Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

 விவிலியத்தை எப்படி வாழ்வாக்குவது?

    (3) யோசிக்க வேண்டும்...

இறைவார்த்தையை விசுவசித்து வாசித்தால் மட்டும் போதாது. வாசித்ததை யோசிக்க வேண்டும். அதாவது, சிந்திக்க வேண்டும், தியானிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், வரலாற்றுச் சூழலில், ஒரு தனிப்பட்ட நபருக்கோ, குழுவிற்கோ அன்று சொல்லப்பட்ட இறைவார்த்தை, இன்று எனக்கு, இக்காலகட்டத்தில், இச்சூழலில் என்ன சொல்கிறது என்று அசைபோடுவது அவசியம். காலங்கள் மாறினாலும், காட்சிகள் மறைந்தாலும், மனிதனின் அடிப்படைத் தேவைகளும் அன்றாடப் பிரச்சனைகளும்; அப்படியேதான் இருக்கின்றன.

அன்று ஆதாமும் ஏவாளும் கடவுளைப் போல் மாற நினைத்தார்கள். வளர அல்லது உயர நினைப்பது தவறல்ல. ஆனால் அடிப்படையில் தாங்கள் மனிதர்கள் என்பதை மறப்பதும், தங்களைப் படைத்த கடவுளுக்கு நிகராகத் தாங்களும் மாற வேண்டும் என்று எண்ணுவதும், அனைத்தும் இருந்தும் நிறைவு அடையாமல் இன்னும் வேண்டும் என்று பேராசைப்படுவதும், எது தடை செய்யப்படுகிறதோ அதைத்தான் செய்வேன் என்கிற பிடிவாதம் செய்வதும், தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்த பிறகும், அதை மூடி மறைக்க ஓடி ஒளிவதும், செய்த தவறை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாகப் பிறர் மீது பழிபோட்டு தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொள்வதும், ஆதாம் ஏவாள் காலம் தொட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மெகா சீரியல்தானே! சோதனைகளின் வடிவமும், அவை வருகிற விதமும், அவைகளில் விழும் தருணமும்தான் புதிதே தவிர, இன்றைய மனிதனின் மனநிலைக்கும் அன்றைய மனிதனின் மனநிலைக்கும் பெரிய அளவில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

தனக்குப் போட்டியே இருக்கக் கூடாது என்பதற்காக ஆபேலைக் கொன்ற காயினின் மனநிலை இன்றைய உலகத் தலைவர்களுக்கு இல்லையா? "காயினுக்காக ஏழு முறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்" (தொநூ 4:24) என்ற இலாமேக்கின் ஆத்திரமும் ஆவேசமும் இன்று மாறிவிட்டதா? ஓர் உயிருக்காக ஒரு இனத்தையே அழித்து, மனித இரத்தத்தால் தனது தாகம் தீர்க்கும் அரக்கக் கூட்டம் இன்று இல்லையா?

அழகில் மயங்கி, பிற மனிதர்களைத் தங்களின் உடற்பசிக்கு இரையாக்கத் துடிக்கும் நோவா காலத்து மனிதர்கள் (தொநூ 6), இன்று நம் மத்தியில் இல்லையா? தனது ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களைக் கொடூரமான முறையில் அமிலம் வீசி, அவர்களின் உருவத்தைச் சிதைத்து, சிறிது சிறிதாக அவர்கள் இறப்பதை வேடிக்கை பார்க்கும் மனித அரக்கர்களின் அவதாரங்கள் நாம் அறியாததா?

ஒன்று சேர்ந்துவிட்டால் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தில், பாபேல் கோபுரம் கட்டத் துணிந்த மக்கள் கூட்டத்தைப்போல (தொநூ 11), இன்றும் பெரும்பான்மை என்ற பெயரில் அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் செயல்படும் குழுக்கள்; நம் கண்முன் இல்லையா?

தங்களின் காம வேட்கைக்கு, பாலின வேறுபாட்டைக் கூடப் பொருட்படுத்தாத சோதோம், கொமோரா மனிதர்களின் மனநிலையை (தொநூ 19), இன்றும் தனி மனிதச் சுதந்திரம் என்ற பெயரில், இயற்கையின் நியதியான, ஆண் - பெண் திருமண உறவை புறந்தள்ளி, ஓரினத் திருமணங்களுக்காகப் புதுப்புது சட்டங்கள் நிறைவேற்றுவது நமக்குத் தெரியாதா?

தனது குடும்பத்திற்கு அவமானம் வந்துவிட்டது என்பதற்காக, ஒரு நாட்டையே அழித்து ஆர்ப்பரித்த யாக்கோபின் புதல்வர்கள் (தொநூ 34), அதாவது தனது வலியைப் போக்க பிறரைப் பலியாக்கும் வேட்டைக்காரர்கள் இந்த நவீன நாகரீக உலகில் இல்லையா?

தனக்குச் சவாலாக யாரும் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மாசில்லா குழந்தைகளைக் கொன்ற ஏரோது, எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கும் பரிசேயர்கள், நேரத்திற்கு நேரம் கட்சி மாறி நிற்கும் மக்கள் கூட்டம், காசுக்காகத் தலைவனைக் காட்டிக்கொடுக்கும் யுதாசுகள், பயத்தினால் உண்மையை மறைக்கும் மறுக்கும் பேதுருக்கள், ஆபத்து என்றால் துணியையும் விட்டு விட்டு ஓடும் நண்பர்கள் இன்றும் இருப்பார்கள் என்றும் இருப்பார்கள்.

என்ன, ஒரே ஒரு வேறுபாடு. அன்றைய விதிவிலக்கு இன்றைய பொது நியதியாக மாறிவிட்டது. அன்றைய குற்றங்கள் இன்று சட்டமயமாக்கப்படுகின்றன. அவ்வளவுதான்! எனவே, இறைவார்த்தை சுட்டிக் காட்டும் வழிமுறைகளும் அங்கு முன்வைக்கப்படும் தீர்வுகளும் நம் காலத்திற்கும் பொருந்தும். இறைவார்த்தை காலத்தைக் கடந்தது.

இறைவார்த்தை பழையதாக இருந்தாலும் இன்றும் நம்மை வழிநடத்தும் வல்லமையுள்ளதாக உள்ளது. இறைவார்த்தையை வாசித்து யோசித்த பலருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. செய்யாத குற்றங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பாவ வாழ்க்கையில் மூழ்கியிருந்த ஒரு மனிதருக்கு ஒரு மாலைப் பொழுதில் ஒரு குரல் கேட்கிறது, "எடுத்து வாசி". அந்த நேரத்தில் அவரது கையில் கிடைத்தது விவிலியம் மட்டுமே. விவிலியத்தைத் திறக்கிறார். அவரது கண்களுக்குப் பின்வரும் பகுதி தென்படுகிறது: "இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கியுள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமா!" (உரோ 13:12). ஏன் அப்படி ஒரு குரல் கேட்டது? எதனால் இப்படி ஒரு செய்தி வரவேண்டும்? என்று யோசிக்கத் தொடங்குகிறார். அவரது வாழ்வு மாற்றம் பெறுகிறது. இருளின் செயல்களைக் கைவிடுகிறார். ஓளியின் அணிகலங்களை அணியத் தொடங்குகிறார். இறைவார்த்தையை வாசித்ததால், யோசித்ததால் பாவியான அகுஸ்தின் புனித அகுஸ்தினாராக மாறுகிறார்.

போரில் அடிபட்ட போர்வீரர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஓய்வு நேரத்தில் வாசிப்பதற்காகப் புத்தகம் கேட்கிறார். அவருக்கு விவிலியம் கொடுக்கப்படுகிறது. "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16:26) என்ற பகுதியை வாசிக்கிறார். யோசிக்கிறார். அவரது வாழ்வு மாற்றம் பெறுகிறது. அதுவரை நாட்டின் படைத்தளபதியாக இருந்த லொயோலா இஞ்ஞாசியார்; கிறிஸ்துவின் போர்வீரராக மாறுகிறார். பின்னாளில் அதே விவிலியப் பகுதியை வைத்து பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்வையும் மாற்றுகிறார்;. எனவே, விவிலியத்தை வாசிப்பதும் யோசிப்பதும் முக்கியமானதாகும். பலருடைய வாழ்வை மாற்றி அவர்களைப் புனிதப் பாதையில் வழிநடத்திய இறைவார்த்தை நம்மிலும் அவ்வாறு செயல்படும். 

அன்புப் பணியைத் தொடரவே அன்னை மரி இங்கெழுந்தாள்