அடுத்து, ஒத்தமை நற்செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். இயேசுவின்
பல போதனைகள், புதுமைகள் மூன்று நற்செய்திகளிலும் காணப்பட்டாலும் அவைகளை
கூர்ந்து நோக்கும்போது, பல வேறுபாடுகளை நம்மால் அடையாளம் காணமுடியும்.
சில புதுமைகள், போதனைகள் இரண்டு நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகின்றன.
ஒருசில போதனைகள் ஏதாவது ஒரு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளன.
இங்கு பொதுவான அனைவருக்கும் தெரிந்த ஒருசிலவற்றை மட்டும்
சுட்டிக்காட்டுகிறோம்.
மணமகனுக்காகக் காத்திருக்கும் பத்து தோழியர் உவமை (மத் 25:1-11) பொதுத்
தீர்வை (மத் 25:31-46) மத்தேயு நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
மிகவும் அதிகமாக அறியப்பட்டுள்ள நல்ல சமாரியன் உவமை (லூக்
10:25-37), ஊதாரி மைந்தன் உவமை (லூக் 15:11-32), ஏழை இலாசர் உவமை (லூக்
16:19-31) போன்றவை லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு
செய்யப்பட்டுள்ளன. பார்வையற்ற ஒரு மனிதரை பெத்சாய்தாவில், கண்களில்
உமிழ்ந்து, கைகளை அவர்மீது வைத்து படிப்படியாக முழுப்பார்வையைக்
கொடுக்கும் புதுமை மாற்கு நற்செய்திக்கு மட்டுமே உரியது (மாற்கு
8:22-26).
|