Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

  விவிலியத்தை எப்படி வாழ்வாக்குவது?

    2) வாசிக்க வேண்டும்...

விவிலியத்தை விசுவசித்தால் மட்டும் போதாது. அதனை வாசிக்க வேண்டும். செபிக்கும்போது நாம் கடவுளோடு பேசுகிறோம் ஆனால், விவிலியத்தைப் வாசிக்கும்போது கடவுள் நம்மோடு பேசுகிறார். " வீட்டுக்கொரு விவிலியம் வேண்டும். நாளுக்கொரு அதிகாரம் நாமெல்லாம் படிக்க வேண்டும்" என்ற ஒரு பழைய பாடலின் வரிகளை பலர் அறிந்திருக்கக் கூடும். இன்று வீட்டுக்கொரு விவிலியம் என்ற நிலை மாறி, ஆளுக்கொரு விவிலியம் என்னும் நல்ல மாற்றம் வந்தாலும், எத்தனை பேர் அதனைத் தினமும் வாசிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. இன்று பல வீடுகளில் விவிலியம் இருக்கிறது. ஆனால் நம்மவர்கள் அதைத் தொடப்பயப்படும் நிலையும் இருக்கிறது. ஒருவேளை அது ஆண்டவரின் வார்த்தை, அதைத் தொடுவது பாவம். எங்கே தினமும் அதைத் திறந்து வாசித்தால் விவிலியம் கசங்கி விடுமோ, அழுக்காகி விடுமோ, கிழிந்து விடுமோ என்ற அளவு கடந்த பக்தியாக, அதீத அக்கறையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு கூட நமக்கு உண்டு. பல வீடுகளில் விவிலியம் எப்படி வாங்கினார்களோ, அதைப் போலவே ஆண்டுகள் பல கடந்தாலும் புத்தம் புதிதாகவே இருக்கிறது. கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, பெற்றௌர்களுக்கோ தெரியாமல் ஒருசில கடிதங்களை, முக்கிய விவரங்களை இரகசியமாக மறைத்து வைப்பதற்கான இடமாகவும், வீட்டுவரி, தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீதுகளைச் சேர்த்து வைக்க சிறந்த கோப்பாகவும், இரகசியமாக ஒருசிலவற்றைப் பாதுகாப்பதற்கான பெட்டகமாகவுமே விவிலியம் பயன்படுத்தப்படுகிறது. விவிலியத்தை விசுவசித்தால் மட்டும் போதாது. அதை வீட்டில் பத்திரமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை வாசிக்க வேண்டும். ஏன் அதை வாசிக்க வேண்டும்? ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளது போல, விவிலியம் இறைவார்த்தை என்பதால், இறைவனுக்கு என்னென்ன பண்புகள் உண்டோ, அத்தனை தன்மைகளும் விவிலியத்திற்கு உண்டு.

1. இறைவார்த்தை படைக்கும் வல்லமையுள்ளது என்பதை உலகின்  படைப்பிலிருந்து நாம் அறிகிறோம் இறைசொல்லுக்கும் செயலுக்கும் கால இடைவெளி இல்லை. கடவுள் சொல்கிறார், உடனே அது நிறைவேறுகிறது. அதுதான் மனித வார்த்தைக்கும் இறைவார்த்தைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. " நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு ஓர் அரச அலுவலரிடம் கானா என்னும் ஊரில் வைத்துச் சொல்கிறார். இயேசு அவ்வாறு சொன்ன அதே நேரத்தில் கப்பர்நாகுமிலுள்ள அரச அலுவலரின் மகன் குணம் பெறுகிறான் (யோவான் 4:46-54). இறைவார்த்தை இடங்கள், தூரங்களைக் கடந்து உடனே செயலாக்கம் பெறுகிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.

2. கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது.எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது. உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது (எபி 4:12).

3. இறைவார்த்தை நிலையானது. அதற்கு அழிவே இல்லை. இயேசு இதை அடித்துச் சொல்கிறார்: " விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" (மாற்கு 13:31). " மறைநூல் வாக்கு என்றும் அழியாது" (யோவான் 10:35). திருப்பாடல் ஆசிரியரும், " ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உம் வாக்கு, விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது" (திபா 119:89) என்று ஆர்ப்பரிக்கிறார்.

4. ஆண்டவரின் வார்த்தை வாழ்வு தரவல்லது. " ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளது" (யோவான் 6:68) என்று புனித பேதுரு அறிக்கையிடுகிறார். திருப்பாடல் ஆசிரியரும், " உம் வாக்கு துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது" (திபா 119:50) என்று பாடுகின்றார்.

5. இறைவார்த்தை மீட்பைத் தரவல்லது. புனித யாக்கோபு மிகவும் அருமையாகச் சொல்கிறார்: " எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது" (யாக் 1:22).

6. ஆண்டவரின் வார்த்தை குணமளிக்கும் ஆற்றலுள்ளது. " நான் வந்து உம் மகனைக் குணமாக்குவேன்" என்று இயேசு சொன்ன போது, " ஐயா நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்" (மத் 8:8) என்ற நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையும் அவரது மகன் குணமடைவதும் இதற்குச் சான்று பகர்கின்றன. 'பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை, ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதருக்கும் நலம் அளிக்கிறது" என்று சாலமோனின் வார்த்தைகள் எவ்வளவு ஞானம் மிகுந்தது! (சாஞா 16:12)

7. ஆண்டவரின் வார்த்தை வாழ்வை நெறிப்படுத்தும் அறநெறிப் புத்தகம், ஆன்மீக சாசனம். நாம் சரியான பாதையில் பயணிக்க உதவும் திசைகாட்டி. ஆண்டவரின் வார்த்தை " கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது" (2திமோ 3:16). இறைவார்த்தையைக் கடைபிடிப்பதால் மட்டுமே, ஒருவர், குறிப்பாக இளைஞர்கள், தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார் திருப்பாடல்களின் ஆசிரியர் (திபா 119:9). மேலும், இறைவார்த்தையே " என் காலடிக்கு விளக்கு. என் பாதைக்கு ஒளி" (திபா 119:105) என்று இறைவார்த்தை தன் வாழ்வில் எப்படிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளது, எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை அறிக்கையிடுகிறார். தொடக்கத்தில் வார்த்தையாக இருந்து (யோவான் 1:1) காலம் நிறைவுற்றபோது பெண்ணிடம் பிறந்து (கலா 4:4), நம்மிடையே குடிகொண்ட வார்த்தையானவர் (யோவான் 1:14) சொல்கிறார்: " வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).

8. இறைவார்த்தையின் உறுதியையும் வல்லமையையும் இறைவாக்கினர் எரேமியா புத்தகத்தில் படிக்கிறோம். " என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா?" (எரே 23:29). எம்மாவுஸ் சீடர்களும் தங்களின் அனுபவத்திலிருந்து, இறைவார்த்தை தீயைப் போன்றது என்பதற்குச் சான்று பகர்கின்றனர் அப்போது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, " வழியிலே அவர் (இயேசு) நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள் (லூக் 24:32).

9. இறைவார்த்தை வளமையானது. எந்த நோக்கத்திற்காக அது உரைக்கப்படுகிறதோ, அதை சாதிக்கும் சக்தியுள்ளது. எசாயா புத்தகத்தில் இவ்வாறு படிக்கிறோம் " மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்" (எசா 55:10-11).

10. இறைவார்த்தையே அனைத்திற்கும் மேலானது. வாழ்வில் முதன்மையானது. இன்றியமையாதது. இயேசுவின் பாதத்தில் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தன் சகோதரி மரியாளைக் குறித்து மார்த்தா முறையிட்டபோது, இயேசு சொல்கிறார்: " மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்தாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" (லூக் 10:41-42).

இத்துனை சிறப்பு வாய்ந்த இறைவார்த்தையை வாசித்தால்தானே அதன் பயன்களை அனுபவிக்க முடியும்.

 

தீராத போராட்ட வாழ்க்கை - எங்கள் துயர் போக்க வரவேண்டுமே
கரை சேராத ஓடங்கள் ஆனோம் - எம்மை சிறை மீட்க வர வேண்டுமே