Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியம்

 விவிலியத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

   
            விவிலியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமெனில், முதலில் விவிலியம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். எது விவிலியம்? புனித பேதுரு அழகாக வரையறுக்கிறார்: " தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல" (2பேதுரு 1:21). இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது. விவிலியம் என்பது கடவு  ளால் அருளப்பட்டது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டது. எனவே, விவிலியத்திற்கு இரண்டு ஆசிரியர்கள், கடவுள் மற்றும் மனிதன். இறைவனும் ஆசிரியர். ஏனெனில் அது தூய ஆவியாரால் ஏவப்பட்டது. அதே வேளையில் மனிதர்களும் ஆசிரியர். ஏனெனில் அது மனித மொழியில் மனிதர்களால் எழுதப்படுகிறது. எனவே விவிலியத் திற்கு இறைதன்மையும் உண்டு மனிதத் தன்மையும் உண்டு.

விவிலியம் என்பது " மனித மொழியில் எழுதப்பட்ட இறைவார்த்தை." இறைவன் ஆசிரியராக இருப்பதால் இறைவனுக்கு என்னென்ன உயரிய பண்புகள் உண்டோ, அவையெல்லாம் விவிலியத்திற்கும் உண்டு. அது மனித மொழியில் எழுதப்பட்ட காரணத்தினால், மனித மொழிக்கு என்னென்ன எல்லைகள் உண்டோ, அவைகள்; விவிலியத்திற்கும் உண்டு. மனித மொழிக்கு அப்படியென்ன எல்லைகள் என்று யாராவது கேட்கக்கூடும். ஒருவரின் உள்ளத்து உணர்வுகள், சிந்தனைகள் அனைத்தையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. வார்த்தைகளைக் காட்டிலும் உணர்வுகள் ஆழமானவை. உதாரணமாக, நாம் ஒருவர்மீது கொண்டுள்ள அன்பையோ, பிறருக்கு வெளிப்படுத்த வேண்டிய நன்றியு ணர்வையோ வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. எனவேதான், பல சமயங்களில் " எப்படி சொல்றதுண்ணே தெரியல. மனசுக்குள்ள இருக்கு. ஆனா வார்த்ததான் வரமாட்டேங்குது" என்று கூறுகிறோம். 

மேலும் ஒருசில வார்த்தைகளுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. பயன்படுத்தப்படும் ஆட்களுக்கேற்பவும், இடங்களுக்கேற்பவும் அவைகளின் அர்த்தம் மாறுபடுவதுண்டு. உதாரணமாக, சின்ன வீடு. " அவரது வீடு சின்ன வீடு" என்றால் சிறிய வீட்டைக் குறிக்கும். " அவரா அவருக்குச் சின்ன வீடெல்லாம் உண்டே" என்றால், அதன் அர்த்தமே வேறு. மாமியார் வீடு என்னும் மற்றொரு எடுத்துக்காட்டு. சாதாரணமாக 'அவர் அவங்க மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார்" என்றால், அவரது மனைவியின் தாயார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் என்று பொருள். அதுவே குற்றவாளி ஒருவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார் என்றால், அதன் பொருள் முற்றிலும் மாறுபட்டது.

செய்திகளைச் சொல்லும் விதத்திலும், வாக்கியங்களை வடிவமைக்கும் தன்மையிலும்கூட ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட தன்மைகள் உண்டு. நாம் நமது தாய் மொழிகளில் வாசிக்கும் விவிலியம், ஒரு மொழிபெயர்ப்பு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது மொழிகளில் நாம் வாசிக்கும் விவிலியமானது அதன் மூலமொழிகளான எபிரேயம், கிரேக்கம் மற்றும் அரமாயிக் போன்றவற்றிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் மொழிபெயர்ப்பவருடைய தாக்கம் இருப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, விவிலியம் எழுதப்பட்ட மூல மொழிகளான எபிரேயம் (பழைய ஏற்பாடு) மற்றும் கிரேக்க மொழிகளைச் (புதிய ஏற்பாடு) சிறிதும் அறியாமல் விவிலியத்தை வைத்து வாதிடுவது பொருத்தமானதாக இருக்காது. அந்தந்த மொழிக்கென்று சில தனிப்பட்ட சிறப்புகளும் அர்த்தங்களும் உண்டு. சில சமயங்களில் ஒரு மொழியிலிருந்து ஒரு சில வார்த்தைகளை வேறு மொழிக்கு அதன் முழுமையான அர்த்தத்தோடு மொழி பெயர்ப்பு செய்யவே முடியாது. உதாரணமாக தமிழிலுள்ள 'சும்மா" என்னும் வார்த்தையை வேறு எந்த மொழியிலும் ஒரு வார்த்தையில் மொழி பெயர்த்துவிட முடியாது. அந்த வார்த்தைக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கலாம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒரு கருத்தாக்கமே, பொருளாக்கமே என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில் அதிகமான இடங்களில் நாம் காணும் ஓர் எபிரேய வார்த்தை 'பாகால்" என்பது. பொதுவாக அது கனானியர்களின் தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாக 'பாகால்" தமிழ் விவிலியத்தில் காணப்படுகிறது. இந்த வார்த்ததைக்கு 'தலைவர்", 'கணவர்" என்ற வேறு அர்த்தங்களும் உண்டு. உதாரணமாக எரே 31:32ல் '...நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்" என்கிறார் ஆண்டவர், என்று கூறப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தை 'பாகால்" என்பது.  அதனைத் 'தலைவர்" என்று நாம் தற்பொழுது பயன்படுத்தும் தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நம்மைப் பொருத்தவரையில், 'கணவராய் இருந்தும்" என்று மொழிபெயர்த்திருந்தால், இந்த இடத்தில் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். மொழி பெயர்ப்பவர் எப்படிப் புரிந்து கொள்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே  அவரது மொழி பெயர்ப்பும் அமைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், ஒரே மொழியில் பல்வேறு விவிலியப் பதிப்புகளை நாம் பார்க்கிறோம்  ஒவ்வொரு பதிப்புகளிலும் சில வேறுபாடுகள் அல்லது திருத்தங்கள் இருக்கும். விவிலிய வார்த்தைகள் எந்த அளவு   ஆழமான பொருளைக் கொண்டது என்பதையும், மனிதரால் ஒருபோதும் அதன் முழுமையானப் பொருளை அறிந்துகொள்ள முடியாது என்பதையும் இவைகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, விவிலியப் பகுதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், விவிலிய மொழிகளைப் பற்றிய சிறிதளவு   அறிவேனும் அவசியம். அத்தோடு மட்டுமல்லாமல், விவிலியத்தைக் குறித்த ஒரு சில அடிப்படைப் புரிதல்களும் மனநிலைகளும் நம்மிடம் இருக்க வேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல, விவிலியம் ஒரு தனிப்பட்ட புத்தகம் அல்ல. அது பல புத்தகங்களின் தொகுப்பு. அது ஒரு நூலகம். ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டது அல்ல, இன்று நமது கையிலிருக்கும் விவிலியம். அதற்குப் பல்வேறு கால கட்டங்கள், பல நூற்றாண்டு கால வரலாறு உண்டு. எனவே ஒரு புத்தகத்திற்கும் மற்றொரு புத்தகத்திற்கும் இடையில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூடச் சரியாக இருக்காது. இது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டுக்கும் பொருந்தும். உதாரணமாகப் புதிய ஏற்பாட்டில் புனித பவுலடியாருடைய கடிதங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட திருச்சபைகளுக்கு எழுதப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட நோக்கம், மற்றும் செய்திகள் உண்டு. எனவே, உரோமையர் திருமுகமும், கொரிந்தியர் திருமுகமும் ஒன்று போல் இல்லை என்றும் அவைகளுக்கிடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று சொன்னால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

விவிலிய ஆசிரியர்கள் இன்று நமது கையிலிருக்கும் 'விவிலியம்" என்னும் தலைப்பின் கீழ் அமைந்துள்ள ஒட்டு மொத்த புத்தகங்களையும் வாசித்திருக்க வாய்ப்பில்லை. பழைய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்குப் புதிய ஏற்பாடு பற்றி தெரிய வாய்ப்பில்லை. மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி யாளர்கள், யோவான் நற்செய்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனி ஆசிரியர், குறிப்பிட்ட காலம், கலாச்சாரம், நோக்கம், வாசகர்கள் உண்டு. இவைகளை அறிந்திருப்பது விவிலியப் புரிதலுக்கு மிகவும் அவசியம்.

விவிலியம் ஓர் இலக்கியமும் கூட. எனவே இலக்கியத்திற்குரிய அனைத்துப் பண்புகளும் அதற்கு உண்டு. அதில் செய்யுள் உண்டு, உரைநடை உண்டு, கவிதை, கதை, உவமை, உருவகம், வெளிப்பாட்டு நடை (
apocalyptic literature) என்று பல்வேறு இலக்கிய வகைகளும் நயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விவிலியம் சொல்லும் செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அதன் ஆசிரியர் யார்? அவரின் பின்புலம் என்ன? என்ன எழுகிறார்? எதற்கு எழுதுகிறார்? யாருக்கு எழுதுகிறார்? எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பதைப்பற்றி ஓரளவு அறிவும், புரிதலும் வேண்டும். இறைத்தூண்டுதலால் எழுதப்பட்டாலும், அச்செய்தியைச் சொல்வதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பாணி கையாளப்படுகிறது. அந்த இலக்கியத் தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், அதனைக் குறித்த தெளிந்த பார்வையில்லாமல், எப்படி விவிலியப் பகுதிகளை புரிந்து கொள்ளமுடியு ம்? உதாரணமாக, வெளிப்பாட்டு இலக்கியத்தைத் (
apocalyptic literature) தெரிந்து கொள்ளாமல், பழைய ஏற்பாட்டில் தானியேல் புத்தகத்தையும், புதிய ஏற்பாட்டில் திருவெளிப்பாட்டு நூலையும் எப்படி புரிந்து கொள்ளமுடியும்? கவிதை நயம் புரியாமல், எப்படி வார்த்தைகளின் ஆழத்தில் பொதிந்திருக்கும் செய்தியின் வலிமையை கண்டுகொள்ள முடியும்? உதாரணமாகப், பழைய ஏற்பாட்டில் இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம்).

மேலும், விவிலியம் சாதாரணப் புத்தகம் அல்ல. அது தமத்திருத்துவத்தின் அடையாளம். தந்தையாம் இறைவன் அருளுகிறார். ஆவியாம் இறைவன் தூண்டுகிறார். மனிதரால் எழுதப்படுவது இறைவார்த்தையான இரண்டாம் ஆளாகிய சுதனாகிய இறைவன். எனவே, இறைவார்த்தை என்பது வெறும் சொல் அல்ல, பல எழுத்துக்களின் தொகுப்பு அல்ல, அது ஒரு நபரைக் குறிக்கிறது. அவரோடு உறவாடுவதும் உரையாடுவதும் அவசியம்: " தொடக்கமுதல் இருந்த வாழ்வு  அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம், கண்களால் கண்டோம், உற்று நோக்கினோம், கையால் தொட்டோம், வெளிப்படுத்தப்ட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம், அதற்குச் சான்று பகர்கிறோம் " (1யோவான் 1:1-2).
 
எனவே, விவிலியத்தைப் பற்றிப் போதிப்பவர்கள் அதனை ஒரு சாதாரண புத்தகமாகக் கருதி, திறந்தேன், வாசித்தேன், விளக்கம் சொல்கிறேன் என்று அவ்வளவு எளிதாகச் செயல்படுவது பொருத்தமாக இருக்காது. மக்களின் தேவையையும், இறைவார்த்தையின்பால் அவர்களுக்குள்ள தாகத்தையும், வேகத்தையும் சாதகமாக்கிக் கொண்டு, வெறுமனே உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு தன் பக்கம் இழுப்பது, தன்வயப்படுத்துவது வேண்டுமானால் மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஒரு கூட்டத்தைக் கட்டியெழுப்ப உதவலாம். ஆனால், அப்படி செய்வது ஒருபோதும் இறைவனுக்கு உகந்ததாக இருக்காது. 'அகல உழுவதிலும் ஆழ உழுவதே சிறந்தது." எனவே, விவிலியத்தை வாசிக்கும்போது ஒருசில அடிப்படைப் பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும்.

விவிலியத்தின் மூல ஆசிரியர் கடவுளாக இருப்பதால், விவிலியத்தைப் படிப்பதற்கு அடிப்படைப் பண்பு விசுவாசமே. எப்படி விசுவாசம் இல்லாமல் கடவுளை ஒருவர் உணரமுடியாதோ, அவரது விருப்பத்தை அறிந்து கொள்ள முடியாதோ, அதைப் போலவே விசுவாசம் இல்லாமல் ஒருவர் விவிலியத்தின் செய்திகளையும் புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ முடியாது.

அதே வேளையில் அதற்கு மனிதரும் ஆசிரியராக இருப்பதால் ஒருசில மனிதப் பிழைகள் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கலாம் என்ற புரிதலும் இருப்பது அவசியம். தூய ஆவியார் தூண்டுவதில் எப்படி தவறு இருக்கமுடியும்? இறைத்தூண்டுதலில் குறையிருப்பதாகவோ தவறு இருப்பதாகவோ யாரும் சொல்லவில்லை. அதனைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள் அதனை வெளிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். இறைவெளிப்பாட்டை பெற்று அதனை எழுதும் தனிமனிதர்களின் திறமைக்கேற்ப மொழிப்புலமைக்கேற்ப சில வேறுபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவையான ஒன்று.

விவிலியம் காலத்தால் மிகவும் பழமையானது. அதுவும் நமது கலாச்சாரப் பின்னணியில் எழுதப்பட்டது அல்ல. நவீன உலகில் இருந்துகொண்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு, தமிழ் கலாச்சாரக் கண்ணாடி போட்டுக் கொண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக விசுவாசத்தின் அடிப்படையில், யூதக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தையோ, அல்லது அதன் கலாச்சாரத்தையோ கேள்விக்குட்படுத்துவது: எப்படி சரியானதாக இருக்க முடியும்? எனவே விவிலியத்தைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், விவிலியம் எழுதப்பட்ட காலச்
சூழலைப்பற்றிய அறிவு   ஓரளவாவது இருக்க வேண்டும். அது இறைவனை ஆசிரியராகக் கொண்டிருப்பதால், விவிலியத்தின் போதனைகள் எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும். அதே சமயம்: அது மனிதரால், மனித மொழியில் எழுதப்பட்டுள்ளதால், எழுதப்பட்ட காலத்தின் வரலாற்றுப் பின்னணி, கலாச்சாரத் தன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். விவிலியப் பகுதிகளை வாசிக்கும் போது, அப்பகுதி கூறும் செய்தி என்ன? அதில் பொதிந்துள்ள கலாச்சாரப் பின்னணி என்ன என்பதைப் பகுத்தறிவது மிகவு  ம்  அவசியம்.

உதாரணமாகப், பிறசபையினர் கத்தோலிக்க வழிபாடுகளைக் குறித்து, அது மயான வழிபாடு. செத்த வழிபாடு, அங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், வழிபாடு என்றால்: ஆட வேண்டும், பாட வேண்டும், கை தட்ட வேண்டும், பரவசப் பேச்சு பேச வேண்டும், சத்தமிடவேண்டும். இவைகள் சரியா, தவறா என்று தீர்ப்பிட நமக்கு உரிமையில்லை. மக்களை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுத்த, அவர்களும் உணர்வுப் பூர்வமாக பங்கு பெற, இப்படிப்பட்ட செயல்கள் ஒருவேளை தேவைப்படலாம். இது ஒரு நடைமுறை யுத்தி என்றால் பரவாயில்லை. ஆனால், அதற்கும் அவர்கள் விவிலியத்தை ஆதாரமாக மேற்கோள் காட்டுவார்கள். உடன்படிக்கைப் பேழையின் முன் தாவீது அரசர் ஆடினாரே என்பார்கள். வழிபாட்டில் ஆடுவதற்கும் பாடுவதற்கும் கத்தோலிக்கர்களாகிய நாம் எதிரிகள் அல்ல. ஆனால், பொது வழிபாட்டில் ஒருவரின் ஆட்டமும் பாட்டும் மற்றவருக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடாதே என்பதுதான் நமது கவலை. தாவீது ஆடினார் என்பது உண்மை. ஆனால் அவர் எப்படி ஆடினார்? ஆடையின்றி ஆடியதாக அவரின் மனைவி மீக்கால் அவரை ஏளனம் செய்கிறார் (2சாமு 6:20). தாவீது ஆடியதை அப்படியே எடுத்துக் கொண்டு? அதைக் கடைபிடிக்கிறோம்  என்றால்? அவர் ஆடிய விதத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டுமே: அது சரிப்பட்டு வருமா?

மேல்காணும் பகுதியை இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டும். ஒன்று: அதில் அடங்கியிருக்கும் செய்தி அல்லது மனநிலை, மற்றொன்று: அம்மனநிலை வெளிப்படுத்தப்படும் கலாச்சாரம். உடன்படிக்கைப் பேழை என்பது கடவுளின் பிரசன்னம். எனவே, கடவுளின் முன் இருப்பது சந்தோஷம். மேலும், கடவுளின் முன் தாவீது தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். இறைவன் முன் தனது வெறுமையையும் ஒன்றுமில்லாமை யையும் ஆடையின்மையின் மூலம் வெளிப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்: " என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன், இன்னும் ஆடுவேன். நான் என்னை இன்னும் கடையனாக்கிக் கொள்வேன்;. என் கண்முன் என்னைத் தாழ்த்திக் கொள்வேன்" (2சாமு 6:21-22). கடவுளின் திருமுன் காணப்படும் தாவீதின் மகிழ்ச்சியும் தாழ்ச்சியும் அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது. அதுதான் அப்பகுதியில் அடங்கியிருக்கும் செய்தி. அதாவது ஆண்டவரின் பிரசன்னம் மகிழ்ச்சியைத் தருகிறது, அவரது திருமுன் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். இச்செய்தியானது எக்காலத்திற்கும் ஏற்றது, எல்லோருக்கும் பொருந்தும். அதே சமயம்: தனது மகிழ்ச்சியையும் தாழ்ச்சியையும் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியது தாவீது அரசருடைய கலாச்சாரம். இதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்திலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வீட்டிற்கு வருபவரை வரவேற்பது மனநிலை. இது எல்லா நாட்டிலுள்ளவர்களுக்கும், எல்லா இனத்தவருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்தும். ஆனால் எப்படி வரவேற்பது? கைகளைக் குலுக்கியா அல்லது கைகளைக் குவித்தா? தலை வணங்கியா அல்லது கன்னத்தில் முத்தமிட்டா? இது நாட்டுக்கு நாடு கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம், சொல்லப்போனால்: வீட்டுக்கு வீடு, ஆளுக்கு ஆள் கூட மாறலாம். எனவே: விவிலியம் கூறும் செய்திகளிலிருந்து அதன் கலாச்சாரக் கூறுகளைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருப்பது அவசியம்.

விவிலியத்தில் காணப்படும் அனைத்தையும் அப்படியே எடுத்து இன்று கடைபிடித்துவிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, தனக்கு குழந்தைகள் இல்லாததால், தன் எகிப்தியப் பெண்ணான ஆகாருடன் உறவு  கொண்டு அதன் மூலம் தனக்குப் பிள்ளைப் பெற்றுத்தாரும் என்று சாராய் தன் கணவர் ஆபிரகாமிடம் கேட்கிறார் (தொநூ 16:1-2). ராக்கேல் தன் பணிப்பெண் பில்காவோடு உறவு   கொண்டு வாரிசுகளை உருவாக்குமாறு தன் கணவர் யாக்கோபுவைக் கேட்கிறார் (தொநூ 30:1-5). இதை இன்று எப்படி நியாயப்படுத்த முடியும்? இன்றைய நமது தமிழ்க் கலாச்சாரக் கண்ணாடியின் மூலம் இப்பகுதியை எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்? அம்மோனியரை வென்றதற்காக, இப்தா என்னும் நீதித் தலைவர், தன் ஒரே மகளையே, தான் செய்து கொண்ட நேர்ச்சையை முன்னிட்டு, உயிரோடு கடவுளுக்கு எரிபலியாக்குகிறார் (நீத 11:30-40). இதை இன்று எப்படி ஜீரணிப்பது? அன்றைய காலத்துப் பழக்க வழக்கங்களை அறியாமல் இதை ஆண்டவரின் வார்த்தையாகவோ, ஆவியானவரின் தூண்டுதலில் எழுதப்பட்டதாகவோ, கண்மூடித்தனமாகவோ, ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது, எங்ஙூனம் இன்றைய காலகட்டத்தில் சரியானதாக இருக்க முடியும்? இல்லை அதுதான் முடியுமா?

விவிலியத்தில் இரண்டு பகுதிகள் உண்டு என்பது நாம் அறிந்ததே: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. இயேசுவின் மனித அவதாரத்தை மையமாக வைத்தே இப்பிரிவு   ஏற்படுத்தப்படுகிறது. பழைய ஏற்பாடு வரவிருந்த இயேசுவை முன்னறிவிக்கிறது. புதிய ஏற்பாடு வந்த இயேசுவைப் பறைசாற்றுகிறது. பழைய ஏற்பாடு: ஓர் எதிர்நோக்கு. புதிய ஏற்பாடோ: ஓர் அனுபவப் பகிர்வு. மனுவாகவிருந்த வார்த்தையானவரைப் பற்றிப் பழைய ஏற்பாடு சொல்கிறது. மனுவுருவான வார்த்தையானவரைப் பற்றி புதிய ஏற்பாடு பறைசாற்றுகிறது. வார்த்தையானவர் மனுவாவார்: இது பழைய ஏற்பாடு. மனுவானவர் வார்த்தையாகிறார்: இது புதிய ஏற்பாடு. இயேசுவே விவிலியத்தின் மையமாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் நிறைவாகவே புதிய ஏற்பாடு திகழ்கிறது. புதிய ஏற்பாடு இல்லாமல், பழைய ஏற்பாடு முழுமையடைவதில்லை. பழைய ஏற்பாடு இல்லையெனில், புதிய ஏற்பாடு அஸ்திவாரம் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிவிடும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக அல்லது நிறைவாகப் புதிய ஏற்பாடும்; புதிய ஏற்பாட்டின் அடிப்படையாக பழைய ஏற்பாடும் அமைந்துள்ளது. இந்த இரண்டையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்கமுடியாது என்பதை இயேசுவே வலியுறுத்துகிறார்: " திருச்சட்டத்தை யோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம், அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்" (மத் 5:17). தனது உயிர்ப்பைப் புரிந்து கொள்ளாத தன் சீடர்களுக்கு, மறைநூலை இயேசு எடுத்துரைக்கிறார் (லூக் 24:27). திருத்தூதர்கள் இயேசுவையும் அவரது உயிர்ப்பையும் மறைநூலின் நிறைவு   என்று அறிவிக்கிறார்கள் (திப 3:13, 7 உரோ 1:2-4). பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கிடையில் இருக்கும் பிரிக்கமுடியா பிணைப்பைப் பற்றி புனித அகுஸ்தினார் அழகாகத் தெளிவு  படுத்துகிறார். " புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ளது. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டில் வெளிப்படுகிறது." பழைய ஏற்பாட்டுக்கு புது அர்த்தத்தையும் தெளிவையும் கொடுக்கிறது புதிய ஏற்பாடு.

அதே சமயத்தில், பழைய ஏற்பாட்டின் பல போதனைகளையும் செயல்களையும் இயேசு மாற்றியமைக்கிறார். அவற்றிற்குப் புதுப்பார்வையையும் புதிய அர்த்தத்தையும் கொடுக்கிறார். உதாரணமாக, இயேசுவின் மலைப்பொழிவு   (குறிப்பாக, மத் 5:21-48): " ...முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." இங்கே நாம் கவனிக்க வேண்டியது. இயேசு பழைய ஏற்பாட்டு சட்டங்களையோ, மோசேயின் கட்டளைகளையோ மறுக்கவில்லை. மாறாக, இன்னும் ஒருபடி மேலே செல்கிறார். செயல்களை மட்டுமே வைத்து தீர்ப்பிட்ட மோசேவின் சட்டங்களைத் தாண்டி, அச்செயல்களைச் செய்யத் தூண்டும் உணர்வு  களும், எண்ணங்களும்கூடத் தவறுதான், கண்டிக்கத்தக்கது என்கிறார் இயேசு. எதையெல்லாம் செய்தால் பாவமோ, அவைகளைச் சிந்திப்பதே பாவம்தான் என்பது இயேசுவின் நிலைப்பாடு. பாவத்தின் கிளையை மட்டும் வெட்டி எறிந்தால் போதாது, அதன் ஆணி வேரையே அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார்; இயேசு. இதனால், எவரும் பழைய ஏற்பாட்டு சட்டங்கள் தவறானவை, குறைபாடுள்ளவை, தவிர்க்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. 'சீடர் குருவைவிடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும்" (மத் 10:24-25). இயேசுவின் அணுகுமுறையே நமது அணுகு முறையாக மாற வேண்டும். அதாவது: பழையது, காலங்காலமாக இதைத்தான் செய்கிறோம், இப்படித்தான் செய்கிறோம், இதுதான் பாரம்பரியம். எனவே இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கண்மூடித்தனமாகச் செயல்படும் பழமைவாதிகளாக இருப்பது ஆபத்து. அது தனி மனித வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் பாதித்துவிடும். அதே வேளையில் பழையது என்பதாலேயே ஒரு பாரம்பரியம் வேண்டாம் என்று அனைத்து மரபுகளையும் உடைத்தெறிவதும் ஏற்புடைய செயல் அல்ல. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து நல்ல பழமையான பழக்கங்களையும் செயல்களையும் இனம் கண்டு, அதன் பொருள் உணர்ந்து, அதன் அவசியம் அறிந்து, காலத்திற்கு ஏற்றாற்போல எல்லோரும் ஏற்று கடைபிடிக்கும் விதத்தில் மாற்றி முன்வைப்பதே சிறந்ததாக அமையும்.

மோசேவின் சட்டங்களை மேலோட்டமாகப் பார்த்தால், இன்றைய மனிதர்களுக்கு அவைகள் தவறானவை போலத் தோன்றும். ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால், அதில் அடங்கியிருக்கும் புரட்சி சிந்தனைகள் நமது புருவத்தை உயர்த்தச் செய்யும்.

 உதாரணமாக மோசேவின் சட்டம் இவ்வாறு சொல்கிறது: " கேடு ஏதேனும் விளைந்தால் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், கீறலுக்குக் கீறல் என நீ ஈடு கொடுப்பாய்" (விப 21:24-25). மேலோட்டமாகப் பார்த்தால், நமது இன்றைய கண்களுக்கு இது பழிக்குப் பழி என்பது போலத் தோன்றும். ஆனால், இச்சட்டம் கொடுக்கப்பட்ட காலச் சூழலும், எந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர்களின் மனநிலையும் நமக்குத் தெரிந்தால், இச்சட்டத்தின் பின்புலத்தில் பொதிந்திருக்கும் புரட்சிய சிந்தனை நமக்குப் புலப்படும்.

 தன்னைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கு ஏதேனும் கேடு விளைந்தால், அக்கேட்டிற்குக் காரணமானவனை மட்டுல்ல, அவனைச் சேர்ந்த குடும்பம், இனம் முழுவதையும் ஒட்டு மொத்தமாக அடியோடு அழிக்கும் காட்டுமிராண்டித்தனம் தான் அக்காலத்தில் நிலவியது. எடுத்துக் காட்டாக, குலமுதுவர் யாக்கோபுவுக்கும் அவர் மனைவி லேயாவுக்கும் பிறந்தவள் தீனா. பார்ப்பதற்கு அழகானவள். அவளது அழகில் மயங்கிய இவ்வியனான ஆமோரின் மகனும், அந்நாட்டின் தலைவனுமாகிய செக்கேம், அவளைத் தூக்கிச் சென்று அவளுடன் உறவு   கொள்கிறான். இதையறிந்த யாக்கோபின் புதல்வர்கள், அதாவது: தீனாவின் சகோதரர்கள், பெருந்துயரமும் கடும் சீற்றமும் அடைகின்றனர். தன் மகன் செக்கேம் செய்த தவறை தந்தை ஆமோர் ஏற்றுக் கொள்கிறார். தன் மகனுக்கு தீனாவை மணமுடித்துத் தரும்படிக் கேட்கிறார். விருத்தசேதனம் செய்து கொண்டால், திருமணம் செய்து தருகிறோம்.  என்று வாக்களிக்கின்றனர் யாக்கோபின் புதல்வர்கள். இதை நம்பிய ஆமோர், செக்கேம், மற்றும் அந்நகரத்தார் அனைவரும் உடனே விருத்தசேதனம் செய்து கொள்கிறார்கள். இறுதியில் நடந்தது என்ன? விருத்தசேதனம் செய்த அனைத்து ஆண்களும் வலியால் துடித்தபோது, யாக்கோபின் புதல்வர்கள் அனைத்து ஆண்களையும் வாளால் வெட்டிக் கொல்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்கிறார்கள். அனைத்தையும் கொள்ளையடிக்கின்றனர் (தொநூ 34).

 இப்படியாக, ஒன்றுக்கு நூறாகப் பழிவாங்கத் துடித்த மனநிலை கொண்டவர்களுக்கு, கடவுள் மோசே வழியாக ஒரு சட்டத்தைக் கொடுக்கிறார். கண்ணுக்குக் கண்தான். அதைவிட அதிகமான தண்டனையைக் கொடுக்க எவருக்கும் உரிமையில்லை. ஒருவனை அதிகமாகப் பழிவாங்கினால், அதற்காகப் பழிவாங்கியவன் தண்டிக்கப்படுவான். நடைமுறையில், அதே அளவில், அதே விதத்தில், உடலில், அதே பாகத்தில் பழிவாங்க முடியுமா? முடியாது என்பதுதான் எதார்த்தமானப் பதிலாக இருக்கமுடியும். 'பழி வாங்காதே" என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால், அது எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவனுக்கு நீதியில்லையா? அப்படியே விட்டுவிட்டால் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலைவிரித்தாடாதா? தப்பு செய்தவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டாமா? என்று பல்வேறு கேள்விகள் எழக் கூடும். எனவே, மிகப் பெரிய ஒரு உளவியல் வல்லுநரைப் போல மோசே செயல்படுகிறார். பலிவாங்குவதற்காக ஒரு உரிமையைக் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, பலிவாங்க முடியாத ஒரு நிபந்தனையையும் ஏற்படுத்துகிறார். 'ஒருபோதும் பழிவாங்கத் துடிக்காதே" என்ற அறிவுரையாகவும், 'அளவை மீறும்போது தண்டனைக்குள்ளாக நேரிடும்" என்ற எச்சரிக்கையாகவுமே இச்சட்டத்தை அவர் கொடுக்கிறார். குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கவும் வேண்டும். அதே சமயத்தில், பழி வாங்குகிறேன் என்ற பெயரால் தொடர்ந்து நடைபெறும் குற்றங்களையும் வன்முறைகளையும் தடுக்கவும் வேண்டும் என்பதுதான் இக்கட்டளையின் நோக்கமாக இருக்கமுடியும். மோசேவின் சட்டம் அக்கால கட்டத்தில் எப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனையை, புரட்சிக் கருத்தை விதைத்தது என்று இப்பொழுது புரிகிறதா?

" பழி வாங்காதே" என்று மோசே சொன்னார். இயேசுவோ இன்னும் ஆழமாகச் சென்று, பழி வாங்கக் காரணமாக அமையும் கோபத்தையே அடியோடு அகற்றிவிடு என்கிறார். இங்கே, கடவுள் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்திய விதத்திலும், அவர்களை நெறிப்படுத்திய விதத்திலும் ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்தப் படிப்படியான இறைவெளிப்பாட்டை எபிரேயருக்கு எழுதப்பட்ட திரு முகமும் சுட்டிக் காட்டுகிறது. " பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாகவும் நம்மிடம் பேசியுள்ளார்" (எபி 1:1). 'பழையது" என்ற பெயரில் எதையும் அழித்து விடாமல், 'புதிது" என்ற பெயரில் எதையும் திணித்துவிடாமல், 2ஆம் வத்திக்கான் திருச்சங்கம் சொல்வதுபோல், காலத்தின் அறிகுறிகளைச் சரியாகக் கண்டுணர்ந்து, அதற்கேற்ப ஒருவர் நடக்கவேண்டும், பிறரை வழிநடத்த வேண்டும் என்பதுதான் சரியான நெறியாக இருக்கமுடியும். சொல்வது உண்மையே ஆனாலும் செய்வது நன்மையாகவே இருந்தாலும், எதை, எங்கு, எதற்கு, எப்படி, எப்பொழுது என்று முறையறிந்து செயல்பட்டால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும் என்பது: விவிலியப் போதனையாக அமைந்துள்ளது. எனவே, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளையும் இணைத்து முழுமையாகப் படித்தால் மட்டுமே இறைவெளிப்பாட்டையும், அதன் பின்னால் பொதிந்திருக்கும் செய்தியையும் நம்மால் முறையாகக் கண்டுணரமுடியும்.

 

பரமனை ஈன்றிட பேறுபெற்றாய் - அவர் பார்புகழ் தேவனாய் உருக்கொடுத்தாய், இனி அன்புடன் எமையும் ஏற்றருள்வாய் - எம்
அன்னையாய் நீயும் அரவணைப்பாய்