Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

மறைவல்லுநர் திருக்காட்சியாளர் சிலுவை அருளப்பர் Johannes von Kreuz
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : டிசம்பர் 14
 ✠ சிலுவையின் புனிதர் யோவான் ✠(St. John of the Cross)

நிறுவனர், குரு, மறைவல்லுநர் :
(Religious Founder, Priest and Doctor of the Church)

பிறப்பு : ஜூன் 24, 1542
ஃபோண்டிவேரோஸ், அவிலா, ஸ்பெயின்
(Fontiveros, Ávila, Spain)

இறப்பு : டிசம்பர் 14, 1591 (வயது 49)
ஊபெதா, ஜயென், ஸ்பெயின்
(Úbeda, Jaén, Spain)

ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூத்தரன் திருச்சபை
(Lutheran Church)

அருளாளர் பட்டம் : ஜனவரி 25, 1675
திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்
(Pope Clement X)

புனிதர் பட்டம் : டிசம்பர் 27, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

முக்கிய திருத்தலங்கள் :
செகோவியா, ஸ்பெயின் நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
(Tomb of Saint John of the Cross, Segovia, Spain)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 14

பாதுகாவல் :
தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறையியலாளர்கள், மறைமெய்ம்மையியல், ஸ்பெயின் நாட்டு கவிஞர்கள்

சிலுவையின் புனிதர் யோவான், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த ஸ்பேனிஷ் மறையியலாளரான இவர், கார்மேல் சபைத் துறவியும் (Carmelite friar) குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் ஸ்பேனிஷ் இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.

கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனிதர் அவிலாவின் தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட், கி.பி. 1726ம் ஆண்டு, இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

"ஜுவான் டி யேப்ஸ் எ அல்வேரெஸ்" (Juan de Yepes y Álvarez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் நாட்டின் அவிலா எனும் நகருக்கு அருகே, யூத மதத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் வழித்தோன்றல்களின் குடும்பமொன்றில் பிறந்தவராவார். அவிலாவில் பட்டு வியாபாரம் செய்து வந்த பெரும் செல்வந்தர் ஒருவருக்கு அவரது வியாபாரத்தில் கணக்கு வழக்கு பார்த்து வந்த "கொன்ஸாலோ" (Gonzalo) இவரது தந்தை ஆவார். ஒரு அனாதைப் பெண்ணான "கேட்டலினா" (Catalina) என்பவரை மணந்த "கொன்ஸாலோ" யோவான் பிறந்து மூன்று வயதே ஆன நிலையில் கி.பி. 1545ம் ஆண்டு, மரித்துப் போனார். இரண்டு வருடங்களின் பின்னர் யோவானின் மூத்த சகோதரரான லூயிஸும் மரித்துப் போனார்.

வாழ வழியறியாத 'கேட்டலினா' தமது இன்னொரு மகனான ஃபிரான்ஸிஸ்கோவையும், யோவானையும் அழைத்துக்கொண்டு கி.பி. 1548ம் ஆண்டு "அரேவாலோ" (Arévalo) என்னும் நகருக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கி.பி. 1551ம் ஆண்டு "மெதீனா" (Medina) சென்றார். அங்கே அவர் நெசவுத் தொழில் செய்தார்.

யோவான் மெதீனா நகரிலேயே ஆரம்பக் கல்வி கற்க ஆரம்பித்தார். அன்றாட உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்பட்டனர். கல்வி கற்கும்போதே அருகாமையுலுள்ள அகஸ்தீனிய துறவுச் சகோதரியரின் (Augustinian nuns) துறவு மடத்தில் உதவியாளராக பணி புரிந்தார். வளர்ந்து வந்த யோவான், அப்போது இரண்டொரு வருடங்களுக்கு முன்னரே புனித லயோலா இன்னாசியாரால் (St. Ignatius of Loyola) தொடங்கப்பட்டிருந்த புதிய சமூகமான இயேசு சபையின் பள்ளியில் "மனித நேய" கல்வி பயின்றபடியே அங்குள்ள மருத்துவமனையில் பணி புரிந்தார்.

கி.பி. 1563ம் ஆண்டு, "மத்தியாசின் புனிதர் யோவான்" (John of St. Matthias) என்று பெயர் மாற்றம் செய்தபடி கார்மேல் சபையில் இணைந்தார். கி.பி. 1564ம் ஆண்டு, "சலமான்கா" (Salamanca) பயணித்த அவர், அங்கேயுள்ள பல்கலையில் இறையியலும் தத்துவமும் பயின்றார். கி.பி. 1567 ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற யோவான், மிகவும் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்ட 'கார்த்தூசியன்' (Carthusian) சபையில் இணையும் தமது விருப்பத்தை வெளியிட்டார். ஆனால், கி.பி. 1567 ம் ஆண்டு, மெதீனாவுக்கு அவர் மேற்கொண்ட பயணம் இவ்விருப்பத்தை மாற்றியது. அங்கே அவர் கார்மேல் சபைத் துறவியான "இயேசுவின் தெரெசா"வைச் (Teresa of Jesus) சந்தித்தார். தெரேசாவுடன் இணைந்து பல துறவு மடங்களை தோற்றுவிக்க உதவினார்.

கி.பி. 1568ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் நாளன்று, தமது பெயரை "சிலுவையின் யோவான்" (John of the Cross) என்று மாற்றிக்கொண்டார். கி.பி. 1574 அல்லது 1577 ம் ஆண்டு, ஒருநாள் அவிலாவிலுள்ள துறவு மடத்தில் யோவான் செபித்துக் கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார். இக்காட்சியை அவர் ஒரு ஓவியமாக வரைந்தார். அவ்வோவியம் மிகவும் பிரபலமானது.

கி.பி. 1591 ம் ஆண்டு, அக்கி என்னும் தோல் நோயால் (Erysipelas) பாதிக்கப்பட்ட யோவான், 'உபேடா' (Úbeda) என்னும் இடத்திலுள்ள துறவு மடத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கே அவரது நிலை மோசமானது. கி.பி. 1591ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 14ம் நாளன்று, அவர் மரித்தார்.
 


*******************************************************************************************************

* பிறப்பு
24 ஜூன் 1542,
ஃபொண்டிவேரோஸ் Fontiveros, ஸ்பெயின்

 * இறப்பு  14 டிசம்பர் 1591, உபேடா Ubeda, ஸ்பெயின்
 * புனிதர்பட்டம்: 26 டிசம்பர் 1726, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
 * மறைவல்லுநராக: 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவரின் தந்தை ஓர் அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரின் தாய் ஓர் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இதனால் தந்தையும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவராகவே வாழ்ந்தார். அருளப்பர், தன் தந்தை செய்து வந்த கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டு, தன் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு இவர் தாதியர் கல்வியைக் கற்றுக்கொண்டு மெடினா டெல் காம்போ (Medina del Campo) என்ற மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன் பணியின் போது நோயாளிகளின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டுப்பணியாற்றினார். தான் காட்டிய அன்பாலே பல நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர்.

இவர் தான் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, இயேசு சபையில் தத்துவயியலைக் கற்றார். இவர் 1563 ஆம் ஆண்டின் இடையில் இவரின் 21 ஆம் வயதில் மெடினாவில் இருந்த கார்மேல் சபையில் சேர்ந்து புனித மத்தியாசிடமிருந்து சகோதரர் யோஹான்னஸ் என்ற பெயரைப் பெற்றார். இவர் தனது இறையியல் மற்றும் தத்துவயியல் படிப்பை முடித்தபின் சலமான்கா (Salamanca) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் 1568 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு உடனே அவர் அச்சபையிலிருந்து வெளியேறி கர்தாய்சர் (Kartuser) என்றழைக்கப்படும் துறவற சபையில் சேர்ந்தார். அங்கு அவர் பல விதங்களில் சோதனைக்குப்பட்டார்.

அச்சமயத்தில்தான் அருளப்பர் திருக்காட்சியாளர் அவிலா தெரசாவை சந்தித்தார். அவரின் உதவியாலும் வழிநடத்துதலாலும் தன் சோதனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சபையின் வளர்ச்சிக்காக உழைத்தார். கடும் உழைப்பாலும் எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். அப்போது 1582 ல் அவிலா தெரசா இறந்து போனதால் சீர்திருத்தப்பணிகள் அனைத்தையும் தனி மனிதனாக இருந்து செய்துவந்தார். பின்னர் 1588 ஆம் ஆண்டு கார்மேல் மடத்தை தனியொரு மடமாக பிரித்து வழிநடத்தினார். அச்சமயத்தில் மிக நோய்வாய்ப்பட்டிருந்த சிலுவை அருளப்பர் தன் சக்தியை இழந்தவராய் இறந்தார்.

இவர் இறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் உடல் செகோவியாவிற்கு (Segovia) எடுத்துச் செல்லப்பட்டது. இப்புனிதரின் உடல் இன்று கார்மேல் டெஸ்கால்சோஸ் (Carmelitas Descalzos) என்றழைக்கப்படும் துறவற மடத்தில் வைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இவர் எழுதிய ஆன்மீக நூல்கள் புனித வாழ்விற்கும் அறிவாழத்திற்கும் இன்றும் சான்று பகர்ந்து விளங்குகின்றது
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா