Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ குவாதலூப் அன்னை திருவிழா ✠(Feast of the Our Lady of Guadalupe)
   
நினைவுத் திருநாள்: (டிசம்பர்/ Dec - 12)
✠ குவாதலூப் அன்னை திருவிழா ✠(Feast of the Our Lady of Guadalupe)

 இடம் :
தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம்
(Tepeyac Hill, Mexico City)

தேதி : டிசம்பர் 12, 1531

சாட்சிகள் :
புனிதர் ஜூவான் டியெகோ
(Saint Juan Diego)

வகை : மரியாளின் தரிசனம் (Marian apparition)

கத்தோலிக்க புனித ஒப்புதல் : அக்டோபர் 12, 1895
குவாதலூப் அன்னைக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவால் புனித முடிசூட்டும் விழாவின்போது
(During the Canonical Coronation granted by Pope Leo XIII)

முக்கிய திருத்தலம் :
குவாதலூப் அன்னை பேராலயம், தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம், மெக்ஸிகோ
(Basilica of Our Lady of Guadalupe, Tepeyac Hill, Mexico City, Mexico)

பாதுகாவல் :
மெக்ஸிகோ
அமெரிக்க நாடுகள்
ஃபிலிப்பைன்ஸ்
செபு

"குவாதலூப் அன்னை" என்பது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் பெயர்களுள் ஒன்றாகும். குறிப்பாக இது, புனிதர் ஜூவான் டியெகோவின் மேற்போர்வையில் பதிந்துள்ள மரியாளின் திருவோவியத்திற்கு அளிக்கப்படும் பெயராகும். இத்திருஓவியம், தற்போது மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரிலுள்ள (Basilica of Our Lady of Guadalupe) குவாதலூப் அன்னை பேராலயத்தில் பாதுகாக்கப்படுகின்றது.

இப்பேராலயமானது, மெக்சிக்கோவின் மிகவும் புகழ்பெற்ற சமய மற்றும் கலாச்சார சின்னமாகக் கருதப்படுவது மட்டுமல்லாது, உலகின் அதிக திருயாத்திரீகர்கள் தரிசித்த கத்தோலிக்க திருத்தலமுமாகும். இவ்வோவியத்தில் இருக்கும் அன்னை மரியாளுக்கு மெக்சிக்கோவின் அரசி, என்னும் பெயரும் உண்டு. குவாதலூப் அன்னை என்னும் பட்டத்தின் கீழ் ஒருகாலத்தில் ஃபிலிப்பைன்சின் பாதுகாவலியாகவும் அன்னை மரியாள் அறியப்பட்டார். (ஆயினும் இது 1935ம் ஆண்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் நீக்கப்பட்டது). 1999ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் குவாதலூப் அன்னை என்னும் பட்டத்தின் கீழ் தூய கன்னி மரியாளை அமெரிக்காக்களின் பாதுகாவலி, இலத்தீன் அமெரிக்காவின் அரசி, மற்றும் கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலி என அழைத்துள்ளார்.

திருவோவியத்தின் வரலாறு:
புதிய உலகின் பூர்வீக இனமான அஸ்டெகிலிருந்து மனமாறி கிறிஸ்தவ மறையினைத் தழுவியவரும், ஏழை விவசாயியுமானவர் ஜூவான் டியெகோ (Juan Diego). அக்காலத்தில் ஸ்பேனிஷ் பேரரசில் மரியாளின் அமல உற்பவம் விழா டிசம்பர் 9ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் வழக்கம் இருந்தது. இவ்விழா நாளான டிசம்பர் 9ம் தேதி 1531ம் ஆண்டு, ஜூவான் டியெகோ அதிகாலையில் தனது கிராமத்தில் ஆலயம் ஏதும் இல்லாததால், மெக்சிகோ நகரிலுள்ள ஆலயம் ஒன்றில் திருப்பலியில் பங்கு கொள்வதற்காக தேபியாக் குன்று வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அக்குன்றின் உச்சியில், சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கண்டதாகவும். அதிலிருந்து இனிமையான இசையைக் கேட்டதாகவும் நம்பப்படுகின்றது. பின்னர் அங்கிருந்து ஒரு பெண்ணின் குரல், டியெகோவை அக்குன்றில் ஏறி வருமாறு அழைத்தது எனவும் டியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, விண்ணக மகிமையில், பிரகாசமான ஒளிக்கு மத்தியில் தூய கன்னி மரியாள் நிற்பதைக் கண்டார் என்கின்றனர். கன்னி மரியாள் டியெகோவின் தாய்மொழியான "நஹுவாட்ல்" மொழியில் (Nahuatl language) பேசி, தனக்காக ஒரு சிற்றாலயம் கட்ட வேண்டும் என மெக்சிகோ நகர ஆயரிடம் சொல்லும்படி டியெகோவை அனுப்பினார் என நம்பப்படுகின்றது.

டியெகோவும் மெக்சிகோ பேராயரான "ஜுவான் டி ஸுமர்ரகா" (Juan de Zumrraga) என்பவரிடம் சென்று அதனைத் தெரிவித்தபோது, ஆயர் டியெகோவை நம்பவில்லை. அடுத்த நாளும் ஆயரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார் அன்னை மரியாள். அதேபோல் டியெகோ ஆயரிடம் சென்று சொன்னதும், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு ஆயர் டியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே டியெகோ அன்னை மரியாளிடம் நடந்தததைச் சொன்னார். அன்னை மரியாளும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் டியெகோவின் மாமா "ஜூவான் பெர்னார்டினோ" (Juan Bernardino), திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை.

இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி திருவருட்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஒரு குருவை அழைக்கச் சென்றார் டியெகோ. அப்போது அன்னை மரியாள், டியெகோவைச் சந்திப்பதற்காக தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலையில் டியெகோவுக்கு காட்சியளித்து அவரின் மாமா நலமைடைவார், இறக்கமாட்டார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த தேபியாக் குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார். இந்தப் பாறைக் குன்றின் உச்சியில் எந்தப் பூக்களும் பூக்க வாய்ப்பில்லை என்பது டியெகோவுக்குத் தெரிந்திருந்தும் அவர் அங்கு சென்றார். அங்கு அழகிய பூந்தோட்டம் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து வந்து அன்னை மரியாளிடம் கொடுத்தார். அந்தப் பூக்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக் கொடுத்து அதை ஆயரிடம் கொண்டு போகச் சொன்னார் அன்னை மரியாள். ஆயரை நம்ப வைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.

டியெகோ, மெக்சிகோ பேராயரான "ஜுவான் டி ஸுமர்ரகா" (Juan de Zumrraga) என்பவரின் முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் டியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் டியெகோவின் மேற்போர்வையில் அழகிய அன்னை மரியாளின் திருஉருவம் பதிந்திருந்தது. டியெகோ எப்படி வர்ணித்திருந்தாரோ, அதேமாதிரியான உருவம் அதில் இருந்தது. அதே நாளில் அன்னை மரியாள், டியெகோவின் மாமா "ஜூவான் பெர்னார்டினோ" (Juan Bernardino) முன்பும் தோன்றி நலம் அளித்தார். பெர்னார்டினோ, தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னை மரியாள் சொல்லியிருந்ததை டியெகோவிடம் சொன்னார். அத்துடன் தனது இந்த உருவத்தை "குவாதலூப் அன்னை" என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னை மரியாள் சொல்லியிருந்தார். இன்றளவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அன்னை மரியாள், இப்பெயரிலேயே இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்.

=================================================================================
குவாடலூப் அன்னை

"பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரம் முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்" (யோவா 19:27)

வரலாறு

1531 ஆம் ஆண்டு, டிசம்பர் 9 ஆம் நாள், மெக்சிகோவில் உள்ள டோல்பெட்லாக் என்ற ஊரில் வசித்துவந்த ஜுவான் டியாகோ என்பவர், டால்டிடால்கோ இடத்தில் இருந்த பிரான்சிஸ்கன் துறவுமடத்தில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காக விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவர் டால்டிடால்கோவில் இருந்த ஆலயத்திற்குப் போகும்போது டெபெயாக் என்ற மலையின் வழியாகத்தான் போகவேண்டும்.

அவ்வாறு அவர் போய்க்கொண்டிருக்கும்பொது, "ஜுவான் டியாகோ, ஜுவான் டியாகோ" என்று ஒரு பெண் அழைப்பதுபோன்று இருந்தது. ஜுவான் டியாகோ திரும்பிப் பார்த்தபோது, அங்கே இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். "ஜுவான் டியாககோ! நான்தான் இரக்கத்தின் அன்னை. நீ எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும்... நீ மெக்சிகோவிற்கு புறப்பட்டுச் சென்று அங்கிருக்கும் ஆயரிடம், "இங்கே ஓர் ஆலயம் கட்டியெழுப்புமாறு சொல்". நான் இங்கு உனக்காகக் காத்திருக்கிறேன்" என்றார். ஜுவான் டியாகோவும் அன்னை மரியின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொண்டு ஆயரிடத்தில் சென்றார்.

மெக்சிகோ சென்ற ஜுவான் டியாகோ, ஆயர் ஜும்மர்ராகாவைச் சந்தித்து, மரியன்னை சொன்னதை அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். ஆயரோ ஜுவான் டியாகோ சொன்னதை காதிலே வாங்கவேவில்லை. இதனால் வருத்தத்தோடு திரும்பிவந்த ஜுவான் டியாகோ, மரியன்னையிடம் நடந்ததைக் கூறினார். அன்னையோ, "பரவாயில்லை, நாளைக்குப் போகும்போது மரியன்னை காட்சிகொடுத்ததாகச் சொல்" என்றார். மறுநாள் ஜுவான் டியாகோ ஆயரிடத்தில் சென்று சொன்னபோது, "மரியன்னை உனக்குக் காட்சி கொடுத்தார் என்றால், அடையாளம் ஒன்றைக் கேள்" என்றார். ஆயரிடமிருந்து விடைபெற்று வந்த ஜுவான் டியாகோ, நடந்தது அனைத்தையும் மரியன்னையிடம் எடுத்துச் சொன்னார்.

அப்போது அன்னை அவரிடம், "நீ நாளைக்கு வரும்போது, நான் உனக்கு அடையாளம் ஒன்றைத் தருகிறேன். அதை நீ ஆயரிடத்தில் போய் காட்டு" என்றார். சரி என்று சொல்லிவிட்டு மரியன்னையிடமிருந்து விடைபெற்ற ஜுவான் டியாகோ தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வீட்டிற்கு வந்த ஜுவான் டியாகோ, தன்னுடைய மாமா ஜுவான் பெர்னார்டினோ நோயுற்று இருப்பதைக் கண்டார். எனவே அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கும் இங்கும் ஓடினார். இதனால் அன்னை சொன்னதை மறந்துபோய், மறுநாள் அவரைப் பார்க்கப் போகவே இல்லை. தன்னுடைய மாமாவிற்கு உடல்நிலை ஓரளவு சரியான பின்பு டிசம்பர் 12 ஆம் நாள், ஜுவான் டியாகோ, டால்டிடால்கோவில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காகச் சென்றார். அவர் டெபெயாக் மலையருகே சென்றபோது அன்னையானவள் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஜுவான் ஆச்சரியத்திற்கு உள்ளாகி நின்றார். அப்போது அன்னை அவரிடம், "ஜுவான் டியாகோ! நான் உனக்குக் அடையாளம் தருவதாகச் சொன்னேனே! நான் கொடுக்கும் இந்த மலர்களை ஆயரிடத்தில் போய் காட்டு" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய கையில் இருந்த மலர்களை ஜுவான் டியாகோ வைத்திருந்த துண்டில் போட்டார். ஜுவான் டியாகோ அதனை ஏந்திக்கொண்டு ஆயரிடத்தில் போய் காட்டினார்.

அன்னை கொடுத்த மலர்களை ஜுவான் டியாகோ ஆயரிடத்தில் போய் காட்டியபோது, அவர் மிகவும் ஆச்சரியப்பட்டு நின்றார். ஏனென்றால், அந்த மலர்களுக்கு நடுவே அன்னையிடம் உருவம் தோன்றியது. அந்த உருவம் டெபெயாக் மலையில் தோன்றிய அன்னையின் உருவகமாக இருந்தது. இதனால் ஆயர், ஜுவான் டியாகோ சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 26 ஆம் நாள், டெபெயாக் மலையில் அன்னைக்கு என்று ஓர் ஆலயம் கட்டி, அதனை மக்களுடைய வழிபாட்டிற்காக அனுமதித்தார். அன்னையும் அந்த இடத்திலிருந்து இன்றுவரைமக்களுக்கு நல்லாசிர் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

குவாடலூப் அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அன்னையிடம் வேண்டுவோம், அருளாசிர் பெறுவோம்

ஜுவான் டியாகோவுக்கு அன்னை காட்சிக்கொடுத்தபோது, "நானே இரக்கத்தின் அன்னை, என்னிடத்தில் வேண்டுவோருக்கெல்லாம் அருளாசிர் வழங்குவேன்" என்று கூறினார். அன்னை சொன்ன வார்த்தைகளை நம்பி, நாம் அன்னையிடம் வேண்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஒரு நிகழ்வு. பெண்கள் பிரிவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மிகச் சிறந்த விராங்கனையான திருனேஷ் டிபாபா உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்களோடு மெசெரெட் தேபார் கலந்துகொண்டார். எல்லாரும் திருனேஷ் டிபாபாதான் வெற்றி பெறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் மெசெரெட் தேபார் என்பவர் வெற்றிகொண்டார். போட்டி முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் அவரிடம், "எப்படி உங்களால் இது சாத்தியமானது?" என்று கேட்டதற்கு, "நான் இந்த பந்தயத்தை அன்னை மரியிடம் ஒப்படைத்துவிட்டு ஓடினேன். அப்படி ஓடும்போதும் என்னுடைய ஆடையினுள்ளே மரியன்னையின் படத்தைத் தாங்கி ஓடினேன். அந்த அன்னைதான் என்னுடைய வேண்டுதலைக் கேட்டு, எனக்கு வெற்றியை அளித்தார்" என்றார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

அன்னையிடம் வேண்டுவோருக்கு, அவர் தன் ஆசிரை நிறைவாகத் தருவார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய குவாடலூப் அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டு வாழ்வோம். அவருடைய அருளை இறைஞ்சி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


"GOD IS LOVE"

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+91 944 314 0660
amirsundar@gmail.com; www.arulvakku.com
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா