவின் வழித்தோன்றலாக
வருபவர் திருத்தந்தை என்பதால் அவருக்கு இந்த அதிகாரம்
கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சபையின் கொள்கைகளை
அதிகாரப்பூர்வமாக எடுத்து உரைக்கும் பொறுப்பு திருத்தந்தையைத்
தனிப்பட்ட முறையில் சார்ந்தது என்று டாமசுஸ் அழுத்தம்
திருத்தமாகப் பறைசாற்றினார்.
திருத்தந்தை ஆற்றிய சிறப்பான பணிகளுள் சில :
☆ இவர் திருத்தந்தை மைய அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தை
ஏற்படுத்தி, வரலாற்று ஏடுகள் பாதுகாக்கப்பட வழிசெய்தார்.
☆ ரோம் நகரிலும் மேற்கு ரோமப் பேரரசிலும் கிறிஸ்தவ வழிபாட்டு
மொழியாக இலத்தீன் மொழியை அறிவித்தார்.
☆ கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த
விவிலியத்தின் "பழைய" இலத்தீன் மொழிபெயர்ப்பை மறுபார்வையிட்டு,
மூல மொழியாகிய கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டைப் புதிதாக
மீண்டும் இலத்தீனில் பெயர்க்க ஏற்பாடு செய்தார். இப்பணியைத்
தமது செயலராக இருந்த புனிதர் ஜெரோமிடம் ஒப்படைத்தார். அவர் பல
ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் (கி.பி. 382-405) உருவாக்கிய
இலத்தீன் மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு" (இலத்தீன்: Vulgata)
என்னும் பெயர் பெற்றது.
☆ முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டுக்
கொலை செய்யப்பட்ட மறைச்சாட்சிகள் மற்றும் திருத்தந்தையர்
ஆகியோரின் கல்லறைகளை இவர் அழகுபடுத்தினார். அக்கல்லறைகளில்
பதித்த பளிங்குக் கற்களில் வரலாற்றுக் குறிப்புகளை எழுதிட இவர்
வழிசெய்தார்.
இறப்பும் திருவிழாவும் :
திருத்தந்தை டாமசஸ் கி.பி. 384ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம்
நாள் இறந்தார். ஆர்தெயாத்தீனா சாலை அருகே, அவரது தாயார்
மற்றும் சகோதரியின் கல்லறைகளின் அருகில் அவர் அடக்கம்
செய்யப்பட்டார். பின்னர் அது டாமசஸ் புனித லாரன்சு
ஆலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீளடக்கம் செய்யப்பட்டது.
இவருடைய நினைவுத் திருவிழா, டிசம்பர் மாதம், 11ம் நாள்
கொண்டாடப்படுகிறது.
=======================================================================================
தூய தமசுஸ்
இயேசு அவர்களை நோக்கி, "நம்பிக்கை குன்றியவர்களே,
ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார்.
உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று" (மத் 8:26)
வாழ்க்கை வரலாறு
அன்னையாம் திரு அவை இன்று தூய தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடி
மகிழ்கின்றது. இவர் 304 ஆம் ஆண்டு, உரோமை நகரில் பிறந்திருக்கலாம்
என்று நம்பப்படுகின்றது.
இவர் உரோமை நகரில் இருந்த மறைசாட்சியான தூய லாரன்சின் ஆலயத்தில்
திருத்தொண்டராக தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கினார். இதற்குப்
பின்பு திருத்தந்தை தூய லிபேரியுஸ் என்பவரிடத்தில் செயலராகப்
பணியாற்றினார். 366 ஆம் ஆண்டு, திருத்தந்தை இறந்துவிட, தமசுஸ்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமசுஸ் திருத்தந்தையாக
தேர்ந்தெடுக்கப்பட்டது, திருத்தொண்டராக இருந்த உர்சினியுஸ் என்பவருக்குப்
பிடிக்கவில்லை. உர்சினியுஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச்
சேர்த்துக்கொண்டு, தன்னை திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டார்.
இதனால் திருச்சபையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இதனை அறிந்த வலேண்டின் அரசர் தமசுஸ்தான் முறைப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை என்று சொல்லி, அவரைத்
திருத்தந்தையாக அங்கிகரித்தார். இவருக்கு முட்டுக்கட்டை
போட்டுக்கொண்டிருந்த உர்சினியுசை அவர் நாடு நாடுகடத்தினார்.
என்னதான் உர்சினியுஸ் உரோமையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்,
அவருடைய ஆதரவாளர்கள் திருத்தந்தை தமசுசின் பெயரைக்
கெடுப்பதும், அவருக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக இருந்தார்கள்.
இதற்கு ஒரு முடிவுகட்ட விரும்பிய திருத்தந்தை 380 ஆம் ஆண்டு
ஆயர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் செய்தார்.
இப்படி தமசுஸ் திருத்தந்தையாக பொறுப்பேற்ற புதிதில் பல்வேறு
பிரச்சனைகளைச் சந்தித்தாலும், நாட்கள் செல்லச் செல்ல பல்வேறு
பணிகளை மிகத் திறம்பட செய்யத் தொடங்கினார். 380 ஆம் ஆண்டு,
உரோமையை ஆண்டுவந்த தியோடோசியுஸ் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தை
அரசாங்க மதமாக அறிவித்தார். இதனால் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக
விதிக்கப்பட்ட எல்லாத் தடைகளும் நீங்கின. இதைத் தொடர்ந்து
திருத்தந்தை தமசுஸ், கான்ஸ்டான்டிநோபில் என்ற பொதுச்சங்கத்தைக்
கூட்டினார். இச்சங்கம் ஆரியபதத்தையும், தூய ஆவியாரை இறைவன்
இல்லை என்று சொல்லிவந்த மாசிதோனிய தப்பறைக் கொள்கையினையும்
முற்றிலுமே எதிர்த்து நிர்முலமாக்கியது.
இது மட்டுமல்லாமல் உரோமையரின் ஆட்சியில், விவிலியம் தொடர்பாக
எழுதப்பட்டவை யாவும் வெளிக்கொண்டு வராமலே இருந்தன. இப்போது
கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தடைகள் நீங்கியதால், திருத்தந்தை
தமசுஸ் அவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வர பெரிதும் உழைத்தார்.
இவருடைய காலத்தில்தான் தூய ஜெரோம் விவிலியத்தை லத்தின்
மொழிக்கு மொழிபெயர்த்த முக்கியான ஒரு நிகழ்வு அரங்கேறியது.
மேலும் இவர் தனக்கு முன்பாக இருந்த திருத்தந்தையர்களின்
பட்டியலைத் தயார் அதை வெளியிட்டார். இவை எல்லாவற்றுக்கும்
மேலாக உரோமானிய கல்லறைகளை எல்லாம் புனிதத்தலமாக மாற்றி, அதனை
மக்களுடைய பார்வைக்கு வைத்தார். இதுபோன்று பல்வேறு பணிகள்
திருத்தந்தை தமசுஸின் காலத்தில் நடைபெற்றன.
இப்படி திரு அவையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்த
திருத்தந்தை தமசுஸ் 384 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
1. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று
வெற்றிகொள்வோம்
தூய தமசுஸிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான
பாடம், நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக் கண்டு ஓடி
ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று வெற்றிகொள்ளவேண்டும்
என்பதுதான். தமசுஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபோது பல
பிரச்சனைகளைச் சந்தித்தார். அவருக்கு எதிரானவர்கள் அவரைப்
பற்றி இல்லாதது பொல்லாது எல்லாம் சொன்னார்கள். அதற்காக அவர்
ஓடி ஒழியவில்லை, மாறாக அதனை துணிவோடு எதிர்த்து நின்றுவெற்றி
கொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக்
கண்டு, ஓடி ஒழிந்திடாமல், அதைத் துணிவோடு எதிர்த்து நின்று
ஜெயிக்கவேண்டும் என்பதுதான் தூய தமசுஸ் நமக்குக் கொடுக்கும்
அழைப்பாக இருக்கின்றது.
பிரியா, கீதா என்ற சகோதரிகள் இருவர் ஒரு பள்ளியில்
ஆசிரியைகளாகப் பணிபுரிந்துவந்தார்கள். பிரியா முதல்வகுப்பு
ஆசிரியை. கீதா இரண்டாம் வகுப்பு ஆசிரியை. கல்வியாண்டுத்
தொடக்கம் என்றாலே பிரியாவிற்குக் காய்ச்சல் வந்துவிடும். முதல்
நான்கு மாதங்கள் போராட்டமாய் தோன்றும். புதிய மாணவர்களைப்
பழக்குவதற்குள் பிரியா படாதபாடுதான் படுவார். ஆனால் கீதா
அப்படியில்லை. அவர் புதிது புதிதாய் கற்றுக்கொண்டு,
மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்.
மாணவர்களும் அவருடைய வகுப்பிற்காக தவம் கிடப்பார்கள்.
நாட்கள் உருண்டோடின. மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிகவும்
கடினம் என்று பிரியா பள்ளிக்கு வருவதை பாதியிலே
நிறுத்திவிட்டார். ஆனால், கீதாவோ மாணவர்களுக்கு மிக
உற்சாகமாகக் கற்றுக்கொடுத்தார். அதனால் அந்தப் பள்ளியிலே
சிறந்த ஆசிரியையாக உருமாறினார்.
பிரச்சனை அல்லது சூழல் ஒன்றுதான். ஆனால், நாம் அதனை எப்படி
எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும்
தாழ்வும் இருக்கின்றது.
ஆகவே, தூய தமசுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப்
போன்று எதிர்வரும் பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு
வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
|