Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

 விவிலியத்தை எப்படி வாழ்வாக்குவது?

   
1) விசுவசிக்க வேண்டும்...

விவிலியம் என்பது, ஏற்கனவே குறிப்பிட்டது போல, மனித மொழியில் எழுதப்பட்ட இறைவார்த்தை. எனவே, அது ஒரு சாதாரண புத்தகம் அல்ல. அதிலுள்ள வார்த்தைகள் கடவுள் அருளியது, ஆவியானவரல் தூண்டப்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டது (2பேதுரு 1:21). புனித பேதுரு மட்டுமல்ல, புனித பவுலடியாரும் இதை வலியுறுத்துகிறார்:" மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது" (2திமோ 3:16). எனவே, அதை வாசிக்கிறவரும் தான் வாசிப்பது ஆண்டவரின் வார்த்தை என்பதை முதலில் உணர வேண்டும். விவிலியம் என்பது கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லும் வெறும் வரலாற்று நூல் அல்ல, ஆனால் விவிலியத்திற்கும் வரலாறு உண்டு. விவிலியத்திற்கு ள்ளும் வரலாறும் உண்டு. அது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தரும் மருத்துவம் அல்ல, ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வும் மன அமைதியும் அங்குண்டு. முக்கிய ஆவணங்களைப் மறைத்து வைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் அல்ல, எதிர்காலத்தை கணிக்கும் ஜோஸியம் அல்ல, மாறாக, அது ஒரு விசுவாச ஆவணம். இறை மனித செயல்பாட்டைப் பறைசாற்றும் திருமறைப் போதனை. விவிலியத்தில் அடங்கியிருப்பது மீட்பின் வரலாறு. குறிப்பாக, தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு இறைவன் செயலாற்றினார் என்பதை தலைமுறை தலைமுறையாக அறிவிப்பதற்காக, இஸ்ரயேல் மக்களால் விசுவாசக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யப்பட்டதே பழைய ஏற்பாடு. இயேசுவை ஆண்டவராக விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்கள் தாங்கள் அனுபவித்ததையும் அறிவித்ததையும் எடுத்துரைப்பதே புதிய ஏற்பாடு. விசுவாசம் இல்லாமல் விவிலியத்தை வாசிப்பது என்பது அதன் தன்மையையும் மேன்மையையும் அடியோடு அகற்றிவிடும் அபாயமாக மாறிவிடும். விசுவாசம் அறிவிற்கு முரண்பட்டதல்ல, ஆனால் அப்பாற்பட்டது. அறிவினால் புரிந்துகொள்ள முடியாததையும் ஏற்றுக்கொள்ள, அனுபவிக்க விசுவாசம் வழிவகுக்கும். விசுவாச அறிவினைக் கொண்டு முழுவதுமாக அலசி ஆராய்ச்சி செய்துவிட முடியாது. அம்முயற்சி தோல்வியிலும் விரக்தியிலும்தான் முடியும். எப்படி விசுவாசம் இல்லாமல் கடவுளை உணர்ந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாதோ, அதைப்போலவே விசுவாசம் இல்லாமல் விவிலியத்தின் செய்திகளையும் போதனைகளையும் புரிந்து கொள்ளவோ, வாழ்வாக்கவோ முடியாது. எனவே, விவிலியத்தை வாசிப்பதற்கான முதல்படி விசுவாசம்! விசுவாசம்!! விசுவாசமே!!!

 

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா