✠ கடவுளின்
அதிதூய அன்னை மரியாளின் அமலோற்பவ திருவிழா
✠
Feast of the Immaculate Conception of
the Most Holy Mother of God |
|
|
|
நினைவுத் திருநாள் :
டிசம்பர்
08 |
கடவுளின் அதிதூய அன்னை மரியாளின் அமல
உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியாள் தமது தாயின் வயிற்றில்
பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும்.
மரியாள் ஜென்மப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும்
விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர்
8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
அமல உற்பவம் :
அமலோற்பவ அன்னை :
பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாமினால் தோன்றிய பாவம்
மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும்
இணைந்து பிறக்கிறது. இது சென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப்
பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள்
நிலையில் இருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை
ஆக்குகிறது.
தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாளை தொடக்கம்
முதலே தெரிந்துகொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப்
பொழிந்து, பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச்
செய்தார். இதுவே, மரியாளின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது.
மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாளுக்கு முன்னதாகவே
வழங்கப்பட்டன.
வரலாற்றில் :
✹ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், டிசம்பர் மாதம், 9ம் தேதி
"கீழை கிறிஸ்தவ திருச்சபை" (Eastern Christian Church) முதன்முதலாக
"கடவுளின் அதிதூய அன்னையின் மாசற்ற அமலோற்பவம்" (Feast of the
Conception of the Most Holy and All Pure Mother of God) என்ற
பெயரில் கடவுளின் தூய அன்னையின் அமலோற்பவ விழாவை "சிரியா"வில்
(Syria) கொண்டாடியது.
✹ ஏழாம் நூற்றாண்டில், கீழைத் திருச்சபையின் பெரும்பாலான இடங்களில்
இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.
✹ எட்டாம் நூற்றாண்டில், மேலைத் திருச்சபைக்கு பரவிய இவ்விழா
டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட்டது.
✹ பதினொன்றாம் நூற்றாண்டில், "மரியாள் பாவமின்றி உற்பவித்தவர்"
என்ற கருத்துரு தோன்றியது.
✹ 1476ம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus
IV) மரியாளின் அமல உற்பவம் திருவிழாவை அனைத்து இடங்களிலும்
கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.
✹ "டிரென்ட் பொதுச்சங்கம்" (Council of Trent) (1545-1563),
பிற்காலத்தில் இவ்விழா கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
✹ 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, திருத்தந்தை
ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) மரியாளின் அமல உற்பவத்தை
விசுவாசக் கோட்பாடாக (Dogma of Faith) அறிவித்தார்.
✹ 1858ல் ஃபிரான்ஸ் நாட்டில் லூர்து அன்னையாக காட்சி அளித்த
மரியன்னை, "நானே அமல உற்பவம்" என்று தம்மை அறிமுகம் செய்து
கொண்டார்.
=================================================================================
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை அதிகம்
அன்புசெய்தான். மக்களும் அவனை அதிகமாக அன்பு செய்தார்கள். அப்படிப்பட்ட
அரசன் ஒருநாள் தன்னுடைய அமைச்சர் மற்றும் படைவீரர்களோடு நகர்வலம்
சென்றான். அவன் சென்ற வழியில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது.
அதைக் கவனித்த அரசன் அந்தக் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி,
"பிள்ளாய்! ஏன் இப்படி அழுகின்றாய்?, உனக்கு என்ன வேண்டும்
சொல், நான் அதைத் தருகின்றேன்?" என்றான். அதற்கு அந்த குழந்தை,
"நான் என்னுடைய தாயை விட்டுப்பிரிந்து வழிதவறி வந்துவிட்டேன்.
அவளிடம் மீண்டுமாக நான் போகவேண்டும்" என்று அழுதுகொண்டே சொன்னது.
அதற்கு அரசன், "நான் உன்னை உன்னுடைய தாயிடத்தில் கொண்டுபோய்
விடுகிறேன். ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்பதை மட்டும்
சொல்?" என்றான். "என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள்" என்றது
அந்தக் குழந்தை.
உடனே அரசன் தன்னுடைய நாட்டில் இருக்கும் அனைத்து அழகான
தாய்மார்களையும் அரண்மனைக்கு வருமாறு தண்டோரா போட்டு அறிவித்தான்.
அரசனுடைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் இருந்த அழகான
தாய்மார்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தார்கள். ஆனால் அந்தக்
கூட்டத்தில் யாருமே குழந்தையின் தாயாக இருக்கவில்லை. அவர்கள்
நீண்ட நேரம் காத்திருந்தார்கள். கடைசியல் பெண்ணொருத்தி மெலிந்த
தேகத்தோடு கொஞ்சம் கருமை நிறத்தில் அரண்மனைக்கு உள்ளே
நுழைந்தான். அவளுடைய முகத்தில் தன்னுடைய குழந்தையை இழந்த சோகம்
தெரிந்தது. அவளைப் பார்த்த குழந்தை அம்மா என்று சொல்லிக்கொண்டு
ஓடிவந்து, அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டது.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை.
"அழகான தாய் என்று சொல்லிவிட்டு, இப்படி
மெலிந்த தேகத்தோடு கருமை நிறத்தில் இருக்கும் பெண்ணொருத்தியை
தாயென்று கட்டிக்கொள்கிறதே" என்று ஒரு கணம் அவன் யோசித்தான்.
பின்னர் அவன் குழந்தைக்கு தன்னுடைய தாய் எப்போதுமே அழகானவள் என்ற
உண்மையை உணர்ந்தவனாய் ஆறுதல் அடைந்தான்.
ஆம், நம் அனைவருக்கும் எப்போதுமே நம்முடைய தாயானவள் அழகானவள்.
அதிலும் குறிப்பாக பாவ மாசில்லாது இந்த மண்ணுலகத்தில் பிறந்த
நம் அன்புத் தாய் அன்னை மரியா இன்னும் அழகானவள்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி
மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில்
கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான்
திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர்
"மரியாவின் அமலோற்பவப்
பெருவிழ" என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில்
"மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி
கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும்
ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்" என்று குறிப்பிட்டு
அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.
திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில்
பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா
"நாமே அமல அற்பவம்" என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை
மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக்
கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும்
செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காக கோவில் கட்ட
நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், "நீ மிகுதியான குருதியைச்
சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில்
நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில்
கட்ட வேண்டாம்" என்கிறார் ( 1 குறி 22 :8), கடவுளுக்கு கோவில்
கட்ட இருப்பவர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அவர்,
தன்னுடைய மகனைப் பெற்றெடுக்க இருக்கும் பெண் எவ்வளவு தூய்மையாக
இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்?. ஆதலால்தான் பாவக்கறை
சிறுதும் இல்லாத தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவமாசு அணுகாத மரியவைத்
தேர்ந்தெடுக்கின்றார். அதற்காக அவர் மரியாவை ஜென்மப் பாவத்திலிருந்து
விடுக்கின்றார்; அவரை இறைவன் தங்கும் இல்லிடமாக
மாற்றுகின்றார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாய் விளங்கியதால்தான்
வானதூதர் கபிரியேல் கூட, "அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர்
உம்முடனே" என்று வாழ்த்துகிறார் (லூக் 1: 28). ஆகவே மரியாவின்
அமலோற்பவத்தை நினைவுகூறும் வேளையில் கடவுள் மரியாவுக்கு அளித்த
மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்ந்து பார்ப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில்,
இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
தூய மாசற்ற வாழ்க்கை வாழ முயற்சிப்போம்
மரியா பாவ மாசின்றிப் பிறந்தார், அது மட்டுமல்லாமல் பாவத்
தூண்டுகை இல்லாது இருந்தார். அவருடைய விழாவை கொண்டாடும் நாம்
அவரைப் போன்று மாசற்ற தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் கூறுவார், "இன்றைக்கு
மனிதர்கள் பாவம் என்ற உணர்வே இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய காலத்தின்
மிகப்பெரிய பாவம்" என்று. இது முற்றிலும் உண்மை. மனிதர்கள்
கடவுளுக்கும் பயப்படாமல், தங்களுடைய மனசாட்சிக்கும் பயப்படாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய
மனசாட்சியை அடகு வைத்து வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்
மரியாவின் மாசற்ற தன்மையை நினைத்துப் பார்ப்பது மிகவும்
பொருத்தமானதாகும். அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த தூய, நறுமணம்
வீசும் பலிபொருளாக ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மையே
கடவுளுக்கு உகந்த தூய பலிபொருளாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (எபே
5:2). அதுதான் நம்முன்னே இருக்கும் மிகப்பெரிய சவாலாக
இருக்கின்றது.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம்
வாசகம்) கூறுவார், "நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்
திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள்
நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே 1:4) என்று.
ஆகவே, நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்க வேண்டும்
அதுதான் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
இது ஒரு யூதக் கதை. ஒருநாள் ரெப் லிப் (Reb Lieb) என்ற யூத
இளைஞர் மெஸ்ரிச்சர் மாகித் (Mezritcher Maggid) என்ற இரபியை
பார்க்கச் சென்றார். வழியில் ரெப் லிப் தன்னுடைய நண்பரைச்
சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவரிடம், "எங்கே செல்கிறாய்?"
என்று கேட்டார். அதற்கு ரெப்லிப், "நான் மெஸ்ரிச்சர் மாகித்
என்ற இராபியைச் சந்திக்கச் செல்கிறேன்" என்றார். அதற்கு
அவருடைய நண்பர் அவரிடம், "ஓ! அவர் கொடுக்கும் மறைநூல்
விளக்கங்களை அறிந்துகொள்ளப் போகிறாயா?" என்று கேட்டார். அதற்கு
ரெப் லிப், "இல்லை இல்லை, நான் அவரிடமிருந்து அவரை தூய்மையான
வாழ்க்கையை பாடமாகக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அவரைப் போன்ற
தூய்மையான மனிதர் இந்த உலகத்தில் பார்க்க முடியாது" என்றார்.
ரெப் லிப், மெஸ்ரிச்சேர் மாகிதின் தூய்மையைக் கண்டு
வியந்ததுபோன்று, நம்முடைய தூய்மையான வாழ்வைக் கண்டு,
மற்றவர்கள் வியக்கும் நாள் எந்நாளோ?.
ஆகவே, மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவரிடமிருந்து அவரைப் போன்று தூய மாசற்ற வாழ்க்கை வாழக்
கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா
வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்
காண்பர்" (மத் 5:8).
=================================================================================
மரியாள், அமல உற்பவி
1854ஆம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், 'அன்னை கன்னி மரியாள்
தன் தாயின் கருவறையிலிருந்தே தொடக்கப் பாவம் இல்லாமல் பாதுகாக்கப்பட்டார்',
என்று 'இன்எஃபாபிலிஸ் தேயுஸ்' என்ற போதகத்திரட்டின் வழியாக அறிவித்தார்.
ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத்துக்கு தோன்றிய அன்னை
கன்னி மரியாள், 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்தினார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15,20) நாம்
வாசிக்கும் ஒரு வாக்கியத்தோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:
'பாம்பு என்னை ஏமாற்றியது!'
விலக்கப்பட்ட கனியை உண்டபின், ஆண்டவராகிய கடவுள் ஆதாம் மற்றும்
ஏவாளிடம் உரையாடும் நிகழ்வில், நம் ஆதித்தாய், 'பாம்பு என்னை
ஏமாற்றியது!' என்று கூறுகின்றாள். இம்மூன்று வார்த்தைகளை
வாசிக்கும்போது அந்த நேரத்தில் அந்தத் தாயின் மனத்தில் ஓடிய எண்ணங்களை
நம்மால் ஊகிக்க முடிகிறது. ஏவாளின் வார்த்தைகளில் நிறைய சோகம்
அப்பியிருக்கிறது. ஒரு பக்கம் தன் கையறு நிலை, இன்னொரு பக்கம்
குற்றவுணர்வு. இன்னொரு பக்கம், 'இனி இப்படிச் செய்யக் கூடாது'
என்ற மனவுறுதி.
பாம்பு அவளை மட்டுமல்ல. இன்றும் நம்மை ஏமாற்றுகிறது.
பாம்பின் ஏமாற்றத்திலிருந்து தப்பியவர் நம் அன்னை கன்னி மரியாள்.
அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 'மெக்டோ' (MGTOW - Men
Going Their Own Way) என்ற ஓர் இயக்கம் அதிகமாகப் பேசப்பட்டு
வருகிறது. அதாவது, தங்கள் சித்தாந்தத்தை ஆதாம்-ஏவாள் நிகழ்வில்
மையம் கொண்டிருக்கின்ற இவர்கள், 'ஒரு பெண்ணை யாராலும்
திருப்திப்படுத்த முடியாது. ஏதேன் தோட்டத்தையே அவளுக்குக்
கொடுத்தாலும், விலக்கப்பட்ட கனியையே அவள் நாடுவாள்' என்று
சொல்லி, பெண்களைத் தவிர்த்து வாழ முடியும் என்று கங்கணம் கட்டிக்
கொண்டு, 'தங்கள் வழியே செல்லும் ஆண்கள்' என்று டேட்டிங் மற்றும்
திருமண உறவு தவிர்த்து வாழ்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இன்னொரு இயக்கம். அந்த இயக்கத்தின் கொள்கை,
'யோலோ' (YOLO - You Only Live Once) என்பது. அதாவது, 'நீ ஒருமுறை
தான் வாழ்கிறாய்' (ஆகவே, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்!
ஆண்-பெண் உறவு, சமூகம், சட்டதிட்டம், கடவுள் என எதையும் பொருட்படுத்தாதே!
உனக்கு எது விருப்பமோ அதைச் செய்! உனக்கு இறப்பது விருப்பம் என்றாலும்
இறந்துவிடு! எனச் சொல்லும் இயக்கம்).
இந்த இரண்டு இயக்கங்களுக்கும் நம் இன்றைய திருநாளுக்கும் என்ன
தொடர்பு?
முதல் இயக்கம், மனிதர்களைத் தவறாகப் புரிந்துகொள்கிறது.
இரண்டாவது இயக்கம், பிறப்பு அல்லது வாழ்க்கையைத் தவறாகப்
புரிந்துகொள்கிறது.
நாம் வாழ்வது ஒரு முறைதான்! அதை நன்றாக வாழலாமே!
உறவுகளில் ஏமாற்றங்கள் வரலாம்! ஆனால், ஏமாற்றாமல் உறவாடலாமே!
அன்னை கன்னி மரியாளின் அமல உற்பவத் திருவிழா, நம் பிறப்பின்
மூன்று பரிமாணங்களை நமக்கு விளக்குகிறது:
(அ) பிறப்பின் நோக்கம்
(ஆ) பிறப்பின் தன்மை
(இ) பிறப்பின் பயன்
(அ) பிறப்பின் நோக்கம்:
நாம் யாரும் வரலாற்றுப் பிழைகள் அல்லர். ஆண்-பெண் உறவின் மயக்கத்தில்
பிறந்தவர்கள் அல்லர். நம் பிறப்பு விபத்து அல்ல. நம் பிறப்புக்கென்று
ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நம்மைப் படைத்தவரால் வரையறுக்கப்படுகிறது.
இதையே பவுல் இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12),
'நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு
முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' என்கிறார்.
அன்னை கன்னி மரியாளின் பிறப்பின் நோக்கம் மெசியாவைப்
பெற்றெடுப்பது. நம் வாழ்வில் நாம் நமக்கு நிர்ணயிப்பவை அனைத்தும்
இலக்குகள். எடுத்துக்காட்டாக, நான் முனைவர் பட்டம் படிக்க
வேண்டும், நல்ல பணியில் இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் சிறக்க
வேண்டும் என்பவை நமக்கு நாமே நிர்ணயிக்கும் இலக்குகள். ஆனால்,
இலக்குகள் நம்மைப் படைத்தவரின் நோக்கத்தோடு இணைய வேண்டும். நல்ல
பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்க வேண்டும் என்பது கொல்கொத்தா நகர்
தெரசாவின் இலக்காக இருந்தது. ஆனால், ஆண்டவரின் நோக்கம் வேறாக
இருந்தது. எனவே, தன் இலக்கை விடுத்து ஆண்டவரின் நோக்கத்தை அவர்
பற்றிக்கொண்டார். மரியாள் தன் வாழ்வின் நோக்கத்தை வானதூதர் கபிரியேல்
வழியாக அறிந்துகொள்கிறார். இன்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
(ஆ) பிறப்பின் தன்மை:
பிறப்பின் தன்மை என்பது நாம் இந்த உலகிற்கு வந்த நிலையைக்
குறிக்கிறது. அன்னை கன்னி மரியாள் ஒரு பெண் குழந்தையாக, நாசரேத்தூரில்,
அன்னா-சுவக்கிம் மகளாக, யூத சமூகத்தில், எபிரேய அல்லது அரமேய
மொழி பேசுபவராகப் பிறக்கிறார். இதை நாம் தெரிவு செய்ய
முடியாது. நாம் பாலினம், ஊர், பெற்றோர், மொழி, பின்புலம் அனைத்தும்
கடவுளால் நம்மால் கொடுக்கப்பட்டவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ
அவற்றை நம்மால் மாற்ற முடியாது. அவை நம்மேல் பெரிய தாக்கத்தை
இறுதிவரை ஏற்படுத்துகின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவற்றைப்
பரந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வது. இன்று நான் என் பிறப்பின் தன்மையை
எப்படி எடுத்துக்கொள்கிறேன்?
(இ) பிறப்பின் பயன்:
இது நம் வாழ்வின் கனியைக் குறிக்கிறது. அன்னை கன்னி மரியாளைப்
பொருத்தவரையில், அவரின் பிறப்பின் பயன் மெசியாவைப் பெற்றெடுப்பதில்
நிறைவேறுகிறது: 'இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் ... அவர்
பெரியவராயிருப்பார் ... உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்'. மரியாள்
தன் பிறப்பின் பயனைத் தன் சரணாகதி வழியாக அடைந்தார்: 'நான் ஆண்டவரின்
அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!' இன்று பிறப்பின் பயனை
நாம் அடைய வேண்டுமெனில் நம் முயற்சி அல்லது செயல்பாடும் அவசியம்.
தான் விலக்கப்பட்ட கனியை உண்டு கடவுளின் தண்டனைக்கு உள்ளானாலும்,
ஏவாள் தொடர்ந்து போராடுகிறாள். தன் அன்புக் குழந்தைகளே ஒருவர்
மற்றவர்மேல் வன்மம் கொண்டிருந்தபோது அதையும் எதிர்கொள்கிறாள்.
இறைமனித உறவின் அடையாளம் அமல உற்பவம்.
மனிதப் பிறப்பின் ஆபரணம் அமல உற்பவம்.
இன்று,
நம் பிறப்பின் நோக்கம், தன்மை, பயன் ஆகியவற்றை அறிய விடாமல் பல
பாம்புகள் நம்மை ஏமாற்றலாம்.
ஆனால், 'பாம்பு என்னை ஏமாற்றியது' என்ற அறிதலே நம் வாழ்க்கை
மாற்றத்தின் தொடக்கம்.
முதல் ஏவாளை ஏமாற்றிய பாம்பு இரண்டாம் ஏவாளை ஏமாற்றவில்லை.
முதல் முறை நம்மை ஏமாற்றும் பாம்பு இரண்டாம் முறையும் நம்மை ஏமாற்ற
நாம் அனுமதிக்க வேண்டாம்.
முதல் முறை அது ஏமாற்றினால் அது இயல்பாக நடக்கிறது.
இரண்டாம் முறையும் அது ஏமாற்றினால் அது நம் விருப்பத்தால்,
தெரிவால் நடக்கிறது.
அமல அன்னையைத் தங்கள் பாதுகாவலியாகக் கொண்டிருக்கும் தனிநபர்கள்,
நிறுவனங்கள், மறைமாவட்டங்கள், மற்றும் துறவற சபைகளுக்கு
வாழ்த்துகள்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி) |
|
|